29 ஜூன் 2022

அனுராதா ரமணன்

தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர். (Anuradha Ramanan). (ஜூன் 29, 1947 – மே 16, 2010). புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப் படங்களாகவும் வெளிவந்து இருக்கின்றன.

இவரின் சில படைப்புகள் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

அனுராதா தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் 1947-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார்.


இவரின் கணவர் ரமணன். இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஓவியக் கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977-ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரின் எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியர் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டு இருந்தார்.

30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 நெடுங்கதைகளையும் 480 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரின் சிறை சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.

அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991-இல் பெற்றது.


இவரின் கதையைக் கொண்டு 1988-இல் வெளியான (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.

இவரின் மற்றொரு கதை மிதிலேயி சீதையரு (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளி வந்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக் கண்டேன் தோழி ஆகிய இவரின் கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டு உள்ளன.

(தொகுப்பு: மலேசியம்)
29.06.2022



 

02 ஜூன் 2022

லேடாங் மலை தேசியப் பூங்கா

லேடாங் மலை தேசியப் பூங்கா; (Gunung Ledang National Park); மலேசியா, ஜொகூர் மாநிலம், தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இந்தப் பூங்கா 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 160 வகையான பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லேடாங் மலை (Gunung Ledang; Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் உள்ளது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

(மலேசியம்)
02.06.2022

https://ta.wikipedia.org/s/b1qu