04 ஏப்ரல் 2021

அண்ட்லி தோட்டமும் மேக்கடை லயன்களும் - முனியாண்டி ராஜ்

04.04.2021

பகிர்வு: ஆயர் தாவார் தனசேகரன் தேவநாதன்

வெள்ளி மாநிலம் பல வரலாறுகளின் பண்ணை. வணிகர்களாக வந்த சீனர்களின் கலங்கரை விளக்கம். உலகிற்குப் பல கோடி டன் ஈயத்தை வாரிக் கொடுத்த சீதக்காதி.

உறுப்புக்கள் அனைத்தையும் பயனுக்கு அள்ளித் தரும் தென்னை அதிகமாய் பூப்பெய்திய மண்; மலேசிய பதிவேட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்; என இன்னும் பல கூறுகளைச் சொல்லி கொண்டே போகலாம். அதுதான் பேரா மாநிலம்.

மாநிலத்தின் தலைநகரமாய் முன்னாளில் முழங்கப்பட்ட தைப்பிங்கில் இருந்து 60 கல் தெற்கே பயணத்தை தொடர்ந்தால் மேம்பாட்டுத் திட்டங்களின் அபரித வளர்ச்சியினால் பழைய முகவரியைத் தொலைத்துப் புதிய பரிணாமம் பூண்டு இருக்கும் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தை அடுத்து சுமார் 13 கல் அளவில் உள்வாங்கியவாறு அண்ட்லி தோட்டம மையம் கொண்டு உள்ளது.

தோட்டத்து நுழைவாயிலை அடைந்ததும் மண்சாலை. இருபுறமும் செம்பனை மரங்கள் குடை பிடித்துக் நிற்கின்றன. சற்று தள்ளிச் சென்றால் கோயில் கோபுரம் தலை நமிர்ந்து நிற்கிறது.

நவக்கிரக வழிப்பாட்டுத் தளங்களுடன் ஸ்ரீ ராமர் கோயில், முனீஸ்வரர் ஆலயம், அர்ச்சகர் குடியிருப்பு மற்றும் கல்யாண மண்டபம் என ஒரு சேர அமைந்து அரசாட்சி நடத்திய அடையாளங்கள் தெரியும்.

கோயிலின் எதிர்ப்புறத்தில் 80-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட தற்போதைய குடியிருப்பு. அதற்கு முன்னர் மேக்கடை லயன்களாக காட்சி அளித்தவை.

காலனித்துவ ஆட்சியில் பலகைகளால் கட்டப்பட்டு பச்சை வர்ணம் பூசப்பட்ட  வீடுகளில் நூறு குடும்பங்களுக்கு மேல் குடி இருந்தார்கள். நாட்டின் முக்கிய ஏற்றுமதியான ரப்பர் மரம் சீவுதலே பிரதான தொழில். தோட்டத்து நிர்வாகம் ஒரு சில அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து இருந்தது.

பல தோட்டங்களில் 'தாமஸ் ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பு இல்லாமல்... மண்ணெண்யை விளக்கின் வெளிச்சத்தில் படித்துக் கொண்டு இருக்கையில், இங்கு காலை 5 மணி முதல் 6.30 வரையிலும் மாலை 7.00 மணி தொட்டு 10.30 மணி வரையிலும் மின்சார ஒப்பந்தச் சம்சாரமாய் அறிமுகப் படுத்தி இருந்தார்கள்.

திருவிழா, பண்டிகை நாட்களில் நேரம் நீட்டிக்கப் படுவதும் உண்டு. மற்றொன்று ஆயாக் கொட்டகை. வேலையின் நிமித்தம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டுச் சென்று பணி முடிந்து திரும்பும் பொழுது அழைத்து செல்லலாம்.

உபரி வருமானம் ஈட்ட பயிரிடுதல்; கால்நடைகள் வளர்த்தல்; மற்றும் தோட்டத்துத் தொழிற்சாலையில் பகுதிநேர வேலை செய்தல் என பொன்னான வாய்ப்புகள் நிறைய வாய்த்திருந்ன.

உறவு, நேசம் மற்றும் மனித நேயம் என்பது தோட்டத்து மக்களின் பொதுவான குண நலன்கள். அஃறிணயை மாந்தர் பெயர்ச் சொல்லி அழைத்த பெருமை தோட்டத்து மக்களுக்கே உரித்தானது.

வளர்ப்பு நாயை மணி, வேலா, குணா என்றும் மாடுகளை லெச்சிமி, கண்ணம்மா என்றும் அழைப்பது தோட்ட மக்களுக்கே உரிய குணம்.

மார்கழி அதிகாலையி்ல் பட்டாம் பூச்சியாய் மங்கையர்கள், மாட்டு சாணம் சேகரித்து வீட்டின் முன்புறம் மெழுகில் கோலமிட்டதையும்... நிலா வெளிச்சத்தில் உடன் பிறப்புகளோடு சம வயதுடைய அண்டை வீட்டு நட்புகளுடன் நிலாச் சோறு சாப்பிட்டு நொண்டி விளையாடியதும்... காலத்தால் மாசு படியாத காவியங்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் விறகு சேகரிக்கும் தோரணையை முன்னெடுத்து வேலி இல்லாத சேற்று குளத்தில் நீச்சல் பழகியதும்; காகிதக் கப்பல் மிதக்க மழையை வேண்டி நின்ற எதார்தத்தையும் நினைத்தால் இன்றும் மனம் குதூகலி்க்கும். மாலை வேளையில் காற்பந்து, சடுகுடு என உற்சாகமாகி விடுவார்கள் இளைஞர்கள்.

கோவில் வளாகத்து திண்ணையில் விருட்சமாய் வளர்ந்திருந்த அரசமரம். அன்றையக் கனவு நாயகர்களின் அசத்தலான நடிப்பு முதல் ரஞ்சன் வீட்டு மாடு கன்று ஈன்றது வரை இப்போது கேட்டாலும் மனனம் செய்ததை ஒப்புவிக்கும்.

தீ விபத்தைக் களையும் நோக்கில் எந்த நேரமும் நீண்ட கழியில் தயாரான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நிறத்திலான மணல் வாளிகளுடன் வரவேற்றுக் கொண்டு சுமார் 250 மாணவ மாணவிகளுடன் இயங்கி வந்த தமிழ் பள்ளியை அடுத்து வள்ளுவர் படிப்பகம்...

மாத, வார நாழிதழ் முதல் தமிழ்வாணன், கல்கி, மு.வரதராசணார், கல்கி போன்றோரின் நூல் வடிவங்கள் அழகாய் வரிசை பிடித்து நிற்கும்.

இலக்கிய தாகம் கொண்ட சிலரை இரவு நேரங்களில் இங்கே காணலாம்.

பதிவேட்டில் குறிப்பெழுதிப் புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்லலாம்.

மாலை வகுப்பு (tution) திரு கிருஷ்ணன் (இன்று அமரராகி விட்டார்) ஆசிரியரின் தலைமையில் நடைபெறும். இவரைப் பற்றி இங்கே சில வரிகள் சொல்லியாக வேண்டும்.

எம் ஜி ஆரின் பரம ரசிகரான இவர்; அதே பாணியில் உடுத்தி; தலையையும் வாரிக் கொண்டு கையில் ஒன்றிரண்டு புத்தகத்துடன் அதிகமான கண்டிப்புமாய் வலம் வருவார்.

'சார்' என்று அழைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

இன்னொரு பிரபலம் இங்கே உண்டு. 'சுல்தான்' என அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கை. துரைசாமி. உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தற்காப்புக் கலையில் தேர்ந்தவரான இவர் அப்போதைய வில்லன்களின் சிம்ம சொப்பனம்.

கை கால்களில் எலும்பு இடம் பெயர்ந்துள்ளாதா? இவரை நாடினால் குணமாகிவிடும் என்று சொல்லும் அளவிற்க்கு சித்த வைத்தித்தில் அனுபவம் உண்டு. தோட்டத்தில் வர்ண விளக்குகள், அலங்கார வளைவுகள் என தீமிதி உற்சவம் ஒரு வாரத்திற்க்கு முன்பே களைகட்டிவிடும்.

திடீர் கடைகள் கோவிலை சுற்றி ஆங்காங்கே தோன்றிவிடும். கோவில் உற்சவங்கள் என்று வந்தால் பாரம்பரிய உடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இவை அன்றைய எழுதப்படாத சாசனம்.

திருவிழாவை முன்னிட்டு இருபதுக்கும் மேற்பட்ட உபயங்கள் நடைந்தேறும். அதில் வாலிபர் உபயமே மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அன்றுதான் விளையாட்டுப் போட்டிகள், திரைப்படம் என அமர்க்களப்படும்.

முதல்நாள் இரத ஊர்வலத்தில் தொடங்கி... மறுநாள் தீ மிதித்தல், அதனைத் தொடர்ந்து மறுநாள் காவடிகள் செலுத்தும் நேர்த்திக் கடன் மிக தேர்த்தியாய் நடைபெறும்.

80-ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலகளாவிய நிலையில் ரப்பர் விலை மீள முடியாத படு வீழ்ச்சியில் சரிந்துக் கொண்டிருந்தது.

ரப்பர் மரங்களின் அழிப்பு மெல்ல மெல்லத் தொடங்கி... செம்பனை மரங்களின் தாக்கம் கிடு கிடு என உயர்ந்துக் கொண்டே போனது.

வேலை வாய்ப்பை இழந்த பலர் மற்ற மாநிலங்களுக்கு வருமானம் தேடி புலம் பெயர... இளைய தலைமுறையினர் சிங்கப்பூருக்கு படையெடுக்க... ஒரு பகுதியினர் அக்கம் பக்கத்து வீடமைப்பு பகுதிகளில் புதுத் தொழில்களுடன் தங்களை வசப்படுத்திக் கொள்ள... தோட்டத்தின் மக்கள் தொகையும் மகிழ்ச்சியும் சன்னம் சன்னமாகச் சுருங்க ஆரம்பித்தது.
 
இளமைப் புன்முறுவலுடன் கண் சிமிட்டிய மேக்கடை லயன்கள்; நூல் நிலையம்;  இன்று ஒரு சிலர் வீட்டில் ரசம் இழந்த கண்ணாடிச் சிறையில் புகைப்படங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் மட்டுமே மீதமாய் இருக்கின்றன.

ரப்பர் மரங்களை வரிசையாய் ஆட்கொண்டிருந்த சதுப்பு நிலம்... தற்பொழுது செம்பனை காடுகளாகிவிட்டது... மாதத்தின் தொடக்கத்தில் சம்பளம் பெற அலுவலகம் செல்லும் பெற்றோரின் கையைப் பிடித்துச் சென்ற கடைகுட்டிகள்... இன்று காதோரம் நரைத்த குழந்தைகளாகி விட்டனர்.

சுப காரியங்களின் கால் தடங்களுடன் இறுதி யாத்திரையும் பத்திரமாய் பதிவு செய்து வைத்திருக்கும் அந்த செம்மண் சாலை... இன்று குழி விழுந்த கண்களாய் காட்சி அளித்து பழமையை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

மக்கள் திரள் நிறைந்து இருந்த தோட்டத்தின் எஞ்சிய அடையாளமாய் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளி, கோயில், ஒரு மளிகைக் கடை மட்டுமே நினைவுச் சின்னங்களாய் பிழைத்து இருக்கிறது.

தோட்டத்தின் முகப்பில் தோட்டத்தின் பெயரைச் சுமந்துக் கொண்டு இருக்கும் அறிவிப்பு பதாகை புதிய வண்ணத்தில் பளிச்சிடுகிறது.

ஏதோ ஒரு தூரத்து வானொலியில் 'வசந்த கால கோலங்கள்... வானில் விழுந்த கோடுகள்... கலைந்திடும் கனவுகள்... கண்ணீர் சிந்தும் நினைவுகள்... எனும் பாடல் காதில் வந்து மோதி மெல்ல மெல்ல கரைகிறது.



மலேசியம் புலன அன்பர்களின் பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: நாங்கள் வாழ்ந்த தோட்டத்தின் உரிமையாளர் அமரர் வி.கே. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி, சிலவாரங்களுக்கு முன்பு நமது ஐயா அவர்கள் நீண்ட கட்டுரையைப் பதிவு செய்து இருந்தார். அச்சமயம் அவரின் தோட்டச் செய்தி இடம்பெறவில்லையே என அடியேனுக்கு ஒரு வருத்தம்.

இன்று அதை நிவர்த்தி செய்யும் வகையில் அண்ட்லி தோட்ட மைந்தர் செய்த பதிவு மனதை நெருடியது. அதை அனைவருக்கும் பகிர்வதில் ஒரு சந்தோசம். நன்றி 🌹🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அருமையான வரலாற்றுப் பதிவு... கட்டுரை எழுதும் போது இந்தத் தகவல்கள் கிடைத்து இருந்தால் கண்டிப்பாக சேர்த்து இருப்பேன் ஐயா... நன்றிங்க.

திருமதி ராதா: அருமை... அன்று தோட்டத்து வாழ்க்கை முறையே வேறுதான். அக்கம், பக்கத்து வீட்டாரை முறை சொல்லி அழைப்பதில் உள்ள அன்பும் சுகமும் தனி தான்.

இன்று பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றனர் என்று தெரியாமல் போயிற்றே!

திருவிழாக் காலங்களில் சொந்தங்கள் வருகை தனி சிறப்புதான். அன்று பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கோ, வேலைக்கோ பயம் இன்றி போய் வந்த காலம். ஆனால் ‌இன்றோ...? அந்த இளவேனில் காலம் மீண்டும் வருமா...? சிறப்பாக இருக்கிறது கட்டுரை. படைப்பாளருக்கு நன்றி. வாழ்த்தும் வணக்கமும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்:
மலேசிய நாட்டு மண் வாசனையில், நம் முன்னோர்களின் தியாகமும் நம் தாய் தந்தையரின் வேர்வை வாசமும் என்றும் நம் உடலிலும் உதிரத்திலும் உறங்காமல் இருக்கும். தோட்டத்து வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு அனுபவித்தவனுக்கு மட்டும் தான் அதன் உயிரும் ஈர்ப்பும் புரியும் தெரியும்.

தேவி சர: 


இமயவர்மன்:
அற்புதமான எழுத்து
கை பிடித்து இளமை காலம் அழைத்து சென்ற உணர்வு வாழ்த்துகள் அய்யா

குமரன் மாரிமுத்து: சற்றே என்னை மறந்தேன். மீண்டும் அந்தத் தோட்டப்புற வாழ்க்கைக்கு கை பிடித்து அழைத்தே சென்றுவிட்டார்.....💐💐💐



4 கருத்துகள்:

  1. பாட்டிப்பதற்கு மிக சூப்பராக இருந்தது.
    பழைய ஞாபங்கள் கண் முன்னே தோன்றின.
    மேலும் சில விஷயங்களை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    அவை - தமிழ் இளைஞர் மணி மன்றம், செம்பிரை சங்கம், மணி மண்டபம், குல பேரக் போன்ற சில.

    பதிலளிநீக்கு