29 நவம்பர் 2022

தமிழ்த் தாயின் கண்ணில் கண்ணீர் வழிகிறது

ஒருநாள், ஒரே ஒரு நாள்... நம்முடைய பேச்சினில் வெளிவரும் ஆங்கிலச் சொற்களை ஊர்ந்து கவனித்துப் பட்டியலிடுங்கள். எத்தனை விழுக்காடு நம் மொழி நீர்த்து போயிருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.


காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, தாங்ஸ், சாரி, வெரி நைஸ், சூப்பர், ஓகே ஓகே,

இப்படி... கணக்கில் அடங்காத ஆங்கிலச் சொற்களை எந்த தடையுமின்றி சரளமாக.. பிரியாணியையும் தயிர் சாதத்தையும் பிசைந்து சாப்பிடுவது போல.. உரையாடி வருகிறோம்.

ஆங்கிலம் கலக்காமல் முழுமையாகத் தமிழில் பேசுவோரை விரல்விட்டு எண்ணிடலாம் என்பதே முகத்தில் அறையும் உண்மை.

நண்பர் ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார்.

"சார்... நம்ப சிஸ்டர் மேரேஜ் - கம்மிங் பிரைடே - தஞ்சாவூர்ல நடக்குது சார், நீங்க கம்பல்சரி வந்துடணும்''!

இன்னொருவர் பேசுகிறார்... இதையும் கேளுங்கள்!

"டியர் பிரண்ட்ஸ், உங்களுக்கு எல்லாம் ஒரு குட் நியூஸ். எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கு எல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க"!

இப்படித்தான் மெத்தப் படித்த மேதாவிகள் பேசுகின்றனர்.

இன்னொரு வகை தமிழையும் பரவலாகக் கேட்க முடியும்... காதில் இரத்தம் வரச் செய்யும் பண்ணித் தமிழ்!

இதோ அதனையும் கேளுங்கள்...

"நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப் பத்தி திங் பண்ணி அவனுக்காக வெய்ட் பண்ணி, பைக்ல அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே டிராவல் பண்ணி, வண்டிய பார்க் பண்ணி, ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆப் பண்ணி, பேனை ஆன் பண்ணி... '' அப்பப்பா... முடியல.

அதையும் விடக் கொடுமை... தொலைக்காட்சி அவலத் தமிழ்!

"ஹலோ.. ஹாய்.. வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா?

எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ போர் சிக்ஸ் எய்ட்.'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால்... நாளைய தமிழ்நாட்டில் தமிழின் நிலை எப்படி இருக்குமோ…என்னாகுமோ...? - என்ற அச்சமே மேலோங்கி நிற்கிறது.

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை வாடஸ்அப் போன்ற தளங்களில் கூட காணமுடியும்… ஆங்கில எழுத்தையே தமிழுக்கும் பயன்படுத்துவது.

Romba tireda irrukku, phonai charge pannanum bye. , (ரொம்ப டயர்டா இருக்கு.. போனை சார்ஜ்ல போட்டு ஆன் பண்ணனும்! … பை!)

தமிழ்த் தாயின் கண்ணில் கண்ணீர் வழிகிறது.


 

13 நவம்பர் 2022

பெருவாஸ் நகரம் - 1850

மலேசிய வரலாற்றில் தனிப் புகழ் பெற்ற ஒரு வரலாற்றுத் தளம் புருவாஸ். இந்த நகரை பெருவாஸ் (Beruas) என்றும் அழைக்கிறார்கள். 1900 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு தான் கங்கா நகரம் உருவானது.

கங்கா நகரத்தை உருவாக்கிய ராஜா சார்ஜானா

பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள இந்தப் பெருவாஸ் நகரம், ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ.; தைப்பிங் பெருநகரத்தில் இருந்து 53 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. பெருவாஸ் நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் பந்தாய் ரெமிஸ்; பாரிட்.

1970-ஆம் ஆண்டில் பந்தாய் ரெமிஸ் பிரதான சாலைக்கு ஜாலான் கங்கா நெகரா என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

கங்கா நகரத்தின் மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு

ஒரு காலக் கட்டத்தில் டிண்டிங்ஸ் ஆறு; லூமுட் துறைமுகத்தில் இருந்து புருவாஸ் நகரம் வரை நீண்டு இருந்தது. அந்த ஆற்றின் சுவடுகளை இன்றும் இங்கு காணலாம்.

புருவாஸ் பட்டணத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கம்போங் கோத்தா (Kg. Kota) எனும் கிராமப்பகுதி உள்ளது. அங்குள்ள பெயர்ப் பலகையில், 2007-ஆம் ஆண்டு வரையில் மாக்காம் ராஜா சோழன் (Makam Raja Cholan) என்று இருந்தது. தற்பொழுது மாக்காம் ராஜா புருவாஸ் (Makam Raja Beruas II) என்று மாற்றப்பட்டு உள்ளது.

வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டு வணிகர்களும் சீன நாட்டு வணிகர்களும் மலாக்கா நீரிணையில் இருந்து டிண்டிங்ஸ் ஆற்று வழியாக. புருவாஸ் நகரத்திற்கு வணிகம் செய்ய வந்தார்கள் எனும் வரலாற்றுத் தகவல்களும் உள்ளன.

பெருவாஸ் மரம்

முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பள்ளிப் பாட நூல்களிலும் பெருவாஸ் எனும் சொல்லே பயன்படுத்தப் படுகிறது.

பெருவாஸ் மரம்

பெருவாஸ் எனும் பெயர் மாங்கூஸ்டீன் (mangosteen) மரத்தைப் போன்ற ஓர் உள்ளூர் மரமான பெருவாஸ் மரத்தில் இருந்து பெறப் பட்டதாக நம்பப் படுகிறது (அறிவியல் பெயர்: கார்சீனியா ஹோம்பிரோனியா - Garcinia hombroniana).

பெருவாஸ் விதைகள்

புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரமாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்தப் பொருட்கள் இப்போது புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பல்லவர்களின் கலைப்பொருட்கள்

கங்கா நகரம் அந்தக் காலத்தில் பேராக் மாநிலத்தின் புருவாஸ், டிண்டிங்ஸ், மாஞ்சோங் பகுதிகளில் பரவி இருந்த ஒரு பேரரசு ஆகும். கங்கா நகரம் கோலோச்சிய இடங்களில் இருந்து பழம் பெரும் கலைப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன.

1962-ஆம் ஆண்டு பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட
1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.

பல்லவர்களின் கலைப்பொருட்கள். தமிழர்களின் தங்க ஆபரணங்கள். சீனர்களின் பீங்கான் மங்குகள். இந்தோனேசிய அரசுகளின் பின்னல் வேலைபாடுகள். அவற்றில் சில பொருட்கள் ஈப்போவிலும் இன்னும் சில பொருட்கள் பீடோர் பகுதிகளிலும் கிடைத்து இருக்கின்றன.

சிம்மோர் பள்ளத்தாக்கில் அகத்தியர் சிலை

பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியர் வெண்கலச் சிலை.

கோலாலம்பூர் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை. 1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல் ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.

8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டின் புத்த அவலோகிதேஸ்வரர் வெண்கலச் சிலை.
1936-ஆம் ஆண்டில் பேராக், பிடோர், ஆங்கிலோ ஓரியண்டல்
ஈயச் சுரங்கத்தில் கண்டு எடுக்கப்பட்ட 79 செ.மீ உயரச் சிலை.


1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

அதன் எடை 34 பவுண்டுகள் (15.4 கிலோ கிராம்). உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உறுதிப்பாட்டை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் இதே கருத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

கங்கா நகரப் பேரரசின் தலைநகரம் பேராக், புருவாஸ் சமவெளியில் இருந்து இருக்கிறது. கி.பி. 1025 - 1026-ஆம் ஆண்டுகளில் அந்தப் பேரரசு அழிந்து போனது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இராஜேந்திர சோழன் தொடுத்த தாக்குதல்களினால் கங்கா நகரம் அழிந்து போய் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

புருவாஸ் அருங்காட்சியகம்

புருவாஸ் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு இலவச நுழைவுடன் திறக்கப்பட்டு உள்ளது. 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் புருவாஸில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பெருவாஸ் தமிழ்ப்பள்ளி


பெருவாஸ் தமிழ்ப்பள்ளி


மலேசியாவில் பழைமையான பள்ளிகளில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும் (SJK(T) Beruas) ஒன்றாகும். 16 ஆசிரியர்கள் கற்பிக்கும் இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 170 மாணவர்கள் பயில்கிறார்கள். தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல சாதனைகளைப் படைத்து உள்ளது.

பின்னூட்டங்கள்:

கணேசன், சித்தியவான்: 16  ஆண்டுகள் மலேசிய மூலத் தொழில் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி.

பல்லின மக்களுக்கு நிறைவான சேவையைச் செய்தார். ஆனால், பெருவாஸ் நகரம் வளர்ச்சியின்றி விடுபட்டுப் போனது.

மோகன் காசிநாதன், பெருவாஸ்: தாங்கள் பதிவு செய்திருக்கும் கங்கா நகரம், புருவாசின் காணொளி, அருமை.

அதில் நாக மலை, புன்னகைத்து கொண்டிப்பது அதைவிட அழகு. அதற்கு முதலில் நன்றி ஐயா. கடந்த காலங்களில் தேசிய முன்னணி வசம் இருந்த இந்த நாடாளுமன்றம், அப்போதைய அமைச்சர் அவர்களிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தோம்.

அதன் பிறகு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் புருவாஸ் நகருக்கு வந்த போதும், சில கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகச் சமர்ப்பித்தோம்.

அதில் முக்கியமாக, புருவாஸ் எல்லையில், பத்து அம்பார் அருகில் ஒரு பல்கலைகழகம்; ஒரு தரைப்படை இராணுவ தளமும் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை.

இங்கு உள்ளவர்கள் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களில் பெரும்பாலோர், ஊரை விட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுகிறார்கள்.

எனவே அரசாங்கம் சார்ந்த ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும்; புருவாஸ் நகரில் இருந்து கோலா கங்சாருக்கு நெடும் சாலை அமைக்க வேண்டும் போன்ற மகஜர்களைச் சமர்ப்பித்தோம்.

இவை அனைத்தும் நடைபெறும் என்று எண்ணினேன். ஆனால் அவை அனைத்தும் கனவாகி போய் விட்டன. 😢🙏🏼

கரு. ராஜா, சுங்கை பூலோ: அருமையானக் கட்டுரை. அடுத்த முறை ஈப்போ வந்தால் புருவாஸ் போய் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: புருவாஸ் நகரில் ஒரு பெரிய வரலாறு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் போய் இருந்தேன்... உடல் சிலிர்த்தது.

கங்கா நகரம் உருவான இடம்... கங்கா நகர மன்னர்கள் நடந்து போன இடம்... இராஜேந்திர சோழன் யானைப் படையுடன் போரிட்ட இடம். பர்மா மோன் மக்கள் உலாவிய இடம். பற்பல போர்களினால் இரத்த அருவிகள் குமிழ் எடுத்த இடம்... மனசிற்குள் இறுக்கம்.

ஒரு மலேசிய இந்தியராக இருந்தால் அவரின் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு பகுதி இங்கே புதைந்து கிடக்கிறது. 🙏





 

11 நவம்பர் 2022

மலேசியாவில் ஒரு மனிதாபிமானமற்ற செயல்

மலேசியப் பொதுத் தேர்தல் 15 பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் பயணிக்கின்றோம். மகிழ்ச்சி.

அதே வேளையில் மலேசிய கெசட் டிவி (Malaysia Gazette TV) ஊடகத்தில் வெளியான ஒரு காணொலிப் பதிவையும் (Watch "#PRU15: Macam Mana Nak Undi? 65 Tahun Tinggal di Malaysia IC Masih Merah! 'Uncle' Luah Rasa Kecewa" on YouTube) கம்பளத்திற்கு அடியில் அப்படியே போட்டு நாம் மறைத்துவிட முடியாது முடியாது.


இந்தக் கொடுமையான நிகழ்ச்சிக்கு எந்த ஓர் அரசியல் கூட்டணி அல்லது எந்த ஒரு கூட்டணித் தலைவர் தீர்வு காண்பார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மலேசியாவில் அறுபத்தைந்து வருடங்களாக வாழ்ந்தும் இன்னும் சிவப்பு அடையாள அட்டையுடன் இருக்கும் ஓர் இந்தியரின் கடந்த காலம் மிக மிக வேதனையானது.

அவரின் நிலையும் அவரின் குடும்பத்தினர் போன்ற மக்களின் அவல நிலையையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியும் என்றால் உண்மையான ஒரு தேசியத்தின் அர்த்தம் தான் என்ன?


இந்த அவல நிகழ்ச்சியை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை. மக்களாட்சியை இந்த நாட்டின் கொள்கைக் கோட்டையாக அறிவிக்கும் ஒரு நாட்டில் பல விசயங்கள் தவறாகிப் போய்விட்டன என்பது ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரு சிறிய துளி முனை மட்டுமே.

புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்ற தொழிலாளர்கள் பலர் இங்கு இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இந்த நாட்டில் (சபாவில்) குடியுரிமை விற்பனைக்கு வந்ததாகவும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழந்தை மூன்று மாதக் குழந்தையாக மலேசியாவிற்கு பெற்றோரால் கொண்டுவரப்பட்டது; அவ்வளவு காலம் எப்படி இங்கே பெயர் போட்டது என்பதற்கான தெளிவான சான்றுகளுடன் ஒரு கணக்கும் இங்கே உள்ளது. அதை இப்போது முன் வைக்கிறோம்.

அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 65. குழந்தை எனும் அவர் மலேசியாவில் 65 ஆண்டுகள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்தார்; மூன்று குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கினார்; அவரின் மூத்த மகனுக்கு இப்போது 19 வயது.


அந்தப் பெரியவருக்கு சிவப்பு அடையாள அட்டை (சிவப்பு NRIC) வழங்கப்பட்ட போதிலும் குடியுரிமை மட்டும் அவருக்கு மறுக்கப்பட்டது.

அவருக்கு குடியுரிமை மறுக்கப் பட்டதால், அவரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே முடியவில்லை.

மேலும் இந்தக் கொடுமையால் ஒட்டுமொத்த குடும்பமும் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளிகளாக வேலை செய்ய வேண்டிய அவலநிலை.

1953-ஆம் ஆண்டில் இங்கு வந்த ஒரு ஜாவானியர் ஒரு பெரும் கோடீஸ்வரராக மாற முடியும்; ஓர் அரசியல் கட்சியின் தலைவராக முடியும்... மேலும் அவர் பிரதமராகும் கனவுகளுடன் வாழ முடியும்.

ஒரு வெளிநாட்டு பிரசங்கிக்கு, அவரின் அசல் தாயகத்தில் நீதிமன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன; சாத்தியமான சிறைவாசங்களும் உள்ளன. இருப்பினும் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இங்கு வழங்கப் படலாம்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இங்கு வணிகப் பங்காளிகள் ஆகலாம்; அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறலாம்; எண்ணற்ற அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்று சுக போகங்களை அனுபவிக்கலாம்.

ஆனால் 65 வருடங்களாக இங்கு வாழும் ஒரு குடும்பம் இன்னும் சிவப்பு அடையாள அட்டையால் தண்டிக்கப்படுகிறது. நியாயமா?

இந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக் கூட்டணியோ, அல்லது அரசியல் தலைவர்களோ அல்லது வேட்பாளர்களோ, இந்த சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையை... தங்களின் பிரசாரத்தில் எடுத்துக் கொண்டு... அதற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றால்... மலேசியர்கள் அனைவருமே மனிதாபிமான தன்மைகளில்... மிகக் கொடூரமாக தோல்வி அடைகிறோம் என்றே பொருள்படும்.

குடியுரிமை வழங்கப் படுவதில் நன்கு மறைக்கப்பட்ட ஓர் உண்மையைக் கவனிக்கத் தவறி விட்டோம். அந்த நிலையில் பார்த்தால், சிறந்த மலேசியாவைக் கோரும் சுயநலவாதிகளாக மட்டுமே நாம் பயணிக்க முடியும்.

இந்த மனிதரையும், அவருடைய குடும்பத்தையும் இன்னும் பலரையும் மிக மோசமான நிலையில் கொண்டு போய் விட்டு இருக்கும் இந்த அடிப்படை உரிமை மீறல்களுக்கு கடுமையான மறுப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த மோசமான தவற்றைச் சரி செய்ய ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

மலேசியாவில் ஊழலும் பாரபட்சமான அரசியலும் செழித்து வளர்வதற்கு இத்தகைய தோல்விகளே காரணம்.

மலேசிய கெசட் டிவியின் இந்தச் செய்தி அறிக்கையானது மனித உரிமைக்கு எதிரான ஒரு பிரச்சனைக்கு நேர்மையான, பொறுப்பான பதிலை வழங்குமா?

ஜே.டி. லோவ்ரென்சியர்

 

மலேசியப் பொதுத் தேர்தல் சர்ச்சை படம்

மலேசியப் பொதுத் தேர்தலில், மூவார் நகரில் ஒரு பெண்ணின் படம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

அப்படி ஒரு பதாதை மூவாரில் இல்லை. அதை உருவாக்கியவர் நூருல் பைனுன் முர்சிடி Nurul Bainun Murshidi எனும் ஊடகவியலாளர். ஊடகங்களில் 'எனான்' என்றும் அழைக்க ப்படுகிறார்.

விளம்பரப் பலகையில் காணப்படும் அவரின் படம் போட்டோஷாப் மூலமாகச் செய்யப்பட்டது. அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவையாக இப்படிப்பட்ட படங்களைப் பதிவு செய்து வருகிறார். அவற்றில் இதுவும் ஒன்று.

மேலே காண்பது நூருல் பைனுன் முர்சிடி உருவாக்கிய போட்டோஷாப் படம். இப்படி ஒரு பதாதை மூவாரில் இல்லை. அவருடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது.

(மலேசியம்)
11.11.2022