25 நவம்பர் 2023

மலேசியத் தமிழர் இனம் 2023

(பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்)

மலேசியத் தமிழர் இனத்தின் எழுச்சியால்
2008 ஆட்சி மாற்றத்தால்
அன்றைய 2007 முயற்சி...
ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முயற்சி...


அதில்...
உயர்ந்த சுகம் அனுபவித்தது
இரண்டு இனங்கள் தான்...

நாம் நமது முயற்சி...
நமது இந்த எழுச்சி...
"விழலுக்கு இரைத்த நீராக" போய் விட்டது...

அடி உதை வாங்கியவன் ஒரு புறமிருக்க
துன்பம் பட்டவன் ஒரு புறமிருக்க
சிறைவாசம் சென்ற கூட்டம் ஒரு புறமிருக்க
அநாதையாக்கப்பட்ட ஓர் இனக் கூட்டம் ஒரு புறமிருக்க...

மலேசியத் தமிழர் இனத்தின் போராட்டத்தைக் கொண்டு
இன்றும் சொகுசு வாழ்க்கை வாழும் பலர் உள்ளனர்.
அதில் அன்னிய இனத்தவர்கள் மட்டுமல்ல
மாறாக நம் இனத்தை சார்ந்தவர்கள் மிக அதிகம்...

அரசியல் மூலம் தனி மனிதனாக
குடும்ப அரசியல் நடத்திக் கொண்டு
கோடான கோடு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு
அவர் அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு
வாரிசு அரசியல் என்று
இராஜ போக வாழ்க்கை வாழ்கிறார்கள்...

இதற்கு உதாரணம் நிறைய உண்டு...
இன்றளவும் இதை தான் செய்து கொண்டு வருகிறார்கள்...

தமிழர்கள் பலர் அவர்களுக்கு வாலை பிடித்துக் கொண்டு
எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு பின் தொடர்கிறார்கள்...
அவர்களோ... தன் இன அரசியல் செய்கிறார்கள்...
கேட்பாரில்லை... ஐயகோ...

அன்று எழுச்சி கொண்ட மலேசியத் தமிழர் இனம்
இன்றும் கோழை இனமாக
பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கு...

இந்த 16 ஆண்டுகால போராட்டத்தின் மூலம்
"பூனைக்கு மணிக்கட்டிய" இனத்துக்கு
கிடைத்தது என்ன?
சாதித்தது என்ன?
வாழ்கிற வாழ்க்கை தான் என்ன?

அறுபது ஆண்டு கால ஆட்சியில்
ஒன்றும் கிடைக்கவில்லை
அந்தத் தாக்கத்தில் தான் "இந்திய இனம்"  
குறிப்பாக 90 சதவிகித தமிழர்கள்
தலைநகரில் 2007-இல் ஒன்று கூடினார்கள்
(அதில் எனது குடும்பமும் தான்)

என்ன ஆச்சு?

அரசாங்கமும் நமது குறையை கேட்டு அறியவில்லை...
செவி சாய்க்கவில்லை...
ஒரு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...

(ஆரம்பத்தில் ஒரு சில சலுகைகளை கொடுத்தது குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு)

ஆனால், 2007 எழுச்சிக்குப் பிறகு
இன்று நமக்கு ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்த்தால்
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமே இல்லை...

காரணம் நமக்கென்று ஒரு சரியான சமுதாயத் தலைவன் இல்லை
வந்தவன்...
போனவன்...
இருக்கிறவன்...
எவனும் நல்லவன் இல்லை...

வருவான் என்று எதிர்ப்பார்த்தால்
எல்லோரும் 1000 சதவிகிதம் சுயநலவாதிகளே...

நம்மவர்களை ஏணிப்படியாக வைத்து...
மேலே போகிறார்களே தவிர
நம்பிய இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற எண்ணம் எள் அளவும் இல்லை.
நாம் சிந்திப்பதும் இல்லை... திருந்துவும் இல்லை...

சுயநல நரிக்கூட்டமும்
நம்மை சிந்திக்க விடமாட்டார்கள்...

ஆக............
ஒரு காலத்தில் "மக்கள் சக்தி"
என்று வாய் கிழிய கத்திய வாய்கள் இன்று "பண சக்தி" "தன சக்தி"
என்று சத்தமில்லாமல் இரகசியமாக மனதுக்குள்ளேயே கூவுது...

சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
அன்புடன்
நாம் தமிழர்
நாமே தமிழர்...

ஆக்கம்: பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்
25.11.2023