05 ஆகஸ்ட் 2022

மலேசிய ஜனநாயக செயல் கட்சி - தேவன் நாயர்

தேவன் நாயர் (ஆங்கிலம்: Devan Nair அல்லது Chengara Veetil Devan Nair); என்பவர் மூன்றாவது சிங்கப்பூர் அதிபர்.

மலேசியா, மலாக்கா, ஜாசின் பகுதியில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், 1981-ஆம் ஆண்டில் இருந்து 1985-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர்.


சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். சிறந்த தொழிற்சங்கவாதி; போராட்ட குணத்தில் இரும்பு மனிதராக விளங்கியவர். லீ குவான் இயூ அவர்களின் நீண்டகால நெருங்கிய நண்பர்.

சிங்கப்பூரின் கம்யூனிசக் கட்சியில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லும் அளவுக்கு, 'முக்கிய ஐந்து நபர்களில்' ஒருவராய் வலம் வந்தவர். 1951 ஆம் ஆண்டு முதல் 1953 ஆண்டு வரை சிறைவாசம்.

1964-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பங்சார் தொகுதியில், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சியின் ஒரே உறுப்பினர் இவரே ஆகும்.

1979-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அன்சன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார். 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அதே அன்சன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இரண்டு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரே இந்தியர். 1981 அக்டோபர் 23-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்றார்.

இருப்பினும் 1985 மார்ச் 28-ஆம் தேதி, தெளிவற்ற சூழ்நிலையின் காரணமாக இவர் தன் அதிபர் பதவியைத் துறப்பு செய்தார்.

1961-ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியை உருவாக்கினார். தேவன் நாயர் உருவாக்கிய இந்த ஜனநாயக செயல் கட்சி தான், இப்போது மலேசியாவின் தலையாய எதிர்க் கட்சியாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் 42 இடங்களைக் கொண்டுள்ளது.

தேவன் நாயர் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, 1988-ஆம் ஆண்டில், தன் மனைவியுடன் முதலில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

பின்னர் கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனுக்கு (Hamilton, Ontario, Canada) குடிபெயர்ந்தார்கள். அவர்கள் தங்களின் இறுதிநாட்கள் முழுவதும் அங்குதான் வாழ்ந்தார்கள்.

அவரின் மனைவி ஆவடை தனம் லட்சுமி (Avadai Dhanam Lakshimi) 18 ஏப்ரல் 2005-இல் கனடா ஹாமில்டன் நகரில் காலமானார். அதே நேரத்தில் கடுமையான மறதிநோயினால் பாதிக்கப்பட்ட தேவன் நாயர் அவர்கள், அதே 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, மனைவி மறைந்த அதே ஹாமில்டன் நகரில் காலமானார்.

(மலேசியம்)
05.08.2022