27 ஜூன் 2021

பால் மங்கு பழைய நினைவுகள்


பதிவு செய்தவர்:  தனசேகரன் தேவநாதன்


தனசேகரன் தேவநாதன்: மலேசிய தமிழரின் இரத்த வியர்வையைப் பறைசாற்றும் நினைவுச் சின்னம். இளவயதில் பெற்றோர்களுக்கு மங்கு துடைக்க போகாத பிள்ளைகள் உண்டோ தோட்டத்திலே... இந்த மங்கில் என் தாயாரின் நிரையில் வாலியில் பால் சேர்த்த ஞாபகம் வருகிறது. (1960)

முருகன் சுங்கை சிப்புட்: குரங்குகளின் விளையாட்டு பொருட்கள் இந்த மங்கு

தேவி சர: இது தான் மங்கு என்பதை இப்போது தான் பார்க்கிறேன்... என் அம்மா தோட்டத்து வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பார்த்து படித்து கருத்தும் எழுதி விட்டேன் அப்பா... 👌👍🏻

மகாலிங்கம் படவேட்டான்: தமிழினத்திற்குச் சோறு போட்ட மங்கு...

கரு ராஜா சுங்கைபூலோ: [11:42 am, 27/06/2021] Raja Sg Buluh: ரப்பர் மரத்தில் கம்பியில் கட்டி தொங்க விட்டதும் மங்குதான். அந்தக் காலக்கட்டத்தில் தோட்டங்களில் பீங்கான் தட்டு பாவிப்பது இல்லை. ஒரு மாதிரி இரும்பு தகட்டில் வெள்ளை நிறத்தில் சாயம் பூசிய மங்கில் சாதம் சாப்பிட்டதை ஒரு சிலர் மறந்திருக்க முடியாது.

இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் அந்த மங்கு கீழே விழுந்ததும் சில்லு பட்டுவிடும். அதை எல்லாம் தோட்டத்து மக்கள் பெரிது படுத்துவதில்லை. என் தாயார் அடிக்கடி இப்படி சொல்லுவார்.

ஏண்டா சாப்பிட்ட மங்கை கழுவவில்லை என்று. இப்படி எல்லாம் நம் தோட்டத்து வாழ்க்கை முறை. இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்க்ஷ்டக்காரப் பிள்ளைகள். கொடுத்து வைத்த பிள்ளைகள்.


ராதா பச்சையப்பன்: பலருக்கும் சின்ன வயது ஞாபகத்தை நினைவு படுத்தி விட்டது இந்த பால் மங்கு. இதைச் சிலர் அவரவர் வீட்டிலும் உபயோகித்தார்கள்.  வயதானவர்கள் வெற்றிலை, பாக்கு இடிக்க உதவியது. செல்லப் பிராணிகளுக்குப் பால், தண்ணீர் ஊற்றி வைக்க உதவியது. சிலர் கிச்சனிலும் உபயோகித்தார்கள்.  

இந்த மங்கு ஆற்றிய சேவைகளைத்தான் மறக்க, மறைக்க முடியுமா? சரித்திரப் புகழ் பெற்றது. சில சமயம் இந்த மங்கை துடைக்கும் போது, உள்ளே இருக்கும் சிறு சிறு கல்கள் கையில் வெட்டி இரத்தம் வந்த சம்பவம் எனக்கு நிறையவே உள்ளது.

சில தோட்டங்களில் பிளாஷ்டிக் மங்கும் உபயோகத்தில் இருந்தது. சிலர் இந்த வகை மங்குகளை இன்றும் நினைவுச் சின்னமாக வைத்துள்ளார்கள். இந்த மங்கை கேட்டால் பல கடந்த காலக் கதைகளைச் சொல்லும். பழையதை நினைவுக்கு கொண்டு வந்த இதன்‌ பதிவாளருக்கு நன்றிகள். 🙏🙏👌🌹.

பாரதிதாசன் சித்தியவான்: உண்மைதான் ஐயா

தனசேகரன் தேவநாதன்: பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது சிறிய ஓடையில் ஓடும் தண்ணீரை இந்த பால் பங்கு கொண்டு அள்ளி அள்ளிக் குடித்து கும்மாளம் போட்டாலும் வாந்தியும் இல்லை பேதியும் இல்லை. கலாராவும் இல்லை. கொரானாவும் இல்லை.

இன்று மினரல் நீர் சுகாதாரம் கொடிகட்டி பறக்குதே ஏன்? மாதவா கேசவா மகேஸ்வரா...

பெருமாள் கோலாலம்பூர்: 👍 உண்மை. அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த மங்கைத் தலைகீழாகத் திருப்பி சுட்ட வசம்பை உரசி பொட்டு வைப்பார்கள் அந்தக் கால பெண்பால் பெருசுகள் 👌

ராதா பச்சையப்பன்: உண்மை. 💯/💯. இன்னும் சில, பல கதைகளும் உள்ளன இந்த மங்கில்... கால தாமதமாக மங்கு துடைக்கப் போனதால், அந்த மங்கில் அடி வாங்கிய கதைகளும் அடங்கும் 🙏🌹.

கலைவாணி ஜான்சன்: பழைய நினைவுகள்... பால் மரக் காட்டினில், பனி பெய்யும் வேளையில்... 😊

தேவி சர >>> கரு ராஜா: அருமை ஐயா... தங்கள் அம்மாவின் நினைவுகளா இவை...  சில்லு என்றால் என்ன... எனக்கு புரியவில்லை... ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்ஷடக்கார பிள்ளைகள்...🙁 இப்ப உள்ள பிள்ளைகள் பாவம் ஐயா... தெருவில் ஓடியாடி  விளையாட முடியவில்லை...

வீட்டில் விடியோ கேம் அல்லது திறன் பேசி, கணினி என்று உட்கார்ந்த இடத்திலேயே நண்பர்கள் இல்லாமல் தனியாக விளையாடுகிறார்கள்.

மேலும், உடன் பிறப்புகள் இருந்தால் கூட தனியாகவே இம்மாதிரியான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாம் தான் ஐயா அதிர்ஷ்டசாலிகள்... வெறும் காலோடு தெருவில் நண்பர்களோடு விளையாடினோமே அது தான் அன்றைய  பிள்ளைகளுக்கு பொற்காலம்.

கூட்டஞ்சோறு ஆக்கி ஆளுக்கொரு இலை பறித்து ஒன்னா உக்காந்து சாப்பிட்டோமே அது பொற்காலம்... நம்ம பொன்னான காலம். அதுவே அதிர்ஷ்ட பிள்ளைகளின் காலம் 🥰.😔🥺

கரு ராஜா >>> தேவி சர: வணக்கம் தேவி. சில்லு என்பதற்கு விளக்கம் கேட்டீர்கள். இப்ப தான் பார்த்தேன். காலயில் தோட்டத்திற்குப் போயிருந்தேன்.

ஒரு கண்ணாடிக் கோப்பை லேசாக இடிப்பட்டால், உடையாது. அதற்கு வீரு விட்டுடுச்சுனு சொல்லுவோம்.

அந்தக் காலத்தில் தோட்டத்தில் உணவு அருந்துவதற்கு ஒருவிதமான தட்டு எல்லா வீட்டிலும் உபயோகப் படுத்தினார்கள். அது லேசான இரும்பில் செய்யப்பட்டு, மேலே வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.

கீழே விழுந்ததும் வெள்ளை நிறம் லேசாக வெளியாகி அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் கருப்பாய் இருக்கும். இதைத்தான் நாங்கள் சில்லு விட்டுடுச்சு என்போம். அந்த மாதிரி பாத்திரங்கள் இப்ப புழக்கத்தில் இல்லை. ராதாவுக்கும் இதே பதில்தான்.

தேவி சர: அப்படியா ஐயா. எனக்கு விளங்கி விட்டது... அந்தப் பாத்திரம் என் கற்பனைக்கு வந்து விட்டது. நன்றி ஐயா. 🙏🏻

ராதா பச்சையப்பன்: 🙏 மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது எனக்கும் புரிந்தது. நானும் தோட்டப் புறத்தில் வாழ்ந்தவள் தானே. நீங்கள் சொல்லும் அப்போது உள்ள அந்த மங்கு, குவளை, தட்டுகள் இன்றும் சிலர் வைத்து உள்ளார்கள். ஒரு சொருகல்.       

என் பக்கத்து வீட்டு அம்மாவுக்கு எட்டும் ஆண் பிள்ளைகள். அந்த அம்மா, பெரிய இரண்டு மகன்களுக்கு தனித் தனி தட்டில் சாப்பாட்டைப் போட்டு கொடுத்து விட்டு, மற்ற ஆறு பையன்களுக்கும் சகோதரர் திரு. கருப்பையா சொன்ன அந்த மாதிரியான பெரிய தட்டில் எல்லாச் சோறு கறிகளையும் போட்டுக் கொடுப்பதை... அதில் ஒரு பெரிய பையன் பிசைந்து கொடுத்து எல்லா பையனுங்களும் சாப்பிடுவார்கள். 

கடைசியாகச் சாப்பிட்டு முடிக்கும் பையன்தான் தட்டை கழுவி வைக்க வேண்டும். அந்த அம்மாவில் அவ்வளவு தட்டையும் கழுவ இயளாது. அவங்களும் தோட்டத்தில் வேலை செய்பவர்தான். பக்கத்து வீடு என்பதால் இதை தினமும் பார்ப்பேன். 😃🙏🌹.

பெருமாள் கோலாலம்பூர்: நான் ஆயக் கொட்டகையில் இருந்த போது அந்த ஆயா  தன் வீட்டில் சமைத்த உணவை (சோறு, கறி, காய்கறி) கலந்து பிசைந்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஓர் உருண்டை பிடித்து கொடுப்பார்.

அம்மாதிரியான தாயுள்ளம் கண்டு இன்று மனம் நெகிழ்கிறேன். பால் டின் மட்டுமே இலவசமாக தோட்ட நிர்வாகம் கொடுக்கும். அது 1956-இல் நடந்த சம்பவம்.

ராதா பச்சையப்பன்: 🌹🙏 அருமையான பதிவு. இதை அப்படியே வலைத்தளத்தில் பதிவேற்றிய நம் புலன தலைவருக்கு என் இரு கரம் கூப்பி, தலை வணங்குகிறேன்.  இப்படி ஒருவர் நமக்கு எல்லாம் கிடைத்து நாம் செய்த பலண் என்று தான் சொல்ல வேண்டும்.

நாம் எதிர் பார்த்தோமா நம்முடைய எழுத்துப் படிவங்கள் வலைதளத்தில் பதிக்கப் படும் என்று... நம் பின்னால் வரும் நம் சந்ததியினர் இந்தப் பதிவைப் படித்து பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்... தோட்டப்புற வாழ்க்கையில் இரப்பர் மரம் சீவி ரப்பர் பால் எடுக்கும் முறையை... இது ஒரு நல்ல பதிவு. தலைவருக்கு நன்றிகள். 🙏

தனசேகரன் தேவநாதன்: நியாயமான பாராட்டுக்கள். நன்றி அம்மா.

ராதா பச்சையப்பன் >>> தனசேகரன் தேவநாதன்: இன்று  இப்படி ஒரு தலைப்பை  பதிவு செய்தவரே நீங்கள் தானே உங்களுக்கும் நன்றிகள். இப்படி ஒரு பால் மங்கைப்  போட்டு, பலரின் மனதில் பல வருடங்களாக  மறைந்து இருந்த ஆதங்கத்தை  வெளியில் வந்து தங்கள் கருத்துகளை  கூற வைத்தது எவ்வளவு பெரிய விசயம்.

கடந்த காலத்தை எத்தனைப் பேர் இன்று அசை போட்டு பார்த்து இருப்பார்கள். அதில் நானும் ஒருத்தி. தலைப்பைப் பதிவு செய்தவருக்கும்; தங்கள் மனதில் உள்ளதை எழுதோவியமாக பதிவு செய்தவர்களுக்கும், அதை அழகாக வடிவமைத்து வலைதளத்தில் பதிவேற்றியவருக்கும் நன்றியும் பாராட்டயும் தெரிவித்துக் கொள்கின்றேன். 🙏🌹.
 
பெருமாள் கோலாலம்பூர்: தலைவரின் எண்ணங்கள் புலன உறுப்பினர்களை விட ஜெட் வேகத்தில் பறக்கிறது. இம்மாதிரியான ஜாம்பவான்களோடு எழுத்துலகில் பயணிப்பது பெரும் மகிழ்ச்சி என்பேன். அருமை தலைவரே.



25 ஜூன் 2021

138 வீட்டுக் குறிப்புகள்


1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவி விட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.. ✍️🙏



 

19 ஜூன் 2021

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம்

தமிழ் விக்கிப்பீடியாவை ஒவ்வொரு மாதமும் 70 இலட்சம் பார்வையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உலகளாவிய நிலையில் அரசு பள்ளிகள்; கல்லூரிகள்; பல்கலைக்கழகங்கள்; ஆசிரியர்க் கல்லூரிகள்; தமிழர் அமைப்புகள்; போன்ற கல்விக்கழகங்களில் பயிலும் மாணவர்கள்; ஆசிரியர்கள் உட்பட பல மில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம். அதற்கான விளக்கங்கள் கீழே உள்ள இணைப்பில் தரப் படுகின்றன.

https://ta.wikipedia.org/s/ae

தமிழ் விக்கிப்பீடியாவில் படங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது கீழே உள்ள இணைப்பில் சொல்லப் படுகிறது.>>>>

https://ta.wikipedia.org/s/3t2z

மலேசியாவைப் பற்றி எழுதப் பட்ட கட்டுரைகள் கீழே உள்ள இணைப்பில்:>>>>

https://xtools.wmflabs.org/pages/ta.wikipedia.org/Ksmuthukrishnan?limit=1000

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் பற்றிய விவரங்கள் கீழே உள்ள இணைப்பில்:>>>>

https://ta.wikipedia.org/s/fcl

நீங்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுங்கள். தமிழ் உலகத்திற்கு உதவி செய்யுங்கள். நம்முடைய படைப்புகளை நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சீதனமாக விட்டுச் செல்லுங்கள்.

பணம் பொருள் சீதனமாக வேண்டாம். நம் உழைப்பை காடுரைப் படைப்புகளின் வழி, சீர்வரிசையாக விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நம் சந்ததியினர் நம்மை நினைத்துப் பார்ப்பார்கள். நாம் மறைந்த பின்னர் நம் இனத்தவர் நாம் செய்ததை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள். கை எடுத்துக் கும்பிடுவார்கள். வாழ்த்துவார்கள். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.06.2021

 

18 ஏப்ரல் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி சாதனை

இந்தோனேசியாவின் அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான 2021-ஆம் ஆண்டு புத்தாக்கப் போட்டியில் தொழில்நுட்பம் மற்றும் கணினி பட்டியலில் கங்கார் தமிழ்ப்பள்ளி வெள்ளி பதக்கம் வென்று வெற்றி வாகை சூடி உள்ளது.


அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் பல அரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து வருகிறார்கள். தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் சாதனைச் சரித்திரங்கள், கடந்த பத்து ஆண்டுக் காலக் கட்டத்தில் அதிகரித்த வண்ணமாய் உள்ளன.


தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பு; கற்றல் கற்பித்தலில் நவீன அணுகுமுறைகள்; அன்பு அரவணைப்புகள்; உற்சாகத் தூண்டுதல்கள் போன்றவை மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.

23 உலக நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அனைத்துலக மாணவர்கள் இந்த அனைத்துலக இளம் ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டனர்.

கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ் மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளி. இருப்பினும் இந்த அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று பெர்லிஸ் மாநிலத்திற்கும், பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்து உள்ளது.

இளம் ஆய்வாளர்கள், லாரா அன்சிலியா செல்வராஜ், ஹெரன் ரஷ் ஜெய் ரஷ், குஜென் சந்திரஹாசன் & ருத்ரா மணிவனன். இவர்களுக்கு நம் வாழ்த்துகள்.


இவற்றுக்கு எல்லாம் தூண்டு கோலாக அமைந்தவர்கள் அப்பள்ளியின் ஆசிரியர்கள் திரு. சிவசுதன் குமரன், திரு. அறிவானந்தன் இராஜமாணிக்கம், ஆசிரியை குமாரி தர்ஷினி கணேச மூர்த்தி, ஆசிரியை திருமதி. தனமலர் வீரசிம்மன், ஆசிரியர் பரமேஸ்வரன் குணசேகரன், ஆசிரியர் திரு. கிருபா முருகன் கிருஷ்ணன் மற்றும் அனைத்து கங்கார் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.


அவர்களுடன் கங்கார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், பெர்லிஸ் கல்வி இலாகா ஆளுநர் மற்றும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைக் கங்கார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. உதயகுமார் கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

கங்கார் தமிழ்ப்பள்ளி, பெர்லிஸ் மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு உதயக்குமார்.

இவர் நம் மலேசியம் புலனத்தின் நீண்ட நாள் அன்பர்களில் ஒருவர். அவருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் உதயக்குமார்.

புலன அன்பர்களின் பதிவுகள்


தனசேகரன் தேவநாதன்: இனிய தகவல் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

வெங்கடேசன்: வாழ்த்துகள் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு... மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். வாழ்க வளமுடன்...

ராஜா கருப்பையா: வாழ்த்துகள் 🙏

உதயக்குமார்: மிக்க நன்றி, தங்கள் அன்பும் ஆசிர்வாதமும் என்றென்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவை. வாழ்க தமிழ் வளர்க தமிழ்ப்பள்ளி...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தமிழ்ப்பள்ளிகள் மலாயா தமிழர்களின் உயிர்நாடிகள். என்றைக்கும் உயிர் கொடுப்போம்.

பி.கே. குமார்:
வாழ்த்துகள் 🙏

கணேசன் சண்முகம்: வாழ்த்துகள் 🙏

கென்னடி ஆறுமுகம்:
வாழ்த்துகள் ஐயா

ராதா பச்சையப்பன்: அனைத்து மாணவ மாணவிகளுக்கு  மேம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

உதயக்குமார்: தங்கள் பாராட்டுக்கள் நம் செல்வங்கள் வளர்ச்சிக்கு தூண்டு கோலாக அமையும். மிக்க நன்றி.

தேவிசர: வாழ்த்துகள் 🙏

மகாலிங்கம் பினாங்கு: வாழ்த்துகள் 🙏

சிவகுரு மலாக்கா: வாழ்த்துகள் ஐயா... வாழ்க தமிழ் 💐

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தமிழ் மொழி தமிழ்ப்பள்ளிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ்ப்பள்ளி அனைத்துலக அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ஒரு வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த மாணவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள். நினைத்துப் பாருங்கள். ஒரு வாழ்த்து கூடவா சொல்ல மனசு இல்லை. நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். இதில்

தமிழக கோயில் களின்
கோபுரங்களில்
அதிகமான காமலீலை
சிலைகள் எதற்காக
செதுக்கப்பட்டிருக்கிறது

என்று கேள்விகள் கேட்க மட்டும் நேரம் இருக்கிறது. வேதனை. கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வாழ்த்துச் சொன்ன நல் இதயங்கள்.

1. தனசேகரன் தேவநாதன்
2. வெங்கடேசன்
3. ராஜா கருப்பையா
4. பி.கே.குமார்
5. கணேசன் சண்முகம்
6. கென்னடி ஆறுமுகம்
7. ராதா பச்சையப்பன்
8. தேவி சர
9. மகாலிங்கம் பினாங்கு
10. சிவகுரு
11. ????

ஆர்.டி.எம். ராஜா: வாழ்த்துகள் 🙏

வெங்கடேசன்: அனைவருக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

வெங்கடேசன்: இதற்கு மேல் என்னதான் சொல்வதோ?தாங்களும் பல முறை கூறி விட்டீர்கள்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா...இப்போது தான் புலனத்தை பார்க்க வந்தேன்... ஆகவே தான் தாமத பதிவு. ஆசிரியர் பெருந்தகையர்க்கும் மாணவ மணிகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் ... பாராட்டுகள். வரும் காலங்களில் மென் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் 👌👌👏🏻👏🏻👍👍

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இரண்டு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தால் போதுங்க... துணிந்து குடும்பப் பொறுப்பை ஒப்படைக்கலாம்

சரோஜினி: வாழ்த்துகள் 👏🏻

காளிதாசன்: வாழ்த்துகள் 🙏

நாகராஜன்: வாழ்த்துகள் 🙏

வேலாயுதம் பினாங்கு: வாழ்த்துகள்...

வனஜா பொன்னன்: என் இனிய நல்வாழ்த்துக்கள்! 🙏🙏

பாரதிதாசன் சித்தியவான்: சிறப்பு வாழ்துக்கள்

சந்திரன் ஜொகூர்: வாழ்த்துகள் ஐயா. வாழ்க தமிழ் 💪🙏

ஜீவன் தங்காக்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள்







 

04 ஏப்ரல் 2021

அண்ட்லி தோட்டமும் மேக்கடை லயன்களும் - முனியாண்டி ராஜ்

04.04.2021

பகிர்வு: ஆயர் தாவார் தனசேகரன் தேவநாதன்

வெள்ளி மாநிலம் பல வரலாறுகளின் பண்ணை. வணிகர்களாக வந்த சீனர்களின் கலங்கரை விளக்கம். உலகிற்குப் பல கோடி டன் ஈயத்தை வாரிக் கொடுத்த சீதக்காதி.

உறுப்புக்கள் அனைத்தையும் பயனுக்கு அள்ளித் தரும் தென்னை அதிகமாய் பூப்பெய்திய மண்; மலேசிய பதிவேட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்; என இன்னும் பல கூறுகளைச் சொல்லி கொண்டே போகலாம். அதுதான் பேரா மாநிலம்.

மாநிலத்தின் தலைநகரமாய் முன்னாளில் முழங்கப்பட்ட தைப்பிங்கில் இருந்து 60 கல் தெற்கே பயணத்தை தொடர்ந்தால் மேம்பாட்டுத் திட்டங்களின் அபரித வளர்ச்சியினால் பழைய முகவரியைத் தொலைத்துப் புதிய பரிணாமம் பூண்டு இருக்கும் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தை அடுத்து சுமார் 13 கல் அளவில் உள்வாங்கியவாறு அண்ட்லி தோட்டம மையம் கொண்டு உள்ளது.

தோட்டத்து நுழைவாயிலை அடைந்ததும் மண்சாலை. இருபுறமும் செம்பனை மரங்கள் குடை பிடித்துக் நிற்கின்றன. சற்று தள்ளிச் சென்றால் கோயில் கோபுரம் தலை நமிர்ந்து நிற்கிறது.

நவக்கிரக வழிப்பாட்டுத் தளங்களுடன் ஸ்ரீ ராமர் கோயில், முனீஸ்வரர் ஆலயம், அர்ச்சகர் குடியிருப்பு மற்றும் கல்யாண மண்டபம் என ஒரு சேர அமைந்து அரசாட்சி நடத்திய அடையாளங்கள் தெரியும்.

கோயிலின் எதிர்ப்புறத்தில் 80-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட தற்போதைய குடியிருப்பு. அதற்கு முன்னர் மேக்கடை லயன்களாக காட்சி அளித்தவை.

காலனித்துவ ஆட்சியில் பலகைகளால் கட்டப்பட்டு பச்சை வர்ணம் பூசப்பட்ட  வீடுகளில் நூறு குடும்பங்களுக்கு மேல் குடி இருந்தார்கள். நாட்டின் முக்கிய ஏற்றுமதியான ரப்பர் மரம் சீவுதலே பிரதான தொழில். தோட்டத்து நிர்வாகம் ஒரு சில அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து இருந்தது.

பல தோட்டங்களில் 'தாமஸ் ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பு இல்லாமல்... மண்ணெண்யை விளக்கின் வெளிச்சத்தில் படித்துக் கொண்டு இருக்கையில், இங்கு காலை 5 மணி முதல் 6.30 வரையிலும் மாலை 7.00 மணி தொட்டு 10.30 மணி வரையிலும் மின்சார ஒப்பந்தச் சம்சாரமாய் அறிமுகப் படுத்தி இருந்தார்கள்.

திருவிழா, பண்டிகை நாட்களில் நேரம் நீட்டிக்கப் படுவதும் உண்டு. மற்றொன்று ஆயாக் கொட்டகை. வேலையின் நிமித்தம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டுச் சென்று பணி முடிந்து திரும்பும் பொழுது அழைத்து செல்லலாம்.

உபரி வருமானம் ஈட்ட பயிரிடுதல்; கால்நடைகள் வளர்த்தல்; மற்றும் தோட்டத்துத் தொழிற்சாலையில் பகுதிநேர வேலை செய்தல் என பொன்னான வாய்ப்புகள் நிறைய வாய்த்திருந்ன.

உறவு, நேசம் மற்றும் மனித நேயம் என்பது தோட்டத்து மக்களின் பொதுவான குண நலன்கள். அஃறிணயை மாந்தர் பெயர்ச் சொல்லி அழைத்த பெருமை தோட்டத்து மக்களுக்கே உரித்தானது.

வளர்ப்பு நாயை மணி, வேலா, குணா என்றும் மாடுகளை லெச்சிமி, கண்ணம்மா என்றும் அழைப்பது தோட்ட மக்களுக்கே உரிய குணம்.

மார்கழி அதிகாலையி்ல் பட்டாம் பூச்சியாய் மங்கையர்கள், மாட்டு சாணம் சேகரித்து வீட்டின் முன்புறம் மெழுகில் கோலமிட்டதையும்... நிலா வெளிச்சத்தில் உடன் பிறப்புகளோடு சம வயதுடைய அண்டை வீட்டு நட்புகளுடன் நிலாச் சோறு சாப்பிட்டு நொண்டி விளையாடியதும்... காலத்தால் மாசு படியாத காவியங்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் விறகு சேகரிக்கும் தோரணையை முன்னெடுத்து வேலி இல்லாத சேற்று குளத்தில் நீச்சல் பழகியதும்; காகிதக் கப்பல் மிதக்க மழையை வேண்டி நின்ற எதார்தத்தையும் நினைத்தால் இன்றும் மனம் குதூகலி்க்கும். மாலை வேளையில் காற்பந்து, சடுகுடு என உற்சாகமாகி விடுவார்கள் இளைஞர்கள்.

கோவில் வளாகத்து திண்ணையில் விருட்சமாய் வளர்ந்திருந்த அரசமரம். அன்றையக் கனவு நாயகர்களின் அசத்தலான நடிப்பு முதல் ரஞ்சன் வீட்டு மாடு கன்று ஈன்றது வரை இப்போது கேட்டாலும் மனனம் செய்ததை ஒப்புவிக்கும்.

தீ விபத்தைக் களையும் நோக்கில் எந்த நேரமும் நீண்ட கழியில் தயாரான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நிறத்திலான மணல் வாளிகளுடன் வரவேற்றுக் கொண்டு சுமார் 250 மாணவ மாணவிகளுடன் இயங்கி வந்த தமிழ் பள்ளியை அடுத்து வள்ளுவர் படிப்பகம்...

மாத, வார நாழிதழ் முதல் தமிழ்வாணன், கல்கி, மு.வரதராசணார், கல்கி போன்றோரின் நூல் வடிவங்கள் அழகாய் வரிசை பிடித்து நிற்கும்.

இலக்கிய தாகம் கொண்ட சிலரை இரவு நேரங்களில் இங்கே காணலாம்.

பதிவேட்டில் குறிப்பெழுதிப் புத்தகங்களை இரவல் வாங்கிச் செல்லலாம்.

மாலை வகுப்பு (tution) திரு கிருஷ்ணன் (இன்று அமரராகி விட்டார்) ஆசிரியரின் தலைமையில் நடைபெறும். இவரைப் பற்றி இங்கே சில வரிகள் சொல்லியாக வேண்டும்.

எம் ஜி ஆரின் பரம ரசிகரான இவர்; அதே பாணியில் உடுத்தி; தலையையும் வாரிக் கொண்டு கையில் ஒன்றிரண்டு புத்தகத்துடன் அதிகமான கண்டிப்புமாய் வலம் வருவார்.

'சார்' என்று அழைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

இன்னொரு பிரபலம் இங்கே உண்டு. 'சுல்தான்' என அடைமொழியுடன் அழைக்கப்பட்ட கை. துரைசாமி. உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். தற்காப்புக் கலையில் தேர்ந்தவரான இவர் அப்போதைய வில்லன்களின் சிம்ம சொப்பனம்.

கை கால்களில் எலும்பு இடம் பெயர்ந்துள்ளாதா? இவரை நாடினால் குணமாகிவிடும் என்று சொல்லும் அளவிற்க்கு சித்த வைத்தித்தில் அனுபவம் உண்டு. தோட்டத்தில் வர்ண விளக்குகள், அலங்கார வளைவுகள் என தீமிதி உற்சவம் ஒரு வாரத்திற்க்கு முன்பே களைகட்டிவிடும்.

திடீர் கடைகள் கோவிலை சுற்றி ஆங்காங்கே தோன்றிவிடும். கோவில் உற்சவங்கள் என்று வந்தால் பாரம்பரிய உடைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இவை அன்றைய எழுதப்படாத சாசனம்.

திருவிழாவை முன்னிட்டு இருபதுக்கும் மேற்பட்ட உபயங்கள் நடைந்தேறும். அதில் வாலிபர் உபயமே மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அன்றுதான் விளையாட்டுப் போட்டிகள், திரைப்படம் என அமர்க்களப்படும்.

முதல்நாள் இரத ஊர்வலத்தில் தொடங்கி... மறுநாள் தீ மிதித்தல், அதனைத் தொடர்ந்து மறுநாள் காவடிகள் செலுத்தும் நேர்த்திக் கடன் மிக தேர்த்தியாய் நடைபெறும்.

80-ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலகளாவிய நிலையில் ரப்பர் விலை மீள முடியாத படு வீழ்ச்சியில் சரிந்துக் கொண்டிருந்தது.

ரப்பர் மரங்களின் அழிப்பு மெல்ல மெல்லத் தொடங்கி... செம்பனை மரங்களின் தாக்கம் கிடு கிடு என உயர்ந்துக் கொண்டே போனது.

வேலை வாய்ப்பை இழந்த பலர் மற்ற மாநிலங்களுக்கு வருமானம் தேடி புலம் பெயர... இளைய தலைமுறையினர் சிங்கப்பூருக்கு படையெடுக்க... ஒரு பகுதியினர் அக்கம் பக்கத்து வீடமைப்பு பகுதிகளில் புதுத் தொழில்களுடன் தங்களை வசப்படுத்திக் கொள்ள... தோட்டத்தின் மக்கள் தொகையும் மகிழ்ச்சியும் சன்னம் சன்னமாகச் சுருங்க ஆரம்பித்தது.
 
இளமைப் புன்முறுவலுடன் கண் சிமிட்டிய மேக்கடை லயன்கள்; நூல் நிலையம்;  இன்று ஒரு சிலர் வீட்டில் ரசம் இழந்த கண்ணாடிச் சிறையில் புகைப்படங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் மட்டுமே மீதமாய் இருக்கின்றன.

ரப்பர் மரங்களை வரிசையாய் ஆட்கொண்டிருந்த சதுப்பு நிலம்... தற்பொழுது செம்பனை காடுகளாகிவிட்டது... மாதத்தின் தொடக்கத்தில் சம்பளம் பெற அலுவலகம் செல்லும் பெற்றோரின் கையைப் பிடித்துச் சென்ற கடைகுட்டிகள்... இன்று காதோரம் நரைத்த குழந்தைகளாகி விட்டனர்.

சுப காரியங்களின் கால் தடங்களுடன் இறுதி யாத்திரையும் பத்திரமாய் பதிவு செய்து வைத்திருக்கும் அந்த செம்மண் சாலை... இன்று குழி விழுந்த கண்களாய் காட்சி அளித்து பழமையை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

மக்கள் திரள் நிறைந்து இருந்த தோட்டத்தின் எஞ்சிய அடையாளமாய் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளி, கோயில், ஒரு மளிகைக் கடை மட்டுமே நினைவுச் சின்னங்களாய் பிழைத்து இருக்கிறது.

தோட்டத்தின் முகப்பில் தோட்டத்தின் பெயரைச் சுமந்துக் கொண்டு இருக்கும் அறிவிப்பு பதாகை புதிய வண்ணத்தில் பளிச்சிடுகிறது.

ஏதோ ஒரு தூரத்து வானொலியில் 'வசந்த கால கோலங்கள்... வானில் விழுந்த கோடுகள்... கலைந்திடும் கனவுகள்... கண்ணீர் சிந்தும் நினைவுகள்... எனும் பாடல் காதில் வந்து மோதி மெல்ல மெல்ல கரைகிறது.



மலேசியம் புலன அன்பர்களின் பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: நாங்கள் வாழ்ந்த தோட்டத்தின் உரிமையாளர் அமரர் வி.கே. கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி, சிலவாரங்களுக்கு முன்பு நமது ஐயா அவர்கள் நீண்ட கட்டுரையைப் பதிவு செய்து இருந்தார். அச்சமயம் அவரின் தோட்டச் செய்தி இடம்பெறவில்லையே என அடியேனுக்கு ஒரு வருத்தம்.

இன்று அதை நிவர்த்தி செய்யும் வகையில் அண்ட்லி தோட்ட மைந்தர் செய்த பதிவு மனதை நெருடியது. அதை அனைவருக்கும் பகிர்வதில் ஒரு சந்தோசம். நன்றி 🌹🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அருமையான வரலாற்றுப் பதிவு... கட்டுரை எழுதும் போது இந்தத் தகவல்கள் கிடைத்து இருந்தால் கண்டிப்பாக சேர்த்து இருப்பேன் ஐயா... நன்றிங்க.

திருமதி ராதா: அருமை... அன்று தோட்டத்து வாழ்க்கை முறையே வேறுதான். அக்கம், பக்கத்து வீட்டாரை முறை சொல்லி அழைப்பதில் உள்ள அன்பும் சுகமும் தனி தான்.

இன்று பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றனர் என்று தெரியாமல் போயிற்றே!

திருவிழாக் காலங்களில் சொந்தங்கள் வருகை தனி சிறப்புதான். அன்று பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கோ, வேலைக்கோ பயம் இன்றி போய் வந்த காலம். ஆனால் ‌இன்றோ...? அந்த இளவேனில் காலம் மீண்டும் வருமா...? சிறப்பாக இருக்கிறது கட்டுரை. படைப்பாளருக்கு நன்றி. வாழ்த்தும் வணக்கமும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்:
மலேசிய நாட்டு மண் வாசனையில், நம் முன்னோர்களின் தியாகமும் நம் தாய் தந்தையரின் வேர்வை வாசமும் என்றும் நம் உடலிலும் உதிரத்திலும் உறங்காமல் இருக்கும். தோட்டத்து வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு அனுபவித்தவனுக்கு மட்டும் தான் அதன் உயிரும் ஈர்ப்பும் புரியும் தெரியும்.

தேவி சர: 


இமயவர்மன்:
அற்புதமான எழுத்து
கை பிடித்து இளமை காலம் அழைத்து சென்ற உணர்வு வாழ்த்துகள் அய்யா

குமரன் மாரிமுத்து: சற்றே என்னை மறந்தேன். மீண்டும் அந்தத் தோட்டப்புற வாழ்க்கைக்கு கை பிடித்து அழைத்தே சென்றுவிட்டார்.....💐💐💐