10 ஜூலை 2021

தேனீக்களும் அதன் அதிசய வாழ்க்கை முறையும்

பதிவு: கென்னடி ஆறுமுகம் - 09.07.2021

வேலைக்காரத் தேனீக்கள், பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது. ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து பூக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து வரும்.


அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக நடனமாடும். அந்த நடனத்தை வைத்துப் பூக்கள், தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும்.

அந்த நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.

அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனைச் சேமிக்கும் முறை பற்றியும்; அதைக் கெடாமல் பாதுக்காகச் செய்யப்படும் வேலைகளைப் பற்றியும்; ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஞ்ஞானம். அவ்வளவு நுணுக்கம்.

Bees are the claasic example for Colonial and Communal system of living.

கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.

ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள். இதில் இனப் பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணி. ஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழு முதல் பொறுப்பு. இந்தத் தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள், மரங்கள், காடுகளே உருவாகின்றன.

இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீப காலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன. ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.

காரணம் :- மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள். அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.

அப்பூக்களில் உள்ள Neonicotinoids - நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி, அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும், நல்ல ஞாபகத் தன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து குழம்பி இறந்து விடுகின்றன.

இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ இறுதியில் தானும் இறக்கிறது அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.

இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள் அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.

வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில், குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக் காய்களும், வாழைப் பழங்களும், மாம்பழங்களும் - Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.

இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும் வேரடி மண்ணோடும் விரட்டி அடிக்க வேண்டியது நம் பொறுப்பு. ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,

மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.

ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத் தெறியப்பட்டு விடும்.

பி.கு: "Bee Movie" என்றொரு Animated English Movie உள்ளது. அதைப் பாருங்கள். ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம். படித்ததில் சிந்திக்க வைத்தது.



வாணிகமா? நாடகமா? நமது அரசியல்! - பாதாசன்

பதிவு செய்தவர்: கரு. ராஜா -  09.07.2021


அரசியல் என்பது வாணிகமா ? - அஃது
   அரங்கில் நடித்திட நாடகமா ?
அரைசல் புரைசல் செய்திகளா ? - அல்ல
  அரசியல் பொய்யின் புழுதிகளா ?
நரசல் கோறனிக் கைகளிலே - மக்கள்
  நாளும் நசுங்கிச் இறக்கையிலே
அரசியல் வலுவை இழப்பதுவா - இதை
   அரசியல் வாதிகள் செய்வதுவா ?

கோறனி போடுது கொண்டாட்டம் - நம்
    குடும்ப அரசிலோ திண்டாட்டம் !
ஓரணி சேர்ந்திடும் நேரமிதே - நாம்
   ஒன்பதாய்ப் பிரிந்தால் ஊறலவோ ?
காரணம் ஆயிரம் இருக்கட்டுமே - அவை
  கானல் நீரென ஆகட்டுமே !
நேரம் இதுவே ஒன்றிணைய ! -பகை
  நேற்றைய கனவென மறந்திணைய !

குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் - நம்
  கொள்கை அதுவெனல் நாணமதே !
குழம்பில் காய்கறி இணைந்ததுபோல் - இனிக்
   கூடி ஒன்றாய்ப் பிணைந்திடுவோம் !
புலம்பல் இனியும் தேவையிலை - நாம்
   புரிந்த அரசியல் தேவையென்போம் !
கலங்க வேண்டாம் மலேசியரே - நலம்
   துலங்கும் நமது வாழ்வினிலே !

 

ஆசிரியர் பணி என்பது தொழிலா தொண்டா? - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே.குமார் - 09.07.2021

அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று பல தனியார் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி... தொடர்ந்து ஆசிரியராகத் தனியார் பள்ளியிலும், விரிவுரையாளராகத் தனியார் கல்லூரிகளிலும் பணி செய்த அனுபவங்கள் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஓரளவுக்கு உதவினாலும் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளின் சூழலும் மாணவர்களின் தேவையும் சற்று மாறுபட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.


இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் சூழலில் ஓர் ஐந்து ஆண்டுகள் என்னுடைய பணி அனுபவங்கள் மையம் கொண்டிருந்தன. ஆசிரியம் ஓர் அறப்பணி என்பதெல்லாம் காசுக்காக கற்பிக்கப்படும் தத்துவங்கள் என என் மனம் சொல்லியது.

புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில், பணக்கார மாணவர்கள் பயிலும் இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் ஏமாந்துவிடக் கூடாது.

நான் பணி செய்த அந்தக் கல்லூரியில் பல துறைகள். பொறியியல் துறையில் நான் பொறியியல் கணிதம் கற்பித்து வந்தேன். மின்னியல் படித்துக் கொடுக்கும் ஒரு மூத்த விரிவுரையாளர், நான் என இருவர் மட்டுமே அங்கு இந்தியர்கள். நாங்கள் இருவருமே ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம்.

நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வேறு இனத்தவர் ஒருவர் நிரந்தரப் பணியாளராக வேலைக்குச் சேருகின்றார்.

நிறுவனம் நிறைய இலாபம் சம்பாத்தித்து உள்ளதால் அந்த ஆண்டு எல்லோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. எனக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 1.2 மடங்கு ஊக்கத் தொகையும்; இன்னொரு இந்தியருக்கு 1.5 மடங்கும், புதிதாக வந்த நண்பருக்கு 2.0 மடங்கும் வழங்கப் பட்டது. இவ்வகைப் இனப் பாகுபாடு என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டு வகையான வஞ்சிப்புகள். ஒன்று வேலை நிரந்தரம் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியைக் காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும். இரண்டாவது, ஊக்கத் தொகை வழங்குவதில் காட்டப்படும் பாகுபாடுகள்.

அரசாங்கப் பணியில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தம் பெறுவார்கள். மேற்படிப்புக்கு உபகார சன்பளம், பணி ஓய்வுத் தொகை, இலவச மருத்துவ வசதி, விடுமுறை என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  வேலை பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால் அரசாங்க வேலையே சிறந்தது என்று மனம் எண்ணலாயிற்று.

ஐந்து ஆண்டுகள் தனியார் துறையில் இருந்தாயிற்று. அது போதும். இனி அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முடிவு செய்தேன். அந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற்று விட்டது. துன் மகாதீர்தான் அப்போது பிரதமராக இருந்தார்.

அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் அந்த வாய்ப்பு நெருங்கி வந்தது. 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' எனும் முழக்கம் உண்மையில் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.






கரு. ராஜா பிறந்தநாள் வாழ்த்துகள் 2021

09.07.2021

(மலேசியம் புலனத்தின் 20 அன்பர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். நன்றி.)

ராதா பச்சையப்பன்: இன்று புலன நிர்வாகி சகோதரர் திரு. கருப்பையா அவர்களுக்கு பிறந்த நாள்... உங்களை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன் சகோதரரே! நீங்கள் இது போன்று பல ஆயிரம் பிறந்த நாளைக் காண வேண்டும். இறைவன் அருள்புரிவாராக. உங்கள் சகோதரி இராதா🙏


வெங்கடேசன்: இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .வாழ்க வளமுடன்

தனசேகரன் தேவநாதன்: அண்ணன் கரு. இராஜா அவர்கட்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... என்றென்றும் நலமுடன்...

தேவி கடாரம்: இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ஐயா...

கணேசன் சண்முகம் சித்தியவான்:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.

ஜீவன் தங்காக்: @Raja Sg Buluh ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

உதயகுமார் கங்கார்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.

டத்தோ தெய்வீகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு.இராஜா அவர்களே.

பி.கே. குமார்: ஐயா கருப்பையா அவர்களுக்கு அகவைதின நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.வாழ்க நலத்துடன்.

வேலாயுதம் பினாங்கு: திரு. கருப்பையா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். வாழ்க நலமுடனும் & வளமுடனும்.

செபஸ்டியன் கோப்பேங்: ஐயா அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துகள். வாழ்க வளமடனும் நலமுடனும். 🙏

குமரன் மாரிமுத்து: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு ஐயா. நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ ஈசனை வேண்டுகிறேன். வாழ்க வளத்துடன்.

முருகன் சுங்கை சிப்புட்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா.. வாழ்க வளமுடன்

கவிதா தனா: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

கென்னடி ஆறுமுகம்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கரு. ராஜா அவர்களுக்கு இன்று இனியநாள்... அவர் நலமாகப் பயணிக்க மலேசியம் புலனத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க பல்லாண்டு... பல்லாண்டுகள்... 💐💐

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள் ஐயா

மகாலிங்கம் படவேட்டான்: மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்... அன்புடன்

சிவகுரு மலாக்கா: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

செல்லையா செல்லம்: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

பாலன் முனியாண்டி: அன்பு நிலைபெற, ஆசை நிறைவேற, ஈடில்லா இந்நாளில், உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரனாய் எண்ணத்தில் இனிமையாய், ஏற்றத்தில் பெருமையாய், ஐயம் நீங்கி, ஒற்றுமை காத்து ஒரு நூற்றாண்டு, ஒளவை வழிகண்டு வாழிய நீர் பல்லாண்டு..

இன்று தனது பிறந்த நாளைக் காணும் தமிழ் திரு. கருப்பையா அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்... அன்புடன் மலேசியம் புலன குடும்பத்தினர்...
 
பொன் வடிவேல்: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா, நல்ல ஆரோக்கியத்துடன் சிறந்த அறிவாற்றலுடன் நல்ல ஆயுளுடன் நம்முடன் பயணிக்க இறைவன் ஆசீர்வதிப்பார்.- பொன்.வடிவேல், ஜோகூர்பாரு 

டாக்டர் ஜெயஸ்ரீ: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! 

கரு. ராஜா: வணக்கம் புலன நண்பர்களே, இன்று 75 வயது. காலையிலேயே நண்பர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முதல் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். தொடர்ந்து மலேசிய  புலன நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். உங்கள் அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.





 

09 ஜூலை 2021

பிரான்சு நாட்டில் ஒபிலிஸ்க் தூண்கள் - டாக்டர் சுபாஷினி

பண்டைய எகிப்தின் புகழ் மிக்க மன்னன் இரண்டாம் ராம்செஸ் (Ramesses II). அவன் கட்டிய பல கோயில்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு கோயிலாக அமைவது லுக்ஸோர் கோயில் (Luxor).

இக்கோயிலின் முன்புறத்தில் இரண்டு ஒபிலிஸ்க் (Obelisk) நிற்கும் வகையில் அவன் கட்டினான். அந்த இரண்டு ஒபிலிஸ்களில் ஒன்று இன்றைக்குப் பாரிஸ் நகர மையத்தை அலங்கரித்து நிற்கிறது.


22 மீட்டர் உயரம் கொண்டது இந்த ஒபிலிஸ்க். 1936-ஆம் ஆண்டு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாகப் பிரான்சில் பிரகடனப் படுத்தப்பட்டது. கொன்கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு பக்கத்தில் இது அமைந்திருக்கிறது.

மன்னன் இரண்டாம் ராம்செசைப் புகழும் வகையில் ஹீரோக்ளிப்ஸ் (Hieroglyphs) எழுத்துக்களால் இந்த ஒபிலிஸ்க் கற்பாறை சின்னத்தில் நான்கு பகுதிகளிலும் குறியீடுகள் கீறப்பட்டு உள்ளன.

பாறைக் கீறல்கள் என்பது நமக்கு புதிய ஒன்றல்ல அல்லவா? நம் சேர சோழ பல்லவ பாண்டிய மன்னர்கள் கோயில் கல்வெட்டுகளில் பண்டைய தொல் தமிழ் எழுத்துக்களால் பல செய்திகளை ஆவணப்படுத்தி இருப்பது போல, பண்டைய எகிப்தில் ஹீரோகிளிப்ஸ் எழுத்துக்களால் பண்டைய எகிப்திய மன்னர்கள் தங்கள் புகழ் பாடலையும் பல செய்திகளையும் செதுக்கி வைத்திருக்கின்றனர்.

எகிப்தில் இருந்த இந்த ஒபிலிஸ்க் எப்படி பிரான்சுக்கு வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம். 


ஏறக்குறைய 3000 ஆண்டு பழமையான இந்த ஒபிலிஸ்க் 1833 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி பாரிஸ் நகரை வந்தடைந்தது. நைல் நதிக் கரையில் கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்தின் அலெக்சாண்டிரியா பகுதிக்கு வந்து பிரான்சின் சார்புக் துறைமுகப் பகுதியில் இது வந்தடைந்தது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 25 அக்டோபர் மாதம் 1836 ஆம் நாள் இது மன்னர் லூயி பிலிப் அவர்களால் தற்போது உள்ள இடத்தில் நிறுவப்பட்டது.

எகிப்தை ஆண்டு வந்த ஒட்டோமான் மாமன்னன் முகமது அலி பாஷா அவர்களால் இது ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.


ஒபிலிஸ்க்  என்பது என்ன என்று பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். எகிப்தியர்களைப் பொறுத்தவரை தங்கள் கடவுள்களை வழிபடவும் சிறப்பிக்கவும் இறந்து போன தங்கள் மன்னர்களைப் பிரதிபலிக்கவும் ஒரு சின்னமாக இருப்பது தான் ஓபிலிஸ்க்.

பண்டைய நாகரிகங்களில் மன்னர்களைக் கடவுளாக காணும் முறை வழக்கில் இருந்தது தான். எகிப்திய பண்டைய நாகரிகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாகவே ஒபிலிஸ்க்  தூண்கள் ஒற்றையாக இல்லாமல் இரட்டையாக வைப்பதுதான் இயல்பு. ஒபிலிஸ்க்  தூணின் மேற்பகுதி சூரிய கடவுளான ரா (Ra) கடவுளைப் பிரதிபலிக்கின்றது.

இன்று ஐரோப்பியர்கள் பரவிய பல்வேறு நாடுகளில் ஒபிலிஸ்க்  தூண்கள் வரலாற்றுச் சின்னமாக நிற்பதை நாம் காண முடியும். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் கேப்பிட்டல் மண்டபத்தை நோக்கியவாறு பிரம்மாண்டமான எகிப்திய  ஒபிலிஸ்க் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பல தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எகிப்திய பண்டைய நாகரிகம். அந்த நாகரிகத்தின் முக்கிய சின்னம் ஒபிலிஸ்க். கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கிருத்துவ அடிப்படை சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த குரல்களின் பிரதிபலிப்பாகவும் ஒபிலிஸ்க் சின்னத்தை நிறுவிய செயல்பாடுகளைக் காணலாம் என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டிலும் ஒபிலிஸ்க்   வடிவிலான சின்னங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. என்ன... ஆச்சரியமாக உள்ளதா?

உங்களில் யாருக்காவது உடனே பார்க்க வேண்டும் எனத் தோன்றினால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறத்தில் முந்தைய கருப்பர் நகரத்தையும் வெள்ளை நகரத்தையும் பிரிக்கும் எல்லைக் கோட்டில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஒபிலிஸ்க் ஒன்று நிற்பதைச் சென்று பாருங்கள். தொடர்வேன்.

-சுபா