29 நவம்பர் 2022

தமிழ்த் தாயின் கண்ணில் கண்ணீர் வழிகிறது

ஒருநாள், ஒரே ஒரு நாள்... நம்முடைய பேச்சினில் வெளிவரும் ஆங்கிலச் சொற்களை ஊர்ந்து கவனித்துப் பட்டியலிடுங்கள். எத்தனை விழுக்காடு நம் மொழி நீர்த்து போயிருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.


காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, தாங்ஸ், சாரி, வெரி நைஸ், சூப்பர், ஓகே ஓகே,

இப்படி... கணக்கில் அடங்காத ஆங்கிலச் சொற்களை எந்த தடையுமின்றி சரளமாக.. பிரியாணியையும் தயிர் சாதத்தையும் பிசைந்து சாப்பிடுவது போல.. உரையாடி வருகிறோம்.

ஆங்கிலம் கலக்காமல் முழுமையாகத் தமிழில் பேசுவோரை விரல்விட்டு எண்ணிடலாம் என்பதே முகத்தில் அறையும் உண்மை.

நண்பர் ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார்.

"சார்... நம்ப சிஸ்டர் மேரேஜ் - கம்மிங் பிரைடே - தஞ்சாவூர்ல நடக்குது சார், நீங்க கம்பல்சரி வந்துடணும்''!

இன்னொருவர் பேசுகிறார்... இதையும் கேளுங்கள்!

"டியர் பிரண்ட்ஸ், உங்களுக்கு எல்லாம் ஒரு குட் நியூஸ். எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கு எல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க"!

இப்படித்தான் மெத்தப் படித்த மேதாவிகள் பேசுகின்றனர்.

இன்னொரு வகை தமிழையும் பரவலாகக் கேட்க முடியும்... காதில் இரத்தம் வரச் செய்யும் பண்ணித் தமிழ்!

இதோ அதனையும் கேளுங்கள்...

"நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப் பத்தி திங் பண்ணி அவனுக்காக வெய்ட் பண்ணி, பைக்ல அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே டிராவல் பண்ணி, வண்டிய பார்க் பண்ணி, ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆப் பண்ணி, பேனை ஆன் பண்ணி... '' அப்பப்பா... முடியல.

அதையும் விடக் கொடுமை... தொலைக்காட்சி அவலத் தமிழ்!

"ஹலோ.. ஹாய்.. வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா?

எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ போர் சிக்ஸ் எய்ட்.'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால்... நாளைய தமிழ்நாட்டில் தமிழின் நிலை எப்படி இருக்குமோ…என்னாகுமோ...? - என்ற அச்சமே மேலோங்கி நிற்கிறது.

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை வாடஸ்அப் போன்ற தளங்களில் கூட காணமுடியும்… ஆங்கில எழுத்தையே தமிழுக்கும் பயன்படுத்துவது.

Romba tireda irrukku, phonai charge pannanum bye. , (ரொம்ப டயர்டா இருக்கு.. போனை சார்ஜ்ல போட்டு ஆன் பண்ணனும்! … பை!)

தமிழ்த் தாயின் கண்ணில் கண்ணீர் வழிகிறது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக