11 நவம்பர் 2022

மலேசியாவில் ஒரு மனிதாபிமானமற்ற செயல்

மலேசியப் பொதுத் தேர்தல் 15 பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் பயணிக்கின்றோம். மகிழ்ச்சி.

அதே வேளையில் மலேசிய கெசட் டிவி (Malaysia Gazette TV) ஊடகத்தில் வெளியான ஒரு காணொலிப் பதிவையும் (Watch "#PRU15: Macam Mana Nak Undi? 65 Tahun Tinggal di Malaysia IC Masih Merah! 'Uncle' Luah Rasa Kecewa" on YouTube) கம்பளத்திற்கு அடியில் அப்படியே போட்டு நாம் மறைத்துவிட முடியாது முடியாது.


இந்தக் கொடுமையான நிகழ்ச்சிக்கு எந்த ஓர் அரசியல் கூட்டணி அல்லது எந்த ஒரு கூட்டணித் தலைவர் தீர்வு காண்பார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மலேசியாவில் அறுபத்தைந்து வருடங்களாக வாழ்ந்தும் இன்னும் சிவப்பு அடையாள அட்டையுடன் இருக்கும் ஓர் இந்தியரின் கடந்த காலம் மிக மிக வேதனையானது.

அவரின் நிலையும் அவரின் குடும்பத்தினர் போன்ற மக்களின் அவல நிலையையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியும் என்றால் உண்மையான ஒரு தேசியத்தின் அர்த்தம் தான் என்ன?


இந்த அவல நிகழ்ச்சியை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை. மக்களாட்சியை இந்த நாட்டின் கொள்கைக் கோட்டையாக அறிவிக்கும் ஒரு நாட்டில் பல விசயங்கள் தவறாகிப் போய்விட்டன என்பது ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரு சிறிய துளி முனை மட்டுமே.

புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்ற தொழிலாளர்கள் பலர் இங்கு இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இந்த நாட்டில் (சபாவில்) குடியுரிமை விற்பனைக்கு வந்ததாகவும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழந்தை மூன்று மாதக் குழந்தையாக மலேசியாவிற்கு பெற்றோரால் கொண்டுவரப்பட்டது; அவ்வளவு காலம் எப்படி இங்கே பெயர் போட்டது என்பதற்கான தெளிவான சான்றுகளுடன் ஒரு கணக்கும் இங்கே உள்ளது. அதை இப்போது முன் வைக்கிறோம்.

அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 65. குழந்தை எனும் அவர் மலேசியாவில் 65 ஆண்டுகள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்தார்; மூன்று குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை உருவாக்கினார்; அவரின் மூத்த மகனுக்கு இப்போது 19 வயது.


அந்தப் பெரியவருக்கு சிவப்பு அடையாள அட்டை (சிவப்பு NRIC) வழங்கப்பட்ட போதிலும் குடியுரிமை மட்டும் அவருக்கு மறுக்கப்பட்டது.

அவருக்கு குடியுரிமை மறுக்கப் பட்டதால், அவரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே முடியவில்லை.

மேலும் இந்தக் கொடுமையால் ஒட்டுமொத்த குடும்பமும் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளிகளாக வேலை செய்ய வேண்டிய அவலநிலை.

1953-ஆம் ஆண்டில் இங்கு வந்த ஒரு ஜாவானியர் ஒரு பெரும் கோடீஸ்வரராக மாற முடியும்; ஓர் அரசியல் கட்சியின் தலைவராக முடியும்... மேலும் அவர் பிரதமராகும் கனவுகளுடன் வாழ முடியும்.

ஒரு வெளிநாட்டு பிரசங்கிக்கு, அவரின் அசல் தாயகத்தில் நீதிமன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன; சாத்தியமான சிறைவாசங்களும் உள்ளன. இருப்பினும் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும் இங்கு வழங்கப் படலாம்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இங்கு வணிகப் பங்காளிகள் ஆகலாம்; அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறலாம்; எண்ணற்ற அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்று சுக போகங்களை அனுபவிக்கலாம்.

ஆனால் 65 வருடங்களாக இங்கு வாழும் ஒரு குடும்பம் இன்னும் சிவப்பு அடையாள அட்டையால் தண்டிக்கப்படுகிறது. நியாயமா?

இந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக் கூட்டணியோ, அல்லது அரசியல் தலைவர்களோ அல்லது வேட்பாளர்களோ, இந்த சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையை... தங்களின் பிரசாரத்தில் எடுத்துக் கொண்டு... அதற்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றால்... மலேசியர்கள் அனைவருமே மனிதாபிமான தன்மைகளில்... மிகக் கொடூரமாக தோல்வி அடைகிறோம் என்றே பொருள்படும்.

குடியுரிமை வழங்கப் படுவதில் நன்கு மறைக்கப்பட்ட ஓர் உண்மையைக் கவனிக்கத் தவறி விட்டோம். அந்த நிலையில் பார்த்தால், சிறந்த மலேசியாவைக் கோரும் சுயநலவாதிகளாக மட்டுமே நாம் பயணிக்க முடியும்.

இந்த மனிதரையும், அவருடைய குடும்பத்தையும் இன்னும் பலரையும் மிக மோசமான நிலையில் கொண்டு போய் விட்டு இருக்கும் இந்த அடிப்படை உரிமை மீறல்களுக்கு கடுமையான மறுப்புக் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

இந்த மோசமான தவற்றைச் சரி செய்ய ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

மலேசியாவில் ஊழலும் பாரபட்சமான அரசியலும் செழித்து வளர்வதற்கு இத்தகைய தோல்விகளே காரணம்.

மலேசிய கெசட் டிவியின் இந்தச் செய்தி அறிக்கையானது மனித உரிமைக்கு எதிரான ஒரு பிரச்சனைக்கு நேர்மையான, பொறுப்பான பதிலை வழங்குமா?

ஜே.டி. லோவ்ரென்சியர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக