15.01.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்
இன்று ஜனவரி 15 2001ஆம் ஆண்டில் இதே நாளில்தான் மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கலைக்களஞ்சியமாக இன்று திகழும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
1408இல் சீனாவில் 37 கோடிச் சீன எழுத்துகள், 11,095 தொகுதிகளுடன் உருவாக்கப்பட்டு, 1400 சதுர அடிக்கு அடுக்கப் பட்டிருந்த யாங்கிள் டாடிஸ் என்ற கலைக்களஞ்சியமே உலகின் மிகப்பெரிய கலைக் களஞ்சியமாக 600 ஆண்டுகளுக்கு விளங்கியதை, 2007 செப்டம்பர் 9-இல் விக்கிப்பீடியா கடந்தது!

விக்கி, என்சைக்ளோப்பீடியா ஆகியவற்றை இணைத்து விக்கப்பீடியா என்று பெயரிடப்பட்டது. பயனாளர்களே எழுதி, திருத்தி, பயன்படுத்திக் கொள்ளும் இணையதள அமைப்புக்குப் பெயர் விக்கி. வார்ட் கன்னிங்காம் என்பவர்தான், 1994இல் கணினி நிரல் வடிவங்களுக்கான களஞ்சியத்திற்காக, பயனாளர்களே பங்களிக்கும் வடிவத்தை விக்கிவிக்கிவெப் என்ற பெயரில் உருவாக்கினார்.
விக்கி என்ற ஹவாய் மொழிச் சொல்லுக்கு வேகமாக என்று பொருள். பயனாளர்களே பங்களிப்பதால் வேகமாக வளரக் கூடியது என்பதை உணர்த்த, முதலில் க்விக்வெப் என்று பெயரிடத்தான் அவர் திட்டமிட்டார். ஹவாயின் ஹோனோலூலு விமான நிலையத்தில், பயணிகளை அழைத்துவரும் பேருந்துச் சேவைக்கு விக்கிவிக்கி ஷட்டில் என்று பெயரிடப் பட்டிருந்தது.
வேக வேகமாக என்ற பொருளுடைய அந்தப் பெயர் அவருக்குப் பிடித்திருந்ததால் விக்கிவிக்கிவெப் என்ற பெயரைச் சூட்டினார். அதைத் தொடர்ந்து பயனாளர்களே பங்களிக்கும் வடிவத்திற்கே விக்கி என்பது பெயராக நிலைத்து விட்டது. ஜிம்மி வேல்ஸ், லேரி சேங்கர் ஆகியோர் ஏற்கெனவே ந்யூபீடியா என்ற கலைக்களஞ்சிய தளத்தை 1999இல் உருவாக்கியிருந்தனர்.
விற்பன்னர்கள் மட்டுமே பங்களித்த அதன் வளர்ச்சி மெதுவாக இருந்ததால், குறைகளை நிரப்பும் மற்றொரு தளமாகத்தான் விக்கிப்பீடியா தொடங்கப் பட்டது. அதாவது, சரிபார்க்கப்பட்ட கட்டுரைகளை, விக்கிப்பீடியாவிலிருந்து ந்யூபீடியாவுக்கு எடுத்துக் கொள்வது என்று திட்டமிடப்பட்டு, விக்கிப்பீடியாவின் வளர்ச்சியின் காரணமாக, 2003இல் ந்யூபீடியாவே கைவிடப்பட்டது.
யாரும் பங்களிக்கலாம் என்பதால், கட்டுரைகளின் உண்மைத் தன்மை பலவிதங்களிலும் சரி பார்க்கப் படுகிறது. இதற்காக ஒரு பாட் (ரோபோ மென்பொருள்) ஒன்றும் தொடர்ந்து பதிவுகளையும், திருத்தங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. அடிக்கடி உள்நோக்கத்துடன் திருத்தப்படும் பக்கங்கள் பாதுகாக்கப் பட்டவையாக மாற்றப் படுகின்றன.
இந்த நடவடிக்கைகளின் மூலம், நம்பகத்துக்குரிய கலக்களஞ்சியமாக திகழ்கிற விக்கிப்பீடியா, தற்போது 313 மொழிகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பங்களிப்பவர்களில் 90 சதவீதம் ஆண்களக இருப்பதால், பெண்களை ஊக்கப்படுத்த போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாதத்திற்கு 170 கோடி (தனித்த) பயனாளர்கள் வருகிற விக்கிப்பீடியாவில் தற்போது 5.5 கோடி கட்டுரைகள் உள்ளன!