25 ஜனவரி 2021

பாவம் மலேசியர்கள்

25.01.2021

மலேசியர்களின் அடிப்படைத் தேவைகளில் அவர்களைப் ’பிசி’யாகவே வைத்து இருந்தால் அவர்கள் இழந்த சுதந்திரத்தை அவர்களே மறந்து விடுவார்கள். 

If you keep them busy with basic needs... they will forget about the freedom they lost...
 

பத்துமலை தைப்பூச ஊர்வலம் தேவைதானா? தமிழர் குரல் கண்டனம்

25.01.2021

நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுக்கு இடையே மக்களும் முன்களப் பணியாளர்களும் இந்தத் தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிற வேலையில், இவ்வாண்டு பத்துமலை தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலில் உள்ளதை அடுத்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இச்செயல் முன்னுக்குப்பின் முரணானது என்று மலேசிய தமிழர் குரல் சிலாங்கூர் & கூட்டரசு பிரதேச மாநில தலைவர் திரு.கணேசன் கண்டனம் தெரிவித்தார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகி மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கோவிட் 19 தொற்றின் தீவிரம் கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து இந்த ஆண்டிற்க்கான மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டத்தை நிறுத்தம் செய்வதாக முன்பு பினாங்கு மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்கள் அறிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இம்முடிவு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது. இதை ஏன் பத்துமலை நிர்வாகமும் பின்பற்றகூடாது?

அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலம் உட்பட நாடு தழுவிய நிலையில் அணைத்து ஆலயங்களும் மக்கள் பெருந்திரளாக கூடும் தைப்பூச விழாவை நிறுத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டன.

நிலைமை இவ்வாறு இருக்கையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஏழாவது வீடாக கருதப்படும் கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில் மட்டும் இவ்வாண்டின் தைப்பூச வெள்ளிரத ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்த அடம் பிடிக்கும் ஆலய நிர்வாகத்தினரின் போக்கையும்; அதற்கு அடித்தளமிட்டு ஊர்வலம் நடத்த பிரத்தியேக அனுமதி அளித்திருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலையும் தாம் சாடுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூச ஊர்வலம் நடைபெறும் என்றும் அதற்கு பத்து பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படுவர் என்றும், இதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு சாத்தியமாகுமா? வெறும் பத்து பேர் கலந்து கொள்ளும் இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இரத ஊர்வலத்தை காண மக்கள் திரள மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. ஊர்வலத்திற்குப் பிறகு புதிய "தைப்பூச நோய் தோற்றாளர்கள்" உருவாகினால் இதற்கு பத்துமலை தைப்பூச நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.

வெள்ளிரத ஊர்வலம் சமுக ஊடகம் முகநூல் நேரலை வழி மக்களுக்கு காண்பிக்கப்படும் என்கிறார்கள். அதற்கு  மக்கள் தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகளின் தைப்பூசத்தைக் காண்பார்களே; ஒரு தமிழன் தமிழர் நடத்தும் விழாவை விமர்சிக்கிறார் என்பதை விடுத்து கோவிட் 19 நோய் தொற்றின் தீவிரத்தை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக மதி இழந்து செயல்பட வேண்டாம் என்று கூறினார்.

மலேசிய திருநாட்டில் இருக்கும் அனைத்து ஆலயங்களுக்கும் தாய்க் கோயிலாக முன் உதாரணமாக இருக்க வேண்டிய பத்துமலை திருத்தல நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும் திரு. கணேசன் தெரிவித்தார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
 

கோலாலம்பூர் பத்துமலை இரதங்களுக்குப் பின்னால் செல்லுங்கள்... விதிகளை மீறுங்கள்... ஆனால் தயவுசெய்து இப்போதே 1000 ரிங்கிட்டை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிதற்காக அபராதம் 1000 ரிங்கிட்...



 

வாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் ஊடகங்களில் அலைபேசியின் வழியாகத் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் பல முறை சொல்லி இருக்கிறோம். ஆனால் சிலர் மீண்டும் மீண்டும் ஆங்கிலோ தமிழில் தட்டச்சு செய்வது வேதனையாக உள்ளது. சரி. மீண்டும் பதிவு செய்கிறோம்.

உங்களுடைய அலைபேசியில் Play Store எனும் ஒரு சின்னம் இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதைச் சொடுக்கி விடுங்கள்.

Play Store பகுதிக்கு நீங்கள் புதியவராக இருந்தால், சொடுக்கியதும் உங்களின் மின்னஞ்சலைக் கேட்கும். ஆங்கிலத்திலேயே மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் Search என்பதில் Sellinam என்று தட்டச்சு செய்யுங்கள். செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்யுங்கள். பின்னர் பதிப்பு (Install) செய்யுங்கள். சில கேள்விகள் கேட்பார்கள். செல்லினம் அமைப்பில் (Settings) பகுதியில் Switch Input Methods என்பதில்

English

Languages Tamil (Murasu Anjal)

என்பதைத் தேர்வு செய்யுங்கள். பின்னர்... சரி (Yes) என்று தட்டி விடுங்கள். மற்றவற்றைச் செல்லினம் செயலியே செய்து கொடுத்து விடும்.

உங்கள் அலைபேசியில் செல்லினம் நிறுவப் பட்டதும் தட்டச்சு முகப்பில் தமிழ் ஆங்கிலம் எனும் இரு மொழிகள் இருக்கும். தட்டச்சு பலகையில் ‘மு’ எனும் எழுத்துச் சின்னம்... ஆகக் கீழே இருக்கும்.

முதலில் ஆங்கிலத்தின் மூலமாகத் தமிழ் தட்டச்சு செய்யும் முறை வரும். மீண்டும் அதே எழுத்துச் சின்னத்தைத் தட்டுங்கள். ‘தமிழ்’ என்பது வரும். மீண்டும் தட்டினால் ’English’ என்பது வரும்.

உங்களுக்கு எது சரியாக அமைகின்றதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேல் விவரங்கள்:

தவிர எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. அவ்வளவுதான். மிகவும் எளிது. இரண்டு மூன்று நிமிட வேலைகள். கொஞ்ச நேரத்து வேலை. தமிழில் தட்டச்சு செய்வோம்.

 


22 ஜனவரி 2021

அவர் ரொம்ப பெரிய ஆள்

21.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

இந்த வாக்கியத்திற்குள் ஒளிந்து இருக்கும் ஓர் உளவியல் உண்மையைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இவர் ரொம்ப பெரிய ஆளுங்க... இவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... என்பது போன்ற வாக்கியங்களைப் பொதுவாகவே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

அதுபோன்ற வாக்கியங்களை நாம் ஏன் பயன்படுத்தி வருகிறோம் என்று இதுவரை சிந்தித்து உள்ளீர்களா? பலரும் இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்களே. அது ஏன்?

இது போன்ற வாக்கியங்களைத் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்றால் அது அவரது கண்ணோட்டம். அதில் எந்தவித தவறும் இல்லை.

அதே போல, ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சூழல் சார்ந்ததாக இருக்கலாம். அதுவும் தவறில்லை.

ஆனால் இதுபோன்ற வாக்கியங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது எப்படி சாதாரண ஒரு நிகழ்வாக இருக்க முடியும்? அது எப்படி அனைவராலும் ஒன்று போலவே சிந்திக்க முடியும்?

இது இயல்பாக நடந்த ஒன்று இல்லை. மாறாக இது நம் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இது திட்டமிட்டு நம்முள் திணிக்கப் பட்டதா? இல்லையா? என்று நம்மால் கண்டறிவது சாத்தியமானது இல்லை.

ஆனால் இது நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று என்பது தான் உண்மை‌‌. இது ஏன் நடந்தது? இதனால் நாம் எந்த வகையில் பாதிக்கப் படுகிறோம்? அதை எப்படி சரி செய்வது என்பதை நாம் உணர்ந்து செயல் படுத்தும் அவசியம் உள்ளது.

ஊடகங்களின் வழியாக இவர் அவ்வளவு பெரிய நபர்; இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர்; என்று சிலரை மட்டும் திரும்பத் திரும்ப நம் மனதிற்குள் இவர் பெரிய ஆள் என்கிற எண்ணம் தொடர்ந்து காட்டப்பட்டு அது நம் அனைவரது மனதிற்குள்ளும் ஆழமாக பதிவாகிறது.

உதாரணமாக, இன்று அவர் சமூக வலைத் தளத்தில் ஒரு டிவிட் செய்தார். இன்று அவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்தார். நாளை காய்கள் வாங்கக் கடைக்குச் சென்று வர திட்டமிட்டு உள்ளார்.

இப்படி யாராவது ஒருவர் பற்றி வெட்டியாக, இதை எல்லாம் பரபரப்பு செய்திகளாக மாற்றி நம் மனதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை நோக்கி தெரிந்தோ, தெரியாமலோ தயார் செய்து விடுகிறார்கள்.

இதன் விளைவாக அந்த ஒரு சிலரை மட்டுமே மிகப் பெரிய நபராக மற்றும் அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதிற்குள் வளர்ந்து விடுகிறது.

பிறகு என்ன? அந்த எண்ணம் தானாகவே நம் மனதிற்குள் ஓடும்,

இதன் விளைவாக, அவர் போன்ற நபர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றும்; அவர்கள் சாதனைகள் செய்யவே பிறந்து உள்ளார் என்றும்; நான் சாதாரண மனிதன்; நான் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்; என்கிற எண்ணங்கள் மறைமுகமாக நம் மனதை ஆக்கிரமிப்பு செய்து விடும்.

இந்த எண்ணங்கள் தான் நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் தான் நாம் சாதாரணமாக வாழும் நபர்; அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலையை நமக்குள் உருவாக்கி விடுகின்றன.

அதனால் தான் என்னால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையே பலருக்கும் எழுவதே இல்லை.

இது ஒரு சில நபர்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கோடி மக்களுக்கு அந்த நம்பிக்கையே பிறப்பதும் இல்லை. அத்தனை கோடி மக்கள் உளவியல் ரீதியாகவே தங்களைத் தாங்களே குறைவாகவே மதிப்பீடு செய்வது தான் வருந்தக் கூடிய விடயம்.

அவர் பெரிய ஆள்தான் என்பது ஒரு பிம்பம். அந்த பிம்பத்தைப் பார்த்து வியப்பு அடையாதீர்கள். அந்தப் பிம்பத்தைப் பார்த்து அசாத்தியமானவர் என எண்ணாதீர்கள்.

உங்களுக்கும் அது எல்லாம் சாத்தியம் தான். அவர் பெரிய ஆள் தான் அதை மறுக்கவில்லை. அதே வேளையில் நீங்களும் பெரிய ஆள் தான் என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்த நல்லதொரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு உண்மையாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்காமல் அதை மட்டுமே உங்கள் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு பயணம் செய்யுங்கள்.

அப்போது உங்களால் சாதிக்க முடியும்... நிச்சயமாக அதை உங்களால் சாதிக்க முடியும்... ஏனென்றால் நீங்கள் ஒரு பெரிய ஆள்...

அன்புடன்,
த. கார்த்திக் தமிழ்,
#BRAIN_vs_MIND.

21 ஜனவரி 2021

கமலா ஹரிஸ்

21.01.2021

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் திருமதி கமலா ஹாரிஸ். தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் தாய்வழி வம்சாவளியைக் கொண்டவர்.

மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார். தொடர்ச்சியான கடின உழைப்பு அவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து உள்ளார்.

மலையில் இருந்து தான் நதி உற்பத்தியாகிறது. ஆனால், நதியிடம் மலை எதையும் எதிர்பார்ப்பது இல்லை. நதியின் அழகையும், நீண்ட தூர வெற்றிப் பயணத்தையும் பார்த்து மலை பூரித்துப் போகிறது’ - இது ரவிந்திரநாத் தாகூரின் வரிகள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமம்.

`தன் மண்ணில் வாழ்ந்த தலைமுறையினரின் தொடர்ச்சி ஒன்று, உலகின் கவனத்தை ஈர்க்கிறது’ என்ற பெருமித பிரவாகத்தில் திளைத்து நிற்கிறது இந்தக் கிராமம்.

`அமெரிக்காவின் துணை அதிபராக உயர்ந்து இருக்கிறாரே எங்கள் ஊரில் வாழ்ந்த கோபாலனின் பேத்தி...’ என வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார்கள் இந்த துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள்.

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரின் உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.

கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்ற பின், அவரின் தாய் சியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப் பட்டார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும் போது எல்லாம் அவருடன் இந்தியாவிற்குப் பயணம் செய்து உள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஆக்லாந்தின் கறுப்பின கலாசாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டார். தன் இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார். இதைக் கமலா தெரிவித்து உள்ளார்.

"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்து கொண்டே எங்களை வளர்த்தார்" என தன் சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டு உள்ளார்.

"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கறுப்பின பெண்களாகத் தான் பார்க்கும். எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கறுப்பினப் பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்" என கமலா குறிப்பிட்டு இருந்தார்.

கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட வைபவத்தைக் கொண்டாடும் வகையில் அவரின் பூர்விக கிராமமான தமிழகத்தின் துளசேந்திரபுர மக்கள் பட்டாசுகள் வெடித்து உணவுகள் வழங்கினர்.

அதே வேளையில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸ்-சின் முகம் அச்சிடப்பட்ட நாள்காட்டிகளும் விநியோகிக்கப்பட்டன.

அமெரிக்காவின் இரண்டாவது உயர்பதவியை ஏற்ற முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமை கமலா ஹாரிஸ்-சைச் சேரும்.

(தொகுப்பு: மலேசியம்)

வேலாயுதம் பினாங்கு: இவரைப் பார்த்து பின்பற்றி மலேசிய இந்தியப் பெண்களுக்கும் அரசியல் விழிப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டும். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீர மங்கைகள் நமது நாட்டிலும் மறு பிறவி எடுக்க வேண்டும. காலத்தின் கட்டாயமாகி வருகிறது.

ஜெய ஸ்ரீ கண்ணன்:
அவர் இந்தியராகத் தன்னை அதிகம் காட்டிக் கொள்வது இல்லை. துணை அதிபரானது பல இந்தியர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ் பேசினால் புரியுமாம். பெண் / தமிழ்ப் பெண் / வழக்கறிஞர் / இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவர் / இந்தியத் தாய். எல்லாமே நமக்கு ஊக்கம் தரும் செய்திகள் தான். நல்லவை நோக்கி நல்லவை பார்த்து பகிர்ந்து அன்னம் போல் ஊக்கம் பெறுவோம்.

ராஜா சுங்கை பூலோ: தமிழன் எங்கிருந்தாலும் வாழ்க

சந்திரன் லார்கின் ஜொகூர்: இப்படியாவது நம்முடைய சமுதாயம் வெளிநாட்டில் போய் கொடி கட்டி பறக்கட்டுமே. திறமைக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் மதிப்பு உண்டு. வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்.

குமரன் மாரிமுத்து: மலேசியாவைத் தவிர என்று சேர்த்துக் கொள்வோமா ஐயா....?

ராதா: வாழ்த்துக்கள். நம் மலேசியாவில் இது போல் வருமா? வர வேண்டும்.

ராஜா சுங்கை பூலோ: அப்படி போடுங்க அரிவாளை... நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா... மதவெறி கொண்டவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது ஐயா.

சந்திரன் லார்கின் ஜொகூர்: மன்னிக்கணும்... கனவில் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம். இப்படி ஒன்று இங்கு நடக்கும் என்று...

ராதா: ஏன் சகோதரரே?  காசா பணமா? நினைத்து பார்த்தால் என்னவாம்,

ரஞ்சன் கங்கார் பூலாய்: புலன நிர்வாகிகள் மற்றும் புலன உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அடியேனின் சிறு ஆதங்கம். எழுத்துப் பிழையோ கருத்துப் பிழையோ இருந்தால் மன்னிக்கவும்.

இன்றைய பதிவுகள் சிறப்பாக இருந்தன. என்னால் கருத்தூட்ட முடியவில்லை. அதற்குக் காரணம் சில பதிவுகள் ஏற்கனவே நம் புலனத்தில் பதிவிடப் பட்டவை. நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை.

அடுத்து இன்றைய பதிவுகளில் நிறைய வெளிநாட்டு செய்திகள். குறிப்பாக அமெரிக்கச் செய்திகள். துணை அதிபராகப் பதவியேற்கும் கமலா ஹாரிஸ் அவர்களால் நம் நாட்டு இந்தியர்களுக்கு என்ன பெருமை.
 
அடுத்து தமிழ் நாட்டு அரசியல் வேண்டாம் என்கிறீர்கள். இப்பொழுது சின்னம்மா சசிகலா பற்றிய செய்தி வருகிறது.

 

ஆனால் நம் நாட்டில் இன்றைய சூழலில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்ற செய்திகளைக் காணோம். இவை எல்லாம் என் மனத்தை சற்று கீறியது. இங்கே கொட்டி விட்டேன். யார் மனமும் புண்பட அல்ல நான் பதிவிட்டது.

சந்திரன் லார்கின் ஜொகூர்: மலேசியச் செய்தியைப் போட பலருக்குப் பயம். காரணம் கேட்டால் அவர் பார்த்து விடுவார். இவர் படுத்து விடுவார் என்ற பயம். (ஒரு சிலரைத் தவிர)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: என்னென்ன பதிவுகள் முன்பே வந்த பதிவுகள் என்று தெரியவில்லையே.

இன்றைய நாளில் உலகத்தின் முதல் செய்தியாகத் திகழும் கமலா ஹாரிஸ் செய்தியைப் பகிர்வதில் தவறு இல்லை.

ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தமிழகத்துச் செய்தி வருகிறது. அடிக்கடி வரவில்லை. சரிங்களா.


ராஜா சுங்கை பூலோ: ரஞ்சன் நீங்கள் செய்த தட்டச்சை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பாராட்டுக்கள்

சந்திரன் லார்கின் ஜொகூர்: மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கமலா ஹாரிஸ் செய்தியைப் பகிர்வதில் தவறு இல்லை...(காரணம் ஒன்று நம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்) நாம் இந்தியர்களே நான் புகழ் வில்லை என்றால் யார் ஐயா புகழ்வது. குறை நிறைகளை சுட்டிக் காட்டுவதில் எந்த ஒரு பயமும் எனக்கு இல்லை எனக்கு..

ராஜா சுங்கை பூலோ: அமெரிக்க துணை அதிபரைப் பற்றி எப்போதும் பேசப் போவது இல்லை. 20-ஆம் தேதி தான் பதவி ஏற்றார். தமிழன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.

தேவி கடாரம்: கமலா ஹாரிஸ் ஓர் இந்தியர். இந்தச் செய்தி அகில உலக இந்தியர்களுக்கு எல்லாம் பெருமை ஐயா.

சாகுல் ஹாமீது: தமிழ் மண்ணில் வாழ்ந்த தலைமுறை ஒன்று... உலகின் கவனத்தை ஈர்க்கிறது... அருமை!