25.01.2021
நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுக்கு இடையே மக்களும் முன்களப் பணியாளர்களும் இந்தத் தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிற வேலையில், இவ்வாண்டு பத்துமலை தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலில் உள்ளதை அடுத்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இச்செயல் முன்னுக்குப்பின் முரணானது என்று மலேசிய தமிழர் குரல் சிலாங்கூர் & கூட்டரசு பிரதேச மாநில தலைவர் திரு.கணேசன் கண்டனம் தெரிவித்தார்.
இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகி மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கோவிட் 19 தொற்றின் தீவிரம் கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து இந்த ஆண்டிற்க்கான மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டத்தை நிறுத்தம் செய்வதாக முன்பு பினாங்கு மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்கள் அறிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இம்முடிவு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது. இதை ஏன் பத்துமலை நிர்வாகமும் பின்பற்றகூடாது?
அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலம் உட்பட நாடு தழுவிய நிலையில் அணைத்து ஆலயங்களும் மக்கள் பெருந்திரளாக கூடும் தைப்பூச விழாவை நிறுத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டன.
நிலைமை இவ்வாறு இருக்கையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஏழாவது வீடாக கருதப்படும் கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில் மட்டும் இவ்வாண்டின் தைப்பூச வெள்ளிரத ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்த அடம் பிடிக்கும் ஆலய நிர்வாகத்தினரின் போக்கையும்; அதற்கு அடித்தளமிட்டு ஊர்வலம் நடத்த பிரத்தியேக அனுமதி அளித்திருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலையும் தாம் சாடுவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு பத்துமலை தைப்பூச ஊர்வலம் நடைபெறும் என்றும் அதற்கு பத்து பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படுவர் என்றும், இதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டுப்பாடு சாத்தியமாகுமா? வெறும் பத்து பேர் கலந்து கொள்ளும் இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இரத ஊர்வலத்தை காண மக்கள் திரள மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. ஊர்வலத்திற்குப் பிறகு புதிய "தைப்பூச நோய் தோற்றாளர்கள்" உருவாகினால் இதற்கு பத்துமலை தைப்பூச நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
வெள்ளிரத ஊர்வலம் சமுக ஊடகம் முகநூல் நேரலை வழி மக்களுக்கு காண்பிக்கப்படும் என்கிறார்கள். அதற்கு மக்கள் தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகளின் தைப்பூசத்தைக் காண்பார்களே; ஒரு தமிழன் தமிழர் நடத்தும் விழாவை விமர்சிக்கிறார் என்பதை விடுத்து கோவிட் 19 நோய் தொற்றின் தீவிரத்தை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக மதி இழந்து செயல்பட வேண்டாம் என்று கூறினார்.
மலேசிய திருநாட்டில் இருக்கும் அனைத்து ஆலயங்களுக்கும் தாய்க் கோயிலாக முன் உதாரணமாக இருக்க வேண்டிய பத்துமலை திருத்தல நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும் திரு. கணேசன் தெரிவித்தார்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
கோலாலம்பூர் பத்துமலை இரதங்களுக்குப் பின்னால் செல்லுங்கள்... விதிகளை மீறுங்கள்... ஆனால் தயவுசெய்து இப்போதே 1000 ரிங்கிட்டை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிதற்காக அபராதம் 1000 ரிங்கிட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக