12 ஜூலை 2021

வியட்நாம் பயணங்கள் - கரு. ராஜா

12.07.2021

வியட்நாம் அழகிய நாடு.  அற்புதமான நாடு. இந்தோசீனாவின் கிழக்கே அமைந்து உள்ளது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பச்சை பசேல் வரலாற்றைப் பதித்து வருகிறது. ஒரு முறை போனால் மறுபடியும் போகச் சொல்லும் நாடு.

அமெரிக்காவின் ஆதிக்கத்தில் அலைகழிக்கப்பட்ட நாடு. மக்கள் தொகை 90.3 மில்லியன். மலேசியாவைப் போல ஏறக்குறைய மூன்று மடங்கு. வடக்கே சீனா; வடமேற்கே லாவோஸ்; தென்மேற்கே கம்போடியா; கிழக்கே தென்சீனக்கடல்; எல்லைகளாக அமைந்து உள்ளன.

வியட்நாம் டானாங் நகரில்

இந்த நாட்டிற்கு கோலாலம்பூரைச் சேர்ந்த கரு. ராஜா அவர்கள் தன் குடும்பத்தாருடம் ஏழு முறை பயணம் செய்து இருக்கிறார். கரு. ராஜா மலேசியப் பத்திரிகை உலகில் நன்கு அறியப் பட்டவர். தமிழ் மலர்; தமிழ் முரசு; வானம்பாடி நாளிதழ்களில் சேவை செய்தவர்.

அவர் வியட்நாம் சென்று இருந்த போது பிடித்த நிழல்படங்கள் இங்கு காட்சிப் படுத்தப் படுகின்றன. வியட்நாம் பற்றிய சில தகவல்கள்.


பழங்காலத்தில் இருந்தே வியட்நாம் பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டஸ் மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

வியட்னாம் பானா மலை

1945 செப்டம்பர் 2-ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோ சிமின் புரட்சி அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்தது. வியட்நாமை தங்கள் காலனி ஆதிக்கத்திற்குள் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. 

ஹாலொங் பே

அதற்கு எதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டார்கள். ஒன்பது ஆண்டுகள் இந்தப் போர் நீடித்தது. 1954-இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது.

அதன் பின்னர் அமெரிக்காவின் தலையீடு. வியட்நாம் போரின் போது காட்டுமிராண்டித் தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது. வியட்நாம் மக்களுக்கு அந்தப் போரின் போது அமெரிக்கா கணக்கிட முடியாத இழப்புகளும், சொல்லொணாத் துயரங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

கரு. ராஜாவும் அவர் மனைவியும்

இப்போதுதான் வியட்நாம் மக்கள் கொஞ்சம் நிம்மதியாகப் பெருமூச்சு விடுகின்றனர்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: அருமையான கட்டுரை. மிக்க நன்றி. இன்னும் கொஞ்சம் விரிவாக அங்குள்ள உணவு பழக்க வழக்கம் பற்றியும் எழுதுங்கள்.

இராதா பச்சையப்பன்: அடேங்கப்பா... ஒரு வகையில் எல்லா ஊர்களையும் சுற்றிப் பார்த்த மாதிரிதானு சொல்லுங்கள். உங்களை உலகம் சுற்றும் வாலிபன் என்று சொன்னாலும் தகும். கொடுத்து வைத்தவர். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

கரு. ராஜாவும் அவர் மகளும்

இனி வரும் காலங்களில் அப்படி ஒரு வேளை வெளியூருக்குப் போக நினைத்தால், அந்த டிக்கெட்டை என் பெயரில் புக் செய்யவும். உங்கள் செலவில், உங்க தயவில், நான் போய் வெளியூரைச் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேனே!

அது சரி, நீங்கள் போய் வந்த ஊர்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லலாமே. போய் வந்த ஊர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதலாமே புலனத்தில்... நன்றி.

ஹனோய்  ஹலோங் விரிகுடா பகுதி

பொன் வடிவேல்: அழகிய நாடுகளுக்குs சுற்றுலா செல்லும் உங்களின் ஆர்வம் எமது நினைவுகளில் பசுமையாக அமைகிறது. இன்னும் விரிவாக எழுதினால் சிறப்பாக இருக்கும். இதன் பின் நாம் உலக சுற்றுலா செல்ல பல வருடங்கள் ஆகலாமே. - பொன் வடிவேல், ஜோகூர்பாரு. 012-7299587

கரு. ராஜா: வியட்னாமில் சாப்பாடு ஒரு பிரச்னை இல்லை. நம் நாட்டில் சீனர்கள் விற்கும் சிக்கன் சாப்பாடு (chicken rice) எல்லா இடங்களிலும் கிடைக்கும்.அதை சாப்பிட்டு நாம் சமாளிக்கலாம். அவர்கள் ஒரு மாதிரி பெகர் தயாரித்து கொடுக்கிறார்கள். கோழி பெகர். மலேசிய பணம் சுமார் சுமார் நான்கு ரிங்கிட். ஒரு பெக்கர் சாப்பிட்டலே போதும். வயிறு நிறைந்து விடும்.


சுமார் 6 பேர் கொண்ட குழுவில் சென்றால் சாப்பாடு ஒரு பிரச்னை இல்லை. 6 பேரும் ஒரு மேஜையில் உட்கார்ந்து விருப்பப்பட்ட பொருளை ஆர்டர் செய்து சாப்பிட்டு பிறகு பகிர்ந்து கொண்டால் பணம் ரொம்ப குறைவாக இருக்கும்.

சுமார் 5 அல்லது 6 பேர் பயணம் போகும் போது வாடகைச் செலவு குறையும். என்னைப் பொருத்தவரை சாப்பாடு ஒரு பிர்ச்னையே இல்லை.

டானாங் நகரில் உள்ள இந்து ஆலயம்

நான் ஒரு கிராமத்துக்கு சுற்றுலா சென்று இருந்தேன். அங்குள்ள ஒரு மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அங்கு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.

வியட்னாமில் ஒரு சில சீக்கியர்கள் உணவகம் நடத்துகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகம். ஒரு முறை நாங்கள் சப்பாத்தி ஆர்டர் செய்து... சப்பாத்தியும் வந்தது சாம்பார் இல்லாமல்... சாம்பார் கேட்டதற்கு சாம்பார் தனி விலையாம். அதிலிருந்து சீக்கியர் உணவகத்தைத் தவிர்த்து விட்டோம். கொரனா முடிந்ததும் வியட்னாம் போய் வாருங்கள். திருட்டு இல்லாத ஊர். நன்றி

இராதா பச்சையப்பன்:
அருமை👌. இன்னும் மற்ற மற்ற ஊர்களையும் கட்டுரை வடிவில் எதிர்ப்பார்க்கிறோம். 

துணிச்சல்காரப் பிள்ளை மகள் மலர்விழி
சுரங்கத்தில் இறங்கிப் பார்க்கிறார்


தனசேகரன் தேவநாதன்: ஆவல் அதிகரிக்கிறது ஐயா... பார்க்க வேண்டிய  இடங்களைக் குறிப்பிடுங்கள். அனைவருக்கும் பயன்படும்.

கரு. ராஜா:
வியட்நாம் பயனம் முறைப்படி திட்டமிட்டு தயாரித்தால் சுமார் 5 நாட்களுக்கு சுமார் 1000 மலேசிய ரிங்கிட்தான் வரும்.நீங்கள் சுற்றுலா நிறுவனம் மூலம் போனால் செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் வரும்.

ஒரு முறை வியட்னாமில் டானாங் என்ற ஊருக்கு சுற்றுலா போயிருந்தேன். எல்லாம் நெருங்கிய நண்பர்கள். 5 நாள் பயணம். கடைசியில் பயணச் செலவைக் கணக்கிட்டால் தலைக்கு 850 வெள்ளி தான் வந்தது. 

நாராங் எனும் இடத்தில் உள்ள ஒரு பாலைவனம்

இராதா பச்சையப்பன்: உள்ளம் ரெண்டும் ஒன்று. உருவம் தானே   ரெண்டு, உயிர் ஓவியமே  கண்ணே நீயும் நானும் ஒன்று.

கரு. ராஜா: ஒரு சில நேரங்களில் air Asia மலிவாக டிக்கட் போடுவார்கள். அந்த நேரத்தில் உடனே டிக்கட்டைப் போட வேண்டும். சுற்றுலா பிரச்னை இல்லை. போக வேண்டிய ஊரின் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகச் சுற்றுலாவை பேரம் பேசலாம். குறைந்த விலையில் கிடைக்கும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மைதான். மியன்மாரில் 2014 ஆம் ஆண்டு தனி ஆளாக திட்டமிட்டுப் பயணம் செய்தேன். ஒரு வாரம்...1400 ரிங்கிட் தான் பிடித்தது.

கரு. ராஜா:
கொரனா மட்டும் வரவில்லை என்றால் இந்த ஒன்றரை வருடத்திற்கு குறைந்தது மூன்று ஊருக்காவது போயிருப்பேன்.

தோளில் போட்ட கையை எடுக்க மனசு வரலையோ

இராதா பச்சையப்பன்: இது தெரிந்த விசயம் தானே. மறக்காமல் என் பெயரிலும் ஒரு டிக்கெட்டைப் போடவும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இரவின் மடியில் என்று சொல்லி போட்டுத் தாக்குகிறார்கள். நீங்கள் என்ன... உலகம் சுற்றி வந்து இருக்கிறீர்கள். பதிவு செய்யுங்கள். நாங்கள் பார்க்கிறோம்.
 
ஹோசிமின் நகர இந்து கோயில்

நம் புலனத்தைச் சேர்ந்த ஒருவர் உலகம் சுற்றி வந்து இருக்கிறார். அதைப் போடாமல் தமிழநாட்டு செய்திகள்: சுகரை குறைப்பது எப்படி; கொசுவை பிடிப்பது எப்படி எனும் பழைய குப்பைகளை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டுமா...

முருகன் சுங்கை சிப்புட்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்... பருவ சிலைகளின் அரங்கம்...

கரு. ராஜா: உலகில் இருக்கப் போவது கொஞ்ச காலம்தான். இருக்கிற வரைக்கும் 4 ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய  ஆசை. கொரனா முடிந்ததும் புலன உறுப்பினர்கள் வியட்நாம் போய் வருவோம். வாருங்கள்.
கொரில்லாக்கள் பதுங்கி இருந்த 
பதுங்கு குழியில் மலர்விழி

இராதா பச்சையப்பன்: அனைத்து புகை படங்களும்,  சுற்றுலா இடங்களும் அருமையோ அருமை

சிவகுரு மலாக்கா: காணொளியும் தங்களின் குரல் பதிவின் விளக்கமும்  மிக அருமை ஐயா.

தேவி கடாரம்: மிக அருமை ஐயா 👌👍🏻 மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் பயணக் கட்டுரை பிரமாதம். அதைவிட அருமையிலும் அருமை தாங்கள் பகிர்ந்த படங்கள்.

கரு. ராஜா: படங்களைக் கண்டுகளித்த புலன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


மலேசியம் புலன அன்பர்களின் சார்பில் கரு. ராஜா குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

கோலசிலாங்கூர் கடல் பெருக்கு - இராதா பச்சையப்பன்

12.07.2021

கோலாசிலாங்கூர் ஓர் அழகிய துறைமுகப் பட்டினம். சிறப்பு வாய்ந்த சிலாங்கூரில் சிருங்காரம் பாடும் ஒரு சின்னப் பொக்கிசம். மலாக்கா நீரிணையைச் சார்ந்த நிலப்பகுதி. பச்சைப் பசேல் சதுப்புநிலக் காடுகள்.

கிள்ளான் மாநகரில் இருந்து 50 கி.மீ. கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. ஓர் அமைதியான ஊர். ஆனாலும் அங்கே ஒரு பெரிய காலப் பெட்டகமே புதைந்து கிடக்கிறது. 

அதிகாலை கடல் வெள்ளப் பெருக்கு.
கோலாசிலாங்கூர் ஆறும், மலாக்கா கடலும் சங்கமமாகும் இடம்.

கோலா சிலாங்கூருக்குப் போனதுமே முதலில் உங்கள் கண்களில் படுவது கோலா சிலாங்கூர் (Kuala Selangor) எனும் பிருமாண்டமான வெள்ளை எழுத்துச் சுவர்கள் தான். மெலாவாத்தி குன்றின் (Bukit Melawati) கரும்பச்சைக் கானகத்து உச்சியில் அந்த எழுத்துகள் ஜொலிக்கின்றன. 

இன்று காலையில் ராதா பச்சையப்பன் எடுத்த படம். 

மெலாவாத்தி குன்றில் இருந்து மலாக்கா நீரிணையில் போகும் கப்பல்களைப் பார்க்க முடியும். துறைமுகத்திற்கு வரும் கப்பல்களைப் பார்க்க முடியும். தவிர கீழே கோலா சிலாங்கூர் பட்டினத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நன்றாகவே கவனிக்க முடியும்.

கோலா சிலாங்கூரின் வரலாறு 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் வந்து கலக்கும் முகத்துவாரத்தில் தான் இந்தச் சிலாங்கூர் குன்று இருக்கிறது. இங்கே தான் ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. அதை இப்போது மெலாவாத்தி கோட்டை என்று அழைக்கிறார்கள். 


உண்மையில் இங்கே இரு கோட்டைகள் உள்ளன. மெலாவாத்தி குன்றின் மீது ஒரு கோட்டை. அதற்கு மெலாவாத்தி கோட்டை என பெயர். இன்னொரு கோட்டை இரு கி.மீ. அப்பால் தஞ்சோங் கிராமாட்டில் உள்ளது.

சிலாங்கூர் குன்றின் சுற்றுப்புறங்கள் அனைத்திலும் நெட்டைக் குத்தலான கருங்கல் பாறைகள். அவ்வளவு சுலபமாக மேலே ஏறிப் போய்விட முடியாது.

கீழே சிலாங்கூர் ஆறு வளைந்து வளைந்து நெளிந்து போகிறது. ஆற்றின் இரு மருங்கிலும் அடர்ந்த காண்டா சதுப்புக் காடுகள். மேலே குன்றின் மீது இருக்கும் கோட்டைக்கு இவையே நல்ல தற்காப்பு அரண்கள். 16ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகனட்டின் மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது. 


அந்தக் காலக் கட்டத்தில் ஜொகூர் ஆட்சியின் கீழ் தான் கோலா சிலாங்கூர் இருந்தது. துன் முகமட் அங்கிருந்து கோலா சிலாங்கூர் நிலப்பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். (சான்று: A History of the Peninsular Malays with Chapters on Perak & Selangor; R.J. Wilkinson, C.M.G (Pub Kelly & Walsh Ltd.)

17ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா மூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா எனப் பெயர் மாற்றம் கண்டது. 


இவர்தான் மெலாவாத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.

(சான்று: http://www.sabrizain.org/malaya/sgor5.htm - Raja Lumu, who took the title Sultan Salehudin Shah, established himself at the Kota Malawati)

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: நீலக் கடல் அவைதான்... எந்தன் நெஞ்சின்
அலைதான் கண்ணம்மா... பாரதியார் கவிதை

கோலாசிலாங்கூர் காலை வேளையில்... அழகிய காட்சிகள்... நதிக் கரைகளைச் சுத்தம் செய்தால் அழகியச் சுற்றுலா தளங்களாக ம்றுவடிவம் பெறலாம்... 

ஏற்கனவே இன்று காலையில் பதிவானவை... இருப்பினும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.

நம் நாட்டுப் படங்கள்... நம் புலன உறுப்பினர் இன்று காலை எடுத்த படங்கள்... Photo genuine உள்ளது. அசல் தன்மைகள்.

இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கு நிழல்படக் கலைத் தன்மை உள்ளது. வாழ்த்துகள். 

இராதா பச்சையப்பன்: இதில் இப்படி ஒரு கண்ணம்மா கதை இருப்பது தெரியாமல் போனதே.

கரு. இராஜா: கடல் சார்ந்த பட்டிnஅம், நதிச் சார்ந்த நகரங்கள் மற்ற நகரங்களை விட அழ்காக இருக்கும். இந்த அழகை ரசிப்பதற்காகவே நான் அடிக்கடி கோலாசிலாங்கூர் போவதுண்டு. என் வீட்டிலிருந்து கோலசிலாங்கூருக்கு 60 நிமிடப் பயணம்.

நான் முறை சீனா, ஷங்காய்  நகருக்குப் போயிருந்தேன். ஷங்காய் நகரமும் ஒரு நதிச்சார்ந்த நகரம். இரவு நேரத்தில் அந்த நதியில் பயணம் செய்வது,  சொல்ல வார்த்தை இல்லை. இரு கரைகளிலும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணைக் கவரும்.
 
அடுத்து பாங்காக்,   இதுவும் ஒரு நதி சார்ந்த நகரம். இதுவும் ஷங்காய் மாதிரி தான் இருக்கும். பாங்காக் நகரத்திற்கு மூன்று முறை சுற்றுலா போய் இருக்கிறேன்.

வியட்நாம் சொல்லவே தேவை இல்லை. வடக்கில் இருந்து தெற்கு தெற்கு வரை மீகோங் நதி பாய்கிறது. பெரும்பாலும் வியட்நாம் நகரங்கள் நதி ஓரமாக அமைந்திருக்கிறது. 7 முறை வியட்நாம் போயிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

இராதா பச்சையப்பன்: நன்றி சொல்ல எனக்கு வார்த்தை  வரவில்லை.  இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நினைக்கவும் இல்லை. அனைத்துக்கும்  நன்றி நல்குகிறேன்.  நன்றி

 

10 ஜூலை 2021

தேனீக்களும் அதன் அதிசய வாழ்க்கை முறையும்

பதிவு: கென்னடி ஆறுமுகம் - 09.07.2021

வேலைக்காரத் தேனீக்கள், பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது. ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து பூக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து வரும்.


அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக நடனமாடும். அந்த நடனத்தை வைத்துப் பூக்கள், தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும்.

அந்த நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.

அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனைச் சேமிக்கும் முறை பற்றியும்; அதைக் கெடாமல் பாதுக்காகச் செய்யப்படும் வேலைகளைப் பற்றியும்; ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஞ்ஞானம். அவ்வளவு நுணுக்கம்.

Bees are the claasic example for Colonial and Communal system of living.

கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.

ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள். இதில் இனப் பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணி. ஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழு முதல் பொறுப்பு. இந்தத் தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள், மரங்கள், காடுகளே உருவாகின்றன.

இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீப காலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன. ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.

காரணம் :- மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள். அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.

அப்பூக்களில் உள்ள Neonicotinoids - நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி, அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும், நல்ல ஞாபகத் தன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து குழம்பி இறந்து விடுகின்றன.

இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ இறுதியில் தானும் இறக்கிறது அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.

இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள் அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.

வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில், குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக் காய்களும், வாழைப் பழங்களும், மாம்பழங்களும் - Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.

இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும் வேரடி மண்ணோடும் விரட்டி அடிக்க வேண்டியது நம் பொறுப்பு. ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,

மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.

ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத் தெறியப்பட்டு விடும்.

பி.கு: "Bee Movie" என்றொரு Animated English Movie உள்ளது. அதைப் பாருங்கள். ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம். படித்ததில் சிந்திக்க வைத்தது.



வாணிகமா? நாடகமா? நமது அரசியல்! - பாதாசன்

பதிவு செய்தவர்: கரு. ராஜா -  09.07.2021


அரசியல் என்பது வாணிகமா ? - அஃது
   அரங்கில் நடித்திட நாடகமா ?
அரைசல் புரைசல் செய்திகளா ? - அல்ல
  அரசியல் பொய்யின் புழுதிகளா ?
நரசல் கோறனிக் கைகளிலே - மக்கள்
  நாளும் நசுங்கிச் இறக்கையிலே
அரசியல் வலுவை இழப்பதுவா - இதை
   அரசியல் வாதிகள் செய்வதுவா ?

கோறனி போடுது கொண்டாட்டம் - நம்
    குடும்ப அரசிலோ திண்டாட்டம் !
ஓரணி சேர்ந்திடும் நேரமிதே - நாம்
   ஒன்பதாய்ப் பிரிந்தால் ஊறலவோ ?
காரணம் ஆயிரம் இருக்கட்டுமே - அவை
  கானல் நீரென ஆகட்டுமே !
நேரம் இதுவே ஒன்றிணைய ! -பகை
  நேற்றைய கனவென மறந்திணைய !

குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் - நம்
  கொள்கை அதுவெனல் நாணமதே !
குழம்பில் காய்கறி இணைந்ததுபோல் - இனிக்
   கூடி ஒன்றாய்ப் பிணைந்திடுவோம் !
புலம்பல் இனியும் தேவையிலை - நாம்
   புரிந்த அரசியல் தேவையென்போம் !
கலங்க வேண்டாம் மலேசியரே - நலம்
   துலங்கும் நமது வாழ்வினிலே !

 

ஆசிரியர் பணி என்பது தொழிலா தொண்டா? - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே.குமார் - 09.07.2021

அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று பல தனியார் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி... தொடர்ந்து ஆசிரியராகத் தனியார் பள்ளியிலும், விரிவுரையாளராகத் தனியார் கல்லூரிகளிலும் பணி செய்த அனுபவங்கள் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஓரளவுக்கு உதவினாலும் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளின் சூழலும் மாணவர்களின் தேவையும் சற்று மாறுபட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.


இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் சூழலில் ஓர் ஐந்து ஆண்டுகள் என்னுடைய பணி அனுபவங்கள் மையம் கொண்டிருந்தன. ஆசிரியம் ஓர் அறப்பணி என்பதெல்லாம் காசுக்காக கற்பிக்கப்படும் தத்துவங்கள் என என் மனம் சொல்லியது.

புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில், பணக்கார மாணவர்கள் பயிலும் இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் ஏமாந்துவிடக் கூடாது.

நான் பணி செய்த அந்தக் கல்லூரியில் பல துறைகள். பொறியியல் துறையில் நான் பொறியியல் கணிதம் கற்பித்து வந்தேன். மின்னியல் படித்துக் கொடுக்கும் ஒரு மூத்த விரிவுரையாளர், நான் என இருவர் மட்டுமே அங்கு இந்தியர்கள். நாங்கள் இருவருமே ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம்.

நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வேறு இனத்தவர் ஒருவர் நிரந்தரப் பணியாளராக வேலைக்குச் சேருகின்றார்.

நிறுவனம் நிறைய இலாபம் சம்பாத்தித்து உள்ளதால் அந்த ஆண்டு எல்லோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. எனக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 1.2 மடங்கு ஊக்கத் தொகையும்; இன்னொரு இந்தியருக்கு 1.5 மடங்கும், புதிதாக வந்த நண்பருக்கு 2.0 மடங்கும் வழங்கப் பட்டது. இவ்வகைப் இனப் பாகுபாடு என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டு வகையான வஞ்சிப்புகள். ஒன்று வேலை நிரந்தரம் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியைக் காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும். இரண்டாவது, ஊக்கத் தொகை வழங்குவதில் காட்டப்படும் பாகுபாடுகள்.

அரசாங்கப் பணியில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தம் பெறுவார்கள். மேற்படிப்புக்கு உபகார சன்பளம், பணி ஓய்வுத் தொகை, இலவச மருத்துவ வசதி, விடுமுறை என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  வேலை பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால் அரசாங்க வேலையே சிறந்தது என்று மனம் எண்ணலாயிற்று.

ஐந்து ஆண்டுகள் தனியார் துறையில் இருந்தாயிற்று. அது போதும். இனி அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முடிவு செய்தேன். அந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற்று விட்டது. துன் மகாதீர்தான் அப்போது பிரதமராக இருந்தார்.

அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் அந்த வாய்ப்பு நெருங்கி வந்தது. 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' எனும் முழக்கம் உண்மையில் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.