27 பிப்ரவரி 2022

எச். ஜி. வெல்ஸ்

(மலேசியம் புலனத்தின் பதிவு)
27.02.2022

எச். ஜி. வெல்ஸ் (H. G. Wells) (செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஓர் ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதியவர்.

 
வெல்ஸ் _அறி புனை_ இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் ஒருவர். ஒரு சமதர்மவாதி. அமைதிவாதத்தை ஆதரித்தவர்.

அறிவியல் அம்சங்களைச் சாரமாக அல்லது பின்புலமாகக் கொண்டு கற்பனையுடன் கலந்து உருவாக்கப்படும் படைப்புக்களே _அறிவியல் புனைவு_ அல்லது _அறி புனை_ ஆகும்.

வெல்ஸ் பல புத்தகங்களை எழுதி உள்ளார் அவற்றில் *கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்* (GOD THE INVISIBLE KING) குறிப்பிடத் தக்கது.

பெண் வாக்குரிமை பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறி புனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி.

இவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார்.

வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.

இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அதில் _தி டைம் மெஷின்_ என்ற புதினம் கால பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டு இருக்கும்.

அவருடைய இந்தப் புதினம் அவரின் காலத்தில் அறிவியல் விந்தையாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து வந்த பலரும் வியக்கும் விதத்தில் காலப் பயணம் குறித்து எழுதினர்.

அவருடைய இந்த தி டைம் மெஷின் புதினம் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப் படங்களுக்கு மூலமாக அமைந்து இருந்தது.

தி டைம் மெஷின் புதினதை 1895-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்தக் கதையின் கதாநாயகன் தன் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்குச் சென்று விடுவார்.

தி டைம் மெஷின்  புதினத்தைப் படித்த ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், எச். ஜி. வெல்ஸை 1934 ஜூலை 23-ஆம் தேதி சந்தித்து ஒரு நேர்காணல் நடத்தினார்.

மனிதர்கள் மூளையை மாற்றி அமைக்க ஓர் ஐந்து ஆண்டு திட்டம் அமைக்கலாம் என்றும் அதன் மூலம் மேம்பட்ட மனிதகுலம் அமையும் என்றும் ஸ்டாலினிடம் கூறினார்.

(நடக்கிற காரியமாகத் தெரியல்லை... மனித மூளையின் 5 கோடி நரம்புகளை வெட்டி ஒட்ட வேண்டும். முடியுமா... கணினி மூலமாகச் செய்யலாம்.)

தமிழில் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்:

# ராஜேஷ்குமார்
# ஜெயமோகன்
# சுஜாதா
# அரவிந்தன் நீலகண்டன்
# ராஜ்சிவா

(மலேசியம்)
27.02.2022

 

உக்ரைன் அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி

வலோதிமிர் அலெக்சாந்திரவிச் செலேன்சுக்கி (Volodymyr Oleksandrovych Zelenskyy) பிறப்பு: 25 ஜனவரி 1978), வயது 44; உக்ரைனியத் தொலைக்காட்சி நடிகர், அரசியல்வாதி. 2019 மே 20 முதல் உக்ரைனின் 6-ஆவது அரசுத் தலைவராகப் பதவியில் உள்ளார்.


உக்ரைன் தேசிய பொருளியல் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். திரைப் படத்துறையில் சேர்ந்து ’குவார்த்தால் 95’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். திரைப்படங்கள் தயாரித்தார். நகைச்சுவை நடிகராக நடித்துப் பிரபலமானார்.

2015 முதல் 2019 வரை _மக்கள் சேவகன்_ _(Servant of the People)_ என்ற தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபராக நடித்தார். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் நிஜ வாழ்க்கையில் உக்ரைன் நாட்டின் அசல் அதிபராகவே மாறிப் போனார்.

2019 அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73.2% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அரசுத் தலைவராகப் பதவி ஏற்றதும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார மந்த நிலையைத் திறம்பட நிர்வகித்தார். ஊழலை இறுக்கமாகக் கையாண்டார். மக்களுக்குப் பிடித்த அதிபராக வலம் வருகிறார்.

இப்போது நடைபெறும் போரில், போர் வீரர்களில் ஒருவராகக் களம் இறங்கி போர் முனையில் உள்ளார்.

(மலேசியம்)
26.02.2022

 

19 பிப்ரவரி 2022

சிவசங்கரி சுப்ரமணியம்

மலேசியா நாட்டின் சுவர்ப்பந்து (ஸ்குவாஷ்) வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியம் (Sivasangari Subramaniam), (பிறப்பு: 24 ஜனவரி 1999); ஐவி லீக் சம்மேளனத்தின் (Ivy League Women's Player of the Year) பெண்கள் பிரிவில் 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


சிவசங்கரி சுப்ரமணியம் (பிறப்பு: 24 ஜனவரி 1999) மலேசியா நாட்டின் சுவர்ப்பந்து (ஸ்குவாஷ்) வீராங்கனை. இவர் 2018 மே மாதம், உலகத் தரவரிசையில் 38-ஆவது நிலையை அடைந்தார்.

2011-ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு மன்றத்தின் (National Schools Sports Council) வளர்ந்துவரும் சிறந்த விளையாட்டாளர் (Promising Sportsgirl of the Year) விருதைப் பெற்றார்

2018-ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் சடோமி வாடனபே (Satomi Watanabe) என்பவரைத் தோற்கடித்து பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் சாம்பியன்சிப் (2018 British Junior Open) பட்டதைப் பெற்றார்.


2022-ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் 26-ஆவது நிலையைப் பெற்றார். இதுவே இதுவரை இவர் பெற்ற சிறப்புத் தரவரிசையாகும்.

வசிப்பிடம்: அலோர் ஸ்டார், கெடா

பிறப்பு:    ஜனவரி 24, 1999 (வயது 19), சுங்கை பட்டாணி, கெடா, மலேசியா 

உயரம்:    160 செ.மீ. (5 ft 3 in)

(மலேசியம்)
19.02.2022

 

18 பிப்ரவரி 2022

கிருஷ்ணா சோப்தி

கிருஷ்ணா சோப்தி (Krishna Sobti) (18 பிப்ரவரி 1925 - 25 ஜனவரி 2019). இந்தி மொழி எழுத்தாளர். 1980-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதினையும்; 2017-ம் ஆண்டின் ஞானபீட விருதினையும் பெற்றவர்.

(She won the Sahitya Akademi Award in 1980 for her novel Zindaginama and in 1996, was awarded the Sahitya Akademi Fellowship, the highest award of the Akademi. In 2017, she received the Jnanpith Award for her contribution to Indian literature.)


1996-ஆம் ஆண்டில் இவர் எழுதிய புதினமான Mitro Marajani மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.

புதினம் மட்டும் அல்லாது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளையும் செய்தார்.

Hashmat எனும் பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான விமர்சனத்தை உருவாக்கின.

2010-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான வழங்கப்பட்டது. விருதுகளுக்காக நான் எழுதுவது இல்லை ("As a writer, I have to keep a distance from the establishment. I think I did the right thing.") என்று அந்த விருதினை மறுத்து விட்டார். 93-ஆவது வயதில் காலமானார்.

 

15 பிப்ரவரி 2022

மலாக்கா காடிங் தோட்டத்து தீபாவளி

தமிழ் மலர் - 16.11.2020

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். இரண்டாவது முறையாக உலகம் உருண்டையானது போல களை கட்டி நிற்கும். ஒரு பத்துப் பதினைந்து குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலக் கட்டம்.

தீபாவளிக்கு முதல் நாள். சாயங்கால நேரத்தில் சின்னச் சின்னத் துக்கடான்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்வோம். ஒரு மீட்டிங் போடுவோம். எந்த ஆற்றில் குளிப்பது. சின்ன ஆற்றில் குளிக்கலாமா. பெரிய ஆற்றில் குளிக்கலாமா. வாக்குவாதம் நடக்கும்.


மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டம்.

ரப்பர்த் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்து

இதே தோட்டத்தில் கிராணியாராகவும் பணி புரிந்தேன்.

பாலாறு என்று ஓர் ஆறு இருந்தது. பால் ஓடுகிற ஆறு அல்ல. ரப்பர்க் கழிவுகள் கலக்கும் ஒரு பழைய ஆறு. சும்மா சொல்லக் கூடாது. மனுசன் குளிக்க மாட்டான். புரிந்து கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் வைத்த பெயர் பாலாறு. ஒன் மினிட் பிளீஸ்.

தீபம் என்றால் ஒளி. ஆவளி என்றால் வரிசை. ஒளி விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் திருநாள். 21 விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பது ஓர் ஐதீகம். இப்போது எல்லாம் இந்த மாதிரி வரிசை வரிசையாக 21 விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறார்களா? தெரியவில்லை. பெரிய வயசு பெரிசுகளைக் கேட்டால் தெரியும்.

முன்பு 50 வருடங்களுக்கு முன்னர் தோட்டங்களில் தான் தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கோலாகலமாகப் பார்க்க முடிந்தது. அடுத்து நகர்ப் புறங்களில் பார்க்க முடிந்தது. கடைத் தெருக்களில் பார்க்க முடிந்தது. காட்டுக் கோயில்களில் பார்க்க முடிந்தது. ஏன் ஈய லம்பங்களில் கூட பார்க்க முடிந்தது.

தோட்டப்புற வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் போட்டிப் போட்டுக் கொண்டு தீப விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். நான் பிறந்து வளர்ந்த மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில் தீபாவளி என்றால் அப்படித்தான் இருக்கும்.

சில வீடுகளில் வாழை மரங்களை வெட்டி வந்து நிறுத்தி வைத்து இருப்பார்கள். சில வீடுகளில் தோரணங்கள் தொங்கும். சில வீடுகளில் மாயிலைத் தோப்புகளே தொங்கும்.


அந்தக் காலத்துத் தோட்டத்துப் புறப் பாலாறு. மாதிரிப் படம்.

காடிங் தோட்டத்துக் கதைக்கு வருகிறேன். எந்த ஆற்றில் குளிப்பது என்று விவாதம் நடக்கும். ஒன்றும் சரிபட்டு வரவில்லை என்றால் கைவசம் எப்போதுமே ஒரு துருப்புச் சீட்டு இருக்கும். தோட்டத்துக் கழிசல்களின் ஒட்டு மொத்த வங்கி என்கிற பேரில் ஒரு பழைய ஆறு. பக்கத்திலேயே ஓடும். பாலாற்றின் பங்காளி ஆறு.

நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். அதுதான் அப்போதைக்கு எங்களின் வேதாரண்யம். ஏழைச் சிறுசுகளின் ஒன்றுவிட்ட சரணாலயம்.

காய்ந்த மாடுகள் கம்புக் கொல்லையில் பாய்ந்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி கொஞ்ச நேரத்தில் எல்லா பையன்களும் சட்டை சிலுவார்களைக் கழற்றிப் போடுவார்கள்.

1960-ஆம் ஆண்டுகளில் நான் வாழ்ந்த தோட்டத்து  மேல் லயன் வீடு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அச்சம், கூச்சம், அசிங்கம், அருவருப்பு என்று ஒன்றுமே இருக்காது. வெட்கம் என்றால் என்ன. கட்டி என்ன விலை. அது எங்கே விற்கிறது என்று கேட்பார்கள். அந்த மாதிரி நிர்வாண ராகத்தில் ஆனந்த பைரவிகளின் ஆலாபனைகள்.

அப்புறம் என்ன. ஆற்றுக்குள் அடுக்கடுக்காய்ப் பாய்ச்சல்கள். ஓகோ ஐலசா. ஓகோ ஐலசா. ஒரே கும்மாளம். வயசு என்ன. பத்து பன்னிரண்டு இருக்கும்.

நாங்கள் நடத்துகின்ற இந்தக் கூத்துகளைப் பார்த்து பத்து வயது சிறுமிகள் எல்லாம் ஓடிப் போய் ஒதுங்கிக் கொள்வார்கள். பத்துமலை, ராசாத்தி, ராசம்மா, பார்வதி, கல்யாணி, பத்துமா. இப்படி சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

தோட்டத்து மேல் லயன் வீடுகளில் முதல் வீடு. சின்ன வயதில் வாழ்ந்த வீடு.
1959-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. இதை அவர்கள் படிக்க வேண்டும் என்பதே என்னுடைய தீபாவளி ஆசையும்கூட. ஆக அந்த ஆற்றுப் பக்கம் பெண் என்கிற பேரில் ஒரு கோழிக் குஞ்சுகூட வந்து எட்டிப் பார்க்காது. அப்படி ஒரு கூத்து நடக்கும்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆறு ’கோப்பி ஓ’ மாதிரி ஜென்மாந்திர கலருக்கு மாறிப் போய் இருக்கும். இருக்கிற மீன்கள் எல்லாம் கைலாசத்திற்கு பயணச் சீட்டுகளை வேறு வாங்கி இருக்கும். அதோடு விட்டால் தானே.

அதில் எவனோ ஒருவன் ஒரு சின்ன ஆள்காட்டி விரல் அளவுக்கு ஒரு மீனைப் பிடித்து விட்டான். பெயர் சுப்பன் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். அவனுக்கு அன்றைக்கு முழுவதும் மகா ராஜமரியாதை. அவனைத் தூக்கி வைத்து பெரிய ஓர் ஆட்டம்.

காடிங் தோட்டத்துப் பாலய நண்பன் சுப்பன்.  அருகில் சொந்தமாக வீடு கட்டி வாழ்கிறார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அது ஓர் அழகான காலம். அர்த்தம் தெரியாத ஆன்மீகங்கள். அற்புதமான பிஞ்சு மனங்களின் லௌகீகங்கள். அம்மணம் தெரியாமல் கலைந்து போகும் நனவுகள்.

மறுபடியும் கிடைக்குமா. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது. ரொம்ப நாளைக்கு முன்னால் தோட்டத்து அரிச்சுவடிகளில் இருந்து அவை எல்லாம் களவு போய்விட்டன.

அந்தக் காலக் கட்டத்தில் காடிங் தோட்டத்தில் குலேபகாவலி பூக்கள் இருந்தன. ஆங்கிலத்தில் எபிபில்லம் பைலாந்தஸ் (Epiphyllum phyllanthus) என்று பெயர். ரொம்ப நாளைக்குப் பிறகு ஆராய்ச்சி பண்ணி தெரிந்து கொண்டேன்.

காடிங் தோட்டத்து மேனேஜர் கூ பெக் வான் வாழ்ந்த பங்களா வீடு

இரவு 12 மணிக்கு மேல் இந்தப் பூ மலரும் போது நறுமணம் மூக்கைத் துளைக்கும். அதற்கு இலைகள் இல்லை. அந்தப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த மாரியம்மன் கோயில் வைத்து சாமி கும்பிடுவோம்.

இந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான், ராமன் என்கிற பையன் ஒரு செம்புத்துப் பறவையின் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்தான். அந்தக் காலத்தில், செம்புத்துப் பறவைகள் இருட்டுகின்ற நேரத்தில் பூச்சிகளைப் பிடிக்க பறந்து திரியும். சிகப்பு நிறத்தில் சற்றுப் பருமனாக இருக்கும்.

மரத்திற்கு கீழே இருக்கும் அலுவலகத்தில் தான் வேலை செய்தேன். அருகில் இருப்பது ரப்பர் பால் காய வைக்கும் கிடங்கு. ஆகப் பின்னால் இருப்பது பால் நிறுக்கும் இடம்.

இப்போது அவற்றைப் பார்க்க முடிவதில்லை. இங்கே காடுகள் அழிக்கப் படுவதால் அவை சோமாலியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்து விட்டதாக அரசல் புரசலாகக் கேள்வி.

ஆக அந்தச் செம்புத்துக் குஞ்சைச் சகல மரியாதையுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம். என் கண்ணையே ஒப்படைக்கிறேன் என்று சொல்லி அதை என்னிடமே கொடுத்து விட்டார்கள்.

விடிந்தால் தீபாவளி. ராத்திரி நேரத்தில் பக்கத்து வீட்டு ராமையா தாத்தா வந்தார். செம்புத்துக் குஞ்சைப் பார்த்து அசந்து போனார். மூனு நம்பர் அடிக்கிற மாதிரி செம்புத்துக் குஞ்சு லேசில் கிடைக்காது என்றார். அப்போது மூனு நம்பர்தான் பிரபலம். நான்கு நம்பர் கூடா இல்லாத காலம்.

நான் படித்த டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி. முன்பு அத்தாப்புக் குடிசையாக இருந்தது. இந்தப் பள்ளியின் முதல் தலைமையாசிரியர் மதிப்புமிகு வி.பி. பழனியாண்டி
அவர்கள் அன்பளிப்பு செய்த நிலத்தில் தான் இப்போது இந்தப் பள்ளியின் புதிய கட்டிடம்

எங்கே கிடைத்தது, எப்படி கிடைத்தது என்று விலாவாரியாக விசாரித்தார். விடிந்தால் தீபாவளி. இருந்தாலும் விடவில்லை. எங்களை களம் இறக்கி விட்டார். ஆற்றுப் பக்கத்தில் இருந்த லாலான் காடே தூள் தூளானது. லாலான் வேர்களைப் பிடுங்காத குறைதான்.

தூள் படத்தில் நடித்த விக்ரம் எங்கள் காடிங் தோட்டத்துக் கதையைப் பயன்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது. காடிங் தோட்டத்து மக்கள் பெரிய மனசுக்காரர்கள். பெரிதுபடுத்தவில்லை. சரி.

மதம் பிடித்த யானை செய்யும் துவம்சம் இருக்கிறதே அதையும் மிஞ்சிய சஞ்சீவிச் சதிராட்டங்கள் அங்கே நடந்து விட்டன. செடி கொடி எல்லாமே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன.

காஜா பேராங் உயர்நிலைப்பள்ளி.
ஐந்தாம் படிவம் (
முன்பு சீனியர் கேம்பிரிட்ஜ்) வரை படித்த பள்ளி.

கூண்டு மட்டும் கிடைக்கட்டும். உங்களுக்கு ஆளாளாக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறேன்டா. இது உங்க ஆத்தா மேல சத்தியம்டா என்று ஆசை அபிசேகங்கள் வேறு. சஞ்சீவி வேரைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.

‘செம்புத்துக் கூண்டுக்குள் சஞ்சீவி வேர் இருக்குமாம். அந்த வேரை நம்ப உடம்புக்குள் வச்சு தச்சிட்டா; துப்பாக்கியால சுட்டாலும் சாக மாட்டோமாம். சுங்கை சிப்புட்டுல காட்டுப் பெருமாளுனு ஒருத்தர் இருந்தாராம். அவர்கிட்ட இந்த சஞ்சீவி வேர் இருந்துச்சாம். அதை வச்சுகிட்டு அவரு வெள்ளைக்காரங்க கிட்ட என்ன மாதிரி கண்ணாமூச்சி காட்டினார்ரு என்றார்.

ஆனால் என்ன. செம்புத்துப் பறவையின் கூடும் கிடைக்கவில்லை. செம்புத்துக் குஞ்சின் தாயையும் பார்க்க முடியவில்லை. லாலான் காடு ஒலிம்பிக் திடலாக மாறியதுதான் மிச்சம். சரி. சஞ்சீவி வேர் விசயத்திற்கு வருகிறேன்.

காடிங் தோட்டம். 1970-களில் கட்டப்பட்ட வீடு

சஞ்சீவி வேர் இறந்த ஒருவரையே மறுபடியும் உயிர்பிக்கும் சக்தி பெற்றது என்று நாம் அனைவரும் கேட்டு அறிந்தது. ஆனால் பாருங்கள், இந்த வேரை வாங்கியவர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

கடல் கடந்து வந்து இங்கே சஞ்சீவி வேர் என்று சொல்லி சிலர் விற்கிறார்கள். விற்றுவிட்டுப் போகட்டும். ஒரு வேர் பத்தாயிரம் ரிங்கிட் வரை விலை போய் இருக்கிறது.

ரொம்ப வேண்டாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஐயாயிரம் கொடுத்து வாங்கி இருக்கிறார். உண்மையிலேயே அது சஞ்சீவி வேர் தானா என்று அவருக்கே தெரியாது.

டுரியான் துங்கல் நீர்த்தேக்கம் பற்றிய செய்தியறிக்கை

ஆனால் காசு பணம் பார்க்காமல் பொதுமக்கள் அதை வாங்குகிறார்கள். தாயத்து என்று இடைவாரில், தொடைவாரில் கட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். குறை சொல்லவில்லை. அதனால் நன்மை வந்ததா என்பதே என்னுடைய கேள்வி.

இஞ்சித் தின்றவரிடம் போய் இனிக்குதா புளிக்குதா என்று கேட்டால் என்ன சொல்வார். நல்ல மாதிரியாகக் கேட்டாலும் சரிபட்டு வராது. உண்மை தானே. விடுங்கள்.

சஞ்சீவி வேர் இருந்த மலை சஞ்சீவி மலை என்று சுக்கிராசாரியார் சொல்கிறார். இராமாயணக் காவியத்தைப் படித்து இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இலட்சுமணன் மற்றும் போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களைப் பிழைக்க வைப்பதற்காக சஞ்சீவி வேர் தேவைப் படுகிறது. பறந்து வந்த அனுமானுக்குச் சஞ்சீவி வேர் எது என்று தெரியாத நிலை.

காடிங் தோட்டத்துக்கு அருகில் இருக்கும் டுரியான் துங்கல் நீர்த்தேக்கம்

சஞ்சீவி மலையை அப்படியே தூக்கி வந்து விடுகிறான். சஞ்சீவி வேரின் மருத்துவ மகிமையால் இராமனின் படையினர் உயிர் பெறுகிறார்கள் என்று இராமாயணம் கூறுகிறது.

சஞ்சீவி மலை இப்போதைக்கு ராமர் பாலத்தின் அடியில் இருப்பதாகக் கேள்வி. தேடிப் பார்த்தால் கிடைக்கும். இப்போது ஒரு குழுவினர் ராமர் பாலம் தங்களின் பூர்வீகச் சொத்து என்று கலாய்க்கிறார்கள். ராமர் பாலத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது.

இனிமேல் யாராவது சஞ்சீவி வேர் என்று சொன்னால் உங்கள் தொடையைக் தட்டிக் காட்டி அங்கே புதைத்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள். எப்படி கிடைத்தது என்று கேட்டால் பறவைகள் பேசுவதை அறிந்து கொள்ளும் நயன மொழி தெரியும். அதனால் கிடைத்தது என்றும் சொல்லுங்கள்.  

கேள்வி கேட்டவர் கொஞ்சம் யோசிப்பார். அந்த மொழியை அவரும் கற்றுக் கொள்ள ஆசைப் படலாம். அப்படி ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கிறார் நம்ப சிக்ஸ் பேக் நடிகை நயன்தாரா. நயன மொழிகளின் நவரச அவதாரம். அவருக்கு எல்லாம் அத்துப்படி. ஆக அவரிடம் போய்க் கேளுங்கள் என்று சொல்லி ‘எஸ்க்கேப்’ ஆகிவிடுங்கள்!

இப்போது பெரிய ஒரு கேள்விக்குறி. வீடுகளில் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றுகிறார்களா? எங்கோ சில வீடுகளில் அந்த மாதிரி விளக்கு ஏற்றல்கள் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.

நவீனத் தொழிநுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வாட்ஸ் அப்; இன்ஸ்டாகிராம்; பேஸ்புக்; சூம் ஊடகங்கள் மூலமாகத் தீபாவளியைக் கொண்டாடி விட்டுப் போகிறார்கள். காலம் செய்த கோலம்.

இப்போது கோரோனாவின் கோரத் தாண்டவம். அந்தத் தாண்டவத்தில் அரசியல்வாதிகள் சிலரின் சுயநலச் சூப்பர் ருத்ர ஆர்ப்பாட்டங்கள். அப்பேர்ப்பட்ட நடராசருக்கே நடனம் சொல்லிக் கொடுப்பார்கள் போலும். எக்கச்சக்கமாய்த் தீபாவளி சிக்கிக் கொண்டது. பாவம் தீபாவளி.

இனவாதம் மதவாதத்தால் கொஞ்ச காலம் அழுதது. இந்த வருடம் ரொம்பவுமே கண்ணீர் வடிக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா, உலகம் முழுமைக்கும் பரவி கோடிக் கோடி மக்களின் வாழ்வதாரத்தைச் சீர் குலைத்துவிட்டது.

விடிந்தால் தீபாவளி. எல்லாச் சுவைகள் இருந்தாலும் அதில் கொஞ்சம் நகைச்சுவை கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம். அனைவருக்கும் கலந்த தீபாவளி வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.11.2020