29.06.2021
ஓர் ஆய்வு விஞ்ஞானியாக அல்லது அறிவியல் அல்லது கணிதம் தொடர்புடைய ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்வோம் என்று எண்ணித்தான் எனது அறிவியல் பட்டப் படிப்பை முடித்தேன். 1986 - 1990 களில் நாட்டிலே கடுமையான பொருளாதார மந்த நிலை. வேலை கிடைப்பது அரிதாக இருந்தது.
என்னுடன் படித்த நண்பர்கள் பலரும் இதே நிலைமையில் இருந்தனர். அறிவியல் பட்டப்படிப்பு ( BSc) நான்கு ஆண்டுகள். கலைத்துறை (BA) படிப்பு மூன்று ஆண்டுகள். ஆனால் கலைத்துறை பட்டதாரிகளுக்கு அப்பொழுது வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருந்தது.
பல தனியார் நிறுவனங்களில் வேலை தேடி அலுத்துப் போன நிலையில் பெட்ரோல் நிலையத்தின் சீன முதலாளி ஒருவர் தன்னுடைய மகனுக்கு அவரது வீட்டில் டியுசன் வகுப்பு நடத்த அழைத்தார். மாதம் 400 மலேசிய வெள்ளி. வாரம் இருமுறை மட்டுமே வகுப்பு.
எப்படி தவிர்த்தாலும் ஆசிரியர் தொழில் விட மாட்டுதே என்று பொருமிக் கொண்டு பணிசெய்து வந்தேன். சில தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் பணியாற்ற அழைப்பும் வந்தது. அப்பொழுது நான் 24-25 வயது இளைஞன்.
கோலாலம்பூரில் ஒரு தனியார் கல்வி மையத்தில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான்காம் ஐந்தாம் படிவத்திற்கு வேதியல் (chemistry) பாடமும் கணிதப் பாடமும் (mathematics) சொல்லிக் கொடுத்தேன்.
நான் அருமையாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களில் ஒருவர் என்று என்னுடைய மாணவர்கள் சிலர் சொல்வதுண்டு. எனக்கென்று ஒரு இரசிகப் பட்டாளம் அந்தத் தனியார் பள்ளியில் இருந்தது. நல்ல ஆசிரியர் என்று நல்ல பெயர் கிடைத்தது.
அப்போது நானும் இளைஞன் என்பதாலும் மாணவர்கள் 16-18 வயத்துக்குள் உள்ள இளையர் என்பதாலும் அவர்களிடம் எதார்த்தமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அவர்களின் குறும்புகளையும் கிண்டல் மொழிகளையும் கடந்து போய் விடுவேன்.
அவர்களிடம் கத்தியின் மேல் நடப்பது போல் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் நெருங்கினால் அது நம்மையே பதம் பார்த்துவிடும். ஆனாலும் உண்மையான அக்கறையையும் உள்ளன்பையும் அவர்களால் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
நமக்கான மதிப்பு என்பது நமது நேர்மையிலும் காட்டும் அக்கறையிலும் இருக்கிறது என்பதை நான் அங்கே கண்டேன்.
உண்மையான அக்கறையோடு நாம் படித்துக் கொடுத்தால் திட்டினாலும் கடிந்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாதவர்கள் இளையர்கள்.
அந்த வகுப்பில் படித்த 17-18 வயது இளம் வயது பையன்களும் பெண்பிள்ளைகளும் காதல் வயப்படுவதும்; பிரிவதும் சேர்வதும்; பெண் ஆசிரியர்களோடு நம்மை முடிச்சுப் போட்டுப் பேசுவதும்; சில வேளைகளில் ஒரு சில மாணவிகள் ஆசிரியர்கள் மீது மையல் கொள்வதும் நடக்கும். அதனால் இளையர்களிடம் ஓர் இடைவெளியை எப்போதும் ஏற்படுத்தி வைக்க வேண்டும்.
ஒரு மூன்று ஆண்டுகள் அந்தக் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் பணியாற்றிய பிறகு கொஞ்சம் கூடுதல் சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்ட வேறு ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கணிதம் (engineering mathematics) படித்துக் கொடுக்கக் கிளம்பினேன்.
என்னுடையப் பணிவிலகல் கடிதத்தைக் கொடுக்க அத்தனியார் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அதற்குள் பள்ளி முழுக்க செய்தி தெரிந்து விட்டது நான் வேலை மாறுகிறேன் என்று.
கண்ணீர் வழிய என்னுடைய மாணவர்கள் என்னை வழியனுப்பியக் காட்சி இன்றும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது. தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் ஒரு மாணவி. அவர்தான் நான் அதிகம் கடிந்து கொண்ட மாணவிகளில் ஒருவர்.
பலமுறை கணிதத்தில் தோற்றிருந்தும் இறுதியில் அவரை நான் வெற்றிப் பெற வைத்தச் சிறந்த ஆசிரியன் என்று எனக்கு நற்சான்றிதழ் வழங்கிய 16 வயது பெண்குழந்தை. மாணவப் பருவத்தை நானும் கடந்துதான் வந்தேன் என்பதால் எனக்கு அவர்களின் தூய உள்ளத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள முடிந்தது.
அடுத்து நான் செல்லப் போகும் கல்லூரியோ இருபது வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிலும் தொழில்நுட்பக் கல்லூரி. வேறு புதிய பட்டறிவுகளை நோக்கிப் பயணப் பட்டேன்.
- குமரன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக