13 செப்டம்பர் 2021

செந்தமிழ் செல்வி ஜனகா சுந்தரம்

12.09.2021
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராவார். மலேசிய நாளிதழ்கள்; தமிழகத்தின் மஞ்சரி, கலைமகள் போன்ற இதழ்களில் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.

1960-ஆம் ஆண்டுகள் தொடக்கம் மலேசியத் தமிழ் எழுத்துலகில் நன்கு அறியப்பட்டவர்.


பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவை உறுப்பினராகச் சேவை செய்தவர். தனியார் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றியவர்.

பினாங்கு இந்து சங்கப் பேரவையின் செயலாளர்; பினாங்கு வட்டாரப் பேரவையின் தலைவர். பல ஆண்டுகளாகப் பொறுப்பேற்று சேவை புரிந்தவர்.

1962-ஆம் ஆண்டு முதலே ஜனகா சுந்தரம்; ஜனனி என்னும் புனைப் பெயரில் கட்டுரை, சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.


வானம்பாடி, மலேசிய நண்பன், தமிழ் நேசன், மலேசிய முரசு ஆகியவற்றில் இவருடைய பல தொடர்கதைகள் வெளி வந்துள்ளன. இலக்கியத் துறையில் பல படைப்புகளை வழங்கியுள்ளார். இவரின் முதல் சிறுகதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ராணி வார இதழில் இடம் பெற்றது.

ஜனகா சுந்தரம் எழுதிய நூல்கள்

ஞானத் தழும்புகள் (சிறுகதைத் தொகுப்பு);

திருக்குறள் தொகுப்புரை (கட்டுரை நூல் 1997);

பாரதியார் கவிதைகள் (கட்டுரை நூல் 1998).


*சிறுவர் நூல்கள்*

கண்ணனின் துனிவு (1998);

ஔவையார் அறநெறி - ஆத்திச்சூடி (கட்டுரை -1998);

பைந்தமிழ் நாட்டு பழங்கதைகள் (கதைகள் - 1998)

*சமய நூல்கள்*

காரைக்கால் அம்மையார் வாழ்வும் இலக்கியமும் (1997 / 1998)


1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய வானொலியின் இளைஞர் உலகம் நிகழ்ச்சியின் கருத்துக் களம் நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றவர். அப்போது தொடக்கம் இவரை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சியில் நானும் வாரா வாரம் கலந்து கொள்வேன். ஆழமான தமிழ் வளம். அழுத்தமான சொற்கள். உறுதியான சொற்கள். அவரின் தமிழறிவைக் கண்டு பல கட்டங்களில் வியந்து போய் இருக்கிறேன்.

இவர்தான் டாக்டர் சுபாஷிணியின் தாயார் என்பதை அறிந்து மகிழ்ச்சி ஒரு புறம். மலைப்பு ஒரு புறம். திகைப்பு ஒரு புறம். வாழ்த்துகிறேன்.

பின்னூட்டங்கள்

டாக்டர் சுபாஷிணி: அம்மா - ஒரு வழிகாட்டி!
(எழுத்தாளர் ஜனகா சுந்தரம்)

மலேசியாவில், அதிலும் குறிப்பாக பினாங்கில் ஒரே ஒரு தமிழ் புத்தகக்கடை மட்டுமே இருந்தது ஆரம்பத்தில். அங்கு தரமான நூல்கள் அவ்வப்போது மட்டுமே வந்துகொண்டிருந்தன.

தமிழகத்திலிருந்து யார் பினாங்கு வந்தாலும் அவர்கள் கையோடு கொண்டு வர வேண்டிய நூல்களைப் பற்றியும் அம்மா முன்னமே தெரிவித்து வரவழைத்து விடுவார்.

இப்படி நான் வளர்ந்த காலத்தில் வீட்டில் ஒரு சிறிய நூலகத்தை அம்மா வைத்திருந்தது எனது தமிழ் நூல்கள் வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அம்மாவின் வழிகாட்டுதல் தான் எனக்கு இங்கு ஜெர்மனியிலும் என் வீட்டில் தரமான நூல்களுடன் ஒரு நல்ல நூலகம்  உருவாகுவதற்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

நூல் வாசிப்பு, அது பற்றிய சிந்தனை என்பது பெற்றோர்களது வழிகாட்டுதல்களினால்தான் நமது மனதில் ஆழப்பதியும் வகையில் நமக்கு அமைந்துவிடுகின்றன என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

பாரதியின் நினைவு நாள் இன்று. பாரதியைப் பற்றிய முற்றுப்பெறாத ஒரு நூலையும் அம்மா எழுதிக் கொண்டிருந்தார். பாரதியின் பாடல்களை எனக்கும் என் சகோதரிக்கும் கற்றுக் கொடுப்பார்.

நாங்கள் பாடிக் காட்ட அவர் மகிழ்வார். திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஆண்டுகள் சில கடந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு  இருக்கிறது.

நூல்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும்.. நூல்களை நேசிக்க வேண்டும் என்றும், வீட்டில் குட்டி நூலகம் இருக்க வேண்டும் என்றும் தனது செயலால் எனக்கு வழிகாட்டியாக இருந்த அம்மாவிற்கு இன்று (செப் 11) பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... -சுபா

தேவிசர கடாரம்: அருமை சகோதரி... புத்தகம் வாசிப்பது என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .என் பெற்றோறை பார்த்தே எனக்கும் இந்த பழக்கம் வந்தது...

தங்களின் தாய் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்கின்றார்.அவரின் ஆசீர்வாதம் என்றும் உங்களை சுற்றியே இருக்கும்.....

தனசேகரன் தேவநாதன்: நண்பரின் கவிதை - வாசிப்பு

அன்று தொட்டு இன்று
வரை மனித நாகரீகத்தின்
பரிணாம வளர்ச்சிக்கு
வித்து வாசிப்பு அதுவே
விலை இல்லா சொத்து...

தனி மனிதனின் சிந்தனையில் உதித்த
அறிவியல் அகிலத்துக்கு
ஆயிரமாயிரம் நன்மைகளை
உயிர்ப்பித்து உயிர்களின்
வாழ்வாதாரம் நிர்ணியக்கப் படுகிறது
வாசிப்பில்...

ஆன்றாரோரும் சான்றாரோரும்
மனித குலத்தின் ஒழுக்க
நெறிகளுக்கு எழுதி வைத்த
ஆயிரமாயிரம் அறிவுரைகள்...

ஏடுகளில் ஏங்கிக் கிடக்கின்றன
சாமானியர்களின் வாசிப்புக்கும்  
நல் வாழ்வுக்கும்...

சுவாசிப்பு உயிர் வாழ எவ்வளவு முக்கியமாமோ
அவ்வளவு முக்கியம் வாசிப்பு
மனிதன் மனிதனாக மனிதத்துடன் மண்ணில் வாழ...

கல்வியின் முக்கித்துவம்
புத்தகங்களில் மூழ்கி இருக்கின்றன
அந்த கல்வி முத்தை மூழ்கி
எடுக்க வாசிப்பு என்ற
பயிற்சி வேண்டும்...

மன இறுக்கத்திலிருந்து
விடுபட சிறந்த வைத்தியம்
வாசிப்பு  வாசிப்பாபோம்
வசந்தத்தை வரவேற்பாபோம்
வாழும் வரை...

-நாரா
பத்து காஜா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மகிழ்ச்சியான செய்தி. பெற்றோர் எப்படியோ பிள்ளைகளும் அப்படியே... தாங்கள் இந்த அளவிற்கு சிறந்து விளங்குவதற்கு தங்களின் பெற்றோர்... குறிப்பாக, தாயார் மிக முக்கிய பங்கு வகித்து உள்ளார். நினைவு கூர்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறேன். 🙏💐

டாக்டர் சுபாஷிணி: மிக அழகான பதிவு தோழர். அம்மாவின் படைப்புக்களை அழகாக வரிசைப் படுத்தி விரிவாக எழுதி இருக்கின்றீர்கள். எனது நன்றி மலர்கள் 🌹🌹🌹. அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

சுறுசுறுப்பு, பல திறமைகள், சமூகச் சிந்தனை  என எனக்கு நேரடி வழிகாட்டி அவர். எல்லா பணிகளுக்கு இடையேயும் அவரது கைமணமும் அபாரம். இன்று மட்டுமல்ல எல்லா நாளுமே அம்மா உடன் இருக்கின்றார்.. 😄 அன்பிற்கு நன்றி நன்றி 🙏😊🌷

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:1967-ஆம் ஆண்டு, தங்கள் தாயாருடன் மலேசிய வானொலி இளைஞர் உலகம் கருத்து மேடை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கருத்து விவாதங்கள ஏற்பட்டதை நினைத்துப் பார்க்கின்றேன். தாங்கள் தான் அவருடைய மகள் அறிந்து தங்கள் மீது தனி ஒரு மரியாதை ஏற்படுகிறது.

ஜனகா சுந்தரம்... புகழ்பெற்ற எழுத்தாளர்... என்னைக் கவர்ந்த எழுத்தாளர். இன்றும் என் நினைவில் வலம் வரும் அழகிய எழுத்தாளர். தங்களின் தாயார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

டாக்டர் சுபாஷிணி: மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏😊😊😊🌷

வெங்கடேசன்: சிறப்பான தகவல் மிக்க நன்றி ஐயா🙏

தனசேகரன் தேவநாதன்: நன்றி ஐயா. அவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். பினாங்கு மாநில இந்து சங்கத் தலைமைப் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர். வானொலியில் அவர் பெயர் வராத நாட்கள் அபூர்வம்.

அவரின் வாரிசு டாக்டர் சுபாஷிணி என அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி ஐயா. இந்து சங்க வரலாற்றில் இவர் தான் முதல் பெண் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தவர்

கரு. ராஜா சுங்கை பூலோ: தகவலுக்கு நன்றி

முருகன் சுங்கை சிப்புட்: எல்லாம் புதுப் புதுத் தகவல்கள். மலேசியம் புலனம் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே வருகிறது. அத்துனை படைப்புகளும் அருமை 👏👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கனகா சுந்தரம்... 1970-களில் மலேசிய வானொலியில் முத்திரை பதித்தவர். இவர் என் மனைவியின் தோழியும் ஆவார். இருவருக்கும் கடிதத் தொடர்புகள் இருந்தன.

கலைவாணி ஜான்சன்: சிறப்பு ஐயா... சிறந்த எழுத்தாளரை அறிமுகம் செய்து, அவர் எழுதிய நூல்களையும் அறிமுகம் செய்து, அவருக்குச் சிறப்பு சேர்த்து உள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி... நன்றி 🙏🙏

கரு. ராஜா சுங்கை பூலோ: புலிக்கு நிச்சயம் பூனை பிறக்காது. புலிதான் பிறக்கும். அந்தப் புலிதான் டாக்டர் சுபாக்ஷினி.

கலைவாணி ஜான்சன்: வாழ்த்துகள் டாக்டர் சுபாஷினி 👏🏼👏🏼🌹🌹

ராதா பச்சையப்பன்: அருமை, சிறப்பு. எனக்குப் புத்தகங்களை வாசிப்பது என்றால் அதிக பிரியம். 👌👌🙏🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சொல்ல மறந்த தகவல்... ஜனகா சுந்தரம் அவர்கள்... சித்த மருத்துவம் பயின்றவர். தமிழ்நேசன் பவுன் பரிசு; தமிழ் முரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு; எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசுகள் பெற்றவர்.

குன்றக்குடி அடிகளார் `செந்தமிழ் செல்வி` எனும் விருது வழங்கி உள்ளார்.  

மலேசிய இந்து சங்கம் `தொண்டர் மாமணி’ விருது வழங்கி உள்ளது.

கலைவாணி ஜான்சன்: ஆகா அருமை அருமை ஐயா.... தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற அம்மையாருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்.... 🌹🌹🌹👏🏼👏🏼

இமயவர்மன் திருச்சி: வாழ்த்துக்கள் டாக்டர் சுபாஷினி

ராதா பச்சையப்பன்: உங்களுக்கு தெரியாததா, சகலமும் அறிந்தவர் நீங்கள். உங்களிடம் போட்டி போட ஆள் ஏது? 🙏👌👌🌹.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
அட போம்மா... அங்கே இங்கே தோண்டி எடுத்து... பெயர்  போட்டுக் கொண்டு இருக்கிறேன். இதில் பெருமைப்பட பெரிதாக ஒன்றும் இல்லை... பதிவிற்கு நன்றிம்மா 😇

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக