06 செப்டம்பர் 2021

சுதந்திரமாக சாக... சத்யா பிரான்சிஸ்


இன்ப நதியில் மீனாக நீந்தித் தவழ அலைகிறது இதயம்
துன்பத்தைத் தத்தெடுத்த ஆன்மா
போதி மரம் தேடி அலைகிறது...!

துயரத்தைத் தோளில் சுமந்து
தாவாத மந்திகளிடம்
சுதந்திர வாழ்வைக் கற்றுக் கொள்ளத் தவறிய இனம்
வருத்தத்தைச் சோக நெஞ்சில் சுமந்திருக்கிறது..

வந்தேறியென வசைபாடி
இனவெறிக் கொள்கையைத்
தூக்கிப் பிடிப்பவர்களுக்குப் பரிசளிப்போம் தூக்கு மேடை..!

மலைநாட்டின் வளத்திற்கு
தமிழர்களின் உடல்
மண்ணுக்கு உரமானது
விண்ணுக்கு உயர்வானது..!

பாடுபட்ட இனம்
அடக்கப்பட்டு ஒதுக்கப்பட்டது!
கூடாரத்தில் மூக்கை நுழைத்து
ஒண்டி வந்த ஒட்டகம்
பூமிபுத்ரா ஆனது..!

மூதாதையரின் உழைப்பு கனவில் மட்டும்
வந்து வந்து போகிறது
வரலாற்றுப் புத்தகம்
புதிய புதிய அத்தியாயங்களைத்
தவறாக எழுதிக் கடிக்கிறது...!

வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சும் சதித்திட்டம்
இனவாத அரசியல்வாதிகளால்
நுணுக்கமாக இளைய நெஞ்சங்களில் பரப்பப்படுகிறது...!

ஜனநாயக நாட்டில்
சுதந்திரமாக வாழ மறுப்பு
சுதந்திரமாக சாக மட்டும் அனுமதி..!


கணேசன் சண்முகம் சித்தியவான்:
அருமை ஐயா மிகச் சிறப்பு

தனசேகரன் தேவநாதன்: பலரது வேதனை.... கவிதையாக்கி .... விட்டீர். உள்ளூரில் சரித்திரத்தை மாற்றலாம் மறைக்கலாம். உண்மை மாறாது

ராஜா சுங்கை பூலோ: அருமைக் கவிஞர் ஐயா




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக