10 ஜனவரி 2021

மலேசியத் தமிழ் நூலகங்கள்

10.01.2021

பதிவு செய்தவர்: இராவணன் - கோலாகிள்ளான்

மலாயா பல்கலைக்கழகம் - தமிழ்ப் பிரிவு நூலகம்


🔹 மலாயா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமைந்து உள்ளது.

🔹 1956-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

🔹 36,000 நூல்கள் உள்ளன.

🔹 மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ் நூலகம் இதுவே என்று கூறலாம்.

🔹 நாட்டின் மிகப் பெரிய, அதிகமான தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம்.

🔹 ஆனால் இது பொது நூலகம் அல்ல. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரியது அல்ல.

🔹 மலாயா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

🔹 பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்ப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.


முத்தமிழ் படிப்பகம்

🔹 கோலாலம்பூர், செந்தூலில் அமைந்துள்ளது.

🔹 1958-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.


🔹 25,000 நூல்கள் உள்ளன.

🔹 பொது மக்களுக்கான பொது நூலகம்.

🔹 பொது நூலகம் என்ற வகையில் மலேசியாவின் ‘முதல் தமிழ் நூலகம்’.

🔹 நாட்டின் மிகப் பெரிய ‘பொது தமிழ் நூலகம்’.


திருக்குறள் மன்ற நூலகம்

🔹 கோலக்கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் செயல்படுகின்றது.

🔹 1961-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

🔹 6,000 நூல்கள் உள்ளன.


🔹 பொது மக்களுக்கான பொது நூலகம்.

🔹 மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட ‘இரண்டாவது பொது தமிழ் நூலகம்’.

🔹 நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொது தமிழ் நூலகம்.


தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நூலகம்

🔹 கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் அமைந்து உள்ளது.

🔹 2019-ஆம் ஆண்டு தோற்றம் கண்டது.

🔹 2,500 நூல்கள் உள்ளன.

🔹 பொது பயன்பாட்டிற்குரிய நூலகம்.


பினாங்கில் எதிர்வரும் 14.01.2021-ஆம் தேதி பினாங்கு இந்து சபாவின் சார்பில் புது நூலகம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.

கோலாசிலாங்கூர், ராஜா மூசா தோட்டத்தில் ‘டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூலகம்’ என்ற நூலகம் இருந்தது. இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை.

இதைத் தவிர்த்து, பல சமூக இயக்கங்களும், ஆலயங்களும் சிறிய அளவிளான நூலகங்களை வைத்து நடத்தி வருகின்றன.

பின்குறிப்பு: இது எனக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் வைத்து தொகுக்கப்பட்டது. இதுவே இறுதியான ஆவணக் குறிப்பு அல்ல. கவனத்திற்கு வராத வேறு பெரிய தமிழ் நூலகங்களும் மலேசியாவில் இருக்கலாம்.

https://www.facebook.com/groups/507255119326493

 



09 ஜனவரி 2021

நம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாகிங்

08.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

இன்று ஜனவரி 8. ஸ்டீபன் ஹாகிங் (Stephen William Hawking) எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம்.

ஜனவரி எட்டு. இதே தினத்தில் 78 ஆண்டுகளுக்கு முன் 1942-ஆம் ஆண்டில் பிறந்தவர். பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள், கடிகாரப் பாகங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார்.

அப்பா மருத்துவம் படிக்கச் சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன. மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார்.

முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது. எனினும் தன் திறனைக் கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார்.

ஏதோ தடுமாற்றம் உண்டானது. மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார், மங்கலாக உணர ஆரம்பித்தார். பேச்சு குழற ஆரம்பித்தது. செயல்பாடுகள் முடங்கின.

மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது. இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள்...

முதலில் நொறுங்கிப் போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பணிகளைத் தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது. இந்தக் காலத்தில் கரங்கள் செயலற்று போயின. சுத்தமாகப் பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .

1979-இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார். கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கப் படுகிறது.

காஸ்மாலஜி துறையைச் சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே. இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர். சோதனைகளைக் கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா? எப்படி இத்தனைத் துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான்.

எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம்? எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்! வாழ்க்கை சுகமானது!" என்றார். நீங்களும் மிச்சம் இருப்பதில் மின்னிடுங்கள்.

இந்த நம்பிக்கை நாயகனார் 14 மார்ச் 2018-ஆம் தேதி காலமானார்.



அமேசான் மழைக் காடுகளில் ஆபரேஷன் ஆவுக்கா

08.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

இன்று ஜனவரி 8. 1956-ஆம் ஆண்டு இன்றைய ஜனவரி 8-ஆம் தேதியில்தான் தென் அமெரிக்காவில், ஈக்குவேடார் நாட்டின் அமேசான் மழைக் காடுகளில் ஒரு நிகழ்ச்சி.


அங்கு வசிக்கும் ஹுவோரனி (Huaorani) என்று அழைக்கப்படும் பழங்குடியினரைச் சந்திக்கச் சென்ற, கிறித்தவ சமயம் பரப்பும் குழுவினர் ஐவர் (Jim Elliot, Nate Saint, Ed McCully, Peter Fleming, and Roger Youderian), அந்தப் பழங்குடி மக்களால் ஈட்டிகளால் குத்திக் கொல்லப் பட்டனர்.

பேச்சு வழக்கில் ஆவுக்கா (Auca) என்று இவர்கள் அழைக்கப் படுவதால்; ஆபரேஷன் ஆவுக்கா (Operation Auca) என்ற பெயரில் இந்த மக்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் 1955-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் தொடங்கின.


இவர்களிடம் இருந்து பிரிந்து வந்துவிட்ட ஒரு பெண்ணின் மூலம், குழுவினரில் ஒருவர் (Elliot) என்பவர்; ஹுவோரனி மொழியைச் சிறிதளவுக்குக் கற்றுக் கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் Dayuma.

அவர்களை நேரடியாகச் சந்திப்பது ஆபத்தானது என்பதால், சிறிய ரக விமானத்தில் தாழ்வாகப் பறந்து, சிறு சிறு பரிசுப் பொருட்களை வீசினர்.

சில வாரங்கள் இது தொடர்ந்தது. பின்னர், பரிசுப் பொருட்களைக் கட்டித் தொங்கவிடும் கயிற்றில், பூர்வீக மக்களும் சில பொருட்களைப் பரிசாகத் திருப்பி அளிக்கத் தொடங்கினர்.


பழங்குடி மக்களை நேரில் சந்திக்க முடிவெடுத்து, அப்பகுதியின் ஆற்றங் கரையில் நீண்ட மணல் பரப்பு ஒன்றில் ஜனவரி 3-இல் தரையிறங்கி, ஒலிபெருக்கி மூலம் அவர்களது மொழியில் அழைப்புகளை ஒலித்துக் கொண்டே காத்து இருந்தனர்.

ஜனவரி 6-இல் அம்மக்களில் மூவர் வந்து சந்தித்து, விமானத்திலும் பயணித்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர்தான் அவர்கள் மற்றவர்களின் அனுமதியின்றி வந்ததாகத் தெரிந்து இருக்கிறது.

அனுப்பப்பட்ட பரிசுப் பொருட்களில் புகைப்படங்கள் இருந்தன. அதுவரை புகைப்படங்களைப் பார்த்திராத அந்த மக்கள், அவற்றைத் தீயச் சக்தியின் மந்திரச் செயல் என்று முடிவுக்கு வந்து இருக்கின்றனர். அனைத்துமாகச் சேர்ந்து, அந்தக் குழுவினரைக் கொல்லச் செய்து விட்டன.

இன்றும் உலகம் முழுவதும் சுமார் 100 தொடர்பற்ற மக்கள் குழுக்கள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இவற்றில் பாதிக்கும் அதிகமான குழுக்கள், அமேசானின் மழைக் காடுகளில்தான் வசிக்கின்றார்கள். அருகாமையில் வசிக்கிற மக்கள் மூலமாகவும், வானிலிருந்து பார்த்தும்தான் இப்படியான மக்கள் இருப்பதையே அறிய முடிகிறது.

இந்த ஹுவோரனி மக்களின் மொழி, ஒரு தனிமைப் படுத்தப்பட்ட மொழி. பிற மொழிகளுக்குமான ஒரு மூல மொழியில் இருந்து உருவாகாதவை தனிமைப் படுத்தப்பட்ட மொழிகள் என்று அழைக்கப் படுகின்றன.

அதாவது, இத்தகைய மொழிகளின் குடும்பம் என்பதே, அந்த ஒரு மொழியை மட்டுமே கொண்டதாக இருக்கும்.

தீவிர ஆய்வுகளுக்குப் பின் இவற்றில் சிலவற்றுக்கு, பிற மொழிகளுடனான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, அக்குடும்பத்தில் இணைக்கப் பட்டாலும், 10க்கும் குறைவானவர்களில் இருந்து, சில இலட்சம் பேர் வரை பேசும் 86 தனிமைப் படுத்தப்பட்ட மொழிகள் இன்றும் உலகில் காணப் படுகின்றன.

 

தமிழர்களின் சித்திரை 1

08.01.2021

பதிவு செய்தவர்: ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்


சூரியன் மிகத் துல்லியமாகக் கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1. எனவேதான் தமிழர்கள் சித்திரை 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் துல்லியமாகக் கணித்தது வானியல் சாஸ்திரம். அது இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மையாகும்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1


இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுவது ஏதோ ஒரு சடங்கு பழக்கம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் இதற்குப் பின்னாடி மிகப் பெரிய அறிவியலை வைத்து உள்ளார்கள் தெரியுமா?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஓர் அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம் அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியைப் புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆம். சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாகக் கிழக்கே உதிக்கும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கித் திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும். அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.

இப்படி சரியாகக் கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்க் கொண்டே இருக்கும். மறுபடியும் கிழக்கிற்கு வருகிற நேரம் சரியாக ஒரு வருடம். சரி. இதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன், அது உதிக்கும் பயணத்தைக் கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1" தமிழ் புத்தாண்டு. (In science it is called vernal equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1". ஆடி பிறப்பு. (In science it is called summer solstice)

மறுபடியும் கிழக்கிற்கு வரும்போது "ஐப்பசி 1". (In science it is called autumn equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை 1"  பொங்கல். (In science it is called winter solstice)

இந்த வானியல் மாற்றங்களையும்; அதனைச் சார்ந்த பருவ கால மாற்றங்களையும்;  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களையும் கொண்டாடினார்கள்.



 

பட்டாம்பூச்சி தத்துவம்

08.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

’குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை’ என்று சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் சொன்னான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  

’இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா’, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தி துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.

’பரவாயில்லை வா... நாம் இந்த தோட்டத்தில் அழகை ரசிக்கலாம்’ என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று தோட்டத்தின் அழகை கண்குளிரக் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்தில் முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கையிலே வந்து அமர்ந்தது.

குரு சிரித்தபடி சொன்னார்: ’இது தான் வாழ்க்கை!’

மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்.