08.01.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்
இன்று ஜனவரி 8. 1956-ஆம் ஆண்டு இன்றைய ஜனவரி 8-ஆம் தேதியில்தான் தென் அமெரிக்காவில், ஈக்குவேடார் நாட்டின் அமேசான் மழைக் காடுகளில் ஒரு நிகழ்ச்சி.
அங்கு வசிக்கும் ஹுவோரனி (Huaorani) என்று அழைக்கப்படும் பழங்குடியினரைச் சந்திக்கச் சென்ற, கிறித்தவ சமயம் பரப்பும் குழுவினர் ஐவர் (Jim Elliot, Nate Saint, Ed McCully, Peter Fleming, and Roger Youderian), அந்தப் பழங்குடி மக்களால் ஈட்டிகளால் குத்திக் கொல்லப் பட்டனர்.
பேச்சு வழக்கில் ஆவுக்கா (Auca) என்று இவர்கள் அழைக்கப் படுவதால்; ஆபரேஷன் ஆவுக்கா (Operation Auca) என்ற பெயரில் இந்த மக்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் 1955-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் தொடங்கின.
இவர்களிடம் இருந்து பிரிந்து வந்துவிட்ட ஒரு பெண்ணின் மூலம், குழுவினரில் ஒருவர் (Elliot) என்பவர்; ஹுவோரனி மொழியைச் சிறிதளவுக்குக் கற்றுக் கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் Dayuma.
அவர்களை நேரடியாகச் சந்திப்பது ஆபத்தானது என்பதால், சிறிய ரக விமானத்தில் தாழ்வாகப் பறந்து, சிறு சிறு பரிசுப் பொருட்களை வீசினர்.
சில வாரங்கள் இது தொடர்ந்தது. பின்னர், பரிசுப் பொருட்களைக் கட்டித் தொங்கவிடும் கயிற்றில், பூர்வீக மக்களும் சில பொருட்களைப் பரிசாகத் திருப்பி அளிக்கத் தொடங்கினர்.
பழங்குடி மக்களை நேரில் சந்திக்க முடிவெடுத்து, அப்பகுதியின் ஆற்றங் கரையில் நீண்ட மணல் பரப்பு ஒன்றில் ஜனவரி 3-இல் தரையிறங்கி, ஒலிபெருக்கி மூலம் அவர்களது மொழியில் அழைப்புகளை ஒலித்துக் கொண்டே காத்து இருந்தனர்.
ஜனவரி 6-இல் அம்மக்களில் மூவர் வந்து சந்தித்து, விமானத்திலும் பயணித்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர்தான் அவர்கள் மற்றவர்களின் அனுமதியின்றி வந்ததாகத் தெரிந்து இருக்கிறது.
அனுப்பப்பட்ட பரிசுப் பொருட்களில் புகைப்படங்கள் இருந்தன. அதுவரை புகைப்படங்களைப் பார்த்திராத அந்த மக்கள், அவற்றைத் தீயச் சக்தியின் மந்திரச் செயல் என்று முடிவுக்கு வந்து இருக்கின்றனர். அனைத்துமாகச் சேர்ந்து, அந்தக் குழுவினரைக் கொல்லச் செய்து விட்டன.
இன்றும் உலகம் முழுவதும் சுமார் 100 தொடர்பற்ற மக்கள் குழுக்கள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இவற்றில் பாதிக்கும் அதிகமான குழுக்கள், அமேசானின் மழைக் காடுகளில்தான் வசிக்கின்றார்கள். அருகாமையில் வசிக்கிற மக்கள் மூலமாகவும், வானிலிருந்து பார்த்தும்தான் இப்படியான மக்கள் இருப்பதையே அறிய முடிகிறது.
இந்த ஹுவோரனி மக்களின் மொழி, ஒரு தனிமைப் படுத்தப்பட்ட மொழி. பிற மொழிகளுக்குமான ஒரு மூல மொழியில் இருந்து உருவாகாதவை தனிமைப் படுத்தப்பட்ட மொழிகள் என்று அழைக்கப் படுகின்றன.
அதாவது, இத்தகைய மொழிகளின் குடும்பம் என்பதே, அந்த ஒரு மொழியை மட்டுமே கொண்டதாக இருக்கும்.
தீவிர ஆய்வுகளுக்குப் பின் இவற்றில் சிலவற்றுக்கு, பிற மொழிகளுடனான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, அக்குடும்பத்தில் இணைக்கப் பட்டாலும், 10க்கும் குறைவானவர்களில் இருந்து, சில இலட்சம் பேர் வரை பேசும் 86 தனிமைப் படுத்தப்பட்ட மொழிகள் இன்றும் உலகில் காணப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக