16 ஜனவரி 2021

பசுமாட்டிற்கு நன்றி

15.01.2021

பண்பால் அன்பால்
பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்!
உன் பால் உலகை
உருகிடச் செய்யும்
பெண்பால் நீ என
பேசிடச் செய்யும்

பசுவுக்குப் பெண்ணும்
பெண்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே! - இந்தப்
பெண்ணுக்கு பசுவும்
பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே!

நாச்செல் அமச்சியப்பன்: ஐயா!  நன்கு கவிதை எழுதியுள்ளீர், தொடருங்கள் சிறப்பான கவிதைகள் வந்து விழும்!!

முத்துக்கிருஷ்ணன்: நான் எழுதிய கவிதை அல்ல தலைவரே... இணையத்தில் சுட்டது... 😀😀

நாச்செல் அமச்சியப்பன்: ஆ ஆ!

ஜெய ஸ்ரீ கண்ணன்:
பால் பந்தங்களைப் பிணைக்கிறது - பசுவையும் பெண்ணையும் சொந்தமும் பந்தமுமாக இணைத்தது அருமை !

தேவி கடாரம்: கோலம் போடுவது எனக்கு மிகவும் பிடித்த செயல்... முன்பு புத்தகம் பார்த்து கோலம் பழகுவோம். இப்பொழுது யூ ட்யுப் பார்த்து பழகிக்கிறோம்.


மலேசியம் புலனத்தில் மணிமணியான தகவல்கள்

15.01.2021

மலேசியம் புலனத்தில் மணிமணியான தகவல்கள் பகிரப் படுகின்றன. வாட்ஸ் அப் ஊடகங்களைப் பொறுத்த வரையில் நேற்றைய பதிவு நேற்றுடன் முடிந்தது. மறுநாள் யாரும் சீண்ட மாட்டார்கள். அதோடு அவை ’அபேஸ்’.

ஆக அந்தத் தகவல்களை வாட்ஸ் அப் புலனத்தில் அப்படியே விட்டு விட்டால்; அந்த அற்புதமான தகவல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போய் விடும்.

தவிர இந்தத் தகவல்கள் எல்லாம் எதிர்காலத்தில் நம்முடைய தமிழர்களுக்கும்; நம்முடைய வாரிசுகளுக்கும்; நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுவே நம்முடைய தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

அதற்காக ஒரு வலைத் தளத்தை உருவாக்கி அதில் பதிவு செய்து வருகிறோம். ஒரு வேலையைச் செய்தால் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் செய்யக் கூடாது. இது என் ’பாலிசி’. நேற்று மட்டும் வலைத்தள வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கி இருக்கிறேன். அதுவே ஒரு பொங்கல் விழா. அப்புரம் என்னங்க. இன்னும் ஒரு விசயம்.

புலன அன்பர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்; அல்லது விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக அல்ல. அது எல்லாம் இல்லீங்க. பெயர் புகழ் விளம்பரம் வெளிச்சம் என்பதை எல்லாம் தாண்டிப் போய் விட்டேன். அவற்றின் மீது இனிமேல் ஆசை எதுவும் இல்லீங்க.

எதிர்காலத் தலைமுறையினருக்கு ஏதாவது நல்லது செய்து விட்டுப் போவோம். அதுவே நம் இலட்சியமாகக் கொள்வோம். மேலும் ஒரு செருகல். நல்ல பயனான தகவல்களைப் பதிவு செய்யுங்கள். புலனத்தில் இருந்து வலைத் தளத்திற்கு ஒரு பதிவு போகிறது என்றால் அந்தப் பதிவிற்குத் தரம் உள்ளது என்று பொருள். சரிங்களா.

கடைசியாக... ஈயடிச்சான் காபி செய்தாலும் தேன் சிந்தும் சிறப்பான காபியாக இருக்கட்டும்.

வெங்கடேசன்: தங்களுடைய முயற்சி வெற்றி பெறட்டும்

ஆதி சேகர்: தாங்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

சந்திரன் ஜொகூர்: நல்ல அருமையான கருத்து முழுமையாக வரவேற்கிறோம். எதிர்காலத்தில் நாம் இருக்கிறோமோ இல்லையோ, ஆனால் நாம் எழுதி வைத்த பதிவுகள் கண்டிப்பாக இருக்கும்..

பெருமாள் கோலாலம்பூர்: ஒரு படைப்பாளி எதிர்கால வாரிசுகளுக்காகத் திட்டமிடும் செயல் பாராட்டைப் பெறுகிறது. வாழ்த்துகள்.ta

முத்துக்கிருஷ்ணன்: நம் எதிர்காலச் சந்ததிக்கு ஏதாவது நம்மால் இயன்றதைச் செய்வோம்... வாட்ஸ் அப் பதிவுகள் ஒரே நாளில் மறக்கப் படுபவை... அவற்றை இணையத்தில் நிரந்தரமாக்கி விட்டால்... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அப்படியே உலா வந்து கொண்டு இருக்கும்... அதைத் தான் முன்னெடுப்புச் செய்கிறோம்... கண்டிப்பாக... ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நம்முடைய சந்ததியினர் நம்மைப் பற்றி பேசுவார்கள் இல்லையா...

சந்திரன் ஜொகூர்: கண்டிப்பாக பேசுவார்கள் ஐயா.. முடிந்தால் நம்முடைய புகைப்படமும் அது இணைத்தால் சிறப்பாக இருக்கும்.. யார் எழுதினார்கள் என்று அவர்களுக்கு தெரியும்

முத்துக்கிருஷ்ணன்: வாட்ஸ் அப் புலன அன்பர்கள் அனுமதி தர வேண்டுமே... அவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் புகைப்படங்களைப் பகிர்வது சட்டப்படி குற்றம்...

குமரன் மாரிமுத்து: உங்கள் உழைப்பும் சேவையும் போற்றுதலுக்குரியது


 

மறந்து போன 108 ஆத்திசூடி

15.01.2021

பதிவு செய்தவர்: ராதா பச்சையப்பன்



1. அறம் செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண் எழுத்து இகழேல்.

8. ஏற்பது இகழ்ச்சி.

9. ஐயம் இட்டு உண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவது ஒழியேல்

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

14. கண்டு ஒன்று சொல்லேல்.

15. ங போல் வளை.

16. சனி நீராடு.

17. ஞயம் பட உரை.

18. இடம்பட வீடு எடேல்.

19. இணக்கமறிந்து இணங்கு.

20. தந்தை தாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர் செய்.

23. மண் பறித்து உண்ணேல்.

24. இயல் பலா தன செயேல்.

25. அரவ மாட்டேல்.

26. இலவம் பஞ்சில் துயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகலா தனசெயேல்.

29. இளமையிற் கல்.

30. அறனை மறவேல்.

31. அனந்த லாடேல்.

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப் படவாழ்.

35. கீழ்மை யகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்ப தொழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்.

41. கொள்ளை விரும்பேல்.

42. கோதாட் டொழி.

43. கௌவை அகற்று.

44. சான்றோ ரினத்திரு.

45. சித்திரம் பேசேல்.

46. சீர்மை மறவேல்.

47. சுளிக்கச் சொல்லேல்.

48. சூது விரும்பேல்.

49. செய்வன திருந்தச்செய்.

50. சேரிடமறிந்து சேர்.

51. சையெனத் திரியேல்.

52. சொற்சோர்வு படேல்.

53. சோம்பித் திரியேல்.

54. தக்கோ னெனத்திரி.

55. தானமது விரும்பு.

56. திருமாலுக் கடிமைசெய்.

57. தீவினை யகற்று.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

59. தூக்கி வினைசெய்.

60. தெய்வ மிகழேல்.

61. தேசத்தோ டொத்துவாழ்.

62. தையல்சொல் கேளேல்.

63. தொன்மை மறவேல்.

64. தோற்பன தொடரேல்.

65. நன்மை கடைப்பிடி.

66. நாடொப் பனசெய்.

67. நிலையிற் பிரியேல்.

68. நீர்விளை யாடேல்.

69. நுண்மை நுகரேல்.

70. நூல்பல கல்.

71. நெற்பயிர் விளை.

72. நேர்பட வொழுகு.

73. நைவினை நணுகேல்.

74. நொய்ய வுரையேல்.

75. நோய்க்கிடங் கொடேல்.

76. பழிப்பன பகரேல்.

77. பாம்பொடு பழகேல்.

78. பிழைபடச் சொல்லேல்.

79. பீடு பெறநில்.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

81. பூமி திருத்தியுண்.

82. பெரியாரைத் துணைக்கொள்.

83. பேதைமை யகற்று.

84. பையலோ டிணங்கேல்.

85. பொருடனைப் போற்றிவாழ்.

86. போர்த்தொழில் புரியேல்.

87. மனந்தடு மாறேல்.

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

89. மிகைபடச் சொல்லேல்.

90. மீதூண் விரும்பேல்.

91. முனைமுகத்து நில்லேல்.

92. மூர்க்கரோடு இணங்கேல்.

93. மெல்லின இல்லாள் தோள் சேர்.

94. மேன்மக்கள் சொல் கேள்.

95. மைவிழியார் மனை அகல்.

96. மொழிவது அறமொழி.

97. மோகத்தை முனி.

98. வல்லமை பேசேல்.

99. வாதுமுற் கூறேல்.

100. வித்தை விரும்பு.

101. வீடு பெறநில்.

102. உத்தம னா இரு.

103. ஊருடன் கூடிவாழ்.

104. வெட்டெனப் பேசேல்.

105. வேண்டி வினைசெயேல்.

106. வைகறைத் துயிலெழு.

107. ஒன்னாரைத் தேறேல்.

108. ஓரஞ் சொல்லேல்

ஜாசின் தமிழ்ப்பள்ளி மாணவி தமிழருவி விஜயகுமாரன்

14.01.2021

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் வரலாறு படைத்த பள்ளிகளில் ஜாசின் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். எண்ணற்ற கல்விமான்களை உருவாக்கிய பள்ளி எனும் பெருமைக்கு உரிய பள்ளி. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவி தமிழருவி விஜயகுமாரன்.


தமிழ் உணர்வுகளின் புகலிடம் என்று தாராளமாகச் சொல்லலாம். இவரின் தலைவாசகம்: தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. மூச்சுக்கு மூச்சு தமிழைச் சுவாசிக்கும் அழகிய மகள். இவரின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள். தமிழ் மணக்கிறது.


இவரின் மேல்படிப்புக் கூடங்கள்:

1. ஜாசின் தமிழ்ப்பள்ளி
2. SMK Iskandar Shah Jasin Melaka
3. Kolej Matrikulasi Pahang (KMPh)
4. University of Malaya (2015 to 2020) MBBS

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும்  அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

முத்துக்கிருஷ்ணன்: ஜாசின் தமிழ்ப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து உள்ளேன். என்னிடம் பயின்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்கள்; எழுத்தாளர்கள்; மருத்துவர்கள்; கல்விமான்கள்; இன்னும் பற்பல துறைகளில் பயணிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் தமிழ் உணர்வுகளை ஆழமாய் விதைத்தவர்களில் அடியேனும் ஒருவன்... இந்த அழகிய மகளுக்கு நம்முடைய அழகிய தமிழில் அழகிய வணக்கம்.


 

15 ஜனவரி 2021

பொங்குதே பொங்கல்

14.01.2021

பதிவு செய்தவர்: சுங்கை சிப்புட், ஜெயராமன்

உழவரெல்லாம் ஒன்றிணைந்து உள்ளம் பொங்குதே
உழைக்கின்ற உழைப்பாளர் உலகை பொங்குதே
உடை நெய்யும் நெசவாளர் நெஞ்சம் பொங்குதே
பாடுபடும் பாட்டாளி வயிலும் பொங்குதே


களிமண்ணில் பானை செய்வோர் இதயம் பொங்குதே
தொழிலாளர் துயரன்று இன்பம் பொங்குதே
தெருவெங்கும் தனித்தமிழும்  தனித்துப் பொங்குதே
தமிழர்காள் இல்லமெல்லாம் பொங்கல் செய்வீரே

மஞ்சளதின் மணமெல்லாம் மருந்தாய் பொங்குதே
மங்கையர்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்குதே
இஞ்சிமணம் இல்லத்தில் இணைந்து பொங்குதே
ஈடற்ற பரங்கிக்காய் சுவையும் பொங்குதே

நெஞ்சமெல்லாம் புத்தாடை பொலிவும் பொங்குதே
நெல்சோறு புதுப்பானை தன்னில் பொங்குதே
கொஞ்சுதமிழ் குவலையத்தார் வாயில் பொங்குதே
பஞ்சமின்றி தைப்பொங்கல் பொங்குவீரே!


இலக்கியா ஜெயராமன்,
சுங்கை சிப்புட்
பேராக்.