21.01.2021
பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ
இந்த வாக்கியத்திற்குள் ஒளிந்து இருக்கும் ஓர் உளவியல் உண்மையைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இவர் ரொம்ப பெரிய ஆளுங்க... இவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... என்பது போன்ற வாக்கியங்களைப் பொதுவாகவே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.
அதுபோன்ற வாக்கியங்களை நாம் ஏன் பயன்படுத்தி வருகிறோம் என்று இதுவரை சிந்தித்து உள்ளீர்களா? பலரும் இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்களே. அது ஏன்?
இது போன்ற வாக்கியங்களைத் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்றால் அது அவரது கண்ணோட்டம். அதில் எந்தவித தவறும் இல்லை.
அதே போல, ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சூழல் சார்ந்ததாக இருக்கலாம். அதுவும் தவறில்லை.
ஆனால் இதுபோன்ற வாக்கியங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது எப்படி சாதாரண ஒரு நிகழ்வாக இருக்க முடியும்? அது எப்படி அனைவராலும் ஒன்று போலவே சிந்திக்க முடியும்?
இது இயல்பாக நடந்த ஒன்று இல்லை. மாறாக இது நம் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இது திட்டமிட்டு நம்முள் திணிக்கப் பட்டதா? இல்லையா? என்று நம்மால் கண்டறிவது சாத்தியமானது இல்லை.
ஆனால் இது நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று என்பது தான் உண்மை. இது ஏன் நடந்தது? இதனால் நாம் எந்த வகையில் பாதிக்கப் படுகிறோம்? அதை எப்படி சரி செய்வது என்பதை நாம் உணர்ந்து செயல் படுத்தும் அவசியம் உள்ளது.
ஊடகங்களின் வழியாக இவர் அவ்வளவு பெரிய நபர்; இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர்; என்று சிலரை மட்டும் திரும்பத் திரும்ப நம் மனதிற்குள் இவர் பெரிய ஆள் என்கிற எண்ணம் தொடர்ந்து காட்டப்பட்டு அது நம் அனைவரது மனதிற்குள்ளும் ஆழமாக பதிவாகிறது.
உதாரணமாக, இன்று அவர் சமூக வலைத் தளத்தில் ஒரு டிவிட் செய்தார். இன்று அவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்தார். நாளை காய்கள் வாங்கக் கடைக்குச் சென்று வர திட்டமிட்டு உள்ளார்.

இப்படி யாராவது ஒருவர் பற்றி வெட்டியாக, இதை எல்லாம் பரபரப்பு செய்திகளாக மாற்றி நம் மனதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை நோக்கி தெரிந்தோ, தெரியாமலோ தயார் செய்து விடுகிறார்கள்.
இதன் விளைவாக அந்த ஒரு சிலரை மட்டுமே மிகப் பெரிய நபராக மற்றும் அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதிற்குள் வளர்ந்து விடுகிறது.
பிறகு என்ன? அந்த எண்ணம் தானாகவே நம் மனதிற்குள் ஓடும்,
இதன் விளைவாக, அவர் போன்ற நபர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றும்; அவர்கள் சாதனைகள் செய்யவே பிறந்து உள்ளார் என்றும்; நான் சாதாரண மனிதன்; நான் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்; என்கிற எண்ணங்கள் மறைமுகமாக நம் மனதை ஆக்கிரமிப்பு செய்து விடும்.

இந்த எண்ணங்கள் தான் நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் தான் நாம் சாதாரணமாக வாழும் நபர்; அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலையை நமக்குள் உருவாக்கி விடுகின்றன.
அதனால் தான் என்னால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையே பலருக்கும் எழுவதே இல்லை.
இது ஒரு சில நபர்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கோடி மக்களுக்கு அந்த நம்பிக்கையே பிறப்பதும் இல்லை. அத்தனை கோடி மக்கள் உளவியல் ரீதியாகவே தங்களைத் தாங்களே குறைவாகவே மதிப்பீடு செய்வது தான் வருந்தக் கூடிய விடயம்.

அவர் பெரிய ஆள்தான் என்பது ஒரு பிம்பம். அந்த பிம்பத்தைப் பார்த்து வியப்பு அடையாதீர்கள். அந்தப் பிம்பத்தைப் பார்த்து அசாத்தியமானவர் என எண்ணாதீர்கள்.
உங்களுக்கும் அது எல்லாம் சாத்தியம் தான். அவர் பெரிய ஆள் தான் அதை மறுக்கவில்லை. அதே வேளையில் நீங்களும் பெரிய ஆள் தான் என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு பிடித்த நல்லதொரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு உண்மையாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்காமல் அதை மட்டுமே உங்கள் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு பயணம் செய்யுங்கள்.
அப்போது உங்களால் சாதிக்க முடியும்... நிச்சயமாக அதை உங்களால் சாதிக்க முடியும்... ஏனென்றால் நீங்கள் ஒரு பெரிய ஆள்...
அன்புடன்,
த. கார்த்திக் தமிழ்,
#BRAIN_vs_MIND.