03.07.2021 - பதிவு: பி.கே.குமார்
உறவினர் ஒருவர் திட்டியதால் 12 அகவை பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டதாக வந்த நாளிதழ் செய்தி பலரின் நெஞ்சை உலுக்கிவிட்டு இருக்கிறது. வெளிச்சத்திற்கு வராத பல தற்கொலைகளும் உண்டு.

சுட்டியாக மகிழ்ச்சியாக இருந்த 15 அகவை விடலைப் பெண்பிள்ளை ஒருத்தி அவளின் தந்தையின் திடீர் மறைவினால் மனக் கலக்கம் அடைந்து யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து இருக்கிறாள்.
அவள் படிக்கும் பள்ளியில் பரிவுநிதி திரட்டப் பெற்று பள்ளியின் சார்பாக அவளிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தி ஓசிப் பணம் பெறுவதாகப் பகுடி செய்தாளாம். தந்தையின் மறைவு கையேந்தும் நிலையைத் தந்து விட்டதே என மனவருத்தம் அடைந்தாள் இச்சிறுமி.
தந்தையின் 30-ஆம் வழிபாடு முடிந்த மறுநாள், அறைக் கதவைத் தாழிடாமல் சாத்தி வைத்து விட்டு, இப்பெண் அறையினுள் இருந்து இருக்கின்றாள். வெகுநேரமாக வெளியே வராததால் இவளின் தமக்கை கதவைத் தள்ளித் திறக்க அங்கே கண்ட காட்சி எல்லோரையும் அலற வைத்து இருக்கிறது. அவள் தூக்கி மாட்டி இறந்து விட்டாள்.
இந்திய சமூகத்தின் கல்வியாளர்கள், நெறியுரைஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தீர்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியச் சமூகத்தில் மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு தரப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. மன உளைச்சல், மன இருக்கம், மனச்சோர்வு எனப் பலவகையான உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. இது பள்ளிக் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
தமிழ்ச் சமூகத்தில் மானம், சூடு, சொரணை பற்றிய கருத்துக்கள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் பேசப் படுபவை. அதனால் யாராவது உணர்ச்சியைத் தூண்டும்படி பேசினால் அது சில நேரங்களில் கொலை - தற்கொலை இரண்டிலும் கொண்டு போய் விட்டுவிடும்.
நான் ஒரு துணையமைச்சரின் சிறப்பு அதிகாரியாக இருந்த காலக் கட்டத்தில் சமூக வியூக அறவாரியம் ஓர் ஆய்வைச் சமர்ப்பித்தது. பள்ளிக் குழந்தைகள் இடையே ஏற்பட்டிருக்கும் மனநலன் சீர்கேடு குறித்தும்; அதனால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு கட்டொழுங்குச் சிக்கல்கள், கல்வியில் பாதிப்பு குறித்தும் அந்த ஆய்வு அலசியது.
மலேசியப் பள்ளிசார் உளவியல் இயக்கம் (Malaysian School Psychology Association) ஒன்று, அண்மையில் பள்ளிக் கல்வியில் மாணவரிடையே ஏற்பட்டிருக்கும் மனநலன் (mental health) சிக்கல்கள் குறித்து இயங்கலையில் கருத்தரங்கு ஒன்றையும் நிகழ்த்தியது.
இது ம.இ.கா.வின் சமூக வியூக அறவாரியம் முன்னெடுத்துள்ள நற்பணிகளில் ஒன்று. பேராசிரியர் முனைவர் டத்தோ மாரிமுத்து அவர்கள் சமூக வியூக அறவாரியத்தின் இன்றையத் தலைவர்.
தமிழ்ப்பள்ளி இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களும் நெறியுரைஞர்களும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர் இடையே ஏற்பட்டிருக்கும் பல்வேறு உளவியல் சிக்கல்களை ஆய்வு செய்து முறையாக அவர்களை நேர்ப்படுத்த வேண்டும்.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் கோறனி- 19 பெரும் தொற்றுக் காலத்தில் பல சிறார்கள் இளையோர்கள் இடையே மன உளைச்சலும் சோர்வும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வீட்டில் அடைந்து கிடப்பதும், கைப்பேசி, தொலைக்காட்சி இவ்விரண்டில் மட்டும் பெரும் பகுதி நேரம் செலவு போவதும் உடல் - மனம் இரண்டுக்குமே நல்லதல்ல.
ஆக்கர நடவடிக்கைகளைப் பள்ளியின் நெறியுரைஞர்கள் (counselor) சிந்திக்க வேண்டும். வீட்டினுள் உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யும் வழிமுறைகள் குறித்து நெறியுரைஞர்கள் தரப்பு சிந்திக்க வேண்டும்.
மலேசியத் தமிழ் அறவாரியம் செயற்படுத்தும் பெற்றோர்களுக்கான இம்பாக் IMPAK செயல் திட்டம் விரிவு படுத்தப்பட்டு பிள்ளைகளின் மனநலன் குறித்தும் அதில் ஏற்படும் மாற்றம் குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். தீர்வுத் திட்டங்களையும் செயற்படுத்த பெற்றொர்களுக்குப் பயிற்சியை வழங்கலாம்.
MITRA எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற நிறுவனம், இது போன்ற பயிற்சிகளை நாடு தழுவிய நிலையில் வழங்குவதற்கு நிதி வழங்க வேண்டும்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். தலைமையாசிரியர் என்னை வகுப்பறை சூழலை பார்வையிட அழைத்துச் சென்றார். அப்போது மாணவர்களுக்கான இடைவேளை நேரம். தற்செயலாக ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் எதிர்ப்பட்டான். தூய்மையாக உடுத்தி இருந்தான்.
அப்பையனை அழைத்து எனக்கு அறிமுகம் செய்தார் தலைமை ஆசிரியர். அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டானாம். பாட்டி வீட்டில் வளர்கின்றானாம். தாய் வேறோர் ஆணுடன் ஓடி விட்டாராம்.
தந்தையோ சிறைக்குச் செல்வதும் வெளியே வருவதுமாய் இருக்கின்றாராம். அவனுக்கு படிப்பும் சரியாக வர மாட்டுகிறது என்று மனம் நொந்தார் தலைமை ஆசிரியர். மாணவன் எந்த வகை மனநிலையில் இருக்கின்றான் என்பதை அவன் சொல்லாமலே புரிந்து கொண்டேன்.
இவ்வகை மாணவர்களைச் சரியாக வழிநடத்தி கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற செய்து விட்டால் தலைமை ஆசிரியராக நீங்கள் பொறுப்பு ஏற்றதன் பயனை அடைந்து விட்டதாகப் பெருமைப் படலாம் என வலியுறுத்தி சொல்லிவிட்டு வந்தேன்.
கிளம்புவதற்கு முன் மாணவனின் கணித சிந்தனையைச் சோதிக்க முடிவு செய்தேன். பேச விரும்பாத மாணவனை எப்படிப் பேசச் செய்வது? நான் பள்ளிக் கவுன்சலர் படிப்புக்குப் படித்தது இல்லை. ஆயினும் பணியிடைப் பயிற்சிகள் சிலவற்றில் பெறப்பட்ட தெரிவல்களின் அடிப்படையில் சில ஆய்வுகளைச் செய்தேன்.
ஒரு 20 அடி நீள நேர்கோடு ஒன்று போட்டு அதன் மேல் அப்பையனை நடக்கப் பணித்தேன். சிக்கல் இல்லாமல் ஆடாமல் நடந்தான். கைரேகைகளைச் சோதித்தேன். கோடுகள் ஒழுங்காக அமைந்திருந்தன.
அவன் சாப்பிடும் உணவுகளின் பெயர்களைச் சொல்லி அவனைத் தெரிவுச் செய்யச் சொன்னேன். ஒரு பப்பாளி மரத்தின் அருகே அழைத்துச் சென்றேன். கம்பு ஒன்றை பக்கத்தில் வைத்தேன். கல் ஒன்றையும் வைத்தேன்.
ஒரு பப்பாளி பழத்தை எனக்கு மரத்தில் இருந்து பறித்துத் தர பையனிடம் கேட்டேன். அவன் கல்லின் மேல் ஏறி நின்று கம்பினால் பழத்தை எம்பித் தள்ளினான்.
பையனுக்கு சிக்கல் களையும் திறனும் இருக்கிறது என்று கண்டேன். அவன் அகவைக்கு ஏற்ற வளர்ச்சியை அடைந்து இருக்கின்றானா என்பதையும் மூளையின் இயக்கம் சரியாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்தேன்.
பையனுக்கு எல்லாம் சரியாக இருந்தது. மனநிலையில் ஏற்பட்டுள்ள இறுக்கம் அவனைக் கலகலப்பாக இருக்க விடாமல் செய்கிறது எனக் கண்டேன்.
கணிதச் சிந்தனையையும் ஆய்வுச் செய்தேன். அவன் அதிலும் தேர்ச்சி பெற்றான். அவனுக்குத் தேவை அன்பும் அரவணைப்பு மட்டுமே என்பதை அறிந்தேன். அதையே மருந்தாகவும் விருந்தாகவும் வழங்கும் படி தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பையன் ஆறாம் ஆண்டுப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று விட்டான் எனும் செய்தியைத் தலைமை ஆசிரியர் சொன்னார். இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாலும் அவனுக்குத் தொடர் அரவணைப்பும் ஆதரவும் தேவை.
இந்தியச் சமூகம், குழந்தைகள் விடயத்தில் சாதி, மொழி, இனம், மதம் கடந்து எல்லோரும் நம் குழந்தைகளே என்பது போல் அக்கறை காட்ட வேண்டும். நல்ல மனநலன் உள்ள மனிதர்களே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.
பின்னூட்டங்கள்:
தேவி சர: இந்தச் செய்தியை ஊடகங்களில் பார்த்து மனம் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தது. சிறு பிள்ளைகள் என்ன எண்ணுகிறார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.
முழுச் செய்தியையும் தெரிந்த பின்னர் மனம் இன்னும் துயரம் கொள்கிறது. மிக அண்மையில் என் தோழியிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். இன்றைய இல்லிருப்பு கல்வியைப் பற்றி எங்கள் உரையாடல் அமைந்திருந்தது.
தோழி என்னிடம் ஒரு செய்தியைக் கூறி மிகவும் வருந்தினார். நானும் வருந்தினேன்.
அவர் சொன்ன செய்தி இதுதான். இல்லிருப்பு கற்றல் கற்பித்தலில் இயங்கலை வகுப்பு நடத்தப் பட்டிருக்கிறது.
தன் பிள்ளைகள் அவ்வாறு இயங்கலை வகுப்பில் இருக்கும் போது என் தோழியும் உடன் இருப்பாராம். அப்படி ஒரு சமயத்தில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு முடிந்த பிறகு ஒரு சில மாணவர்களின் பெயரை அழைத்து; அம்மாணவர்கள் பாடங்களை ஏன் செய்து அனுப்பவில்லை என்று எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் கேட்டாராம்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் வீடியோவை ’ஆவ்’ செய்து இருந்து இருக்கிறார்கள். அவற்றை ’ஆன்’ செய்யச் சொல்லி இருக்கிறார்.
இந்த விசயத்தை என்னிடம் சொல்லி, ஆசிரியர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றார். சம்பந்தப்பட்ட மாணவர்களை மட்டும் இருக்கச் செய்து மற்ற மாணவர்களை வெளியேறச் செய்திருக்க வேண்டும் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரைத் தொடர்புக் கொண்டு கேட்டு இருக்கலாம் என்று வருத்தம் அடைந்தார் .
இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அவமானமும் மன உளைச்சலும் ஏற்படலாம் என்றார். அவர் சொல்வது எனக்கும் நியாயம் என்று பட்டதால் இப்பதிவைப் படித்தவுடன், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி 🙏🏻
ராதா பச்சையப்பன்: இதுவும் சரிதான். ஆசிரியர் அப்படி செய்து இருக்கக் கூடாது தான்.
பி.கே. குமார்: கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம், பள்ளிகளில் சக மாணவர்களுடன் சிரித்துப் பேசி, செல்லமாகச் சண்டையிட்டு, ஆசிரியர்களுடன் நேரடியாகக் கல்வி கற்கும் வாய்ப்பினை நமது நாளையச் செல்வங்கள் இழந்து இருக்கிறார்கள்.
வீட்டிலும் வெளியிலும் விளையாட்டுகள் இல்லை. பிராய்லர் கோழி போல வளர்க்கப் படுகிறார்கள். இயங்கலை மூலம் கல்வி என்பது ஆசிரியர் / மாணவர்/ பெற்றோர் அனைவருக்கும் புதிது.
பெற்றோர்கள் தங்களின் மன உளைச்சலைப் பிள்ளைகளிடம் காட்டாமல் அனுசரணையாக அரவணைத்துப் பேசி கலகலப்பூட்டி மகிழ வேண்டும். மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.
எல்லை மீறி சென்ற பின்னர் கவலையுற்று பயனில்லை. வீட்டில் இருக்கும் பொழுது பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி, ஒன்றாக அமர்ந்து விளையாடவும்; கதைகள் பேசவும்; அவர்கள் செய்கின்ற குறும்புகளை ரசித்து பாராட்டவும் வேண்டும்.
குழந்தைகள் நலன் உளவியல் அறிஞர்கள் நல்ல வழிகாட்டலாம். இதுவும் கடந்து போகும். எழுவோம். பி. கே. குமார்
ராதா பச்சையப்பன்: