03 ஜூலை 2021

காலம் மாறியது தேவைகளும் மாறின - குமரன் மாரிமுத்து

03.07.2021

குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் ஏற்படக்கூடிய மனநல பாதிப்புகளையும் உளவியல் சிக்கல்களையும் பலர் குறிப்பாக பெற்றோர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நாங்களும் இந்தப் பருவத்தைக் கடந்துதான் வந்தோம். நாங்கள் பார்க்காததா என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம்.

காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிவிட்டன. வாழ்க்கை முறைகள் பேரளவில் மாற்றம் கண்டுவிட்டன. பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில் மனிதம் கரைந்து இயந்திரத் தன்மை ஆட்கொண்டுவிட்டது.


பொதுவாக 1990-களுக்கு முன்பு இருந்த வாழ்கை வேறு; சூழல் வேறு. 90-களுக்குப் பின் நடப்பில் பயணிக்கும் வாழ்க்கை வேறுதான். இதனை முதலில் நாம் உணர வேண்டும்.

அன்றைய பெற்றோர்கள், பொதுவாக உடல் உழைப்புத் தொழிலாளர்கள். கடின உழைப்பாளிகள். அந்தக் காலத்தைச் சற்றே நுணுகிப் பார்க்கும் போது பின்வருபவை எல்லாம் உங்கள் நினைவுகளுக்கு வரலாம்.

அ) விலைவாசி மிகக் குறைவு; வாழ்க்கைச் செலவீனங்கள் மிகக் குறைவு. பல பிள்ளைகள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சமாளிக்க முடிந்தது.

ஆ) பெரும்பாலோர் தோட்டப் புறங்களில் வேலை செய்து வந்ததால் வீட்டைச் சுற்றி இரசாயனம் அற்ற முறையில் தன் குடும்பத்திற்குத் தேவையான விவசாய விளைச்சல்களைப் பயன்படுத்தினர்.

இ) விடியற்காலையில் வேலைக்குச் சென்றாலும் மதியத்தில் வீட்டிற்குத் திரும்பி விடுவர். ஓய்வுக்கான நேரம் அதிகம்.

ஈ) வீட்டுக் கடன், வாகனக் கடன்

என்று எதுவும் இல்லை. வாழ்க்கைச் செலவீனங்கள் குறைவு. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் மிக மிகக் குறைவு.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். மாலை நேரத்தில் ஓய்வு.

சிலர் தோட்டம் போடுதல்;

சிலர் திடலில் காற்பந்து;

சில ஆண்கள் கல்லுக்கடையில் சகாக்களுடன் நேரம் போக்குதல்;

சில பெண்கள் அண்டை வீட்டுத் தோழிகளுடன் பேசிக் கழித்தல்;

பிள்ளைகளுடன் கணிசமான அளவு நேரம்  செலவிடல்;

என்று தனக்கு உண்டான உளவியல், மனநலச் சிக்கல்களை, இறுக்கத்தைக் களைவதற்கான அல்லது இறக்கி வைப்பதற்கான சூழல்கள் இயற்கையாகவே அமைந்து இருந்தன. உடல் ரீதியிலான சுகாதாரக் கோளாறுகளும் குறைவாகவே இருந்தன.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் 90-களுக்குப் பிறகு பெற்றோர்களின் மத்தியில் மாறிவிட்ட வாழ்க்கை முறையில் காண முடியுமா? ஆக, இன்றைய பெற்றோர்களுக்கு மன இறுக்கம் அல்லது பாதிப்புகளும் அதிகம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அழுத்தங்களைப் பிள்ளைகளிடம் காட்ட மாட்டார்களா என்ன? எப்படியாவது வெளிப்படத் தானே செய்யும்?

சூரியன் எழும் முன் வேலைக்குச் செல்பவர்கள் இரவில்தான் வீடு திரும்புகின்றனர். வேலை முடிந்து வந்தக் களைப்பு. உணவு சமைக்க வேண்டும்.

எத்தனைக் குடும்பங்களில் சொந்த சமயல் நடக்கின்றது? வியாபார நோக்கோடு விற்கப்படும் உணவுகள் உடலுக்கும் மனநலத்திற்கும் பாதிப்பைத் தானே ஏற்படுத்துகின்றன?

உடல் உழைப்பு குறந்துவிட்ட நிலையில் அறிவுக்கு வேலை அதிகரித்துவிட்டது. இவை எல்லாம் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு மன இறுக்கத்தை அதிகரித்துவிடும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே.

அதனால், வீட்டில் மனம்விட்டு பேசும் பழக்கம் அருகிவிட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது.

பெற்றோர்களிடம் காணப்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்க, பிள்ளைகள் மத்தியிலும் வாழ்க்கை, வளர்ப்புச் சூழல் பெரும் மாற்றம் கண்டுள்ளதை மறுக்க இயலாது.

அன்று, பள்ளி முடிந்து வீடு வந்த மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் விழிபிதுங்கும் அளவிற்கு இருந்தது இல்லை.

மாலையில் பிள்ளைகளை வீட்டிற்கு உள்ளே பார்ப்பது அரிது. ஆறு, மலை, மேடு என்று தோட்டத்தையே சுற்றித் திரிவார்கள். மாலை ஐந்து மணிக்கு மேல் அவர்களை திடல்களில் நிச்சயம் காணமுடியும்.

இதனால் பிள்ளைகளுக்கு உண்டாகும் மன உளைச்சல்கள், இறுக்கங்கள் இயற்கையாகவே எந்தப் பயிற்சியும் இன்றி களைந்து போயின.

இன்று அப்படி இல்லையே. நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்று மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். கூடுதல் வகுப்புகளும் மிக அதிகத் தாக்கத்தைத் தருகின்றன.

ஆனால் இந்த மனச் சோர்வு, இறுக்கம், கலக்கம், சிக்கல் என்று எதுவும் தீருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன என்ற உண்மையை எற்கத்தான் வேண்டும்.

விளையாட நேரமில்லை; காலையில் இருந்து தூங்கச் செல்லும் வரை புத்தகத்துடன் வாழ்க்கை. வீடுகள் அகண்டு விட்டன; வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உறவுகள் சுருங்கி விட்டன.

இன்றைய பிள்ளைகள் மின் கருவிகளில் தன்னைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிவிட்டனர். காரணம் இன்று உறவுகள் அருகில் இருப்பதில்லை; இந்தக் கருவிகளே அவர்களுக்குத் தோழன் அல்லது உறவு.

அதிக நேரம் கணித்திரைகளைப் பயன்படுத்துதலும் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும் என்பதை மறந்திடல் ஆகாது.

இப்படியாகக் காரணங்கள் பல உள்ளன. இவற்றின் தாக்கங்களை எதிர்கொண்டு வென்றவர்கள் தப்பித்து விடுகின்றனர்; மீண்டு வராத பிள்ளைகள் தற்கொலை, குண்டர் கும்பல், போதைப்பொருள் என்று அடிமையாகி விடுகின்றனர் அல்லது அமரராகி விடுகின்றனர்.

இவற்றை திட்டமிட்டக் கல்வித் திட்டங்களின் வாயிலாக மாற்றி அமைக்கலாம். பல வளர்ந்த நாடுகள் அவ்வாற் செய்யத் தொடங்கிவிட்டன. நல்ல பலனையும் காண்கின்றனர்.

ஆனால் அது இப்போது நம் நாட்டில் சாத்தியமில்லா ஒன்றாகவே கருதுகிறேன். காரணம் இனவாதம், மதவாதம் இரண்டையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும் தலைமைத்துவங்கள்தான் இது நாள் வரை நம்மை ஆண்டு வந்துள்ளன. இனியும் அது மாறும் என்பதற்கான அறிகுறிகள் எங்கும் புலப்படவில்லை.

-குமரன் மாரிமுத்து

பின்னூட்டங்கள்

தேவி சர: உண்மையான கருத்துகள்...

தனசேகரன் தேவநாதன்: பிள்ளைகளின் மனநலப் பிரச்சனைகளைப் பெற்றோர்கள் கவனிக்காத சூழ்நிலை. அதே போல் பள்ளியில் மாணவர்களின் மனநலனை அறியாத ஆசிரியர்கள். சிக்கிக் கொண்ட மாணவர்கள் பலியாகி விடுகின்றனர்.

ராதா பச்சையப்பன்: 🙏 நல்ல பயனானக் கட்டுரை. கட்டுரையில் வரும் விசயங்கள் அனைத்தும் உண்மையே! கட்டுரை படைப்பாளருக்கு நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக