03 ஜூலை 2021

அவதிப்படும் சாரா கலைவாணி பூபாலன்

சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத் துறையில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அழகிய பெண்மணி. மாடலிங் செய்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை.


2019-ஆம் ஆண்டு இறுதியில், 29 வயதில், அவருக்கு கால் முடக்குவாதம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டவர். மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை Borderline Personality Disorder.


கால் முடக்குவாதம் என்றால் Rheumatoid Arthritis Disorder. ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வலி. குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம்.

Sarah Kalaivani Pupalan, a 32-year-old who struggles with borderline personality disorder and rheumatoid arthritis. Sarah used to do administration work and part-time modelling before her health deteriorated.


கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டார். மருத்துவமனை வீடு என்று அலைந்து கொண்டு இருந்தார். கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்தார். நிராகரிக்கப் பட்டது.

வீடு என்று அழைக்க ஓர் இடம் இல்லை. அதனால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அடித்து விரட்டப் பட்டார். வாடகை கட்ட முடியாத நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

2021-இல் எடுக்கப்பட்ட படம்

இந்தக் கட்டத்தில் Ebit Lew எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி தங்கி இருக்கும் அறையின் மாத வாடகைக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார். வாழ்க மனிதநேயம்.

அண்மையில் சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் வேலைக்குப் போகலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.07.2021

(பி.கு. இவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இற்றை செய்யப்படும். 2021 ஜுன் முதல் தேதி எடுக்கப்பட்ட படங்கள்)



சிங்கப்பூர் முன்னாள் அதிபதி அகமுடையார் வழித்தோன்றல்

பதிவு: இமயவர்மன், மதுரை - 03.07.2021

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார். இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது.


சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன் அவர்கள் 1979-இல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐயாவுக்கு புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்னூட்டங்கள்

முருகன் சுங்கை சிப்புட்: ஓ... இவர் இந்தியர் இல்லையோ

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அகமுடையார் என்று கட்டி அழுவதைத் தவிர்த்து தமிழர் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது... எப்போதுதான் இந்தச் சாதியத்திற்கு முடிவு கட்டுவது.

பால் சேர்வை: ஐயா முத்து அவர்களே..அகமுடையார் என்பதின் பொருள் என்ன??

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முட்டையைப் போட்ட கோழியிடம் கேட்கலாமே...

தனசேகரன் தேவநாதன்: முடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவதுதான் நிதர்சனம். இதில் முகமுடையார் அகமுடையார் என்ற அகழ்வாராய்ச்சி அர்த்தமுடையதா சகோதரரே. சிந்தித்துச் செயல்படுவீர் 😢😥

முருகன் சுங்கை சிப்புட்: மக்கள் இந்த மாமனிதரை சிங்கப்பூர் கண்டெடுத்த முத்தாகவும்; சிங்கப்பூரராக மட்டுமே பார்த்தது. எங்கள் வீட்டுப் பிள்ளை போல் உறவாடினர். இந்த கட்டுரை வேறு மாதிரி பார்க்கிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியம் பேசுகிறது

முருகன் சுங்கை சிப்புட்: ஆமாம் அய்யா நம்மில் இன்னும் மாற்றம் இல்லை..

தேவி சர: மிகச் சரியாக சொன்னீர்கள் அப்பா... நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியை எப்படியாவது ஒழிச்சுக் கட்டலாம் என்று பார்க்கிறேன். உஹும் முடியல... ரெக்க கட்டி பறக்குது... என்னையே மலையாளத்தான் வன்னியக் கவுண்டன் என்று தமிழர் விவாத மேடை குழுவில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அப்புறம் எப்படிம்மா...

தேவி சர: உண்மை ... முப்பதாம் நூற்றாண்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் ஆனால், இன்றும் பிள்ளைகளுக்கு சாதியை பெயரோடு இணைத்து வைக்கிறார்கள் 🤦🏻‍♀️🤷🏻‍♀️

முருகன் சுங்கை சிப்புட்: உங்களையும் விட்டு வைக்கவில்லையா இவனுங்க.

ராதா பச்சையப்பன்: பல வேளைகளில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது,, சாதியின்  பெயரையும் சேர்த்தே பெயர் வைக்கும் பெற்றோர் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா?

பிள்ளை வளர்ந்து படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் சாதிப் பெயரை சொல்லி அழைக்கும் போது அந்தப் பிள்ளை படும் வேதனை; அவமானத்தை நினைத்து பார்த்து இருந்தால், பிள்ளைகள் பெயரயோடு சாதி பெயரை இணைக்க மாட்டார்கள்.  

பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளை குறை கூறுவது ஏன்? இன்றும் இது போன்ற சாதிப் பெயரை பேரப் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் தாத்தா, பாட்டிக்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் போல் உள்ளவர்கள் திருந்தினால் ஒழிய சாதி பெயரும் ???

பி.கே. குமார்: தமிழர் அல்லாதவர்கள் பலரும்கூட சாதிப் பெயரை இணைப்பதைப் பெருமையாக கொள்கிறார்கள்.



இணைய ஆய்வு: பிரதமர் பதவிக்கு அன்வார் முதலிடம்

03.07.2021
 

சந்திரன் ஜொகூர் பாரு: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு எதுவும் கிடையாது.

ஜெயகோபாலன்: அன்வார் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவியில் இருந்த காலக் கட்டத்தில் மனுஷன் செய்த அட்டூழியங்களை மறந்திடலாகாது 🤷‍♂

முருகன் சுங்கை சிப்புட்: என்ன அட்டூழியம்... பட்டியல் இட முடியுமா

ராதா பச்சையப்பன்: 🙏உண்மை

கணேசன் சண்முகம்: உண்மை உள்ளது. குறிப்பாக அவர் செய்த அனைத்துக்கும் சாவி கொடுத்தவர் மகா தீரர்

தனசேகரன் தேவநாதன்: இடி அமின் உலகம் அறிந்த கொடுங்கோலன். இவனைப் பற்றிச் சொல்ல அகராதியில் வார்த்தை இல்லை...

[11:54 am, 03/07/2021] Ganeson Shanmugam Sitiawan: எனக்கு தெரிந்து காப்புறுதித் துறையில் இந்திய சீனர்களின் ஆதிக்கத்தை ஓழித்தல், பூமிபுத்ரா எனும் கூற்றில் இந்தியர்களை சீனர்களோடு சேர்க்காமல் தனி சலுகைகள் வழங்க கேட்கப்பட்டது - முடியாது என்று பதில் வந்தது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு கோரப்பட்டது - அங்கேயும் முடியாது என்று கை விரித்தனர். கடைசியாக பினாங்கு கம்போங் ராவா கோவில் பிரச்சனையில், ’வாயை மூடுங்கள் இல்லையேல் மலேசியாவில் கோவில்களில் மணியடிப்பது நிறுத்தப்ப்டும்’ என கூவியது மறக்க முடியுமா.

1987, 1988-இல் நான் படிவம் 4, படிவம் 5 படிக்கும் காலக் கட்டத்தில் நான் அதிகம் நேசித்த தலைவர் அன்வார். இருமுறை, அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

[11:55 am, 03/07/2021] Ganeson Shanmugam Sitiawan: பூமிபுத்ரா அல்லாதவரின் கூற்றில் ...

ஜெயகோபாலன்: மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள் Mr Ganesan. ஐயா முருகன் சுங்கை சிப்புட் அவர்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கிறேன்?! 🙏


 

காலம் மாறியது தேவைகளும் மாறின - குமரன் மாரிமுத்து

03.07.2021

குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் ஏற்படக்கூடிய மனநல பாதிப்புகளையும் உளவியல் சிக்கல்களையும் பலர் குறிப்பாக பெற்றோர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நாங்களும் இந்தப் பருவத்தைக் கடந்துதான் வந்தோம். நாங்கள் பார்க்காததா என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம்.

காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிவிட்டன. வாழ்க்கை முறைகள் பேரளவில் மாற்றம் கண்டுவிட்டன. பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில் மனிதம் கரைந்து இயந்திரத் தன்மை ஆட்கொண்டுவிட்டது.


பொதுவாக 1990-களுக்கு முன்பு இருந்த வாழ்கை வேறு; சூழல் வேறு. 90-களுக்குப் பின் நடப்பில் பயணிக்கும் வாழ்க்கை வேறுதான். இதனை முதலில் நாம் உணர வேண்டும்.

அன்றைய பெற்றோர்கள், பொதுவாக உடல் உழைப்புத் தொழிலாளர்கள். கடின உழைப்பாளிகள். அந்தக் காலத்தைச் சற்றே நுணுகிப் பார்க்கும் போது பின்வருபவை எல்லாம் உங்கள் நினைவுகளுக்கு வரலாம்.

அ) விலைவாசி மிகக் குறைவு; வாழ்க்கைச் செலவீனங்கள் மிகக் குறைவு. பல பிள்ளைகள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சமாளிக்க முடிந்தது.

ஆ) பெரும்பாலோர் தோட்டப் புறங்களில் வேலை செய்து வந்ததால் வீட்டைச் சுற்றி இரசாயனம் அற்ற முறையில் தன் குடும்பத்திற்குத் தேவையான விவசாய விளைச்சல்களைப் பயன்படுத்தினர்.

இ) விடியற்காலையில் வேலைக்குச் சென்றாலும் மதியத்தில் வீட்டிற்குத் திரும்பி விடுவர். ஓய்வுக்கான நேரம் அதிகம்.

ஈ) வீட்டுக் கடன், வாகனக் கடன்

என்று எதுவும் இல்லை. வாழ்க்கைச் செலவீனங்கள் குறைவு. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் மிக மிகக் குறைவு.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். மாலை நேரத்தில் ஓய்வு.

சிலர் தோட்டம் போடுதல்;

சிலர் திடலில் காற்பந்து;

சில ஆண்கள் கல்லுக்கடையில் சகாக்களுடன் நேரம் போக்குதல்;

சில பெண்கள் அண்டை வீட்டுத் தோழிகளுடன் பேசிக் கழித்தல்;

பிள்ளைகளுடன் கணிசமான அளவு நேரம்  செலவிடல்;

என்று தனக்கு உண்டான உளவியல், மனநலச் சிக்கல்களை, இறுக்கத்தைக் களைவதற்கான அல்லது இறக்கி வைப்பதற்கான சூழல்கள் இயற்கையாகவே அமைந்து இருந்தன. உடல் ரீதியிலான சுகாதாரக் கோளாறுகளும் குறைவாகவே இருந்தன.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் 90-களுக்குப் பிறகு பெற்றோர்களின் மத்தியில் மாறிவிட்ட வாழ்க்கை முறையில் காண முடியுமா? ஆக, இன்றைய பெற்றோர்களுக்கு மன இறுக்கம் அல்லது பாதிப்புகளும் அதிகம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அழுத்தங்களைப் பிள்ளைகளிடம் காட்ட மாட்டார்களா என்ன? எப்படியாவது வெளிப்படத் தானே செய்யும்?

சூரியன் எழும் முன் வேலைக்குச் செல்பவர்கள் இரவில்தான் வீடு திரும்புகின்றனர். வேலை முடிந்து வந்தக் களைப்பு. உணவு சமைக்க வேண்டும்.

எத்தனைக் குடும்பங்களில் சொந்த சமயல் நடக்கின்றது? வியாபார நோக்கோடு விற்கப்படும் உணவுகள் உடலுக்கும் மனநலத்திற்கும் பாதிப்பைத் தானே ஏற்படுத்துகின்றன?

உடல் உழைப்பு குறந்துவிட்ட நிலையில் அறிவுக்கு வேலை அதிகரித்துவிட்டது. இவை எல்லாம் இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு மன இறுக்கத்தை அதிகரித்துவிடும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே.

அதனால், வீட்டில் மனம்விட்டு பேசும் பழக்கம் அருகிவிட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது.

பெற்றோர்களிடம் காணப்படும் மாற்றங்கள் இவ்வாறு இருக்க, பிள்ளைகள் மத்தியிலும் வாழ்க்கை, வளர்ப்புச் சூழல் பெரும் மாற்றம் கண்டுள்ளதை மறுக்க இயலாது.

அன்று, பள்ளி முடிந்து வீடு வந்த மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் விழிபிதுங்கும் அளவிற்கு இருந்தது இல்லை.

மாலையில் பிள்ளைகளை வீட்டிற்கு உள்ளே பார்ப்பது அரிது. ஆறு, மலை, மேடு என்று தோட்டத்தையே சுற்றித் திரிவார்கள். மாலை ஐந்து மணிக்கு மேல் அவர்களை திடல்களில் நிச்சயம் காணமுடியும்.

இதனால் பிள்ளைகளுக்கு உண்டாகும் மன உளைச்சல்கள், இறுக்கங்கள் இயற்கையாகவே எந்தப் பயிற்சியும் இன்றி களைந்து போயின.

இன்று அப்படி இல்லையே. நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்று மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். கூடுதல் வகுப்புகளும் மிக அதிகத் தாக்கத்தைத் தருகின்றன.

ஆனால் இந்த மனச் சோர்வு, இறுக்கம், கலக்கம், சிக்கல் என்று எதுவும் தீருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன என்ற உண்மையை எற்கத்தான் வேண்டும்.

விளையாட நேரமில்லை; காலையில் இருந்து தூங்கச் செல்லும் வரை புத்தகத்துடன் வாழ்க்கை. வீடுகள் அகண்டு விட்டன; வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உறவுகள் சுருங்கி விட்டன.

இன்றைய பிள்ளைகள் மின் கருவிகளில் தன்னைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிவிட்டனர். காரணம் இன்று உறவுகள் அருகில் இருப்பதில்லை; இந்தக் கருவிகளே அவர்களுக்குத் தோழன் அல்லது உறவு.

அதிக நேரம் கணித்திரைகளைப் பயன்படுத்துதலும் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும் என்பதை மறந்திடல் ஆகாது.

இப்படியாகக் காரணங்கள் பல உள்ளன. இவற்றின் தாக்கங்களை எதிர்கொண்டு வென்றவர்கள் தப்பித்து விடுகின்றனர்; மீண்டு வராத பிள்ளைகள் தற்கொலை, குண்டர் கும்பல், போதைப்பொருள் என்று அடிமையாகி விடுகின்றனர் அல்லது அமரராகி விடுகின்றனர்.

இவற்றை திட்டமிட்டக் கல்வித் திட்டங்களின் வாயிலாக மாற்றி அமைக்கலாம். பல வளர்ந்த நாடுகள் அவ்வாற் செய்யத் தொடங்கிவிட்டன. நல்ல பலனையும் காண்கின்றனர்.

ஆனால் அது இப்போது நம் நாட்டில் சாத்தியமில்லா ஒன்றாகவே கருதுகிறேன். காரணம் இனவாதம், மதவாதம் இரண்டையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும் தலைமைத்துவங்கள்தான் இது நாள் வரை நம்மை ஆண்டு வந்துள்ளன. இனியும் அது மாறும் என்பதற்கான அறிகுறிகள் எங்கும் புலப்படவில்லை.

-குமரன் மாரிமுத்து

பின்னூட்டங்கள்

தேவி சர: உண்மையான கருத்துகள்...

தனசேகரன் தேவநாதன்: பிள்ளைகளின் மனநலப் பிரச்சனைகளைப் பெற்றோர்கள் கவனிக்காத சூழ்நிலை. அதே போல் பள்ளியில் மாணவர்களின் மனநலனை அறியாத ஆசிரியர்கள். சிக்கிக் கொண்ட மாணவர்கள் பலியாகி விடுகின்றனர்.

ராதா பச்சையப்பன்: 🙏 நல்ல பயனானக் கட்டுரை. கட்டுரையில் வரும் விசயங்கள் அனைத்தும் உண்மையே! கட்டுரை படைப்பாளருக்கு நன்றி.



குழந்தைகள் தற்கொலையும் மனநலனும்: முனைவர் குமரன்வேலு

03.07.2021 - பதிவு: பி.கே.குமார்

உறவினர் ஒருவர் திட்டியதால் 12 அகவை பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டதாக வந்த  நாளிதழ் செய்தி பலரின் நெஞ்சை உலுக்கிவிட்டு இருக்கிறது. வெளிச்சத்திற்கு வராத பல தற்கொலைகளும்  உண்டு. 


சுட்டியாக மகிழ்ச்சியாக இருந்த 15 அகவை விடலைப் பெண்பிள்ளை ஒருத்தி அவளின் தந்தையின் திடீர் மறைவினால் மனக் கலக்கம் அடைந்து யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து இருக்கிறாள்.

அவள் படிக்கும் பள்ளியில்  பரிவுநிதி திரட்டப் பெற்று பள்ளியின் சார்பாக அவளிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தி ஓசிப் பணம் பெறுவதாகப் பகுடி செய்தாளாம். தந்தையின் மறைவு கையேந்தும் நிலையைத் தந்து விட்டதே என மனவருத்தம் அடைந்தாள் இச்சிறுமி.

தந்தையின் 30-ஆம் வழிபாடு முடிந்த மறுநாள், அறைக் கதவைத் தாழிடாமல் சாத்தி வைத்து விட்டு, இப்பெண் அறையினுள் இருந்து இருக்கின்றாள். வெகுநேரமாக வெளியே வராததால் இவளின் தமக்கை கதவைத் தள்ளித் திறக்க அங்கே கண்ட காட்சி எல்லோரையும் அலற வைத்து இருக்கிறது. அவள் தூக்கி மாட்டி இறந்து விட்டாள்.

இந்திய சமூகத்தின் கல்வியாளர்கள், நெறியுரைஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தீர்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.  

இந்தியச் சமூகத்தில் மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு தரப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. மன உளைச்சல், மன இருக்கம், மனச்சோர்வு எனப் பலவகையான உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. இது பள்ளிக் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.

தமிழ்ச் சமூகத்தில் மானம், சூடு, சொரணை பற்றிய கருத்துக்கள் எல்லாம்  நடைமுறை வாழ்க்கையில் பேசப் படுபவை. அதனால் யாராவது உணர்ச்சியைத் தூண்டும்படி பேசினால் அது சில நேரங்களில் கொலை - தற்கொலை இரண்டிலும் கொண்டு போய் விட்டுவிடும்.

நான் ஒரு துணையமைச்சரின் சிறப்பு அதிகாரியாக இருந்த காலக் கட்டத்தில் சமூக வியூக அறவாரியம் ஓர் ஆய்வைச் சமர்ப்பித்தது. பள்ளிக் குழந்தைகள் இடையே ஏற்பட்டிருக்கும் மனநலன் சீர்கேடு குறித்தும்; அதனால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு கட்டொழுங்குச் சிக்கல்கள், கல்வியில் பாதிப்பு குறித்தும் அந்த ஆய்வு அலசியது.

மலேசியப் பள்ளிசார் உளவியல் இயக்கம் (Malaysian School Psychology Association) ஒன்று,  அண்மையில் பள்ளிக் கல்வியில் மாணவரிடையே ஏற்பட்டிருக்கும் மனநலன் (mental health) சிக்கல்கள் குறித்து இயங்கலையில் கருத்தரங்கு ஒன்றையும் நிகழ்த்தியது.

இது ம.இ.கா.வின் சமூக வியூக அறவாரியம் முன்னெடுத்துள்ள நற்பணிகளில் ஒன்று. பேராசிரியர் முனைவர் டத்தோ மாரிமுத்து அவர்கள் சமூக வியூக அறவாரியத்தின் இன்றையத் தலைவர்.

தமிழ்ப்பள்ளி  இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களும் நெறியுரைஞர்களும் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர் இடையே ஏற்பட்டிருக்கும் பல்வேறு உளவியல் சிக்கல்களை ஆய்வு செய்து முறையாக அவர்களை நேர்ப்படுத்த வேண்டும்.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் கோறனி- 19 பெரும் தொற்றுக் காலத்தில் பல சிறார்கள் இளையோர்கள் இடையே மன உளைச்சலும் சோர்வும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வீட்டில்  அடைந்து கிடப்பதும், கைப்பேசி, தொலைக்காட்சி இவ்விரண்டில் மட்டும் பெரும் பகுதி நேரம் செலவு போவதும் உடல் - மனம் இரண்டுக்குமே நல்லதல்ல.

ஆக்கர நடவடிக்கைகளைப் பள்ளியின் நெறியுரைஞர்கள் (counselor) சிந்திக்க வேண்டும். வீட்டினுள் உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்யும் வழிமுறைகள் குறித்து  நெறியுரைஞர்கள் தரப்பு சிந்திக்க வேண்டும்.

மலேசியத் தமிழ் அறவாரியம் செயற்படுத்தும் பெற்றோர்களுக்கான இம்பாக்  IMPAK செயல் திட்டம் விரிவு படுத்தப்பட்டு பிள்ளைகளின் மனநலன் குறித்தும் அதில் ஏற்படும் மாற்றம் குறித்தும்  கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். தீர்வுத் திட்டங்களையும் செயற்படுத்த பெற்றொர்களுக்குப் பயிற்சியை வழங்கலாம்.  

MITRA எனப்படும் மலேசிய  இந்திய சமூக உருமாற்ற நிறுவனம், இது போன்ற பயிற்சிகளை நாடு தழுவிய நிலையில் வழங்குவதற்கு நிதி வழங்க வேண்டும்

சில ஆண்டுகளுக்கு  முன்பு ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். தலைமையாசிரியர் என்னை வகுப்பறை சூழலை பார்வையிட அழைத்துச் சென்றார். அப்போது மாணவர்களுக்கான இடைவேளை நேரம்.  தற்செயலாக ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் எதிர்ப்பட்டான். தூய்மையாக உடுத்தி இருந்தான்.

அப்பையனை அழைத்து எனக்கு அறிமுகம் செய்தார் தலைமை ஆசிரியர். அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டானாம். பாட்டி வீட்டில் வளர்கின்றானாம். தாய் வேறோர் ஆணுடன் ஓடி விட்டாராம்.

தந்தையோ சிறைக்குச் செல்வதும் வெளியே வருவதுமாய் இருக்கின்றாராம். அவனுக்கு படிப்பும் சரியாக வர மாட்டுகிறது என்று மனம் நொந்தார் தலைமை ஆசிரியர். மாணவன் எந்த வகை மனநிலையில் இருக்கின்றான் என்பதை அவன் சொல்லாமலே புரிந்து கொண்டேன்.

இவ்வகை மாணவர்களைச் சரியாக வழிநடத்தி கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற செய்து விட்டால் தலைமை ஆசிரியராக நீங்கள் பொறுப்பு ஏற்றதன் பயனை அடைந்து விட்டதாகப் பெருமைப் படலாம் என வலியுறுத்தி சொல்லிவிட்டு வந்தேன்.

கிளம்புவதற்கு முன் மாணவனின் கணித சிந்தனையைச் சோதிக்க முடிவு செய்தேன். பேச விரும்பாத மாணவனை எப்படிப் பேசச் செய்வது? நான் பள்ளிக் கவுன்சலர் படிப்புக்குப் படித்தது இல்லை. ஆயினும் பணியிடைப் பயிற்சிகள் சிலவற்றில் பெறப்பட்ட தெரிவல்களின் அடிப்படையில் சில ஆய்வுகளைச் செய்தேன்.

ஒரு 20 அடி நீள நேர்கோடு ஒன்று போட்டு அதன் மேல் அப்பையனை நடக்கப் பணித்தேன். சிக்கல் இல்லாமல் ஆடாமல் நடந்தான். கைரேகைகளைச் சோதித்தேன். கோடுகள் ஒழுங்காக அமைந்திருந்தன.

அவன் சாப்பிடும் உணவுகளின் பெயர்களைச் சொல்லி அவனைத் தெரிவுச் செய்யச் சொன்னேன். ஒரு பப்பாளி மரத்தின் அருகே அழைத்துச் சென்றேன். கம்பு ஒன்றை பக்கத்தில் வைத்தேன். கல் ஒன்றையும் வைத்தேன்.

ஒரு பப்பாளி பழத்தை எனக்கு மரத்தில் இருந்து பறித்துத் தர பையனிடம் கேட்டேன். அவன் கல்லின் மேல் ஏறி நின்று கம்பினால் பழத்தை எம்பித் தள்ளினான்.

பையனுக்கு சிக்கல் களையும் திறனும் இருக்கிறது என்று கண்டேன். அவன் அகவைக்கு ஏற்ற வளர்ச்சியை அடைந்து இருக்கின்றானா என்பதையும் மூளையின் இயக்கம் சரியாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்தேன்.

பையனுக்கு எல்லாம் சரியாக இருந்தது. மனநிலையில் ஏற்பட்டுள்ள இறுக்கம் அவனைக் கலகலப்பாக இருக்க விடாமல் செய்கிறது எனக் கண்டேன்.

கணிதச் சிந்தனையையும் ஆய்வுச் செய்தேன். அவன் அதிலும் தேர்ச்சி பெற்றான். அவனுக்குத் தேவை அன்பும் அரவணைப்பு மட்டுமே என்பதை அறிந்தேன். அதையே மருந்தாகவும் விருந்தாகவும் வழங்கும் படி தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பையன் ஆறாம் ஆண்டுப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று விட்டான் எனும் செய்தியைத் தலைமை ஆசிரியர் சொன்னார். இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாலும் அவனுக்குத் தொடர் அரவணைப்பும் ஆதரவும் தேவை.

இந்தியச் சமூகம், குழந்தைகள் விடயத்தில் சாதி, மொழி, இனம், மதம் கடந்து எல்லோரும் நம் குழந்தைகளே என்பது போல் அக்கறை காட்ட வேண்டும். நல்ல மனநலன் உள்ள மனிதர்களே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

பின்னூட்டங்கள்:

தேவி சர: இந்தச் செய்தியை ஊடகங்களில் பார்த்து மனம் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தது. சிறு பிள்ளைகள் என்ன எண்ணுகிறார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.

முழுச் செய்தியையும் தெரிந்த பின்னர் மனம் இன்னும் துயரம் கொள்கிறது. மிக அண்மையில் என் தோழியிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தேன். இன்றைய இல்லிருப்பு கல்வியைப் பற்றி எங்கள் உரையாடல் அமைந்திருந்தது.

தோழி என்னிடம் ஒரு செய்தியைக் கூறி மிகவும் வருந்தினார். நானும் வருந்தினேன்.
அவர் சொன்ன செய்தி இதுதான். இல்லிருப்பு கற்றல் கற்பித்தலில் இயங்கலை வகுப்பு நடத்தப் பட்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் அவ்வாறு இயங்கலை வகுப்பில் இருக்கும் போது என் தோழியும் உடன் இருப்பாராம். அப்படி ஒரு சமயத்தில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு முடிந்த பிறகு ஒரு சில மாணவர்களின் பெயரை அழைத்து; அம்மாணவர்கள் பாடங்களை ஏன் செய்து அனுப்பவில்லை என்று எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் கேட்டாராம்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்கள் வீடியோவை ’ஆவ்’ செய்து இருந்து இருக்கிறார்கள். அவற்றை ’ஆன்’ செய்யச் சொல்லி இருக்கிறார்.

இந்த விசயத்தை என்னிடம் சொல்லி, ஆசிரியர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றார். சம்பந்தப்பட்ட மாணவர்களை மட்டும் இருக்கச் செய்து மற்ற மாணவர்களை வெளியேறச் செய்திருக்க வேண்டும் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரைத் தொடர்புக் கொண்டு கேட்டு இருக்கலாம் என்று வருத்தம் அடைந்தார் .

இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அவமானமும் மன உளைச்சலும் ஏற்படலாம் என்றார். அவர் சொல்வது எனக்கும் நியாயம் என்று பட்டதால் இப்பதிவைப் படித்தவுடன், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி 🙏🏻

ராதா பச்சையப்பன்: இதுவும் சரிதான். ஆசிரியர் அப்படி செய்து இருக்கக் கூடாது தான்.

பி.கே. குமார்: கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம், பள்ளிகளில் சக மாணவர்களுடன் சிரித்துப் பேசி, செல்லமாகச் சண்டையிட்டு, ஆசிரியர்களுடன் நேரடியாகக் கல்வி கற்கும் வாய்ப்பினை நமது நாளையச் செல்வங்கள் இழந்து இருக்கிறார்கள்.

வீட்டிலும் வெளியிலும் விளையாட்டுகள் இல்லை. பிராய்லர் கோழி போல வளர்க்கப் படுகிறார்கள். இயங்கலை மூலம் கல்வி என்பது ஆசிரியர் / மாணவர்/ பெற்றோர் அனைவருக்கும் புதிது.

பெற்றோர்கள் தங்களின் மன உளைச்சலைப் பிள்ளைகளிடம் காட்டாமல் அனுசரணையாக அரவணைத்துப் பேசி கலகலப்பூட்டி மகிழ வேண்டும். மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

எல்லை மீறி சென்ற பின்னர் கவலையுற்று பயனில்லை. வீட்டில் இருக்கும் பொழுது பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி, ஒன்றாக அமர்ந்து விளையாடவும்; கதைகள் பேசவும்; அவர்கள் செய்கின்ற குறும்புகளை ரசித்து பாராட்டவும் வேண்டும்.

குழந்தைகள் நலன் உளவியல் அறிஞர்கள் நல்ல வழிகாட்டலாம். இதுவும் கடந்து போகும். எழுவோம். பி. கே. குமார்


ராதா பச்சையப்பன்: