10 ஜூலை 2021

ஆசிரியர் பணி என்பது தொழிலா தொண்டா? - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே.குமார் - 09.07.2021

அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று பல தனியார் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி... தொடர்ந்து ஆசிரியராகத் தனியார் பள்ளியிலும், விரிவுரையாளராகத் தனியார் கல்லூரிகளிலும் பணி செய்த அனுபவங்கள் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஓரளவுக்கு உதவினாலும் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளின் சூழலும் மாணவர்களின் தேவையும் சற்று மாறுபட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.


இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் சூழலில் ஓர் ஐந்து ஆண்டுகள் என்னுடைய பணி அனுபவங்கள் மையம் கொண்டிருந்தன. ஆசிரியம் ஓர் அறப்பணி என்பதெல்லாம் காசுக்காக கற்பிக்கப்படும் தத்துவங்கள் என என் மனம் சொல்லியது.

புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில், பணக்கார மாணவர்கள் பயிலும் இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் ஏமாந்துவிடக் கூடாது.

நான் பணி செய்த அந்தக் கல்லூரியில் பல துறைகள். பொறியியல் துறையில் நான் பொறியியல் கணிதம் கற்பித்து வந்தேன். மின்னியல் படித்துக் கொடுக்கும் ஒரு மூத்த விரிவுரையாளர், நான் என இருவர் மட்டுமே அங்கு இந்தியர்கள். நாங்கள் இருவருமே ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம்.

நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வேறு இனத்தவர் ஒருவர் நிரந்தரப் பணியாளராக வேலைக்குச் சேருகின்றார்.

நிறுவனம் நிறைய இலாபம் சம்பாத்தித்து உள்ளதால் அந்த ஆண்டு எல்லோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. எனக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 1.2 மடங்கு ஊக்கத் தொகையும்; இன்னொரு இந்தியருக்கு 1.5 மடங்கும், புதிதாக வந்த நண்பருக்கு 2.0 மடங்கும் வழங்கப் பட்டது. இவ்வகைப் இனப் பாகுபாடு என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டு வகையான வஞ்சிப்புகள். ஒன்று வேலை நிரந்தரம் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியைக் காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும். இரண்டாவது, ஊக்கத் தொகை வழங்குவதில் காட்டப்படும் பாகுபாடுகள்.

அரசாங்கப் பணியில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தம் பெறுவார்கள். மேற்படிப்புக்கு உபகார சன்பளம், பணி ஓய்வுத் தொகை, இலவச மருத்துவ வசதி, விடுமுறை என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  வேலை பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால் அரசாங்க வேலையே சிறந்தது என்று மனம் எண்ணலாயிற்று.

ஐந்து ஆண்டுகள் தனியார் துறையில் இருந்தாயிற்று. அது போதும். இனி அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முடிவு செய்தேன். அந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற்று விட்டது. துன் மகாதீர்தான் அப்போது பிரதமராக இருந்தார்.

அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் அந்த வாய்ப்பு நெருங்கி வந்தது. 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' எனும் முழக்கம் உண்மையில் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.






கரு. ராஜா பிறந்தநாள் வாழ்த்துகள் 2021

09.07.2021

(மலேசியம் புலனத்தின் 20 அன்பர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். நன்றி.)

ராதா பச்சையப்பன்: இன்று புலன நிர்வாகி சகோதரர் திரு. கருப்பையா அவர்களுக்கு பிறந்த நாள்... உங்களை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன் சகோதரரே! நீங்கள் இது போன்று பல ஆயிரம் பிறந்த நாளைக் காண வேண்டும். இறைவன் அருள்புரிவாராக. உங்கள் சகோதரி இராதா🙏


வெங்கடேசன்: இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .வாழ்க வளமுடன்

தனசேகரன் தேவநாதன்: அண்ணன் கரு. இராஜா அவர்கட்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... என்றென்றும் நலமுடன்...

தேவி கடாரம்: இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ஐயா...

கணேசன் சண்முகம் சித்தியவான்:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.

ஜீவன் தங்காக்: @Raja Sg Buluh ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

உதயகுமார் கங்கார்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.

டத்தோ தெய்வீகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு.இராஜா அவர்களே.

பி.கே. குமார்: ஐயா கருப்பையா அவர்களுக்கு அகவைதின நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.வாழ்க நலத்துடன்.

வேலாயுதம் பினாங்கு: திரு. கருப்பையா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். வாழ்க நலமுடனும் & வளமுடனும்.

செபஸ்டியன் கோப்பேங்: ஐயா அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துகள். வாழ்க வளமடனும் நலமுடனும். 🙏

குமரன் மாரிமுத்து: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு ஐயா. நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ ஈசனை வேண்டுகிறேன். வாழ்க வளத்துடன்.

முருகன் சுங்கை சிப்புட்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா.. வாழ்க வளமுடன்

கவிதா தனா: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

கென்னடி ஆறுமுகம்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கரு. ராஜா அவர்களுக்கு இன்று இனியநாள்... அவர் நலமாகப் பயணிக்க மலேசியம் புலனத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க பல்லாண்டு... பல்லாண்டுகள்... 💐💐

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள் ஐயா

மகாலிங்கம் படவேட்டான்: மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்... அன்புடன்

சிவகுரு மலாக்கா: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

செல்லையா செல்லம்: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

பாலன் முனியாண்டி: அன்பு நிலைபெற, ஆசை நிறைவேற, ஈடில்லா இந்நாளில், உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரனாய் எண்ணத்தில் இனிமையாய், ஏற்றத்தில் பெருமையாய், ஐயம் நீங்கி, ஒற்றுமை காத்து ஒரு நூற்றாண்டு, ஒளவை வழிகண்டு வாழிய நீர் பல்லாண்டு..

இன்று தனது பிறந்த நாளைக் காணும் தமிழ் திரு. கருப்பையா அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்... அன்புடன் மலேசியம் புலன குடும்பத்தினர்...
 
பொன் வடிவேல்: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா, நல்ல ஆரோக்கியத்துடன் சிறந்த அறிவாற்றலுடன் நல்ல ஆயுளுடன் நம்முடன் பயணிக்க இறைவன் ஆசீர்வதிப்பார்.- பொன்.வடிவேல், ஜோகூர்பாரு 

டாக்டர் ஜெயஸ்ரீ: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! 

கரு. ராஜா: வணக்கம் புலன நண்பர்களே, இன்று 75 வயது. காலையிலேயே நண்பர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முதல் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். தொடர்ந்து மலேசிய  புலன நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். உங்கள் அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.





 

09 ஜூலை 2021

பிரான்சு நாட்டில் ஒபிலிஸ்க் தூண்கள் - டாக்டர் சுபாஷினி

பண்டைய எகிப்தின் புகழ் மிக்க மன்னன் இரண்டாம் ராம்செஸ் (Ramesses II). அவன் கட்டிய பல கோயில்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு கோயிலாக அமைவது லுக்ஸோர் கோயில் (Luxor).

இக்கோயிலின் முன்புறத்தில் இரண்டு ஒபிலிஸ்க் (Obelisk) நிற்கும் வகையில் அவன் கட்டினான். அந்த இரண்டு ஒபிலிஸ்களில் ஒன்று இன்றைக்குப் பாரிஸ் நகர மையத்தை அலங்கரித்து நிற்கிறது.


22 மீட்டர் உயரம் கொண்டது இந்த ஒபிலிஸ்க். 1936-ஆம் ஆண்டு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாகப் பிரான்சில் பிரகடனப் படுத்தப்பட்டது. கொன்கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு பக்கத்தில் இது அமைந்திருக்கிறது.

மன்னன் இரண்டாம் ராம்செசைப் புகழும் வகையில் ஹீரோக்ளிப்ஸ் (Hieroglyphs) எழுத்துக்களால் இந்த ஒபிலிஸ்க் கற்பாறை சின்னத்தில் நான்கு பகுதிகளிலும் குறியீடுகள் கீறப்பட்டு உள்ளன.

பாறைக் கீறல்கள் என்பது நமக்கு புதிய ஒன்றல்ல அல்லவா? நம் சேர சோழ பல்லவ பாண்டிய மன்னர்கள் கோயில் கல்வெட்டுகளில் பண்டைய தொல் தமிழ் எழுத்துக்களால் பல செய்திகளை ஆவணப்படுத்தி இருப்பது போல, பண்டைய எகிப்தில் ஹீரோகிளிப்ஸ் எழுத்துக்களால் பண்டைய எகிப்திய மன்னர்கள் தங்கள் புகழ் பாடலையும் பல செய்திகளையும் செதுக்கி வைத்திருக்கின்றனர்.

எகிப்தில் இருந்த இந்த ஒபிலிஸ்க் எப்படி பிரான்சுக்கு வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம். 


ஏறக்குறைய 3000 ஆண்டு பழமையான இந்த ஒபிலிஸ்க் 1833 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி பாரிஸ் நகரை வந்தடைந்தது. நைல் நதிக் கரையில் கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்தின் அலெக்சாண்டிரியா பகுதிக்கு வந்து பிரான்சின் சார்புக் துறைமுகப் பகுதியில் இது வந்தடைந்தது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 25 அக்டோபர் மாதம் 1836 ஆம் நாள் இது மன்னர் லூயி பிலிப் அவர்களால் தற்போது உள்ள இடத்தில் நிறுவப்பட்டது.

எகிப்தை ஆண்டு வந்த ஒட்டோமான் மாமன்னன் முகமது அலி பாஷா அவர்களால் இது ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.


ஒபிலிஸ்க்  என்பது என்ன என்று பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். எகிப்தியர்களைப் பொறுத்தவரை தங்கள் கடவுள்களை வழிபடவும் சிறப்பிக்கவும் இறந்து போன தங்கள் மன்னர்களைப் பிரதிபலிக்கவும் ஒரு சின்னமாக இருப்பது தான் ஓபிலிஸ்க்.

பண்டைய நாகரிகங்களில் மன்னர்களைக் கடவுளாக காணும் முறை வழக்கில் இருந்தது தான். எகிப்திய பண்டைய நாகரிகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாகவே ஒபிலிஸ்க்  தூண்கள் ஒற்றையாக இல்லாமல் இரட்டையாக வைப்பதுதான் இயல்பு. ஒபிலிஸ்க்  தூணின் மேற்பகுதி சூரிய கடவுளான ரா (Ra) கடவுளைப் பிரதிபலிக்கின்றது.

இன்று ஐரோப்பியர்கள் பரவிய பல்வேறு நாடுகளில் ஒபிலிஸ்க்  தூண்கள் வரலாற்றுச் சின்னமாக நிற்பதை நாம் காண முடியும். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் கேப்பிட்டல் மண்டபத்தை நோக்கியவாறு பிரம்மாண்டமான எகிப்திய  ஒபிலிஸ்க் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பல தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எகிப்திய பண்டைய நாகரிகம். அந்த நாகரிகத்தின் முக்கிய சின்னம் ஒபிலிஸ்க். கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கிருத்துவ அடிப்படை சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த குரல்களின் பிரதிபலிப்பாகவும் ஒபிலிஸ்க் சின்னத்தை நிறுவிய செயல்பாடுகளைக் காணலாம் என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டிலும் ஒபிலிஸ்க்   வடிவிலான சின்னங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. என்ன... ஆச்சரியமாக உள்ளதா?

உங்களில் யாருக்காவது உடனே பார்க்க வேண்டும் எனத் தோன்றினால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறத்தில் முந்தைய கருப்பர் நகரத்தையும் வெள்ளை நகரத்தையும் பிரிக்கும் எல்லைக் கோட்டில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஒபிலிஸ்க் ஒன்று நிற்பதைச் சென்று பாருங்கள். தொடர்வேன்.

-சுபா

 

03 ஜூலை 2021

அவதிப்படும் சாரா கலைவாணி பூபாலன்

சாரா கலைவாணி பூபாலன் (Sarah Kalaivani Pupalan). வயது 32. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத் துறையில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றியவர். அழகிய பெண்மணி. மாடலிங் செய்தவர். கை நிறைய சம்பளம். மனம் நிறைந்த வாழ்க்கை.


2019-ஆம் ஆண்டு இறுதியில், 29 வயதில், அவருக்கு கால் முடக்குவாதம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் போய் விட்டது. அவரைச் சுற்றி இருந்த சொந்த பந்தங்கள் காணாமல் போய் விட்டன. குடும்பத்தாரால் கைவிடப் பட்டவர். மனித வாழ்க்கையில் எதுவும் எப்போதும் நடக்கலாம். தவிர அவருக்கு மேலும் ஒரு நோய். தன் உடலை ஆளும் குறைநிலை Borderline Personality Disorder.


கால் முடக்குவாதம் என்றால் Rheumatoid Arthritis Disorder. ஒரு நீண்டகால நோய். மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக வலி. குறிப்பாக விரல்கள், மணிகட்டு, கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் அசைவற்ற தன்மை ஏற்படலாம்.

Sarah Kalaivani Pupalan, a 32-year-old who struggles with borderline personality disorder and rheumatoid arthritis. Sarah used to do administration work and part-time modelling before her health deteriorated.


கடந்த ஈராண்டுகளில் கோவிட் காலத்தில் மிகவும் சிரமப் பட்டார். மருத்துவமனை வீடு என்று அலைந்து கொண்டு இருந்தார். கோலாலம்பூர் மலிவு வீட்டு உதவிக்கு விண்ணப்பித்தார். நிராகரிக்கப் பட்டது.

வீடு என்று அழைக்க ஓர் இடம் இல்லை. அதனால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அடித்து விரட்டப் பட்டார். வாடகை கட்ட முடியாத நிலை. உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

2021-இல் எடுக்கப்பட்ட படம்

இந்தக் கட்டத்தில் Ebit Lew எனும் ஒரு சமய போதகர், அவரின் தன்னார்வ அமைப்பின் மூலமாக உதவி செய்யத் தொடங்கினார். சாரா கலைவாணி தங்கி இருக்கும் அறையின் மாத வாடகைக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார். வாழ்க மனிதநேயம்.

அண்மையில் சாரா கலைவாணிக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். கோவிட் காலத்திற்குப் பிறகு அவர் வேலைக்குப் போகலாம்.

மனித வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லாதது. எந்த நேரத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காமல் நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.07.2021

(பி.கு. இவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இற்றை செய்யப்படும். 2021 ஜுன் முதல் தேதி எடுக்கப்பட்ட படங்கள்)



சிங்கப்பூர் முன்னாள் அதிபதி அகமுடையார் வழித்தோன்றல்

பதிவு: இமயவர்மன், மதுரை - 03.07.2021

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார். இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது.


சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன் அவர்கள் 1979-இல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐயாவுக்கு புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்னூட்டங்கள்

முருகன் சுங்கை சிப்புட்: ஓ... இவர் இந்தியர் இல்லையோ

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அகமுடையார் என்று கட்டி அழுவதைத் தவிர்த்து தமிழர் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகிறது... எப்போதுதான் இந்தச் சாதியத்திற்கு முடிவு கட்டுவது.

பால் சேர்வை: ஐயா முத்து அவர்களே..அகமுடையார் என்பதின் பொருள் என்ன??

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: முட்டையைப் போட்ட கோழியிடம் கேட்கலாமே...

தனசேகரன் தேவநாதன்: முடிசார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவதுதான் நிதர்சனம். இதில் முகமுடையார் அகமுடையார் என்ற அகழ்வாராய்ச்சி அர்த்தமுடையதா சகோதரரே. சிந்தித்துச் செயல்படுவீர் 😢😥

முருகன் சுங்கை சிப்புட்: மக்கள் இந்த மாமனிதரை சிங்கப்பூர் கண்டெடுத்த முத்தாகவும்; சிங்கப்பூரராக மட்டுமே பார்த்தது. எங்கள் வீட்டுப் பிள்ளை போல் உறவாடினர். இந்த கட்டுரை வேறு மாதிரி பார்க்கிறது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியம் பேசுகிறது

முருகன் சுங்கை சிப்புட்: ஆமாம் அய்யா நம்மில் இன்னும் மாற்றம் இல்லை..

தேவி சர: மிகச் சரியாக சொன்னீர்கள் அப்பா... நம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சாதியை எப்படியாவது ஒழிச்சுக் கட்டலாம் என்று பார்க்கிறேன். உஹும் முடியல... ரெக்க கட்டி பறக்குது... என்னையே மலையாளத்தான் வன்னியக் கவுண்டன் என்று தமிழர் விவாத மேடை குழுவில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அப்புறம் எப்படிம்மா...

தேவி சர: உண்மை ... முப்பதாம் நூற்றாண்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் ஆனால், இன்றும் பிள்ளைகளுக்கு சாதியை பெயரோடு இணைத்து வைக்கிறார்கள் 🤦🏻‍♀️🤷🏻‍♀️

முருகன் சுங்கை சிப்புட்: உங்களையும் விட்டு வைக்கவில்லையா இவனுங்க.

ராதா பச்சையப்பன்: பல வேளைகளில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போது,, சாதியின்  பெயரையும் சேர்த்தே பெயர் வைக்கும் பெற்றோர் என்றாவது நினைத்து பார்த்தது உண்டா?

பிள்ளை வளர்ந்து படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் சாதிப் பெயரை சொல்லி அழைக்கும் போது அந்தப் பிள்ளை படும் வேதனை; அவமானத்தை நினைத்து பார்த்து இருந்தால், பிள்ளைகள் பெயரயோடு சாதி பெயரை இணைக்க மாட்டார்கள்.  

பெரியவர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளை குறை கூறுவது ஏன்? இன்றும் இது போன்ற சாதிப் பெயரை பேரப் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் தாத்தா, பாட்டிக்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் போல் உள்ளவர்கள் திருந்தினால் ஒழிய சாதி பெயரும் ???

பி.கே. குமார்: தமிழர் அல்லாதவர்கள் பலரும்கூட சாதிப் பெயரை இணைப்பதைப் பெருமையாக கொள்கிறார்கள்.