12 பிப்ரவரி 2022

ஆப்பிரிக்கா நாட்டில் செரெங்கெட்டி அதிசயம்

மலேசியம் புலனத்தின் மற்றும் ஒரு பொது அறிவுத் தகவல்

ஒவ்வோர் ஆண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்கா, தான்சானியா, செரெங்கெட்டி (Serengeti) சரணாலயத்தில் இருந்து மசாய் மாரா (Masai Mara) என்ற இடத்துக்கு மில்லியன் கணக்கான விலங்குகள் இடம் பெயர்கின்றன. உலகத்தில் ஓர் அதிசயமாக கருதப் படுகிறது. (Seven Natural Wonders of Africa)


ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை செரெங்கெட்டி பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கை. இதனால் மசாய் மாரா பகுதி நோக்கி உணவுக்காகத் தங்களின் பயணத்தை இந்த விலங்குகள் தொடங்குகின்றன.

இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் 260,000 வரிக் குதிரைகள் 1.7 மில்லியன் காட்டு எருமைகள், 470,000 சிறுமான்கள் என இலட்சக் கணக்கான விலங்குகள் இடப்பெயர்வில் ஈடுபட்டு மீண்டும் தம் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றன. 250,000 காட்டு எருமைகள் 5,000 வரிக் குதிரைகள் 12,000 சிறுமான்கள் பலியாகின்றன.

இந்த விலங்குகள் மிகக் கடுமையான பாதைகள் வழியாகப் பயணம் செய்கின்றன. பல ஆபத்தான நீர்நிலைகளைத் தாண்டி செல்கின்றன. இந்த விலங்குகளை எதிர்பார்த்து நீர்நிலைகளில் நிறைய முதலைகள் காத்து இருக்கும். இவை தமக்கு கிடைத்த விலங்குகளை அடித்துப் பிடித்துச் சாப்பிடும்.

இவை மட்டும் அல்லாது, சிறுத்தைகள், கழுதைப் புலிகள், சிங்கங்கள் எல்லாம் காத்து இருந்து பயணம் செய்யும் விலங்குகளை வேட்டையாடும்.


விலங்குகளின் இந்த அதிசயப் பயணத்தைப் பார்த்து மகிழச் சிறப்பு சுற்றுலாவுக்குக் கென்யா அரசாங்கம் ஏற்பாடு செய்து தருகிறது.

இதனால் கென்யாவுக்குச் சுற்றுலாத் துறை வருமானம் அதிகரித்து இருக்கிறது. இந்த நீண்ட தூரப் பயணத்தில் விலங்குகள் சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் போகின்றன. உணவு தேடலுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு விலங்குகள் இடம் பெயர்வது உலகத்தில் ஓர் அதிசயமாகக் கருதப் படுகிறது.

(மலேசியம்)
11.02.2022


சான்றுகள்:
1. Zimmermann, Kim Ann (23 June 2017). "The Serengeti: Plain Facts about National Park & Animals". Live Science.

2. Serengeti, Heartbreak on the Serengeti". archive.ph. National Geographic Magazine. 29 June 2012.

3. Anouk Zijlma. "The Great Annual Wildlife Migration – The Great Migration of Wildebeest and Zebra". About.com.





 

09 பிப்ரவரி 2022

மலேசியப் பிரதமர் பதவியில் துன் சம்பந்தன்

மலேசிய வரலாற்றில், ம.இ.கா.வின் தலைவர் வீ. தி. சம்பந்தன் அவர்களும்; மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக் (Ling Liong Sik) அவர்களும்; மலேசியாவின் பிரதமர்களாகத் தற்காலிகமாகப் பதவி வகித்து உள்ளனர்.


துன் சம்பந்தன் 1973 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார். முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் வெளிநாட்டில் இருந்த போது, துணைப் பிரதமராக இருந்த துன் இஸ்மாயில் மரணம் அடைந்தார்.

அந்தக் கட்டத்தில் துன் சம்பந்தன் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக், 1988 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி; 1988 ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.

1988-ஆம் ஆண்டில், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைமை உறுப்புக் கட்சியான அம்னோ சட்டவிரோத அரசியல் கட்சியாக அறிவிக்கப் பட்டது. துன் மகாதீர், பாரிசான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டார்.

அதன் விளைவாக லிங் லியோங் சிக், பாரிசான் நேசனல் கூட்டணியின் புதிய தலைவரானார். புதிய கட்சியான அம்னோ பாரு, சங்கங்களின் பதிவு அதிகாரியால் சட்டப் பூர்வமாக்கப்படும் வரை 12 நாட்களுக்கு லிங் லியோங் சிக், பிரதமராகப் பணியாற்றினார்.

(மலேசியம்)
09.02.2022

சான்றுகள்:

1. https://varnam.my/varnam-exclusive/2021/46834/fearless-leader-tun-v-t-sambanthans-legacy-as-nations-first-indian-acting-prime-minister-in-1973/

2. https://www.malaysia-today.net/2019/02/26/for-a-few-days-in-1988-malaysia-actually-had-a-chinese-prime-minister/




 

06 பிப்ரவரி 2022

ஐடா சோபியா ஸ்கட்டர்

தொகுப்பு: ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்


ஐடா சோபியா ஸ்கட்டர்
(பிறப்பு: டிசம்பர் 9, 1870 – இறப்பு: மே 23, 1960)

தமிழ்நாட்டுப் பெண்களின் அவலநிலையைப் போக்குவதற்காகவும்; புபோனிக் கொள்ளை நோய், காலரா மற்றும் தொழுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் அழகிய பெண்மணி. அவரின் வரலாறு வருகிறது. படியுங்கள்.

1877-ஆம் ஆண்டு இந்திய நாட்டில் கடுமையான பஞ்சம். பசி. பட்டினி. இறப்பு எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவு இல்லாத  நிலை!


அந்தக் கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு வழங்குவதற்காக இந்தியாவிற்கு வந்தன. அப்படி ராணிப் பேட்டைக்கு வந்தவர்தான் ஒரு டாக்டர்.

அவருடைய பெயர் ஜான் (Dr. John Scudder). இவரின்  மகள் ஐடா ஸ்கடர். 14 வயது.

ஒரு நாள் இரவு கதவு தட்டப் படுகிறது. ஐடா கதவை திறக்கிறாள். ஒரு பிராமணர் நின்று கொண்டு இருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்.

அதற்கு ஐடா, "நான் டாக்டர் அல்ல. என் அப்பாதான் டாக்டர்... கொஞ்சம்  இருங்க... அவரை எழுப்புறேன்" என்கிறார்.

"இல்லம்மா... என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமண ஆளுங்க... பெண்ணைக் கணவன் இல்லாத பிற ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுகிறார்.


கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவைத் தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார்.

ஐடா தன் தந்தையைப் பற்றிக் கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டுப் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பி விடுகிறார்.

அந்தப் பெண்களுக்கு ’என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ என்று இரவு எல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா.

மறுநாள் காலை அந்தக் கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து செல்லப் படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பித் தேம்பி அழுகிறாள் ஐடா.


"என்ன தேசம் இது? பெண்களைப் படிக்க வைக்க மாட்டாங்களாம். பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களைப் படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்தப் பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதம் ஏற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டர் ஆகிறார்.

சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்தக் காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே, அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.

தமிழகத்தில் இறந்து போன அந்தப் பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவமனை தேவை என்பதை உணர்கிறார்.

பல நாடுகளில் இந்தியாவின் அவல நிலையைச் சொல்லி நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது.


இனி ஒரு கர்ப்பிணியைக்கூட சாக விடமாட்டேன் என்கிற உறுதியுடன் 19-ஆம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாத பாடுபட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப் பெருமை வாய்ந்தது. ஒரு நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சி.எம்.சி. (Christian Medical College - Research Institution in Vellore) மருத்துவமனை.

யார் இந்த பெண்?  இவர் ஏன் தமிழர்களுக்காக அழுதார்? இவர் ஏன்  தமிழர்களுக்காக உருகினார்? இவர் ஏன்  தமிழர்களுக்காகவே வாழ்ந்தார்?


எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து 5 இளம் பெண்களைத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சி தருகிறார் ஐடா. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்.

தமிழகப் பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை.

ஆனால், ஒரு பெண் தனியாளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. இலட்சக் கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டு இருக்கிறது!


"ஐடா" என்ற மனித தெய்வத்துக்கு மட்டும் இல்லை. இன்றைய ஆபத்தான சூழலில் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளாடை தாய்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

1928-ஆம் ஆண்டில் இவருடைய (Ida Sophia Scudder) பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் வேலூரில் ஒரு மருத்துவமனைக் கல்லூரி (Vellore Christian Medical Center) கட்டப்பட்டது. 2000 படுக்கைகள்.

இந்த மருத்துவமனைக் கல்லூரி கட்டப் படுவதற்கு ஐடா சோபியா, அமெரிக்காவில் சேகரித்த நிதி 4 மில்லியன் அமெரிக்க டாலர் (1930 ஆண்டு கணக்கு).


ஐடா சோபியா மருத்துவமனைக் கல்லூரி, இதுவரை 6000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. இவர்களில் ஏறக்குறைய 5000 பேர் பெண்கள்.

இந்த மருத்துவமனைதான் உலகத்திலேயே பெரிய கிறிஸ்துவ மருத்துவமனை.

இந்த அம்மையாரின் பெயரில் வேலூரில் Ida Scudder School எனும் பெயரில் ஒரு பள்ளிக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள்.  

ஆகஸ்டு 12, 2000-இல், இவருக்கு இந்திய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டது.

இந்திய அரசு கெய்சர் - இ - இந்து எனும் பொற் பதக்கத்தை அளித்து சிறப்பு செய்தது.


அவர் பெயரில் Ida Scudder Award எனும் விருது உருவாக்கப்பட்டு ஆண்டு தோறும் உலகம் முழுமைக்கும் வழங்கப் படுகிறது.

இவரைப் பற்றி 10 நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.

இந்திய நாட்டு வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் ஒரு சகாப்தம்.

(மலேசியம்)
06.02.2022

 

05 ஜனவரி 2022

நீர் நிலைகளின் வகை

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணல் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியில் இருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியில் இருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.


(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - மாக்கடல்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாக்கப்பட்டு; பலகைகளால் அடைத்து திறக்கக் கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றுக்கு நீர் ஊட்டும் வழி.


(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18)  குட்டை (Small Pond) - சிறிய குட்டம். ஆடு மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கு ஏற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேல் எழுப்பி வரச் செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.


(24) கூவம் (Abnormal well) - ஓர் ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழம் இல்லாத கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெரும் கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலைகளில் இயல்பாய் அமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நான்கு புறமும் சூழ்ந்து அமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.


(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டு அமைந்த பெரும் கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக் கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட ஒரு நீர் நிலை.


(42) மடு (Deep place in a river) - ஆற்றில் அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் கொண்ட ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் ஒதுக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - சிறிய நீர் நிலைகள்.

(மலேசியம்)
05.01.2022

 

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் என்றும் வாழும்

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப தமிழ் - சீன மொழிப் பள்ளிகள் செயல் படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.


நாட்டில் தாய் மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என அவர் தமது வரலாற்றுப்பூர்வ தீர்ப்பில் தெரிவித்தார். தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப சீன மற்றும் தமிழ் பள்ளிகள் செயல்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால் நம் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

*தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிரான வழக்கு*

இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் (வாதிகள்)

1. (Gabungan Pelajar Melayu Semenanjung எனும் Federation of Peninsular Malay Students (GPMS)

2. Pembangunan Pendidikan Islam Malaysia எனும் Islamic Education Development Council (Mappim)

3. Gabungan Persatuan Penulis Nasional Malaysia எனும் Confederation of Malaysian Writers Association (Gapena)

இந்த வழக்கின் பிரதிவாதிகள். அதாவது இந்த வழக்கிற்கு எதிராக வாதாடியவர்கள்:

1. மலேசிய அரசாங்கம்
2. மலேசிய கல்வி அமைச்சு/ மலேசிய கல்வி அமைச்சர்
3. ம.இ.கா.
4. ம.சீ.ச.
5. கெராக்கான்
6. Parti Bumiputera Perkasa Malaysia,
7. மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு
8. மலேசிய தமிழ் நெறி கழகம்,
9. மலேசியத் தமிழர்க் கழகம்
10. தமிழர் திருநாள் கழகம் (பேராக்)
11. தமிழ்ப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம்
12. சீனக் கல்வியாளர் குழு Dong Zong
13. சீனக் கல்வியாளர் குழு Jiao Zong
14. மலேசியச் சீன மொழிக் கழகம் (Malaysian Chinese Language Council)
15. சோங் ஹுவா சீன உயர்நிலைப்பள்ளி (SMJK Chong Hwa)

(மலேசியம்)
30.12.2021