01 டிசம்பர் 2023

உலகின் முதல் பெட்ரோல் நிலையம்

கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 01.12.2023

இன்று டிசம்பர் 1, 1913-ஆம் ஆண்டு இதே நாளில்தான் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று பெட்ரோல் நிரப்பும், உலகின் முதல் பெட்ரோல் நிலையம், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அமைக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் இருப்புச் சாமான் விற்கும் கடைகளிலும், கொல்லர் பட்டறைகளிலும்தான் எரிபொருள் வாங்க வேண்டியிருந்தது. உலகின் முதல் நீண்ட கார்ப் பயணத்திலிருந்து திரும்பும் போது, ஒரு மருந்துக் கடையில்தான் பெர்த்தா பென்ஸ் என்பவர் மீண்டும் எரிபொருள் நிரப்பினார். 


பெட்ரோலியத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் லைக்ராய்ன், ஈதரைப் போலவே இருக்கும். இதை மருந்துக் கடையில் வாங்கித்தான் காரில் நிரப்பி, தன் திரும்பி வரும் பயணத்தை மேற்கொண்டார் பெர்த்தா பென்ஸ். அதனால் உலகின் முதல் பெட்ரோல் நிலையம் மருந்துக் கடைதான்! 

முதல் பெட்ரோல் விற்குமிடம் 1905-இல் அமெரிக்காவின் மிசவுரியில் தொடங்கப்பட்டது. இதில் வாகனத்தை உள்ளே ஓட்டிச் சென்று நிரப்ப முடியாது என்பதால் இது கடைதான்! 

முதல் பெட்ரோல் நிலையம் 1913-இல் அமைக்கப் பட்டாலும் பெரிய வரவேற்பை உடனடியாகப் பெறவில்லை. அக்காலத்தில் கார்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டும் காரணமல்ல. எல்லா கார்களும் பெட்ரோலால் இயங்கவில்லை. எத்தனால், மின்சாரம் ஆகியவை மட்டுமின்றி, நிராவியில் இயங்கும் கார்களும் புழக்கத்திலிருந்தன. 

இதனால் வாகனங்களுக்கு இலவசமாக நீர், காற்று ஆகியவற்றையும், பின்னர் சாலை வரைபடங்களையும் (மேப்) இலவசமாக வழங்கிய முதல் பெட்ரோல் நிலையம் இதுதான். 1917வரை பென்சில்வேனியா மாநிலம் முழுவதற்குமே 7 பெட்ரோல் நிலையங்கள்தான் இருந்தன. 

மோட்டார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறைந்த விலை கார்கள் வரத் தொடங்கியதையடுத்து, 1920-இல் அமெரிக்கா முழுவதும் 15 ஆயிரமாகவும், 1920-களில் இறுதியில் 2 இலட்சமாகவும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 

உலகம் முழுவதும் பெட்ரோல் என்று அழைக்கப்பட்டாலும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கேசோலின், கேஸ் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறது. இதனால் அங்கு பெட்ரோல் நிலையங்கள் கேஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்படுகின்றன. 

மலேசியா போன்ற நாடுகளில் பெட்ரோல் பம்ப், பெட்ரோல் ஸ்டேஷன் என்றும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் பங்க் என்றும் எரிபொருள் நிலையங்கள் அழைக்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக