தனசேகரன் தேவநாதன் - 03.12.2023
வெண்பா மண்டப திறப்புவிழா
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் மற்றும் ஒரு சாதனைத் தளமாக கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி (SJKT Kampung Columbia, Ayer Tawar) உருமாற்றம் கண்டு வருகிறது. பற்பல போராட்டங்களுக்கு இடையில், மலேசிய தமிழர்களை ஈர்க்கும் வகையில், பற்பல சாதனைகளையும் படைத்து வருகிறது.
பேராக், மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் பகுதியில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது. 1918-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 105 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது.
அத்தகைய கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாகத் தழைத்து வளர்ந்து வானுயரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றுதான் பேராக், ஆயர் தாவார் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி. நல்லது நடக்கும் இடத்தில் நலிவின்மையும் தொடரும் என்பார்கள்.
அந்த வகையில் அண்மைய காலத்தில் இந்தப் பள்ளியில் எலிகளின் தொல்லையும் எல்லை மீறிப் போய்விட்டது. இப்பள்ளியைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செம்பனை மரங்கள்; இயற்கை மேவிய பச்சை சமவெளிகள். அந்த வகையில் எலிகளும் மற்ற மற்ற ஊர்வனங்களும் இந்தப் பள்ளியில் அழையா விருந்தாளிகளாக வந்து போவது வாடிக்கையானது.
பொது இடங்களிலும் சரி; பள்ளி வகுப்பறைகள் மற்றும் சிற்றுண்டி சாலையிலும் சரி; எலிகளின் கழிபொருள்கள் பெரும் சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்தன. எலிகளை ஒழிக்கும் பல்வேறு திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
அஸ்ட்ரோ செய்திக் காணொலி
தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது.
அந்த வகையில் எலிக் கழிவுகள், எலிகளின் சிறுநீர் துர்நாற்றத்தால் இந்தப் பள்ளி மூடும் ஆபத்தை நோக்கி இருந்தது. பள்ளியின் அமைவிடத்தை மாற்ற வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டது. அதே கட்டத்தில் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளிக்கு பின்புறத்தில்; தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் இடத்தில் புதிய பள்ளியைக் கட்டுவதற்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.
புதிய பள்ளி கட்டுவதற்கான நிலத்தை கொள்முதல் செய்யும் முயற்சிக்கு பேராக் மாநில மனித வள சுகாதார ஒற்றுமைத் துறை; இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும்; சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்தார்.
அதே வேளையில் ஓர் இக்கட்டான நிலைமை. புதிய பள்ளியின் நிலத்திற்கு 1.3 இலட்சம் ரிங்கிட் முன்பணம் (பிரிமியம்) கட்ட வேண்டும் என நிபந்தனையும் தொடர்ந்தது. இருப்பினும் மாநில அரசாங்கத்தின் தலையீட்டினால் அந்த முன்பணத் தொகை செயல்பாடு நிறுத்தம் செய்யப்பட்டது.
புதிய பள்ளிக்கு புதிய கட்டடத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு வழியாக, அடுத்த ஆண்டு மலேசியத் துணைக் கல்வியமைச்சர் இப்பள்ளிக்கு வரவிருப்பதாகவும் மாண்புமிகு சிவநேசன் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2022-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 11,231 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 1679 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். அத்துடன் மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
தற்போது கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியில் 52 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன். சிறப்பான முறையில் கட்டொழுங்கான பார்வையில் பள்ளி நிர்வாகம் பயணித்து வருகின்றது.
வணக்கம் மலேசியா காணொலி
பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பற்பல உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு உயர்நிலைத் தோற்றத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஆயர் தாவார் தமிழர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை!
கடந்த 02.12.2023-ஆம் தேதி இப்பள்ளியின் வெண்பா மண்டபம் திறப்புவிழா கண்டது. அத்துடன் சிற்றுண்டி தினமும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்:
1) மாணவர்களுக்கான பள்ளி நடவடிக்கைகளின் செலவு
2) போக்குவரத்து கட்டணம்
3) கட்டட பழுது பார்ப்பதற்கான செலவு
4) வகுப்பறைகளில் திறன் தொலைக்காட்சி (Smart TV) பொருத்துதல்
பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைய காலங்களில் வாகனங்களின் மூலமாக பள்ளிக்கு வரும் பி 40 பிரிவு குடும்பங்களின் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டில் இருந்து வாகனப் போக்குவரத்து ஆண்டுத் தொகையான 12,500 ரிங்கிட்டை பேராக் மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. மகிழ்ச்சி தரும் செய்தி.
கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியின் வெண்பா மண்டப திறப்புவிழாவிற்கும்; மற்றும் பல பள்ளி நடவடிக்கைகளுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்; பள்ளி மேலாளர் வாரியக் குழுவினரும்; பொது மக்களும் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன்
இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வழிநடத்தியவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகும் அவர்களுக்கு பொறுப்பு வகித்த ஆசிரியர் திரு. மோ. கலைச்செல்வன்.
உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் தமிழ் மொழியின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி என வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன் கூறுகிறார்.
தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற முடியும். அதுவே காலத்தின் கட்டாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக