29 டிசம்பர் 2020

தமிழினத்தின் மூத்த இசை

20.12.2020

தமிழினத்தின் மூத்த இசை - இதை
தாழ்ந்த இசை என்பதுவோ!
எமதம்மன் பறை இசைக்கே
எழுந்தாட்டம் போடு கின்றாள்! - அட!
இமைமூடி செல்பவர்க்கும்
இறுதியிசை இதுவாச்சு! - அன்று
தமதுரையை தப்படித்தே
சகலருக்கும் கோன் சொன்னான்..!

ம.அ.சந்திரன் மலேசியா

சுப்பையா, ம. (ம.அ. சந்திரன்)
பிறந்த தேதி: 29/8/1951
புனைபெயர்: ம.அ.சந்திரன்
பணி: வியாபாரம்

நூல்கள்: “சிந்தனைச் செல்வம்” (கவிதைத் தொகுப்பு)

1973 முதல் எழுதி வருகிறார். பெரிதும் கவிதைகளும் கட்டுரைகளுமே எழுதி வருகிறார். மலேசிய திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.



 

28 டிசம்பர் 2020

காலை வணக்கம் மாலை வணக்கம் சரியா?

19.12.2020

Water Falls என்பதை அப்படியே மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்கிறோம். நீருக்கு ஏது வீழ்ச்சி? அருவி எனும் சொல்லே ஏற்புடையது.

King Cobra என்பதை வார்த்தை மாறாமல் பெயர்த்து ராஜ நாகம் என்கிறோம். கருநாகம் எனும் சொல்லே தமிழுக்கு ஏற்றது.

இதை எல்லாம் விடப் பெரிய வியப்பு என்னவெனில் ’டீசல்’ என்பதைக் ’கல்நெய்’ என மொழி பெயர்ப்பது.

டீசல் எண்ணெயைக் கண்டு அறிந்த ரூடால்ப் டீசல் என்பவரின் பெயரே அதற்கு வைக்கப் பட்டது. கண்டுபிடிப்புகளை அந்தந்த மொழிப் பெயர்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது அவற்றின் பெயர்களைத் தமிழில் உருவாக்கலாமா என்பது பெரும் விவாதத்திற்கு உரியது.

கண்டறிந்தோர் இட்ட பெயரை ஏற்பதே அந்தக் கண்டுபிடிப்பிற்கு நாம் செய்யும் மரியாதை என ஒரு தரப்பினரும்; அவற்றிற்குத் தமிழில் பெயரிட்டால் தமிழின் சொற்களஞ்சியம் மேலும் பெருகும் என ஒரு தரப்பினரும் கூறுகின்றனர். எது சரி என்பது உங்கள் சிந்தனைக்கு! சரி.

வணக்கத்திற்கு வருவோம். Good morning என்பது ’உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும்’ என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக் கூடியன.

ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, ’காலை வணக்கம்’, ’மதிய வணக்கம்’, ’மாலை வணக்கம்’, ’இராத்திரி வணக்கம்’, ’படுக்கை வணக்கம்’, ’பாய் வணக்கம்’ என்று கூறி வருகிறோம்.

ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் ருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம்.

ஆனால் தமிழில் கூறும் போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை என்பதால் வணங்குதல் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.

காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் எனக் கூறுவதனைத் தவிர்த்தல், தமிழ் இலக்கண வழக்கப்படி சரியானதாகும்.

அகன்சரவணன், ஆனந்த விகடன்
03.01.2020

https://www.vikatan.com/oddities/miscellaneous/small-explanation-about-the-tamil-word-vanakkam

வணக்கம் என்பது ஒன்றுதான்.

காலைக்கு ஒரு வணக்கம், மாலைக்கு ஒரு வணக்கம் என்று பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சிறப்பு.

வணக்கம் என்பதற்குப் பன்மையும் இல்லை. வணக்கங்கள் என்று சொல்வது தவறு.




 

அன்றும் இன்றும் தமிழரின் துன்பம் - பாதாசன்

 19.12.2020

ஆங்கிலவர் ஆட்சியிலே நேரில் துன்பம் !
  அடுத்துஜப்பான் ஆட்சியிலும் தெரிந்தே இன்னல் !
தாங்கியவர் மலேசியத்துத் தமிழர், நாடு
  தன்னாட்சி பெற்றபின்னர் காணும் கேடோ
ஓங்கிடினும் அவற்றினிலே ஒன்றும் கண்ணுக்
  கொருவருக்கும் தெரியாமல் நடக்கும் கோடி
ஆங்கில, ஜப்பானியர்தம் தொல்லை குன்று ;
  அதைமிஞ்சும் தமிழர்படும் தொல்லை இன்று !
                                                -பாதாசன்


புனைபெயர்கள்: பாதாசன், மஞ்சரி

தொழில்: பத்திரிகை ஆசிரியர்; மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்புப் பொறுப்பாசிரியர்.

எழுத்து: 1960 முதல் எழுதி வரும் முன்னணிக் கவிஞர். கதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நூல்கள்: "பாதாசன் கவிதைகள்", "ஞாயிறு களம்" (கட்டுரைத் தொகுப்பு)

சிறப்புக் குறிப்புகள்: கோலாலம்பூர் கவிதைக் களம் என்னும் கவிதைப் பயிற்சி மன்றத்தின் பொறுப்பாளர்; மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம், முத்தமிழ்ப் படிப்பகம் ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்.





பிரதமர் நஜீப் 2.6 பில்லியன் ரிங்கிட்

 19.12.2020

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது. அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்).

On 2 July 2015, The Wall Street Journal ran an exposé alleging that MYR 2.672 billion (USD 700 million) had been channelled from 1MDB into Najib's personal bank accounts.

1MDB has reportedly incurred debts of MYR 42 billion (about USD 11.1 billion) after only six years of operation.

ஒரு நாளைக்கு $6,355 செலவு செய்தால் 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2,739 ஆண்டுகள் பிடிக்கும்.

2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 ராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்).

(மலேசியம்)

Amaciappan: அடேயப்பா, இது ஒரு மலாய்க்காரர் என்பதால் ம்ம்ம்... யாருமே குறிப்பாக மலாய்க்காரர்கள் வாயே திறக்காமல் இருக்கின்றனர். வேறு யாராவதாக இருந்து இருந்தால் கிழி கிழி என கிழித்து இருப்பார்கள்.

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன். அந்த இனத்தில் நியாயவான்களே இல்லையா? அரசாங்க ஊழியர்களில் 99 சதவீதம் படித்தவர்கள். பட்டதாரிகள். கல்வியாளர்கள். இப்படி எண்ணற்றவர்கள் இருந்தும் நியாயத்தைக் கேட்பவர்கள் இல்லையா வேதனை... வேடிக்கை...




27 டிசம்பர் 2020

சோற்றில் பிறந்த நாதங்கள்

19.12.2020

சோறு என்று சொன்னதும் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு எனும் பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. சோறு; சாதம் எனும் இந்த இரு சொற்களின் பொருள் தன்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

சமைத்த அரிசிக்குப் பெயர் சோறு. அதே அந்தச் சோற்றைப் பரிமாறும் போது சாதம் அல்லது அன்னம் என்பார்கள். மலையாளத்தில் அன்னம்.

’சோறு சாப்பிட்டீங்களா’ என்றுதான் கேட்பார்கள். ’சாதம் இருக்கு... சாப்பிடுறீங்களா’ என்று தான் கேட்பார்கள். ’சாதம் சாப்பிட்டீங்களா’ என்று கேட்க மாட்டார்கள்.

சாதம் எனும் சொல்லுக்குப் பற்பல பொருள்கள் உள்ளன. அன்னம் என்று சொல்வார்கள். பிறப்பு என்பதற்கும் சாதம் என்கிற ஒரு பெயர் உண்டு. பறவையின் குஞ்சுக்கும் சாதம் என்கிற பெயர் உண்டு. சிவ மந்திரத்தில் சாதம் எனும் ஒரு சொல் வருகிறது. சரி. சாதங்களில் பற்பல சாதங்கள் உள்ளன.

* தேங்காய்ச் சாதம்
* தயிர்ச் சாதம்
* சம்பா அரிசியடி சாதம்
* மிளகுச் சாதம்
* எலுமிச்சைச் சாதம்
* புளிச்சாதம்
* மாங்காய்ச் சாதம்
* கதம்பச் சாதம்
* பொடி சாதம்


தொல்காப்பியம் என்பது நம் தமிழர்களின் சங்ககால இலக்கணக் காப்பியம். அந்தக் காப்பியத்தில் உணவைக் குறிப்பிடும் சொற்கள் உள்ளன. வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆகாரம், உறை, ஊட்டம், புகா, மிசை எனும் சொற்கள்.

அவை அனைத்தும் அரிசியில் இருந்து கிடைத்த உணவு வகைகள். ஆகாரம் என்பது வடச் சொல் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அது தமிழ்ச் சொல்.

பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களில் கும்மாயம், மெல்லடை, அப்பம், பண்ணியம், அவல் என்று தமிழர்களின் பலகாரப் பெயர்கள் வருகின்றன.

கி.பி.16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கிடைத்த கல்வெட்டுகளில் அதிரசம், பிட்டு, இடியாப்பம், சட்டினி, தோசை, சீடை போன்ற பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் அரிசியில் இருந்து வந்த உணவு வகைகள். இடியப்பம் அல்ல இடியாப்பம். ஆப்பம் என்பதே சரியான சொல்.

அரிசியைச் சோறாக ஆக்கினால் அது சோறு ஆக்குதல். அரிசியில் சரியான அளவில் நீர் விட்டு சமைத்தால் அது நிறை கட்டுதல். அரிசி சோறான பின்னர் வடித்து எடுத்தால் அது வடித்தல்.

அரிசி சோறாக மாறிய பின்னர் மேலும் வேக வைத்தால் அது கூழ். அப்புறம் அது கஞ்சி அதே சோறு மறுநாள் பழஞ்சோறு. அப்புறம் அதுவே பழைய சோறு என்று பட்டப் பெயர்.

கஞ்சி என்கிற சொல் சமயங்களில் வறுமைக் கோட்டின் நிலையைக் காட்டுகிறது. கஞ்சிக்கு அலைந்த அடிமை என்கிற ஒரு பழமொழியும் உள்ளது.

எது எப்படியோ ஜப்பான் காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டிகள் சுண்ணாம்புச் சோறு சாப்பிட்டு நம்மை எல்லாம் வாழ வைத்து இருக்கிறார்கள். அதை மறக்க வேண்டாம். அவர்களையும் மறக்க வேண்டாம்.

* அரிசிச் சோறு
* கம்பஞ் சோறு
* காய்ச் சோறு
* பழஞ் சோறு
* கூட்டாஞ்சோறு
* பெருஞ்சோறு
* சிறுஞ்சோறு
* வெஞ்சோறு
* தென்னஞ்சோறு
* வரகின் சோறு


கடைசியாக ஒரு செய்தி. சாதம், சாம்பார், பொரியல், துவையல், பச்சடி போன்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் அதற்கு என்ன பெயர் தெரியுங்களா... கூட்டமுது.

சான்றுகள்:

1. சூடாமணி நிகண்டு
2. அழுகணிச் சித்தர் பாடல்
3. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
4. Tamil lexicon.University of Madras.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2020