27 டிசம்பர் 2020

சோற்றில் பிறந்த நாதங்கள்

19.12.2020

சோறு என்று சொன்னதும் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு எனும் பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. சோறு; சாதம் எனும் இந்த இரு சொற்களின் பொருள் தன்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

சமைத்த அரிசிக்குப் பெயர் சோறு. அதே அந்தச் சோற்றைப் பரிமாறும் போது சாதம் அல்லது அன்னம் என்பார்கள். மலையாளத்தில் அன்னம்.

’சோறு சாப்பிட்டீங்களா’ என்றுதான் கேட்பார்கள். ’சாதம் இருக்கு... சாப்பிடுறீங்களா’ என்று தான் கேட்பார்கள். ’சாதம் சாப்பிட்டீங்களா’ என்று கேட்க மாட்டார்கள்.

சாதம் எனும் சொல்லுக்குப் பற்பல பொருள்கள் உள்ளன. அன்னம் என்று சொல்வார்கள். பிறப்பு என்பதற்கும் சாதம் என்கிற ஒரு பெயர் உண்டு. பறவையின் குஞ்சுக்கும் சாதம் என்கிற பெயர் உண்டு. சிவ மந்திரத்தில் சாதம் எனும் ஒரு சொல் வருகிறது. சரி. சாதங்களில் பற்பல சாதங்கள் உள்ளன.

* தேங்காய்ச் சாதம்
* தயிர்ச் சாதம்
* சம்பா அரிசியடி சாதம்
* மிளகுச் சாதம்
* எலுமிச்சைச் சாதம்
* புளிச்சாதம்
* மாங்காய்ச் சாதம்
* கதம்பச் சாதம்
* பொடி சாதம்


தொல்காப்பியம் என்பது நம் தமிழர்களின் சங்ககால இலக்கணக் காப்பியம். அந்தக் காப்பியத்தில் உணவைக் குறிப்பிடும் சொற்கள் உள்ளன. வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆகாரம், உறை, ஊட்டம், புகா, மிசை எனும் சொற்கள்.

அவை அனைத்தும் அரிசியில் இருந்து கிடைத்த உணவு வகைகள். ஆகாரம் என்பது வடச் சொல் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அது தமிழ்ச் சொல்.

பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற சங்க நூல்களில் கும்மாயம், மெல்லடை, அப்பம், பண்ணியம், அவல் என்று தமிழர்களின் பலகாரப் பெயர்கள் வருகின்றன.

கி.பி.16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கிடைத்த கல்வெட்டுகளில் அதிரசம், பிட்டு, இடியாப்பம், சட்டினி, தோசை, சீடை போன்ற பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் அரிசியில் இருந்து வந்த உணவு வகைகள். இடியப்பம் அல்ல இடியாப்பம். ஆப்பம் என்பதே சரியான சொல்.

அரிசியைச் சோறாக ஆக்கினால் அது சோறு ஆக்குதல். அரிசியில் சரியான அளவில் நீர் விட்டு சமைத்தால் அது நிறை கட்டுதல். அரிசி சோறான பின்னர் வடித்து எடுத்தால் அது வடித்தல்.

அரிசி சோறாக மாறிய பின்னர் மேலும் வேக வைத்தால் அது கூழ். அப்புறம் அது கஞ்சி அதே சோறு மறுநாள் பழஞ்சோறு. அப்புறம் அதுவே பழைய சோறு என்று பட்டப் பெயர்.

கஞ்சி என்கிற சொல் சமயங்களில் வறுமைக் கோட்டின் நிலையைக் காட்டுகிறது. கஞ்சிக்கு அலைந்த அடிமை என்கிற ஒரு பழமொழியும் உள்ளது.

எது எப்படியோ ஜப்பான் காலத்தில் நம்முடைய தாத்தா பாட்டிகள் சுண்ணாம்புச் சோறு சாப்பிட்டு நம்மை எல்லாம் வாழ வைத்து இருக்கிறார்கள். அதை மறக்க வேண்டாம். அவர்களையும் மறக்க வேண்டாம்.

* அரிசிச் சோறு
* கம்பஞ் சோறு
* காய்ச் சோறு
* பழஞ் சோறு
* கூட்டாஞ்சோறு
* பெருஞ்சோறு
* சிறுஞ்சோறு
* வெஞ்சோறு
* தென்னஞ்சோறு
* வரகின் சோறு


கடைசியாக ஒரு செய்தி. சாதம், சாம்பார், பொரியல், துவையல், பச்சடி போன்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் அதற்கு என்ன பெயர் தெரியுங்களா... கூட்டமுது.

சான்றுகள்:

1. சூடாமணி நிகண்டு
2. அழுகணிச் சித்தர் பாடல்
3. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
4. Tamil lexicon.University of Madras.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.12.2020




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக