19.12.2020
Water Falls என்பதை அப்படியே மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்கிறோம். நீருக்கு ஏது வீழ்ச்சி? அருவி எனும் சொல்லே ஏற்புடையது.
King Cobra என்பதை வார்த்தை மாறாமல் பெயர்த்து ராஜ நாகம் என்கிறோம். கருநாகம் எனும் சொல்லே தமிழுக்கு ஏற்றது.
இதை எல்லாம் விடப் பெரிய வியப்பு என்னவெனில் ’டீசல்’ என்பதைக் ’கல்நெய்’ என மொழி பெயர்ப்பது.
டீசல் எண்ணெயைக் கண்டு அறிந்த ரூடால்ப் டீசல் என்பவரின் பெயரே அதற்கு வைக்கப் பட்டது. கண்டுபிடிப்புகளை அந்தந்த மொழிப் பெயர்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது அவற்றின் பெயர்களைத் தமிழில் உருவாக்கலாமா என்பது பெரும் விவாதத்திற்கு உரியது.
கண்டறிந்தோர் இட்ட பெயரை ஏற்பதே அந்தக் கண்டுபிடிப்பிற்கு நாம் செய்யும் மரியாதை என ஒரு தரப்பினரும்; அவற்றிற்குத் தமிழில் பெயரிட்டால் தமிழின் சொற்களஞ்சியம் மேலும் பெருகும் என ஒரு தரப்பினரும் கூறுகின்றனர். எது சரி என்பது உங்கள் சிந்தனைக்கு! சரி.
வணக்கத்திற்கு வருவோம். Good morning என்பது ’உனக்கு நல்ல காலைப் பொழுது அமையட்டும்’ என விருப்பம் (Wish) தெரிவித்தல். தமிழில் வணக்கம் என்பது வணங்குதல். இரண்டும் வேறுவேறு பொருள் தரக் கூடியன.
ஆனால், வணங்கும் போது நாம் விரும்புதல் பொருள் தரும் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி, ’காலை வணக்கம்’, ’மதிய வணக்கம்’, ’மாலை வணக்கம்’, ’இராத்திரி வணக்கம்’, ’படுக்கை வணக்கம்’, ’பாய் வணக்கம்’ என்று கூறி வருகிறோம்.
ஆங்கிலத்தில் கூறும்போது விரும்புதல் ருளில் Good morning, Good afternoon, Good night என்று கூறலாம்.
ஆனால் தமிழில் கூறும் போது, சிறு பொழுதுகளை இணைத்து வணங்குதல் இலக்கண வழக்கப்படி பிழை என்பதால் வணங்குதல் பொருளில் வணக்கம் என்று மட்டுமே கூற வேண்டும்.
காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம் எனக் கூறுவதனைத் தவிர்த்தல், தமிழ் இலக்கண வழக்கப்படி சரியானதாகும்.
அகன்சரவணன், ஆனந்த விகடன்
03.01.2020
https://www.vikatan.com/oddities/miscellaneous/small-explanation-about-the-tamil-word-vanakkam
வணக்கம் என்பது ஒன்றுதான்.
காலைக்கு ஒரு வணக்கம், மாலைக்கு ஒரு வணக்கம் என்று பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சிறப்பு.
வணக்கம் என்பதற்குப் பன்மையும் இல்லை. வணக்கங்கள் என்று சொல்வது தவறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக