01 ஜனவரி 2021

தமிழ் எப்படி எல்லாம் தடுமாறி உள்ளது - ரஞ்சன் கங்கார் பூலாய்

27.12.2020

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி



காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி

அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி

குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி



அமிழ்தை  அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி

ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி

தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி



முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி

உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி

படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி



அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி

படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

அழகு தமிழ்ச் சொற்கள் எப்படி எப்படி எல்லாம் திசை மாறி உள்ளன.

#தமிழ் மொழியைப் பேணுவோம்







மலேசியாவில் தமிழ்க்கல்வி விழிப்புணர்வு - ஜெயகோபாலன் பாகான் செராய்

27.12.2020

நாடு முழுக்க உள்ள நம் இந்தியர்கள் (தமிழர்கள்) ஒவ்வொவரும் ஆங்காங்கே இருக்கின்ற தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.  அந்த வலையில் நம் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிப்பதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டுமாய்ப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மலேசியாவின் தமிழ்க்கல்வி மேம்பாடு குறித்து ஆய்வறிக்கையை உருவாக்கி அதன் மூலம் எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த சமூகக் கடப்பாடு கொண்ட அனைத்துப் பொது இயக்கங்களும் இணைந்து; மலேசியாவின் தமிழ்க்கல்வி மேம்பாடு குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் இருந்தன. அந்த எண்ணிக்கை பின்னர் 888-ஆக குறைந்தது. தற்போது 526 தமிழ்ப்பள்ளிகள்தான் உள்ளன.

ஆக தமிழ்ப்பள்ளி; தமிழ்க்கல்வி சார்ந்த விவகாரங்கள்; எதிர்காலச் சவால்கள்; தேவைகள்; என்ன என்பதை முதலில் நாம் முடிவு செய்ய வேண்டும்.

அப்படி முடிவு செய்யும் பட்சத்தில் தமிழ்ப் பள்ளிக்கான ஒரு திட்ட வரைவை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது ஒருவர் முன்னெடுக்கும் செயலாக இருக்கக் கூடாது. இதில் பல இயக்கங்கள் இணைந்து தங்களின் கருத்துக்களை முன் வைக்கும் போது நம் ஆய்வு அறிக்கை மேலும் வலு பெறும்.

தமிழ் வழி கல்வியைப் பொறுத்தவரை பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கின்றோம். அத்துடன் தமிழ்வழிக் கல்வியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து நாம் இப்போதே ஆலோசிக்க வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? இதை ஆய்வு செய்து அதை அதிகரிப்பதற்கு என்ன மாதிரியான ஆக்ககரமான திட்டங்களை முன் எடுக்கலாம் என்பது குறித்தும் நாம் இப்போதே முடிவு செய்ய வேண்டும். காலம் வேகமாகக் கரைந்து போகிறது.

தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து நிற்க பல்வேறான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கற்றல் கற்பித்தலில் தரம் உள்ளதா; தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு கண்டுள்ளதா என பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டிய காலக் கட்டத்தில் பயணிக்கின்றோம்.

அத்துடன் Sekolah Kurang Murid (SKM) குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை மிக மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே இப்போதைக்கு நமக்கு ஒரு பெரிய சவால்.  

அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் (NGO), அரசியல் கட்சிகள், மற்றும் சமுதாய, சமய  இயக்கங்கள் மற்றும் தனிநபர்களும் தயவுசெய்து முன்வந்து இந்தத் தமிழ்த் தொண்டினைச் செய்து நமது எதிர்கால தமிழ்ச் சந்ததியினரிடம் தாய்த் தமிழைக் கொண்டு சேர்ப்பது என்பது மிக அத்தியாவசியமாகும்.

Cikgu JAYAGOPALLAN, Bagan Serai
மாநில கல்விக் குழுத் தலைவர்

சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவது மனித இனத்தை காப்பாற்றுவதாகும் - கரு. ராஜா

25.12.2020

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பேரன் ஸ்டார் (25.12.2020) நாளிதழில் ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதி இருக்கிறார். அதன் தமிழாக்கத்தைப் பதிவு செய்கிறோம்.)

இயற்கைச் சூழலின் பாதிப்பு என்பது பெரும்பாலும் எதிர்பார்க்காத சூழ்நிலைகளைக் கொண்டது. அந்த வகையில் கோவிட் -19 பெரும் தொற்று நோயில் இருந்து ஒரு பெரிய பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம்.

கொரோனா வைரஸைப் பொறுத்த வரையில், ஈரமான சூழலைக் கொண்ட சந்தைகள்; அங்கே சில விலங்கு இனங்களுக்கு அதிகமான திறந்த இருப்பிட சூழ்நிலையை உருவாக்கித் தந்து உள்ளன. அதனால் கொரோனா வைரஸின் முதல் மனிதப் பாதிப்பு அங்கே ஏற்பட்டது. அதுவே இயல்புச் சூழலில் விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் காரணமாகவும் அமைந்து போனது.

இத்தகைய நிகழ்வுகள் தான் உலகின் ஒருமைப் பாட்டையும்; உலகின் சமநிலைத் தன்மையைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும்; இயற்கை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. ஏனெனில் அதன் வளங்களில் இருந்தும்; அதன் பாதுகாப்பில் இருந்தும் தான் நாம் நல்ல நல்ல பயன்களை அடைந்து வருகிறோம்.

உலகிற்குத் தேவையான ஆக்ஸிஜன் எனும் உயிர்க் காற்றின் பாதி அளவு கடல்களில் இருந்து கிடைக்கின்றது. அதே வேளையில் கரியமிலக் காற்றையும் வெப்பத்தையும் பெரிய அளவில் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு கொள்கலனாகவும் கடல்கள் விளங்கி வருகின்றன.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அழிவு ஏற்படுமானால்; ஆழ்கடல்கள் சேமித்து வைத்து இருக்கும் கரியமிலக் காற்று அனைத்தும் வெளியாகும் சூழல் ஏற்படும். ஏறக்குறைய 1.02 பில்லியன் டன்கள் கரியமிலக் காற்று (bit.ly/iucn_climate).

கிரிபாட்டி நாட்டில் (Republic of Kiribati) லைன் தீவுகள் (Line Islands) உள்ளன. அங்கே அறிவியலாளர்கள் ஆய்வுகள் நடத்தினார்கள். மனிதர்களின் இடையூறுகளினால் பவளப் பாறைகளுக்கும்; சுற்றுச் சூழலுக்கும் பெருத்த தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. திடுக்கிடும் தகவல்கள் அந்த ஆய்வுகள் மூலம் தெரிய வருகின்றன.

உணவு வலைப் பின்னணியில் ஏற்படும் இடையூறுகளினால் பல்லுயிர்களுக்கும் குறைபாடுகள் எற்படுகின்றன. தவிர தீவுகளில் வாழும் மனிதர்களைக் காட்டிலும் பவளத் தீவுகளில் 10 மடங்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் வாழ்வதாகக் கண்டு அறிந்தனர்.

கடல் சார்ந்த புலால் பொருள்களுக்காகப் பெரிய வகை கிளிஞ்சல்கள் அங்கு அறுவடை செய்யப் படுக்கின்றன. அந்தக் கிளிஞ்சல்கள்; கடல் நீரில் வாழும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்றும் இயற்கை வடிகட்டிகளாகச் செயல் பட்டு வருகின்றன. இதையும் கண்டு அறிந்தனர்.

ஆகவே இந்தப் பெரிய வகை கிளிஞ்சல்களை அதிகமாக அறுவடை செய்வதால் இயற்கைச் சமநிலையில் பாதிப்புகள் ஏற்படும். உண்மையில் பார்க்கப் போனால் நோயை உருவாக்கும் நோய்க் கிருமிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போலாகும்.

கடலில் வாழும் உயிரினங்களின் அழிவு கொரோனா போன்று அடுத்த ஒரு ஜூனோடிக் தொற்று நோய்க்கு; அதாவது விலங்கில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய் வகைக்கு வழிவகுக்கலாம். 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வு அவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயற்கை முக்கியமான பங்கு வகிக்கிறது. இதை நாம் உணர்ந்து கொள்வது மிக முக்கியம். ஆகவே அந்த இயற்கையின் தொடர்ச்சியான ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவது முக்கியம். இயற்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிக முக்கியம்.

புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் சர் டேவிட் அட்டன்பரோ கூறி உள்ளார்: “உண்மை இதுதான்: இயற்கை உலகம் மாறிக் கொண்டு வருகிறது. இருப்பினும் நாம் அந்த உலகத்தை முற்றிலும் சார்ந்து வாழ்கிறோம். இயற்கை நமக்கு உணவு, நீர் மற்றும் காற்றை வழங்குகிறது. இது நமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொருள்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும்.”

ஹரேஷ் ஜெயந்த் மகாலிங்கம், ஈப்போ
ஸ்டார் நாளிதழ், 25.12.2020

Panayapuram Athiyaman: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. நல்வாழ்ததுகள் தம்பி

Ratha Patchiappan:
பூவோடு‌  சேர்ந்த ‌நாரும் மணக்கும், என்பது மிக சரியாக  இருக்கிறது.🌹🌹.நல் வாழ்த்துக்கள்

Raja Sg Buluh: 17 வயது பேரன் இந்த போடு போடுரார்.ஐயா முத்துக்கிருஷ்ணன் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டுரை எழுதுவது ஒரு கைவந்த கலையாகிவிட்டது. அதுவும் ஆங்கில கட்டுரை.பாராட்டுக்கள் தம்பி. எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராய் வருவாய்.

Seliah Sellam: மலாக்கா முத்துகிருஷ்ணன்  அவர்களின் பேரனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

பெருமாள் கோலாலம்பூர்: சிறுசு எழுதும் விடயம் பெருசு... தமிழாக்கமுடன் பகிர்வது் மகிழ்ச்சி. நன்றி.

https://www.thestar.com.my/opinion/letters/2020/12/25/saving-the-environment-will-save-the-human-race-too

 

அமெரிக்காவுக்கு பண உதவி செய்ய முன்வந்த நஜீப்

24.12.2020

1எம்.டி.பி. பண மோசடி என்பது ஈவு இரக்கம் இல்லாமல் அரங்கேற்றம் கண்ட மிக மோசமான மோசடி. வரலாறு இருக்கும் வரையில் மலேசிய மக்கள் மறக்கவே மாட்டார்கள்.

அந்த 1எம்.டி.பி. மோசடியினால் பாதிக்கப்பட்ட மலேசிய மக்கள் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு உழைத்து உழைத்து அந்த மோசடிப் பணத்தைக் கட்ட வேண்டும்.

உட்கார்ந்து சம்பாதித்தாலும் சரி; ஓடி ஓடி சம்பாதித்தாலும் சரி; அல்லது படுத்துக் கொண்டே சம்பாதித்தாலும் சரி; 1எம்.டி.பி. கடனை மலேசிய மக்கள் தான் கட்டியாக வேண்டும். இன்னும் 20 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அதுவும் இந்த 1எம்.டி.பி. கடனை மட்டும் கட்டுவதற்கு 20 ஆண்டுகள்.

அதே சமயத்தில் இந்த நாடு வாங்கிய கடன்களை எல்லாம் கட்ட வேண்டும் என்றால் (1 டிரில்லியன் - 1000 பில்லியன் - 100,000 கோடி) ஒவ்வொரு மலேசியரும் 500 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதாவது மலேசியர்கள் பல தலைமுறைகளுக்கு கடன்காரர்களாக எழுதி வைக்கப்பட்டு உள்ளது.

அது மட்டும் அல்ல. அதற்கான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும். மறுபடியும் சொல்கிறேன். அந்த மோசடியின் கதாநாயகர்களை மலேசிய மக்கள் காலம் பூராவும் மன்னிக்க மாட்டார்கள்.

1எம்.டி.பி. நிறுவனம் 2009-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த ஆண்டில் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை 1எம்.டி.பி. மோசடிகள் தொடர்ந்து பீடுநடை போட்டு ஊர்க்கோலம் கண்டன.

1எம்.டி.பி. நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த 1எம்.டி.பி. இரகசியங்கள் மூடி மறைக்கப் பட்டு; பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டன. எங்க அப்பன் குதிருக்குள் இல்லை எனும் பொன்மொழியை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்லிச் சமாளித்தார்களோ தெரியவில்லை. ஜொல்லுவாய் ஜோலோவிடம் தான் கேட்க வேண்டும்.

2015-ஆம் ஆண்டில் ஜோலோவின் இரகசிய மின்னஞ்சல் கடிதங்கள் கசியத் தொடங்கின. பெட்ரோ சவூதி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஜூஸ்தோ எனும் சுவிசர்லாந்து நாட்டுக்காரர் மூலமாகத் தான் இரகசியங்கள் கசிந்தன.

அந்த மின்னஞ்சல்கள் முதன்முதலாகச் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்திற்கும்; தி எட்ஜ் நாளிதழுக்கும்; அதன் பின்னர் லண்டன் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கும் கிடைத்தன.

சரவாக் ரிப்போர்ட் இணையத் தள ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் துணிந்து களம் இறங்கி வேலை செய்தார். மலேசியாவில் ஏற்பட்ட ஆட்சி  மாற்றத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்று அவரைத் தாராளமாகச் சொல்லலாம்.

லண்டனில் அவர் வீட்டின் சமையல் அறையில் இருந்து சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தை நடத்தி இருக்கிறார்.

கிளேர் ரியூகாசல் பிரவுன், சரவாக் மாநிலத்தில் பிறந்தவர். அதனால் அந்த மாநிலத்தின் மீது தனி ஒரு பாச உணர்வு. சரவாக் பழங்குடி மக்கள் மீதும் தனி ஒரு ஈர்ப்பு. சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சரவாக் ரிப்போர்ட் எனும் இணையத் தளத்தை உருவாக்கினார்.

சரவாக் பழங்குடி மக்களின் உரிமைகளைத் தற்காக்க ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தையும் தோற்றுவித்தார்.

1எம்.டி.பி. மோசடிகளை முதன் முதலாக அனைத்துலக அளவில் வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்தியது ’தி வால் ஸ்டீரிட் ஜர்னல்’ எனும் அமெரிக்க ஆங்கில நாளிதழ்.

இந்த ஊடகங்களின் வழியாகத் தான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் ஊழல் மோசடிகள் உலக அளவில் அம்பலத்திற்கு வந்தன. அதன் பிறகுதான் அமெரிக்காவின் நீதித் துறை தீவிரமாக அக்கறை காட்டியது.

ஏன் அமெரிக்கா இந்த விசயத்தில் அவ்வளவு அக்கறை காட்டியது என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. புழக்கத்தில் இருந்த தொகை ஒரு மில்லியன் பத்து மில்லியனாக இருந்து இருந்தால் தீபாவளி நேரத்தில் கொளுத்திப் போட்ட பட்டாசு மாதிரி பொசுக் என்று அவிந்து போய் இருக்கும்.

ஆனால் 1எம்.டி.பி. பிரச்சினையில் பல நூறு; பல ஆயிரம் கோடிகள் புழங்கி இருக்கின்றன. அதுவும் பெரும்பாலான பணப் புழக்கங்கள் அமெரிக்காவில் நடந்து உள்ளன. திருட்டுப் பணத்தில் அமெரிக்காவின் சொத்துகள் மோசம் போனதாக அமெரிக்காவுக்கு வருத்தம்.

அது மட்டும் அல்ல. அமெரிக்காவுக்கு மலேசியா பண உதவி செய்யத் தயார் என்று முன்னாள் மலேசியத் தலைவர் நஜீப் சொன்னது அமெரிக்காவுக்கு அவமானமாகப் போய் விட்டது. அதை உடைத்து எறியவே அமெரிக்க நீதித் துறை தீவிரமாகக் களம் இறங்கியது. இதையும் கவனத்தில் கொள்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.12.2020

 

நீலப் பெருங்கடல் வியூக அலசல் - குமரன் வேலு

23.12.2020

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் சில பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் பற்றி ஆராய்வோம். இவை பெற்றோர்களை ஈர்க்கக் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட திட்டங்கள்.

1. இலவச காலை, மதிய உணவு

2. இலவச பள்ளிச் சீருடை, காலணி, புத்தகப்பை, பள்ளியில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

3. மழலையர்ப் பள்ளியும் குழந்தைகள் பராமரிப்பு மையமும் (அரசாங்கம் & தனியார்)

4. இலவச போக்குவரத்து சேவை (பேருந்து கட்டணம் இலவசம்) அல்லது மாத ஊக்கத் தொகை

5. தங்கிப் பயில விடுதி வசதி

6. சீன மொழி படிக்க வாய்ப்பு

7. TAB, கையடக்க கணினி இலவசம்

8. பள்ளி கட்டணம் குறைப்பு

மேலே குறிப்பிடப்பட்டவை பி40 பெற்றோரை வெகுவாகக் கவரும்.

கல்வித்தரம் மற்றும் சிறந்த கல்வி வாய்ப்பை விரும்பும் ஓரளவுக்கு படித்த பெற்றோரைக் கவரக்கூடிய திட்டங்களைச் சில பள்ளிகள் விளம்பரம் செய்து இருந்தன. அவை வருமாறு:

1. தேர்ந்த ஆசிரியர்கள் & சிறந்த கற்றல் கற்பித்தல்

2. திட்டமிடப்பட்ட கல்வி& விளையாட்டு மேம்பாடு

3. உள்நாட்டு, வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு

4. சமய வகுப்பு

5. தேகுவாண்டோ, கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு பயிற்சி

6. மெதுநிலை கற்றல் மாணவருக்கு நிபுணத்துவ வழிகாட்டல்

7. நவீன வசதிகள் கொண்ட வகுப்பறை (எ.கா. திறன்பலகை), அறிவியல் கூடம்

8. DLP - இருமொழிப் பாடத்திட்டம்

9. BSN சேமிப்பு திட்டம்

10. பெற்றோர் பங்களிப்பும் அவர்களுக்கான சிறப்பு பயிற்சி (இம்பாக்கு, Impak திட்டம்)

11. கணினி, (Robotics) ரோபொட்டிக் பயிற்சிகள், Coding பயிற்சிகள்

12. இயங்கலைவழி கற்க வாய்ப்பு

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதில் நல்ல பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை பெரும் தொகையை விழுங்கும். நன்கொடையாளர்கள் தொடர்ந்து நிதியை தந்துவ வேண்டிய சுமை ஏற்படும்.

ஆனால், தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலையான எண்ணிக்கையில் மாணவரைக் கொண்டிருக்க சில புத்தாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக 81,000 மாணவர்கள், தேசியப் பள்ளியில் பயிலும் இவர்களைத் தமிழ்ப் பள்ளிக்கு மீட்டுக் கொண்டு வரக்கூடிய திட்டங்கள் தேவை.

இவர்கள்தான்  தமிழ்ப்பள்ளியை வெறுக்கும் அல்லது மறுக்கும் அந்தக் கூட்டம். இவர்கள் நமது வாடிக்கையாளர் அல்ல. ஆனால் வாடிக்கையாளராக மாற்ற வேண்டும். எந்தப் பாதையில் செல்வது?

நீலப்பெருங்கடல் வியூகத்தில் 6 பாதைகள் பற்றி பேசப் படுகின்றன.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.