27.12.2020
நாடு முழுக்க உள்ள நம் இந்தியர்கள் (தமிழர்கள்) ஒவ்வொவரும் ஆங்காங்கே இருக்கின்ற தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அந்த வலையில் நம் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் அதிகரிப்பதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டுமாய்ப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மலேசியாவின் தமிழ்க்கல்வி மேம்பாடு குறித்து ஆய்வறிக்கையை உருவாக்கி அதன் மூலம் எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த சமூகக் கடப்பாடு கொண்ட அனைத்துப் பொது இயக்கங்களும் இணைந்து; மலேசியாவின் தமிழ்க்கல்வி மேம்பாடு குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் இருந்தன. அந்த எண்ணிக்கை பின்னர் 888-ஆக குறைந்தது. தற்போது 526 தமிழ்ப்பள்ளிகள்தான் உள்ளன.
ஆக தமிழ்ப்பள்ளி; தமிழ்க்கல்வி சார்ந்த விவகாரங்கள்; எதிர்காலச் சவால்கள்; தேவைகள்; என்ன என்பதை முதலில் நாம் முடிவு செய்ய வேண்டும்.
அப்படி முடிவு செய்யும் பட்சத்தில் தமிழ்ப் பள்ளிக்கான ஒரு திட்ட வரைவை உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது ஒருவர் முன்னெடுக்கும் செயலாக இருக்கக் கூடாது. இதில் பல இயக்கங்கள் இணைந்து தங்களின் கருத்துக்களை முன் வைக்கும் போது நம் ஆய்வு அறிக்கை மேலும் வலு பெறும்.
தமிழ் வழி கல்வியைப் பொறுத்தவரை பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கின்றோம். அத்துடன் தமிழ்வழிக் கல்வியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து நாம் இப்போதே ஆலோசிக்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? இதை ஆய்வு செய்து அதை அதிகரிப்பதற்கு என்ன மாதிரியான ஆக்ககரமான திட்டங்களை முன் எடுக்கலாம் என்பது குறித்தும் நாம் இப்போதே முடிவு செய்ய வேண்டும். காலம் வேகமாகக் கரைந்து போகிறது.
தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து நிற்க பல்வேறான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கற்றல் கற்பித்தலில் தரம் உள்ளதா; தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு கண்டுள்ளதா என பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டிய காலக் கட்டத்தில் பயணிக்கின்றோம்.
அத்துடன் Sekolah Kurang Murid (SKM) குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை மிக மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே இப்போதைக்கு நமக்கு ஒரு பெரிய சவால்.
அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் (NGO), அரசியல் கட்சிகள், மற்றும் சமுதாய, சமய இயக்கங்கள் மற்றும் தனிநபர்களும் தயவுசெய்து முன்வந்து இந்தத் தமிழ்த் தொண்டினைச் செய்து நமது எதிர்கால தமிழ்ச் சந்ததியினரிடம் தாய்த் தமிழைக் கொண்டு சேர்ப்பது என்பது மிக அத்தியாவசியமாகும்.
Cikgu JAYAGOPALLAN, Bagan Serai
மாநில கல்விக் குழுத் தலைவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக