24.12.2020
1எம்.டி.பி. பண மோசடி என்பது ஈவு இரக்கம் இல்லாமல் அரங்கேற்றம் கண்ட மிக மோசமான மோசடி. வரலாறு இருக்கும் வரையில் மலேசிய மக்கள் மறக்கவே மாட்டார்கள்.
அந்த 1எம்.டி.பி. மோசடியினால் பாதிக்கப்பட்ட மலேசிய மக்கள் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு உழைத்து உழைத்து அந்த மோசடிப் பணத்தைக் கட்ட வேண்டும்.
உட்கார்ந்து சம்பாதித்தாலும் சரி; ஓடி ஓடி சம்பாதித்தாலும் சரி; அல்லது படுத்துக் கொண்டே சம்பாதித்தாலும் சரி; 1எம்.டி.பி. கடனை மலேசிய மக்கள் தான் கட்டியாக வேண்டும். இன்னும் 20 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அதுவும் இந்த 1எம்.டி.பி. கடனை மட்டும் கட்டுவதற்கு 20 ஆண்டுகள்.
அதே சமயத்தில் இந்த நாடு வாங்கிய கடன்களை எல்லாம் கட்ட வேண்டும் என்றால் (1 டிரில்லியன் - 1000 பில்லியன் - 100,000 கோடி) ஒவ்வொரு மலேசியரும் 500 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதாவது மலேசியர்கள் பல தலைமுறைகளுக்கு கடன்காரர்களாக எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
அது மட்டும் அல்ல. அதற்கான வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும். மறுபடியும் சொல்கிறேன். அந்த மோசடியின் கதாநாயகர்களை மலேசிய மக்கள் காலம் பூராவும் மன்னிக்க மாட்டார்கள்.
1எம்.டி.பி. நிறுவனம் 2009-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த ஆண்டில் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை 1எம்.டி.பி. மோசடிகள் தொடர்ந்து பீடுநடை போட்டு ஊர்க்கோலம் கண்டன.
1எம்.டி.பி. நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த 1எம்.டி.பி. இரகசியங்கள் மூடி மறைக்கப் பட்டு; பத்திரமாகப் பாதுகாக்கப் பட்டன. எங்க அப்பன் குதிருக்குள் இல்லை எனும் பொன்மொழியை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்லிச் சமாளித்தார்களோ தெரியவில்லை. ஜொல்லுவாய் ஜோலோவிடம் தான் கேட்க வேண்டும்.
2015-ஆம் ஆண்டில் ஜோலோவின் இரகசிய மின்னஞ்சல் கடிதங்கள் கசியத் தொடங்கின. பெட்ரோ சவூதி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஜூஸ்தோ எனும் சுவிசர்லாந்து நாட்டுக்காரர் மூலமாகத் தான் இரகசியங்கள் கசிந்தன.
அந்த மின்னஞ்சல்கள் முதன்முதலாகச் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்திற்கும்; தி எட்ஜ் நாளிதழுக்கும்; அதன் பின்னர் லண்டன் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கும் கிடைத்தன.
சரவாக் ரிப்போர்ட் இணையத் தள ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் துணிந்து களம் இறங்கி வேலை செய்தார். மலேசியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்று அவரைத் தாராளமாகச் சொல்லலாம்.
லண்டனில் அவர் வீட்டின் சமையல் அறையில் இருந்து சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தை நடத்தி இருக்கிறார்.
கிளேர் ரியூகாசல் பிரவுன், சரவாக் மாநிலத்தில் பிறந்தவர். அதனால் அந்த மாநிலத்தின் மீது தனி ஒரு பாச உணர்வு. சரவாக் பழங்குடி மக்கள் மீதும் தனி ஒரு ஈர்ப்பு. சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சரவாக் ரிப்போர்ட் எனும் இணையத் தளத்தை உருவாக்கினார்.
சரவாக் பழங்குடி மக்களின் உரிமைகளைத் தற்காக்க ரேடியோ பிரீ சரவாக் எனும் வானொலி நிலையத்தையும் தோற்றுவித்தார்.
1எம்.டி.பி. மோசடிகளை முதன் முதலாக அனைத்துலக அளவில் வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்தியது ’தி வால் ஸ்டீரிட் ஜர்னல்’ எனும் அமெரிக்க ஆங்கில நாளிதழ்.
இந்த ஊடகங்களின் வழியாகத் தான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் ஊழல் மோசடிகள் உலக அளவில் அம்பலத்திற்கு வந்தன. அதன் பிறகுதான் அமெரிக்காவின் நீதித் துறை தீவிரமாக அக்கறை காட்டியது.
ஏன் அமெரிக்கா இந்த விசயத்தில் அவ்வளவு அக்கறை காட்டியது என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. புழக்கத்தில் இருந்த தொகை ஒரு மில்லியன் பத்து மில்லியனாக இருந்து இருந்தால் தீபாவளி நேரத்தில் கொளுத்திப் போட்ட பட்டாசு மாதிரி பொசுக் என்று அவிந்து போய் இருக்கும்.
ஆனால் 1எம்.டி.பி. பிரச்சினையில் பல நூறு; பல ஆயிரம் கோடிகள் புழங்கி இருக்கின்றன. அதுவும் பெரும்பாலான பணப் புழக்கங்கள் அமெரிக்காவில் நடந்து உள்ளன. திருட்டுப் பணத்தில் அமெரிக்காவின் சொத்துகள் மோசம் போனதாக அமெரிக்காவுக்கு வருத்தம்.
அது மட்டும் அல்ல. அமெரிக்காவுக்கு மலேசியா பண உதவி செய்யத் தயார் என்று முன்னாள் மலேசியத் தலைவர் நஜீப் சொன்னது அமெரிக்காவுக்கு அவமானமாகப் போய் விட்டது. அதை உடைத்து எறியவே அமெரிக்க நீதித் துறை தீவிரமாகக் களம் இறங்கியது. இதையும் கவனத்தில் கொள்வோம்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.12.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக