12 ஜனவரி 2021

விளைச்சல் - சத்யா பிரான்சிஸ்

11.01.2021

பதிவு செய்தவர்: கரு. ராஜா

ஊரெல்லாம் நதி
நடன மங்கையாக
வளைந்தாடிச் செல்கிறது
வயல்வெளி எங்கும்
இளங்கன்னியாக
நாணத்துடன் கதிர்கள்
தலை சாய்ந்து கிடக்கின்றன..!



வரப்பைச் சுற்றி
வேலி அமைத்தது போல்
பழ மரங்கள்
கருத்தரித்தப் பெண் போல
கனிகளைத் தாங்கி நிற்கின்றன..!

கண்மாய் நீர்
வயல்களின் தாகம் தீர்க்க
தாயன்புபோல்
பெருக்கெடுத்து ஓடுகிறது..!

விலை கதிரோடு
ஒட்டுணியாக வளர்ந்த
கோரைப் புற்கள்
தலை அறுபடும் நாளுக்கு
வருத்தமுடன் காத்திருக்கின்றன..!

விளைச்சல் கண்ட
வயல் வெளியைக்
கதிரவன் ஒளி பாய்ச்ச
காற்று தாலாட்ட
சிட்டுக்குருவிகள் இன்னிசைக்க
மழைத்துளிகள் தூவ
விவசாயி மனது சிலிர்க்கிறது..!


தனசேகரன் தேவநாதன்: விவசாயத்தை அதிகாலையிலேயே ஆராதனை செய்து விட்டீர்...

ராதா பச்சையப்பன்: வயல்வெளி எங்கும் இளங்கன்னியாக நாணத்துடன் கதிர்கள் தலைச் சாய்ந்து கிடைக்கின்றன... நல்ல கவிதை நயம்.


ரசனைகள் பலவிதம்

11.01.2021

கள்ளூரப் பார்க்கும் பார்வை... உள்ளூரப் பாயுமே... துள்ளாமல் துள்ளும் உள்ளம்... சொல்லாமலே வில்லோடு அம்பு இரண்டும்... கொல்லாமல் கொல்லுமே... பெண் பாவை கண்கள்... கழற்றி எறியும் ஆடை... கவிதை பிழிந்த ஓடை... சுழற்றிக் கோதும் ஜடை... இது கம்பன் கற்கா கலை.

ஜெயகோபான்: தங்கள் ரசனை தனி ஐயா...

முத்துக்கிருஷ்ணன்: மாற்றுப் பார்வையில் மாறுபட்ட ரசனைகள்... 

தனசேகரன் தேவநாதன்: ஒற்றை கல் மூக்குத்தி ஜொலிக்குதடி...



 

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் ஜனவரி 16-இல் கோவாக்சின் தடுப்பூசி

11.01.2021

இந்தியா தன் மக்களுக்கு, ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த உள்ளது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தும் என அறிவித்து உள்ளது.

கரு ராஜா: நமக்கு எப்ப தடுப்பூசி???

குமரன் மாரிமுத்து: தடுப்பூசி என்ற பெயரில் குழாய் தண்ணியைத் தான் கொடுப்பாங்க. ஊழல் பெருச்சாளிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ஐயா? வரும்; ஆனா, வராது...

எஸ். வேலாயுதம் பினாங்கு: என்ன கொடுமை சார் இது...

தனசேகரன் தேவநாதன்: நாளுக்கு நாள் கடுப்பூசி போடுகிறார்களே அது போதாது நம்மை இம்சை படுத்த...



 


11 ஜனவரி 2021

தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு ஏன் பங்கு இல்லை?

 09.01.2021

பதிவு செய்தவர் - ரஞ்சன், கங்கார் பூலாய், ஜொகூர்

தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

ஒரு வீட்டில் பிறந்த அண்ணன் - தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்; அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்து கொள்வதோடு சரி.

மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும். பின் வசூலிக்கப்படும். சமயங்களில் வட்டியுடன்...

ஆனால் பெண்களுக்கு பாகம் எதுவும் கொடுப்பது இல்லை. மாறாகக் கல்யாணத்திற்குச் சீர் செய்வார்கள். நகை நட்டு பாத்திரம் பண்டம் வாகனம் ரொக்கம் என இந்தப் பட்டியல் நீளும்.

பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும். அதோடு விடுவது இல்லை. சீமந்தம், பிள்ளை பேரு, பெயர் சூட்டுதல் தொடங்கி அந்தப் பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் கொடுத்தே ஆக வேண்டும்.

அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்.

எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்து இருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு போயிருக்கும்.

இதை எந்த ஆணும் கணக்குப் பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன். இனிமேல் செய்ய முடியாது" என்று சொல்வது இல்லை.

இவன் கடன வாங்கியோ; தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின் அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வான்.

நியாயமாக வரதட்சிணைக்கு எதிராக போட வேண்டியவன் ஆண் தான்.   தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.

கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம். அப்படியே இருந்தாலும் அதைக் கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக் கொள்வோம் என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம். ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை.

வேறு வீட்டில் வாழப் போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்.  

அப்படி பாகமாய் சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டுவிட்டால் அந்தப் பெண் ஆதரவற்று போவாள். இவனும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கி விடுவான்.

அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவைப் பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களைப் பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டு வந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்.  

எங்கோ ஒரு சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றி விட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களைச் சொல்லவில்லை.

நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற அரசோ - போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான். ஏன்னா அவன் தான் சக உதிரன்.

https://www.vikatan.com/arts/literature/138517-equal-ownership-for-women-in-home-property

ராதா பச்சையப்பன்:

இந்த
க் கட்டுரை அருமை. தமிழ் நாட்டில் பிறந்த பெண்களுக்கு நீங்கள் சொன்னது சரியாக இருக்கும். தமிழ்நாட்டில்‌ ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விட்டுப் பெற்றோர் படும் பாடு... பெரும் பாடுதான்.

அதிலும் அந்த வீட்டில் மேலும் ஒன்று அல்ல இரண்டு பெண்கள் இருந்தால் கேட்கவே வேண்டாம்.‌ சகோதரரே நீங்கள் சொல்வது அங்கு சரி. ஆனால் மலேசியாவில் அப்படி இல்லையே.

நீங்கள் சொல்வதும் போல், எந்தப் பெண்ணுக்கு எந்த அண்ணண், தம்பி செய்கிறார்கள். திருமணம், ஒரு குழந்தையோடு சரி... தாய் மாமன் சீர் என்பது நீங்கள் சொல்வது போல்‌ ஓர் அளவுதான் செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்த வரை, பெண்கள் நாங்களும், பிறந்த வீட்டின் பெயரையும் தற்காத்துக் கொண்டும், புகுந்த வீட்டிற்கும் செல்வாக்கும் மாறாது செயல் பட்டு வருகிறோம், வாழ்கிறோம்.

பாசமுள்ள‌ எந்த‌ச் சகோதரிகளும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும், எந்தச் சிரமமும் கொடுப்பது இல்லை. பிறந்த வீட்டையும் விட்டுக் கொடுக்காமல் வாழும் பெண்கள் இன்றும் நம்மிடையே இருந்து தான் வருகிறார்கள்.

புகுந்த வீட்டிற்குத் தெரியாமல், பிறந்த வீட்டிற்கு உதவுவதும் உண்டு. ஆனால் பெண்களுக்குத் தகப்பனார் சொத்தில் பங்கு இல்லை. பெண்கள் நாங்களும் கேட்பது இல்லையே!‌

பெண்கள் நாங்கள் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் எங்கள் ஆசா பாசங்களைத்  தியாகம் ‌செய்து தான் வாழ்கிறோம் சகோதரரே!    

ஆண்கள்  தாங்கள் திருமணம் செய்யும் பெண்களிடம் ’உன் அப்பா‌ சொத்து உனக்கு சேராது... வேண்டாம் என்று சொன்னவர்கள் எத்தனை பேர்கள்.

எந்தச் சகோதரர்களின் மனம் நோகும் படி இதைப் பதிவு செய்யவில்லை. நானும் ஒரு பெண்தான். சில பல பெண்களின் சார்பில்‌‌ பதிவு செய்தேன். என்றும் உங்கள் சகோதரி 🙏.

ரஞ்சன், கங்கார் பூலாய்:

உங்கள் ஆதங்கம் புரிகிறது. தமிழ் நாட்டிற்கான பதிவை ’மலேசியம்’ புலனத்தில் தவறுதலாகப் பதிவு செய்து விட்டேன்...





இயக்குனர் – இயக்குநர் எது சரி?

09.01.2021

தவறாக எழுதப்படும் சொற்களும்; குழப்பம் தரும் சொற்களும்

இடப்புறம் உள்ளது தவறு. வலப்புறம் உள்ளது சரி.

அருகாமை – அருகில், அருகமை

அதிருஷ்டம் – அதிர்ஷ்டம்

ஆச்சர்யம் – ஆச்சரியம்

ஆவண செய்க – ஆவன செய்க

அர்ஜூன் - அர்ஜுன்

அறுவருப்பு - அருவருப்பு

அறுகம்புல் - அருகம்புல்

இருபத்தி மூன்று - இருபத்து மூன்று

இவைகள் - இவை

இயக்குனர் – இயக்குநர்

இறுக்கம் - இருக்கம்

உடற்கூறாய்வு - உடற்கூராய்வு

உத்திரவாதம் – உத்தரவாதம்

உளமாற - உளமார

எண்ணை – எண்ணெய்

ஏற்கனவே – ஏற்கெனவே

ஒருசில – சில

ஓட்டுனர் – ஓட்டுநர்

கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்

கருப்பு - கறுப்பு

கறுமை - கருமை

காணல் நீர் - கானல் நீர்

காலணி - காலனி – (குடியிருப்பு)

காலனி - காலணி – (செருப்பு)

காலம்காலமாக - காலங்காலமாக

காலாற – காலார

கீழ்க்கண்ட – கீழ்க்காணும்

கைமாறு - கைம்மாறு

கொப்பளம் – கொப்புளம்

கோர்வை – கோவை

கோர்த்தல் – கோத்தல்

சன்னதி - சன்னிதி

சித்தரிப்பு - சித்திரிப்பு

சுயேட்சை – சுயேச்சை

சுமூகம் - சுமுகம்

சுவற்றில் - சுவரில்

சுறுக்குதல் - சுருக்குதல்

தகறாறு - தகராறு

திருமணம் செய்தார் - திருமணம் செய்துகொண்டார்

தொலைப்பேசி - தொலைபேசி

தற்கொலை செய்தார் - தற்கொலை செய்துகொண்டார்

தூரம் – தொலைவு

நஞ்சை – நன்செய்

நடத்துனர் - நடத்துநர்

நாகரீகம் - நாகரிகம்

நியாபகம் - ஞாபகம்

நிருத்தம் - நிறுத்தம்

நினைவுகூறுதல் - நினைவுகூர்தல்

பதட்டம் – பதற்றம்

பிரச்சனை / பிரச்னை - பிரச்சினை

புஞ்சை – புன்செய்

புள்ளிவிபரம் - புள்ளிவிவரம்

பெருநர் - பெறுநர்

பெறுனர் – பெறுநர்

பெறும்பாடு - பெரும்பாடு

பொருமல் - பொறுமல்

பொருத்தவரை - பொறுத்தவரை

மனதாற - மனதார

மறுகுதல் - மருகுதல்

மறுவிவருதல் - மருவிவருதல்

மாதாந்திர – மாதாந்தர

முஸ்லீம் - முஸ்லிம்

வம்சாவழி - வம்சாவளி

வலது புறம் – வலப்புறம்

வரையரை - வரையறை

வாராந்திர - வாராந்தர

வாழ்த்துக்கள் – வாழ்த்துகள்

வெய்யில் – வெயில்

தொகுப்பு: மலேசியம்
09.01.2021