14 ஜனவரி 2021

டென்மார்க் அதிசயமான செய்திகள்

13.01.2021

பதிவு செய்தவர்: செபஸ்டியன், கோப்பேங், பேராக்

டென்மார்க் நாட்டில் கார் விலை மிக அதிகம். அதனால் மிகக் கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டுச் சமையல்தான்.

பள்ளியைப் பொறுத்தவரை ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள்.

படிக்கும் காலத்தில் உலக அனுபவம் பெற சுற்றுப் பயணம் போவார்கள். ஏதாவது ஓர் ஆய்வுப் புராஜக்டை எடுத்துச் செய்வார்கள். கல்லூரிக் கட்டணம் முழுக்க முழுக்க இலவசம்.

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதச் சம்பளமாக $900 கூட கிடைக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு; நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள்.

சாதாரண வேலைக்கும், இருதய சிகிச்சை மருத்துவருக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்பட்ட வேலைக்குப் போகலாம்.

வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்து விடலாம். மதிய உணவை கம்பெனிகளில் தனியாக உண்ண மாட்டார்கள்.
அலுவலகத்தில் முதலாளி முதல் கடைசி கட்டத் தொழிலாளி வரை அனைவரும் ஒன்றாகக் கூடி ஒரே அறையில் தான் உண்ணுவார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இப்படித்தான் ஒன்றாகக் கூடி உணவு உண்ணுவார்கள்.

மக்களிடையே சகோதரத்துவம் வளர வேண்டும் என்பதால் அரசு பல அமைப்புகளுக்கு உதவி செய்கிறது. மாலை வேளைகளில் சதுரங்கம், பொம்மை செய்வது போன்ற பொழுது போக்குகள்.

அரசு பல கூட்டுறவு வீடுகளைக் கட்டி உள்ளது. Bofaellesskap என பெயர். 30 குடும்பங்களைக் குடி அமர்த்துவார்கள். இங்கே எல்லாரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம். குழந்தைகள் எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்து ஓடி வருவார்கள். நீங்களும் மற்றவர் வீடுகளுக்கு தயக்கம் இல்லாமல் போகலாம்.

வீடுகளில் கூட்டுறவு சமையல். மாதத்தில் ஒரு நாள் ஒரு வீடு 30 குடும்பங்களுக்கு சமைக்கும். மற்ற 29 நாட்கள் அதன்பின் சமைக்க வேண்டியது இல்லை. இந்த 30 குடும்பங்களும் அதன்பின் வாழ்நாள் முழுக்க நல்ல நண்பர்களாக இருப்பார்கள்.

பணம், ஆடம்பரம் ஆகியவற்றைச் சுத்தமாக பொருட்படுத்தாத நாடு டென்மார்க். பி.எம். டபிள்யூ காரில் போகிறவனை விட சைக்கிளில் போகிறவனைக் கூடுதலாக மதிக்கும் நாடு.

அதனால் பணக்காரன் என சொல்லிக் கொள்ளவே பலரும் கூச்சப் படுவார்கள். தன் வளமையைப் பொருட்களை வாங்குவதில் காட்ட மாட்டார்கள். காட்டினால் மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இங்கே அதிகம்.



 

விமானங்களில் வெளியேற்றும் இருக்கை

12.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1942 ஜனவரி 13-ஆம் தேதி விமானங்களில் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் வெளியேற்றும் இருக்கை (Ejection seat) அமைப்பை முதன்முறையாக ஆபத்து நேரத்தில் பயன்படுத்தி, ஒரு விமானி தப்பித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியப் படையின், குண்டுவீச்சு ஜெட் விமானம் ஒன்றின் விமானி அவர். அவரது விமானத்தின் கட்டுப்பாட்டுக் கருவிகள், குளிரால் உறைந்து செயல் இழந்ததால் அவர் இதைப் பயன்படுத்தினார்.

விமானங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் உயிரிழப்பு என்பது மிக அதிகமாக இருந்தது. விமானம் விழும்போது, வெளியில் குதித்தாலும், இடிபாடுகளில் சிக்கி இறப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

அப்படியான நிலையில், விமானத்திலிருந்து மேலே தூக்கி வீசப்பட்டு, பாராச்சூட் மூலம் மெதுவாக விழுந்தால், அவ்வாறான உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை.

முதல் வெளியேற்றும் இருக்கை, பஞ்சீ கயிறு என்றழைக்கப்படும் எலாஸ்ட்டிக் கயிற்றால் இருக்கையை வெளியேற்றும்படி, 1910-இல் உருவாக்கப் பட்டது.

இங்கிலாந்தில் பாராச்சூட்டை உருவாக்கியவர்களில் ஒருவரான, எவரார்ட் கால்த்ராப், 1916-இல் அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தி வெளியேற்றும் இருக்கையை உருவாக்கினார்.

ரோமானியா நாட்டின் அனஸ்டேஸ் ட்ராகோமிர், வெளியேற்றும் இருக்கையின் தற்காலத்திய வடிவத்தை உருவாக்கினார். இது 1929-இல் பாரிசில் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது.

வெளியேற்றும் இருக்கையை சிறப்பாகச் செயல்படும்படி மேம்படுத்துதால் இரண்டாம் உலகப்போரின் போது, குறிப்பாக ஜெர்மானியர்களால் செய்யப்பட்டது.

தொடக்க காலத்தில், விமானி முதலில் விமானத்தின் கூரையைத் திறப்பதற்கான விசையையும், பின்னர் வெளியேற்றும் விசையையும் அழுத்தி, பாராச்சூட்டை தானே விரித்துக் கொள்ள வேண்டும். ஆனால், பின்னாளில், ஒரே விசையில் இவை  அத்தனையும் செய்யப் படுகின்றன.

விமானம் தரையில் இருந்தால், தூக்கி வீசினாலும், பாராச்சூட் விரிய உயரம் தேவை என்பதால், இருக்கையை உயரத்திற்குத் தூக்கிவீச, சிறிய அளவில் வெடிமருந்துகள், சிறிய ராக்கெட்டுகள் கூட இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

800-1300 கி.மீ. வேகத்தில் இருக்கை உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தத்தால், விமானிக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாகி உள்ளன.

சூப்பர்சானிக் போன்ற அதிவேக விமானங்களில் இருந்து வெளியேற்றப் பட்டால், உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மூடப்பட்ட (கேப்ஸ்யூல்) வெளியேற்றும் இருக்கைகள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட விமானிகள் கொண்ட போர் விமானங்களில் இருந்து அனைவரும் வெளியேற்றப்படும் போது, அவர்களுக்குள் மோதிவிடாமல் இருக்க மாறுபட்ட திசைகளில் வெளியேற்றுமாறு இந்த இருக்கைகள் அமைக்கப் படுகின்றன.

இத்தகைய முன்னேற்றங்களால், ஆபத்துக் காலங்களில் வெளியேற்றும் இருக்கையைப் பயன்படுத்தி வெளியேறுபவர்களில் 92 சதவீதம்பேர் பாதுகாப்பாக தரை இறங்குகிறார்கள்!


தமிழர் திருநாள் உருவானது எப்படி?

12.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார்

தமிழர்கள் கொண்டாடும் தைப் பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல் நாளில் தொடங்க வேண்டும் என 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார். அது போல தைப் பொங்கல் நாளினைத் தமிழர் திரு நாளாகக் கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஆவார்.


சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்குப் பாடநூல் எழுதித் தரும் தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் 'தமிழர் திருநாள்' பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார்.

அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள் அண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும்  ஆவார்கள்.

1937-ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினைத் தோற்றுவித்து "உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்" என்றும், "தமிழ்த் தாயை  தனியரசாள வையுங்கள்" என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார்.

அவற்றைத் தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அந்த ஆண்டில் இருந்தே தமிழர் திருநாள் விழா, தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத் திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார்.


அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி, தமிழின உணர்வை ஊட்டினார். தமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.

ஒவ்வொரு தமிழர் திருநாள் பெருவிழாவிலும் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்டுதல்;

தைத் திங்கள் மூன்றாம் நாளில் திருவள்ளுவர் திருநாளாக அறிவித்து விடுமுறை அளித்தல்;

சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் "ஆகாசவாணி" என்று கூறுவதை நிறுத்துதல்;

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் அகற்றி சமயக் குறிகள் நீக்கி திருக்குறள் ஏடும் எழுத்தாணியும் உடைய திருவுருவப் படத்தை திறந்து வழிபடல்;


தெருப் பெயரிலும் ஊர்ப் பெயரிலும் தமிழர்தம் பெயரிலும் தூயத் தமிழ்ப் பெயர் மட்டுமே வைத்தல் போன்ற எண்ணற்ற தமிழர் நலன் காக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அதே போல் 1946-இல் ம.பொ.சி. "தமிழரசு கழகம்" எனும் பெயரில் அமைப்பு ஒன்றைத்  தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும்.

சென்னை மட்டும் அல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசு கழகம் விளங்கியது.

இந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாகத் தெலுங்கர்கள் விசாலா ஆந்திரா (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டும் போராடி வந்தனர்.

அப்போது ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டி எழுப்புவதற்காக 'தமிழர் திருநாள்' விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில், "தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அந்த முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கு எனச் சுயநிர்ணய அறிக்கையை உறுதி செய்வதாகும்.

சுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக!" என்று அறைகூவல் தரப்பட்டது.

இந்தக் கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அப்போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணாத் துரைக்கும் இந்த கூட்டறிக்கை நகல் அனுப்பப்பட்டது. இருவருமே பதில் தர மறுத்தனர்.

1947 சனவரி 14-இல் அறிவித்த படி தமிழர் திரூநாள் விழா தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடியாக மொழிவாரி நாடுகளைப் பிரிக்க வேண்டும் என்றும், 'குமரி முதல் திருப்பதி' வரை உள்ள நிலப் பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பிறகும் தமிழரசு கழகத்தோடு ஒத்துழைக்க மறுத்த திராவிடர்க் கழகம் தனியாக 'திராவிடர் திருநாள்' பெயரிலே விழா கொண்டாடத் தொடங்கியது.

பெரியாரிடம் இருந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும் இரண்டு விதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார்.

ஆனால் பொங்கல் விழாவைப் பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும் பங்குண்டு என்பதை மறைப்பதற்கு இல்லை.

தற்போது வீரமணி தலைமையில் இயங்கக் கூடிய திராவிடர் கழகம் அதே பழைய முறையில் பொங்கல் விழாவை "திராவிடர் திருநாள்" என்று அறிவித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீம்பாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசிய அமைப்புகள் வீரமணியாரின் தமிழின அடையாள மறுப்புச் செயலை வன்மையாக கண்டித்தும் கூட வீரமணியார் இன்னும் திருந்திட வில்லை. ஒவ்வொரு ஆண்டும் "திராவிடர் திரு நாள்" கூத்தை அரங்கேற்றி வருகிறார்.

அண்மையில் நடந்த தமிழர்களின் எழுச்சிப் போராட்டமான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலட்சக் கணக்கான தமிழக இளைஞர்கள் கொதித்து எழுந்து "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!" என்று முழக்கமிட்டதைக் கூட வீரமணி மறந்து விட்டார் போலும்!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை ஆந்திரர்களோ, கர்நாடகத்தினரோ, கேரளத்தினரோ, கொண்டாடாத போது "திராவிடர் திருநாள்" பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரிய வில்லை.

நவம்பர் 1-ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும் அங்குள்ள அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் பங்கேற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருப்பார்.

தமிழர் அல்லாதார் நலம் காக்கும் பொருட்டு தமிழக எல்லை மீட்புப் போரில் பங்கெடுக்க மறுத்ததோடு பொங்கல் விழாவினை 'திராவிடர் திருநாள்' என்று அன்று முதல் இன்று வரை திரிபுவாதம் செய்திடும் திராவிட இயக்கங்களின் நயவஞ்சகப் போக்கை தமிழர்கள் இப்போதாவது உணர முற்பட வேண்டும்.

(தகவல்: ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' நூலில் இருந்து)

https://tamilthesiyan.wordpress.com/2017/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/



 

13 ஜனவரி 2021

அழகு அழகு பெண் அழகு

12.01.2021

 
நிலம் அழகு நீர் அழகு
             மீன் போன்ற உன் கண் அழகு!

பூ அழகு பொட்டழகு
             உன் இதழ் சிந்தும் தேன் அழகு!

உடை அழகு இடை அழகு
             நளினமான உன் நடை அழகு!

மண் அழகு விண் அழகு
            பௌர்ணமியாய் உன் முகம் அழகு!

பகல் அழகு இரவு அழகு
            கார்கூந்தலாய் உன் முடி அழகு!


கை அழகு விரல் அழகு
            அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு!

மயில் அழகு குயில் அழகு
            தேன் தெவிட்டும் உன் குரல் அழகு!

சினம் அழகு சிரிப்பழகு
            உன் கன்னத்தில் விழும் குழி அழகு!

கவி அழகு மொழி அழகு
           நீ பேசும் தமிழ் அழகு!

நெளிவழகு சுளிவழகு
          உன் கால்களில் சிலம்பழகு!

நனி அழகு நகை அழகு
          பொன்நகையாய் உன் சிரிப்பழகு!

அலை அழகு கடல் அழகு
          கடல் போன்ற உன் மனம் அழகு!


தூண் அழகு துரும்பழகு
          குறும்பான உன் குணம் அழகு!

இரவு அழகு கனவு அழகு
          எனை வாட்டும் உன் நினைவழகு!

மனம் அழகு சினம் அழகு
          நீ வசிக்கும் என் உள்ளம் அழகு!

நதி அழகு மதி அழகு
          நீ பாடும் ஜதி அழகு!

வான் அழகு மண் அழகு
          இறைவன் படைப்பில் பெண் அழகு!

என் அழகு எது அழகு
          பெண் இனத்தில் நீ அழகு!



கவிதை: பிரேம் குமார், திருச்சி




















மலாயா தமிழர்களின் வாழ்வியல் முட்டுக்கட்டை - ஆதி சேகர், கோலாகிள்ளான்

12.01.2021

ஒரு காலத்தில் ஆசியா கண்டத்தின் சிங்கம். அமெரிக்காவுக்குத் தலை வணங்காமுடி. மலேசியா தொழில்நுட்பத்தின் தந்தை. புதிய மலேசியாவின் தந்தை. சாதனைத் தந்தை. மண்ணின் மைந்தர்களின் புதிய பரிமாற்றக் கடவுள் என்று எல்லாம் பெயர் எடுத்து; கண்ணீர் வடித்து; அம்மு நோ மாநாட்டில் ஒப்பாரி எல்லாம் வைத்து; நடிக்காத நாடகம் எல்லாம் நடித்து; நடிகர் திலகத்தின் செவாலியர் விருதையே விஞ்சி மிஞ்சிப் பேர் எடுத்தவர்.

மொத்த மேம்பாட்டியான் "காண்ரேட்" எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு...  கைகூலிகளுக்கு "டிப்சாக’ பல காண்ரேட்டுகளைக் கொடுத்து... மண்ணின் மைந்த இனத்தவர்களிடையே இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை இனம்... மதம்... அடிப்படையில் பேதமாக்கி... அரசியலோடு அந்த இனத்தவர்கள் நகர வேண்டும் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிச் சொல்லி...

தமிழர்களையும்... சீனர்களையும்... அந்தச் சமுகத்தினரிடம் இருந்து பிரித்து...  நயவஞ்சகமாகத் தமிழர்கள் மீது பிள்ளையார் சுழி போட்டு... தமிழர் இனத்தைச் சின்னச் சின்னமாய் அழித்து... இந்த நாட்டில் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றப் பாதைக்குப் பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும் படி எல்லாத் துறைகளிலும்...

அழகாக... சத்தம் இல்லாமல்... தண்ணீருக்குள் நீந்திச் செல்லும் முதலை போல் தடை செய்து... சீனர்களின் வெளிப்படை வியபாரம்... மேம்பாட்டு நிர்வாகப் பணிகள்... தொழில் துறைகளில் முட்டுக் கட்டைகளைப் போட்டு... அவர்களையும் முடக்கி... அவர்கள் செய்யும் தொழில் திறமைகளில்...

மைந்தர் இனத்தவர்களைக் காலத்தின் கட்டாயமாகச் செயல்பட வைத்து இனம்... மதம்... அடிப்படையில் உட்படுத்திச் செய்ய வேண்டும் என்று பல அம்முனோ மாநாட்டில் மறைமுகமாக வற்புறுத்தி அவர்களுக்குப் பல சலுகைகள்... அவர்களுக்கு என்றே...

உதவித் திட்டமாகத் திட்டம் தீட்டி... அதில் பல விபரீதங்கள் நடந்தாலும் அதை அரசியல் ரீதியாக கையாலாகாத முயற்சிக்கு வழிவகுத்து... தற்காத்து... மீண்டும்... மீண்டும்... அவர்களுக்கு வாய்ப்பு தந்து தூக்கி... தூக்கி... ஊட்டி... ஊட்டி...

ஒரு காலத்தில் தமிழர்கள் இல்லையேல்; தார் ரோடு இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி; இன்று அந்த இனத்தவர் "காண்ரேட்" இல்லையேல் "மானா ஆடா ஜாலான்.." என்று பேசும் அளவுக்கு... பல துறைகளில் நம் இனத்திற்க்கும் சீன இனத்திற்கும் அழுத்தம் தந்து....

தூக்கிவிட்ட ஐயா தூண் அவர்களை... இன்று... அவரின் இனமே பிரார்த்தனை செய்கிறது போய்யானு... உன் காலம் முடியட்டும் என்று... பார்த்தீர்களா....!

இவர் கெட்டவராகவே இருக்கட்டும்... ஆனால் இவர் இனத்துக்கு இவர் எங்கே...? நம் இனத்தின் சாதனைத் தலைவர் எங்கே?

இவர் இவ்வளவும் செய்தும்... அரசியல் ரீதியில் இவரின் இனமே தூற்றுகிறது. ஆனால் அந்த இனத்தின் வாழ்வியல் முன்னேற்றத்தில் இவர்தான் ஏணிப்படி.

நம் இனம் சொந்த உணர்வோடு... உத்வேகத்தோடு... எழ இருந்த நேரத்தில்...

தலைவர்... இனத்துக்குக் கை கொடுத்து தூக்க வழி இருந்தும்... தூக்காமல் குழியை மட்டும் ஆழமாக... எழ முடியாமல் அளவுக்குத் தோண்டி... இன்று அமைதியாக இருக்கிறார்.

நம்மவர்களின் பெருந்தன்மைக்கு எல்லையே இல்லை. நம்பிக்கை இருக்கிறது நம்மவர்களுக்கு... எந்தத் தடைகள் போட்டாலும் தன் நம்பிக்கையில் முன்னேற முடியும் என்று... இது தான் காலத்தின் கோலம்.

எது எப்படியோ மீண்டும் பல இனம் கொண்ட அரசியல் கட்டமைப்பு திரும்புமா என்பது கொஞ்சம் கடினம் தான் இந்த நாட்டில்.

ஒரே வாய்ப்பு பல்லின சமுதாயத்தோடு ஒன்றிப் போகும் தலைவரையும்; கட்சியையும்; மக்கள் வரும் தேர்தலில் அடையாளம் கண்டு பெரும் ஆதரவோடு பல இடங்களில் வெல்ல வைக்க வேண்டும். முக்கியமாக நாடாளுமன்ற நாற்காலி எண்ணிக்கையில் கூடுதல் வேண்டும்.

தாய்க் கட்சிக்கு லாபம்... தமிழர்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும். நம் இனம் ஆதரிக்கவில்லை என்று... இதற்கு மாற்றம்... நம் இனத்தினரிடையே ஒரு வழி என்றால்...

அக்கரை இரத்த உறவுகளின் ஒற்றுமையோடு... கைகோர்த்து... ஒரே ஓசையோடு ஒரே இன மக்கள் தமிழர்கள் என்று புதிய பரிமாற்றத்தோடு மாற்றம் கண்டால்... இங்கும் மாற்றம் காணும் என்பது என் யூகம். காரணம்...

இந்தியா தமிழ்நாட்டை முன்வைத்தே அதே பாவனையிலேயே நம் அரசியல் தலைவர்களின் நகர்வுகள் இருப்பதாக என் உணர்வு.

தமிழுக்கும்... இந்நாட்டின் தமிழர்களின் உரிமைக்கும்... நமக்காக விடாப்பிடியாக அரசாங்கத்திடம் குரல் கொடுத்து இருந்தால் நமக்கு இப்போது உள்ள சூழ்நிலை வந்து இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

இவ்வளவு வரலாற்றுச் சான்றுகளை இந்த நாட்டில் நம் தமிழ் இனத்திற்காக முயற்சி எடுத்து எழுதிய பல எழுத்தாளர்கள் இல்லை என்றால் இப்போது உள்ளவர்கள் பல பேருக்கு... தெரியுமோ... தெரியாதோ... எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கண்ணீர் சிந்தி கூறிய வரலாற்று உண்மைக் கூற்றுகள் தலைவர்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ...

நம்மில் பல பேருக்கு தெரியாமலே போய் இருக்கும். இவ்வேளையில் ஐயா முத்து அவர்களுக்கும் இதர வரலாற்று படைபாளிகளுக்கும் நாம் நன்றியை இரு கரம் கூப்பி கூறி ஆகத் தான் வேண்டும்.

நாம் பாவப்பட்ட இனமாக... இந்த நாட்டில் தலைவர்கள் என்ற தவக்களையை நம்பி மோசம் போனோம். வரும் காலம் தான் புதிய பொங்கல் மாதத்திற்குப் பிறகு பதில் கூறவேண்டும்.

இது என் தனிப்பட்ட கருத்து. பிழை இருப்பின் பொருத்து அருள்க... ஆதி. 🙏 🙏