14 ஜனவரி 2021

விமானங்களில் வெளியேற்றும் இருக்கை

12.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1942 ஜனவரி 13-ஆம் தேதி விமானங்களில் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் வெளியேற்றும் இருக்கை (Ejection seat) அமைப்பை முதன்முறையாக ஆபத்து நேரத்தில் பயன்படுத்தி, ஒரு விமானி தப்பித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியப் படையின், குண்டுவீச்சு ஜெட் விமானம் ஒன்றின் விமானி அவர். அவரது விமானத்தின் கட்டுப்பாட்டுக் கருவிகள், குளிரால் உறைந்து செயல் இழந்ததால் அவர் இதைப் பயன்படுத்தினார்.

விமானங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் உயிரிழப்பு என்பது மிக அதிகமாக இருந்தது. விமானம் விழும்போது, வெளியில் குதித்தாலும், இடிபாடுகளில் சிக்கி இறப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.

அப்படியான நிலையில், விமானத்திலிருந்து மேலே தூக்கி வீசப்பட்டு, பாராச்சூட் மூலம் மெதுவாக விழுந்தால், அவ்வாறான உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை.

முதல் வெளியேற்றும் இருக்கை, பஞ்சீ கயிறு என்றழைக்கப்படும் எலாஸ்ட்டிக் கயிற்றால் இருக்கையை வெளியேற்றும்படி, 1910-இல் உருவாக்கப் பட்டது.

இங்கிலாந்தில் பாராச்சூட்டை உருவாக்கியவர்களில் ஒருவரான, எவரார்ட் கால்த்ராப், 1916-இல் அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தி வெளியேற்றும் இருக்கையை உருவாக்கினார்.

ரோமானியா நாட்டின் அனஸ்டேஸ் ட்ராகோமிர், வெளியேற்றும் இருக்கையின் தற்காலத்திய வடிவத்தை உருவாக்கினார். இது 1929-இல் பாரிசில் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டப்பட்டது.

வெளியேற்றும் இருக்கையை சிறப்பாகச் செயல்படும்படி மேம்படுத்துதால் இரண்டாம் உலகப்போரின் போது, குறிப்பாக ஜெர்மானியர்களால் செய்யப்பட்டது.

தொடக்க காலத்தில், விமானி முதலில் விமானத்தின் கூரையைத் திறப்பதற்கான விசையையும், பின்னர் வெளியேற்றும் விசையையும் அழுத்தி, பாராச்சூட்டை தானே விரித்துக் கொள்ள வேண்டும். ஆனால், பின்னாளில், ஒரே விசையில் இவை  அத்தனையும் செய்யப் படுகின்றன.

விமானம் தரையில் இருந்தால், தூக்கி வீசினாலும், பாராச்சூட் விரிய உயரம் தேவை என்பதால், இருக்கையை உயரத்திற்குத் தூக்கிவீச, சிறிய அளவில் வெடிமருந்துகள், சிறிய ராக்கெட்டுகள் கூட இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

800-1300 கி.மீ. வேகத்தில் இருக்கை உந்தப்படும் போது ஏற்படும் அழுத்தத்தால், விமானிக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாகி உள்ளன.

சூப்பர்சானிக் போன்ற அதிவேக விமானங்களில் இருந்து வெளியேற்றப் பட்டால், உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மூடப்பட்ட (கேப்ஸ்யூல்) வெளியேற்றும் இருக்கைகள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட விமானிகள் கொண்ட போர் விமானங்களில் இருந்து அனைவரும் வெளியேற்றப்படும் போது, அவர்களுக்குள் மோதிவிடாமல் இருக்க மாறுபட்ட திசைகளில் வெளியேற்றுமாறு இந்த இருக்கைகள் அமைக்கப் படுகின்றன.

இத்தகைய முன்னேற்றங்களால், ஆபத்துக் காலங்களில் வெளியேற்றும் இருக்கையைப் பயன்படுத்தி வெளியேறுபவர்களில் 92 சதவீதம்பேர் பாதுகாப்பாக தரை இறங்குகிறார்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக