07 மார்ச் 2021

வாழ்க்கை - சத்யா பிரான்சிஸ்

தெளிந்த நீரோடையாக கானகத்தில்
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
சுற்றுச்சூழலின் அந்தபுரத்தில்
கண் மயங்கி
பகலிலும் உறங்குகிறது..


தோல்வியைக்
கனவிலும் சுமக்காத வாழ்க்கை இன்பத் தேரோட்டம் போகிறது..
மலர்கள் தங்கள்
மரணத்தை எண்ணி
கவலைப்படுவதில்லை
வாழும்வரை சுற்றுப்புறத்தைத்
தன் மணத்தால் ஆசிரளிக்கிறது..!

எதிர்வரும் மனிதருக்குப்
புன்னகையை வழங்கு
இயற்கை கற்றுத் தந்த
அன்பை
எங்கும் பெருக்கு..!

உயர்வும் தாழ்வும்
வறுமையும் பெருமையும்
பரந்த உலகில் படர்ந்து இருப்பதைப் பார்த்து
வாழ்க்கைப் பாடம்
கற்றுக்கொள்..!

உன்னை நிழலாய்ப்
பின் தொடரும்
எதிர்பாராத நிகழ்வுக்கு
காரணம் இருக்கிறது..
மிக எளிதான வாழ்க்கை
கடினமாக உருமாறினால்
அது சமூகத்தின் தவறன்று,.!

வாழ்க்கை தத்துவம்
மென்மையான
மலராகவே உள்ளது..
புரிதல்  ஒன்றே
உள்ளத்தில் புதுமையை மலரச் செய்யும்!



   கவிஞர் சத்யா  பிரான்சிஸ்

வீரம் தழுவும் விளைநிலத்தில்

14.02.2021

பதிவு செய்தவர் :  குமரன் வேலு


காடாய்க் கிடந்த விளைநிலத்தைக்
      கழனி யாக்கப் பாடுபட்டு
வீடாய் எண்ணிப் படுத்துறங்கி
   விடிந்தும் கூட வினையாற்றி
ஓடாய்த்  தேய்ந்த உழவரெல்லாம்
     உதவிக் கென்று மாடுவளர்த்தார்
மாடாய் உழைத்த உழவரென்றும்
    மாடாய் மாட்டை நினைத்ததில்லை!

வளரும் கன்றாய் வாங்கிவந்து
     வயிறுப் புடைக்கப் புல்லையிட்டு
வளர்ந்தும் கூட மகனைப்போல்
   வாஞ்சை யுடனே மார்பிலிட்டு
தளர்ந்த வயதில் தானழைக்க
    தலையை ஆட்டி ஓடிவருமே
கிளர்ந்த மாட்டின் அன்புக்காய்க்
   கிழவன் வாழ்வார் நூறாண்டு!
   
காளை யுடனே மகன்வளர்ந்தான்
   காளை அடக்கும் கலையறிந்தான்
வேளை வந்த காலத்திலே
  விரைந்தான் முரட்டுக் காளையென்றே
நாளை அவனே வீரனென்று
    நாட்டு மக்கள் கூவிடுவார்!
ஆளை விரும்பும் கன்னியரும்
     அவனின்  வீரம் விளம்புவரே !

வீரம் தழுவும் விளைநிலத்தில்
   விதைத்த குருதி விழுமிடத்தில்
சோரம் போகா தமிழினத்தின்
   சொட்டும் மானம் வளர்ந்துநிற்கும்
பாரம் எதையும் தாங்கிநின்று
    பாடு பட்டு மெய்வருத்தி
மாரில் குத்துப் பட்டநிலை
    மாட்டுப் பொங்கல் காட்டிடுமே!



04 மார்ச் 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழ் மலர் - 15.02.2021

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்மேகும் செம்மைகள். எளிய எளிமைக் கூறுகள். வாழ்த்துகிறோம் தமிழ் மறவன் பாலன் முனியாண்டி.

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள். மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளின் தலையாய ஆர்வலர்களில் ஒருவராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர். பலருக்கும் அறிமுகம் இல்லாத மனிதர்.

மலேசியத் தமிழர் இனத்திற்கு யார் யார் சேவை செய்கிறார்களோ அவர்களை எல்லாம் அடையாளப் படுத்த வேண்டியது நம் கடமை. அதே வேளையில் இங்கே மலேசியாவில் இப்போதைய தமிழர்ச் சேவையாளர்களைப் போற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். புரியும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருக்கிற தமிழர்ச் சேவையாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஒரு செருகல்.

நாம் இங்கே எப்படி எல்லாம் அழுத்தப்பட்டு அமுக்கப்பட்டு வருகிறோம். மேலே எழுந்து வர முடியாமல் தத்தளித்துத் தவித்துக் கொண்டு இருக்கிறோம். தொட்டதற்கு எல்லாம் நம் தமிழர்களைச் சீண்டுவது ஓர் இனத்திற்கு ஒரு பெரிய புழைப்பா போச்சு.

எதற்கு எடுத்தாலும் வந்தேறிகள். உங்க ஊருக்கே திரும்பிப் போங்க எனும் கூப்பாடுகள். முன்பு எல்லாம் இப்படி இல்லீங்க. கொஞ்ச நாளாகத்தான் இந்த மாதிரியான ஆலாபனைகள். இடையில் ஒரு மெகா மனிதர் வந்தார். நல்லாவே சாம்பிராணி போட்டார். நல்லவே புகைச்சல்.

அவர் வந்த பூர்வீகத்தை மறைக்க இந்த நாட்டின் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கி விட்டார். கட்டுரையில் இருந்து தாண்டிப் போவதாக நினைக்கலாம். இல்லீங்க. வயிற்றெரிச்சல். என் இனத்தின் மீதான ஒரு பற்று. அவ்வளவுதான்.
 
நாட்டில் நடக்கிற சில பல கோலமால்களைக் கொஞ்ச நேரத்திற்கு விட்டுத் தள்ளுங்கள். அவற்றை எல்லாம் தாண்டி நம் நாட்டில் ஒரு சில அருமைத் தமிழர்கள் நல்ல சேவைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல சேவையாளர்களாகவும் பயணிக்கின்றார்கள்.

பினாங்கில் பலரும் அறிந்த தமிழ்ச் சேவையாளர் பேராசிரியர் இராமசாமி. எல்லோருக்கும் தெரியும். மாநிலத்தின் துணை முதல்வர். தமிழ் மன்றத்தின் தலைமகன். தமிழர்களுக்கு கிடைத்த நல்ல ஒரு சேவையாளர். இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராகமாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்கள். மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் என்று பற்பல நாடுகளில் பற்பல அச்சுறுத்தல்கள். தமிழர்களின் வாழ்வுரிமை; தமிழர்களின் மொழி; தமிழர்களின் கலைக் கலாசாரம்; தமிழர்களின் பண்பாடு; ஆகியவற்றுக்கு பற்பல அச்சுறுத்தல்கள்.

அந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மலேசியத் தமிழர்களில் பேராசிரியர் இராமசாமி அவர்களும் ஒருவர். அவரின் குரல் ஒலிப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.

அவரின் நற்சேவைகளுக்கு பக்க பலமாக அமைந்து உறுதுணைச் சேவைகள் செய்து வரும் அமைப்பு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம். இது ஓர் அரசு சாரா இயக்கம். பினாங்கை அடித்தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த இயக்கத்தின் தலைவர் தான் பாலன் முனியாண்டி.

இந்த இயக்கம் பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி-40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணி பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். ஏன் பேராக் வரையிலும் நீடித்துப் போகிறது.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை. அவர்களின் இலக்கு கல்வி; பொருளாதாரம்; தலைமைத்துவம். இருந்தோம் போனோம் என்பது முக்கியம் அல்ல. இருக்கின்ற காலக் கட்டத்தில் என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள். அதையும் நினைவு கூர்வோம்.

செய்த தர்மம் தலைகாக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது நான்மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பெருநடையைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிது கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி என்பவர் பினாங்கில் நல்ல ஒரு சமூகச் சேவகர்களில் ஒருவராகப் பார்க்கப் படுகிறார். தனக்கென வாழ்லாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களுக்குச் சேவை செய்வதைப் பரிதாகப் பார்க்கலாமே.

செபராங் பிறை செங்காட் தோட்டத்தில் பிறந்து பத்து காவான் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படித்தவர். பின்னர் உயர்க் கல்வியைச் செபராங் பிறை; பினாங்கு உயர்க் கல்விக் கழகங்களில் தொடர்ந்தவர். தற்சமயம் பினாங்கு தாசேக் குளுகோர் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இளமைக் காலத்தில் அவருக்குப் பொது வாழ்க்கையில் அதிகமான ஈடுபாடுகள் இல்லை. இந்தக் கட்டத்தில் இவரின் சகோதரர் மாரியப்பன் அவரைப் பொது வாழ்க்கைக்குள் கொண்டு வந்தார். தாசெக் குளுகோர் மணிமன்றத்தில் ஒரு செயலவை உறுப்பினராகக் காலடி எடுத்து வைத்தார். பின்னர் அதே மன்றத்தில் செயலாளர்; தலைவர் பதவிகள்.

அதன் பின்னர் பொது வாழ்க்கை ஈடுபாடுகள். மக்கள் முரசு கோவி தியாகராஜன் அவர்களின் ஆதரவில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் உருவாக்கம் கண்டது. இடையில் டாக்டர் முரளி என்பவரின் ஆதரவு. மலாக்கா ஜெ.பி, வீராசாமியின் ஆதரவு. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பிரவின் குமார். யூ.யூ.எம். (UUM) பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத் துறையில் பட்டம் பெற்று தனியார் துறையில் வேலை செய்து வருகின்றார். மகள் அன்பழகி மலாயா பல்கலைகழகத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு துறையில் பயின்று வருகிறார். இளைய மகன் உதயகுமார் இடைநிலை பள்ளியில் 4-ஆம் படிவம் பயல்கின்றார்.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ எப்படி எப்படியோ புகழ்ந்து எப்படி எப்படி எல்லாமோ அழைக்கிறோம்.

அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். போகிறார்கள். ஆனால், தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்றவர்கள் தான், நற்சேவையாளர் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள். வாழ்ந்தும் காட்டுகின்றார்கள்.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும். தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி.

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி போன்ற நல்ல சேவையாளர்கள் செய்து வருவது நல்ல புண்ணியமான சேவைகள். அந்த மாதிரியான மனிதர்கள் சிலரால் தான் மழையும் பெய்கிறது. பூமியும் செழித்து வளர்கிறது. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.02.2021



19 பிப்ரவரி 2021

சுய ஒழுக்கம் (Self Discipline)

19.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phone-இல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம் அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாகக் கேட்பவரிடம் மனப் பூர்வமாக கேட்டுக் கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் பண்பை உணரச் செய்யும். இதே போல் இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், உணவுத் தட்டு, குடை போன்றவைக்கும்.

3. கடயில் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், விலைப் பட்டியலில் விலை அதிகமான் உள்ள எதையும் ஆர்டர் செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி ஆர்டர் செய்யச் சொல்லுங்கள்.

4.தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.

இன்னும் கல்யாணம் ஆகலயா?

குழந்தைகள் இல்லையா?

இன்னும் சொந்த வீடு வாங்கவில்லையா?

ஏன் இன்னும் கார் வாங்கவில்லை?

இது நமது பிரச்சினை இல்லை தானே!"

5. தானியங்கி கதவைத் திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும் வரை மூடாமல் பிடித்து இருப்பது அவர்களைச் சமூகத்தில் பொறுப்பு உள்ளவர்களாக மாறச் செய்யும்!

6. நண்பருடன் டாக்சியில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்து விடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளியுங்கள். மோசமாக இருந்தாலும், கவனிப்பில் வைத்து இருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டல் அடிப்பதை சம்பந்தப் பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்து விடாதீர்கள். அவரை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளைச் சுட்டிக் காட்டலாம்.

12. உடல் பருமனை ஒரு போதும் கிண்டல் அடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க சூட்டிகையாக, கவர்ச்சியாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்களின் படத்தைக் காட்ட போனைக் கொடுத்தால் Gallery-யில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டு விடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும் போது போனை நோண்டிக் கொண்டு இருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், ஸ்டைலுக்காக கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்னையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இது போன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிரவும்.

சான்று: https://www.kalvikural.com/2020/07/self-discipline_22.html


 

12 பிப்ரவரி 2021

பிழை இல்லாமல் தமிழ் கற்றுக் கொள்வோம்

11.02.2021

பதிவு செய்தவர்: டாக்டர் ஜெயஸ்ரீ


மூனு சுழி “ண”, ரெண்டு சுழி “ன” என்ன வித்தியாசம்?

கண்ணப்பன்’னு’ எழுதச் சொன்னால் ஒருத்தன்

4-சுழி 5-சுழி போட்டானாம்!

என்னப்பானு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,

4-சுழி 5-சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!

மூனுசுழி "ண" என்பதும் தவறு!

"ண" இதன் பெயர் "டண்ணகரம்",

"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கு எல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்"னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கு எல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்"னு பேரு. இது ரெண்டும் என்றுமே மாறி வராது. இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா?

வேற மாதிரி சொன்னா. இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! வர்க்க எழுத்து-ன்னா,

சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.

இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்")
 
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்படி?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ’ட’ இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்".

இதே மாதிரிதான்

"ந' கரம்" என்பதை, "தந்நகரம்" னு சொல்லனும்.

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.

(பந்து, வெந்தயம், மந்தை…)

தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு. இதைப் புரிந்து கொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும்.  (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூடப் பாடத்தில் வராது!)

எடுத்துக்காட்டாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன –

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்து உள்ளனர்

இதை எல்லாரும் படித்து இருப்போம்-

வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையின எழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்தில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18-எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள –

18 எழுத்து வருதுல்ல... இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப் படுத்தாமல் "க ங ச ஞ ட ண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் அவற்றின் பெயருக்கேற்ப (உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி மென்மையாகவும் இன்றி இடையினமாக) செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகமே இரட்டை எதிர்த் துருவ ஈர்ப்பில் தானே இயங்குகிறது!

நெட்டை ’னா’ குட்டை

பள்ளம் ’னா’ மேடு

தொப்பை ’னா’ சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் ’னா’ மெல்லினம்.

அப்படின்னா பெண்கள் எல்லாம் மெல்லிய மலர்தானா... அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்.

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்பிட முடியுமா?

முடியும்னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழ் இயல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன "ர" என்பதும் தவறு!

பெரிய "ற" என்பதும் தவறு!

ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வருவது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் ’னு’ வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில ’லோல்’ படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம முன்னோர்கள்

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான்!

இதே மாதிரித்தான்

உயிரெழுத்தில்

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

ஐ-

ஒ-ஓ

என வரும் இன எழுத்துகள்

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை (ஓசை ஒழுங்கு) அறிந்து எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும். படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

நன்றி!