23 மார்ச் 2021

இறை தூதர் - என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு

23.03.2021

இறை அறிவு..
இப்புவியல் ..
கற்றோர்..
அறிவாரோ ..?



இறையின்..
விவேகம்...
மர்மம்..
மானுடம்...
புரிவாரோ.?

ஆண்டவர்..
அறிவே..
அனைத்திற்கும்..
ஆரம்பம்..!

இறைவனின்..
தூதரே..
அறிவின்..
போதகர்..!

இறை ஞானம்..
பெற்றிட..
இறை தூதரை..
ஏற்போம்..!


என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு




 

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மர்

 23.03.2021

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மரா? இது சாத்தியமா? இது என்ன புதிய கதை என்று கேட்கலாம். உலகத்திலேயே மூத்த இனம் என்று ஓர் இனம் பெருமை பேசிக் கொண்டு இருக்கும் போது, போதி தர்மர் பல்லவ இனம் சார்ந்தவர்; தமிழர்களின் இனம் சார்ந்தவர் என்று சொல்வதில் என்னங்க தப்பு.

இல்லாதவர்களே இருப்பதாகக் கற்பனை ஜோடனைகள் செய்யும் போது இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு.

குமரிக்கண்டம் அவர்களுடையது என்கிறார்கள். இராஜா சோழன் அவர்களின் பரம்பரையினர் என்கிறார்கள். ராமர் பாலம் அவர்களுடையது என்கிறார்கள். இந்தியப் பெருங்கடலில் பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்திய திசைக்காட்டியை அவர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் சேலை கட்டும் பழக்கத்தைத் தமிழர்கள் தான் இந்திய நாட்டிற்கு கடத்திச் சென்றார்கள் என்கிறார்கள்.

அதிரசம்; அல்வா; கேசரி; இட்லி; இடியப்பம்; தோசை; வடை; பருப்பு சாம்பார்; மிளகு ரசம்; மழை நீர் எல்லாமே பறிபோய் விட்டன. பாக்கி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழன் என்கிற பேர் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

அந்தப் பாவனையில் போதி தர்மர் அவர்களின் பரம்பரையினர் என்று சொல்வதற்கு அதிக நாட்கள் பிடிக்காது. போதி தர்மரின் பெயரை மாற்றி; அவரின் பல்லவப் பின்னணியைக்கூட மாற்றி விடலாம். காலம் நெருங்கி வருகிறது. பொறுத்து இருந்து பாருங்கள்.

ஒன்று மட்டும் சொல்வேன். போதிதர்மர் என்பவர் தமிழர் இனத்தைச் சார்ந்தவர் என்று நாம் இப்போதே இங்கே இந்தப் பக்கம் முன்னெடுப்பு செய்யவில்லை என்றால் போதிதர்மர் என்பவர் ’அவர்களின்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் காலத்தில் ’அவர்களே’ ஒரு கதையை உருவாக்கி விடுவார்கள். வடை போச்சே என்று வாயைப் பிளந்து உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் மிச்சம்.

வரலாற்றையே மாற்றி போதி தர்மரை அவர்கள் பக்கம் இழுத்து ஆலாபனை செய்யலாம். அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும். என் கருத்துகளில் உடன்பாடு என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை.

போதி தர்மர் வாழ்ந்த காலம் கி.பி. 475 - கி.பி. 550. இந்தக் காலக் கட்டத்தில் மலாயா கடாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை. அதை மறந்துவிட வேண்டாம். போதி தர்மர் சீனாவுக்குப் போகும் போது கடார மண்ணில் கால் பதித்து விட்டுத் தான் போய் இருக்கிறார். கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார்.

கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் உறவாடிச் சென்று உள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கடாரத்தில் தங்கி இருக்கிறார்.  

அந்தக் கட்டத்தில் அதாவது கி.பி. 500-ஆம் ஆண்டுகளில் கடாரம் பூஜாங் சமவெளியில் தமிழர்கள் வணிகம் செய்து வந்து உள்ளனர். ஓராங் அஸ்லி மக்களுடன் ஒன்றரக் கலந்து தமிழர் சார்ந்த பண்பாடுகளைப் பரவல் செய்து உள்ளனர்.

ஓராங் அஸ்லி மக்கள் வெற்றிலை போடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்து போனதாகும். கடாரத்திற்குச் சென்ற போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களிடம் வர்மக்கலையைச் சொல்லித் தந்து உள்ளார். கடாரத்து மண்ணில் வர்மக்கலை நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.

1025-ஆம் ஆண்டு கடாரத்தைக் கடைசியாக ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் வர்மக்கலையை ஆதரித்து குருகுலங்களை உருவாக்கி உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் வர்மக்கலை மிகவும் பரவலாகி இந்தோனேசியா வரை படர்ந்து உள்ளது. சுமத்திரா ஆச்சே பகுதியில் வர்மக்கலை பள்ளிக்கூடமே இருந்து உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.03.2021


https://ksmuthukrishnan.blogspot.com/2021/03/blog-post_23.html


சான்றுகள்:

1. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press,

2. Taylor, Nora A. (2000), Studies on Southeast Asia (Studies on Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor), 29, Southeast Asia Program Publications)

3. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: Indian Historical Research Institute

4. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)

5. Taisho Shinshu Daizokyo, Vol. 85, No. 2837 Archived 2008-06-05 at the Wayback Machine, p. 1285b 17(05)

https://www.facebook.com/ksmuthukrishnan/posts/4313371142010367?__cft__[0]=AZUADmf0QSPtsc13h_8A9NN-dfBc7-tP_gGklbxMes0YnonWoK8o7VtdOC8op8Gq2eXk8Eaf5qpqrcnUZRm9qHL4DSh1sJEndYas7uEsj3YKrdj4o2Fb7WCOOtrz_zPxO5A&__tn__=%2CO%2CP-R


பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: இந்த கட்டுரையை நேற்று படித்தேன். நிறைய புரியாத புதிர்களுக்கு  கட்டுரை வழி விடைகள் கிடைத்தது மகிழ்ச்சியே கட்டுரையாளருக்கு நன்றி🙏🌺🙏🌺.


அட்லாண்ட்டிக் சுவர்

23.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்


இன்று மார்ச் 23 1942-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகப் போரின் அதிசயம் என்று சொல்லப்படும் அட்லாண்ட்டிக் சுவர் (Atlantic Wall) எனும் பாதுகாப்பு அரணை அமைப்பதற்கான உத்தரவை ஹிட்லர் பிறப்பித்தார்.

சுவர் என்று குறிப்பிடப் பட்டாலும், சிறு கோட்டைகள், தடுப்புகள் என்று மாறுபட்ட அமைப்புகளுடன் கொண்ட அரண். ஸ்பெயின் எல்லையில் தொடங்கும் பிரான்சின் கடற்கரைப் பகுதி, வடக்கே நோர்வேயின் வடமுனை வரை 3,200 கி.மீ.க்கும் அதிக (2,000 மைல்) நீளக் கடற்கரைப் பகுதியில் இது அமைக்கப்பட்டது.

அமெரிக்கா நேரடியாக உலகப் போரில் இறங்கியதும், நேச நாடுகளின் படைகள் கடல்வழியாக நுழையலாம் என்பதை எதிர்பார்த்த ஹிட்லர், 1943 மே 1-க்குள் (14 மாதங்களில்) இதைக் கட்டி முடிக்க உத்தரவிட்டார்.

17 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, 50 ஆண்டு அனுபவம் கொண்டிருந்த ஜெர்ட் வோன் ருண்ட்ஸ்ட்டெட் என்ற தளபதி, இந்தக் கட்டுமானப் பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.

ஜெர்மனியின் தாக்குதலை எதிர்பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தரைக்குள் மறைந்து இருந்து மேல் எழும்பும் பாதுகாப்புக் கோபுரங்களுடன், சுமார் 100 கி.மீ. தொலைவிற்குப் பிரான்ஸ் அமைத்து இருந்த ’மேஜினாட் லைன்’ என்கிற அரணை உடைத்து நுழைந்த அந்தத் தளபதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அவர் அனுப்பப் பட்டார்.


உண்மையில் அனைத்துப் பகுகளிலும் முழுமையாக கட்டி முடிக்கப் படவில்லை. எனினும் மிகப் பெரும் பகுதியைப் பாதுகாக்கிற வகையில் உருவாக்கப்பட்டு இருந்த இதற்கு இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டனர்.

வெறும் 10 விழுக்காடு ஜெர்மன் தொழிலாளர்களுடன்; சிறைப் பிடிக்கப் பட்டவர்கள் 90 விழுக்காட்டினர் பயன்படுத்தப் பட்டனர். 12 இலட்சம் டன் எஃகு (இருபதாயிரம் கவச வண்டிகள் செய்யலாம்), 1.7 கோடி கனமீட்டர் கான்க்ரீட் உள்ளிட்டவை பயன்படுத்தப் பட்டன.

இதன் அரண்களில், அதுவரை பிற படைகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த கப்பல்களின் பீரங்கிகள் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இவற்றுக்கான பல்வேறு விதமான குண்டுகளை விநியோகிப்பது மிகப்பெரிய சிரமாமாக இருந்தது. இருந்த போதிலும், எவ்வளவு தொலைவில் எதிரிகள் வரும் போது எப்படித் தாக்கினால் தடுக்கலாம் என்பதற்கு, ஏராளமான குண்டுகளைக் கடலில் சுட்டு ஒத்திகை பார்க்கப் பட்டது.

அத்துடன் கடலில் இருந்து இந்த அரண்கள் வரையிலான பகுதியில் சுமார் 50 இலட்சம் கண்ணி வெடிகளும் புதைக்கப் பட்டன.

1944 ஜூன் 6-இல் நோர்மண்டியில் இறங்கிய நேச நாடுகளின் படைகள், வெறும் சிலமணி நேரத்தில் இவற்றைத் தகர்த்து நுழைந்தன என்பது தனிக் கதை.

போருக்குப்பின் வெறுப்பின் சின்னங்களாக இவற்றைக் கருதிய மக்கள் பல பகுதிகளிலும் தகர்த்து விட்டாலும், பல பகுதிகளில் எஞ்சி இருப்பவை வரலாற்றுச் சின்னங்களாக நிற்கின்றன!
 



இந்திய மாவீரர்களின் நினைவு தினம்

1931 மார்ச் 24-ஆம் தேதி பகத்சிங் (24), சிவராம் ராஜகுரு (22), சுக்தேவ் (24) ஆகிய மூவருக்கும் லாகூர் சிறை வளாகத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை 11 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது முன்தினம் மார்ச் 23-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி விட்டனர்.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூவரும் ஒன்றாகவே, ஒரே சிறையில், ஒரே நேரத்தில், வீர மரணம் எய்தினர். இந்தியச் சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில் தூக்கில் போடப் பட்டவர்கள் இவர்கள் மட்டுமே.

சட்டப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட நீதிபதிகள் யாரும் முன்வராத நிலையில், ஒரு வெள்ளைக்கார நீதிமன்றத் தலைவரின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.

தண்டனை நிறைவேற்றப் பட்டதும், அவசர அவசரமாகச் சிறையின் பின்பக்கச் சுவர் ஒன்று உடைக்கப்பட்டது. பின்பக்கமாக, இரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு செல்லப் பட்டன.

சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்களின் அஸ்தி சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப் பட்டது.

இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில், மிக மிகச் சிறிய வயதில் தூக்குத் தண்டனை அனுபவித்தவர்கள். நிச்சயமாக இது நடக்கும் என முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் எந்தவிதச் சலனமோ, கலக்கமோ, வருத்தமோ காட்டவில்லை.

இந்தியத் தேசத்திற்காகச் சாவை எதிர் கொண்ட மகத்தான மாவீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். அவர்களின் நினைவுதினம் (மார்ச்-23) இன்று. அவர்களை என்றும் நினைவு கொள்வோம்.


பின்னூட்டங்கள்



தனசேகரன் தேவநாதன்: இவர்களின் தியாகத்தை இன்றைய தலைமுறையினர் மதிக்கிறார்களா. இந்தியாவில் அகிம்சை வழி சுதநந்திரம் என்பது சரியான ஒரு பதம். அதன் வரலாறு அதை மெய்பிக்குமா. தகவலுக்கு நன்றி ஐயா.

இமயவர்மன்: அருமை நண்பரே. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்கள் தூக்கு தண்டனை பெற்ற நாள் இது. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இந்த நாடு உள்ளது. அதே நேரத்தில் நாட்டைக் கொள்ளை அடிக்க கூட்டணி அமைத்துக் கொண்டு வீதிகளில் வலம் வருகிறார்கள் அவர்களுக்கும் மாலை மரியாதை பட்டு ஆடைஅளிக்கப் படுகின்றது. வெட்கக்கேடு.


வெங்கடேசன்:
இதற்கு எல்லாம் இவர்களுக்கு ஏது நேரம். தற்போதய அரசியல் மக்களை முட்டாளாக்கி... வறுமையில் தள்ளி.. இலவசங்களை அள்ளிக் கொடுத்து...சே மிகவும் கேவலமாகி விட்டது 😭😭😭



22 மார்ச் 2021

கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் போட்டி 2021

22.03.2021

அனைத்துலக அறிவியல் போட்டியில் கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு (Emergeny Ranger Friendly System Project - Malaysia Innovation, Invention and Creativity Association - MIICA) பாராட்டுதலுக்கு உரியது.


உண்மையிலேயே கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி நிகழ்த்துகைக் காட்சியளிப்பு (presentation) பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எத்துனை அழகாக முன்வைக்கிறார்கள். எத்துனை அழகாக முன்னமைப்புச் செய்கிறார்கள். அனைவரும் மலாயா வாழ் தமிழர்களின் வாரிசுகள்.


இந்த நாட்டில் தமிழ்க் குழந்தைகள் மற்ற மற்ற மொழிகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்குத் கங்கார் தமிழ்ப்பள்ளியும் முன்னுதாரணமாய் விளங்குகின்றது. பெருமைப் படுகிறோம்.


பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்ப் பெருமக்கள் மேலும் தமிழ்மொழிக்குச் சிறப்பு செய்ய வேண்டும். இந்தக் காணொலிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களை வெற்றி பெறச் செய்யலாம். அனைத்து அன்பர்களும் ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.


This is an international science project. Please like the school video to win in this video competition. Click in this link to like the video, comment and also please share to others.

https://www.facebook.com/watch/?v=476024890101248