23.03.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்
இன்று மார்ச் 23 1942-ஆம் ஆண்டு இதே நாளில்தான் உலகப் போரின் அதிசயம் என்று சொல்லப்படும் அட்லாண்ட்டிக் சுவர் (Atlantic Wall) எனும் பாதுகாப்பு அரணை அமைப்பதற்கான உத்தரவை ஹிட்லர் பிறப்பித்தார்.
சுவர் என்று குறிப்பிடப் பட்டாலும், சிறு கோட்டைகள், தடுப்புகள் என்று மாறுபட்ட அமைப்புகளுடன் கொண்ட அரண். ஸ்பெயின் எல்லையில் தொடங்கும் பிரான்சின் கடற்கரைப் பகுதி, வடக்கே நோர்வேயின் வடமுனை வரை 3,200 கி.மீ.க்கும் அதிக (2,000 மைல்) நீளக் கடற்கரைப் பகுதியில் இது அமைக்கப்பட்டது.
அமெரிக்கா நேரடியாக உலகப் போரில் இறங்கியதும், நேச நாடுகளின் படைகள் கடல்வழியாக நுழையலாம் என்பதை எதிர்பார்த்த ஹிட்லர், 1943 மே 1-க்குள் (14 மாதங்களில்) இதைக் கட்டி முடிக்க உத்தரவிட்டார்.
17 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, 50 ஆண்டு அனுபவம் கொண்டிருந்த ஜெர்ட் வோன் ருண்ட்ஸ்ட்டெட் என்ற தளபதி, இந்தக் கட்டுமானப் பணிக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார்.
ஜெர்மனியின் தாக்குதலை எதிர்பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தரைக்குள் மறைந்து இருந்து மேல் எழும்பும் பாதுகாப்புக் கோபுரங்களுடன், சுமார் 100 கி.மீ. தொலைவிற்குப் பிரான்ஸ் அமைத்து இருந்த ’மேஜினாட் லைன்’ என்கிற அரணை உடைத்து நுழைந்த அந்தத் தளபதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அவர் அனுப்பப் பட்டார்.
உண்மையில் அனைத்துப் பகுகளிலும் முழுமையாக கட்டி முடிக்கப் படவில்லை. எனினும் மிகப் பெரும் பகுதியைப் பாதுகாக்கிற வகையில் உருவாக்கப்பட்டு இருந்த இதற்கு இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டனர்.
வெறும் 10 விழுக்காடு ஜெர்மன் தொழிலாளர்களுடன்; சிறைப் பிடிக்கப் பட்டவர்கள் 90 விழுக்காட்டினர் பயன்படுத்தப் பட்டனர். 12 இலட்சம் டன் எஃகு (இருபதாயிரம் கவச வண்டிகள் செய்யலாம்), 1.7 கோடி கனமீட்டர் கான்க்ரீட் உள்ளிட்டவை பயன்படுத்தப் பட்டன.
இதன் அரண்களில், அதுவரை பிற படைகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டிருந்த கப்பல்களின் பீரங்கிகள் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
இவற்றுக்கான பல்வேறு விதமான குண்டுகளை விநியோகிப்பது மிகப்பெரிய சிரமாமாக இருந்தது. இருந்த போதிலும், எவ்வளவு தொலைவில் எதிரிகள் வரும் போது எப்படித் தாக்கினால் தடுக்கலாம் என்பதற்கு, ஏராளமான குண்டுகளைக் கடலில் சுட்டு ஒத்திகை பார்க்கப் பட்டது.
அத்துடன் கடலில் இருந்து இந்த அரண்கள் வரையிலான பகுதியில் சுமார் 50 இலட்சம் கண்ணி வெடிகளும் புதைக்கப் பட்டன.
1944 ஜூன் 6-இல் நோர்மண்டியில் இறங்கிய நேச நாடுகளின் படைகள், வெறும் சிலமணி நேரத்தில் இவற்றைத் தகர்த்து நுழைந்தன என்பது தனிக் கதை.
போருக்குப்பின் வெறுப்பின் சின்னங்களாக இவற்றைக் கருதிய மக்கள் பல பகுதிகளிலும் தகர்த்து விட்டாலும், பல பகுதிகளில் எஞ்சி இருப்பவை வரலாற்றுச் சின்னங்களாக நிற்கின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக