1931 மார்ச் 24-ஆம் தேதி பகத்சிங் (24), சிவராம் ராஜகுரு (22), சுக்தேவ் (24) ஆகிய மூவருக்கும் லாகூர் சிறை வளாகத்தில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை 11 மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது முன்தினம் மார்ச் 23-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி விட்டனர்.
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூவரும் ஒன்றாகவே, ஒரே சிறையில், ஒரே நேரத்தில், வீர மரணம் எய்தினர். இந்தியச் சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில் தூக்கில் போடப் பட்டவர்கள் இவர்கள் மட்டுமே.
சட்டப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட நீதிபதிகள் யாரும் முன்வராத நிலையில், ஒரு வெள்ளைக்கார நீதிமன்றத் தலைவரின் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது.
தண்டனை நிறைவேற்றப் பட்டதும், அவசர அவசரமாகச் சிறையின் பின்பக்கச் சுவர் ஒன்று உடைக்கப்பட்டது. பின்பக்கமாக, இரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு செல்லப் பட்டன.
சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில், அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. அவர்களின் அஸ்தி சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப் பட்டது.
இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில், மிக மிகச் சிறிய வயதில் தூக்குத் தண்டனை அனுபவித்தவர்கள். நிச்சயமாக இது நடக்கும் என முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் எந்தவிதச் சலனமோ, கலக்கமோ, வருத்தமோ காட்டவில்லை.
இந்தியத் தேசத்திற்காகச் சாவை எதிர் கொண்ட மகத்தான மாவீரர்கள் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். அவர்களின் நினைவுதினம் (மார்ச்-23) இன்று. அவர்களை என்றும் நினைவு கொள்வோம்.
பின்னூட்டங்கள்
தனசேகரன் தேவநாதன்: இவர்களின் தியாகத்தை இன்றைய தலைமுறையினர் மதிக்கிறார்களா. இந்தியாவில் அகிம்சை வழி சுதநந்திரம் என்பது சரியான ஒரு பதம். அதன் வரலாறு அதை மெய்பிக்குமா. தகவலுக்கு நன்றி ஐயா.
இமயவர்மன்: அருமை நண்பரே. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்கள் தூக்கு தண்டனை பெற்ற நாள் இது. நாட்டுக்காக உழைத்த நல்ல உள்ளங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இந்த நாடு உள்ளது. அதே நேரத்தில் நாட்டைக் கொள்ளை அடிக்க கூட்டணி அமைத்துக் கொண்டு வீதிகளில் வலம் வருகிறார்கள் அவர்களுக்கும் மாலை மரியாதை பட்டு ஆடைஅளிக்கப் படுகின்றது. வெட்கக்கேடு.
வெங்கடேசன்: இதற்கு எல்லாம் இவர்களுக்கு ஏது நேரம். தற்போதய அரசியல் மக்களை முட்டாளாக்கி... வறுமையில் தள்ளி.. இலவசங்களை அள்ளிக் கொடுத்து...சே மிகவும் கேவலமாகி விட்டது 😭😭😭
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக