23.03.2021
மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மரா? இது சாத்தியமா? இது என்ன புதிய கதை என்று கேட்கலாம். உலகத்திலேயே மூத்த இனம் என்று ஓர் இனம் பெருமை பேசிக் கொண்டு இருக்கும் போது, போதி தர்மர் பல்லவ இனம் சார்ந்தவர்; தமிழர்களின் இனம் சார்ந்தவர் என்று சொல்வதில் என்னங்க தப்பு.
இல்லாதவர்களே இருப்பதாகக் கற்பனை ஜோடனைகள் செய்யும் போது இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு.
குமரிக்கண்டம் அவர்களுடையது என்கிறார்கள். இராஜா சோழன் அவர்களின் பரம்பரையினர் என்கிறார்கள். ராமர் பாலம் அவர்களுடையது என்கிறார்கள். இந்தியப் பெருங்கடலில் பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்திய திசைக்காட்டியை அவர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் சேலை கட்டும் பழக்கத்தைத் தமிழர்கள் தான் இந்திய நாட்டிற்கு கடத்திச் சென்றார்கள் என்கிறார்கள்.
அதிரசம்; அல்வா; கேசரி; இட்லி; இடியப்பம்; தோசை; வடை; பருப்பு சாம்பார்; மிளகு ரசம்; மழை நீர் எல்லாமே பறிபோய் விட்டன. பாக்கி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழன் என்கிற பேர் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
அந்தப் பாவனையில் போதி தர்மர் அவர்களின் பரம்பரையினர் என்று சொல்வதற்கு அதிக நாட்கள் பிடிக்காது. போதி தர்மரின் பெயரை மாற்றி; அவரின் பல்லவப் பின்னணியைக்கூட மாற்றி விடலாம். காலம் நெருங்கி வருகிறது. பொறுத்து இருந்து பாருங்கள்.
ஒன்று மட்டும் சொல்வேன். போதிதர்மர் என்பவர் தமிழர் இனத்தைச் சார்ந்தவர் என்று நாம் இப்போதே இங்கே இந்தப் பக்கம் முன்னெடுப்பு செய்யவில்லை என்றால் போதிதர்மர் என்பவர் ’அவர்களின்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் காலத்தில் ’அவர்களே’ ஒரு கதையை உருவாக்கி விடுவார்கள். வடை போச்சே என்று வாயைப் பிளந்து உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் மிச்சம்.
வரலாற்றையே மாற்றி போதி தர்மரை அவர்கள் பக்கம் இழுத்து ஆலாபனை செய்யலாம். அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும். என் கருத்துகளில் உடன்பாடு என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை.
போதி தர்மர் வாழ்ந்த காலம் கி.பி. 475 - கி.பி. 550. இந்தக் காலக் கட்டத்தில் மலாயா கடாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை. அதை மறந்துவிட வேண்டாம். போதி தர்மர் சீனாவுக்குப் போகும் போது கடார மண்ணில் கால் பதித்து விட்டுத் தான் போய் இருக்கிறார். கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார்.
கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் உறவாடிச் சென்று உள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கடாரத்தில் தங்கி இருக்கிறார்.
அந்தக் கட்டத்தில் அதாவது கி.பி. 500-ஆம் ஆண்டுகளில் கடாரம் பூஜாங் சமவெளியில் தமிழர்கள் வணிகம் செய்து வந்து உள்ளனர். ஓராங் அஸ்லி மக்களுடன் ஒன்றரக் கலந்து தமிழர் சார்ந்த பண்பாடுகளைப் பரவல் செய்து உள்ளனர்.
ஓராங் அஸ்லி மக்கள் வெற்றிலை போடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்து போனதாகும். கடாரத்திற்குச் சென்ற போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களிடம் வர்மக்கலையைச் சொல்லித் தந்து உள்ளார். கடாரத்து மண்ணில் வர்மக்கலை நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.
1025-ஆம் ஆண்டு கடாரத்தைக் கடைசியாக ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் வர்மக்கலையை ஆதரித்து குருகுலங்களை உருவாக்கி உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் வர்மக்கலை மிகவும் பரவலாகி இந்தோனேசியா வரை படர்ந்து உள்ளது. சுமத்திரா ஆச்சே பகுதியில் வர்மக்கலை பள்ளிக்கூடமே இருந்து உள்ளது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.03.2021
https://ksmuthukrishnan.blogspot.com/2021/03/blog-post_23.html
சான்றுகள்:
1. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press,
2. Taylor, Nora A. (2000), Studies on Southeast Asia (Studies on Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor), 29, Southeast Asia Program Publications)
3. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: Indian Historical Research Institute
4. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)
5. Taisho Shinshu Daizokyo, Vol. 85, No. 2837 Archived 2008-06-05 at the Wayback Machine, p. 1285b 17(05)
https://www.facebook.com/ksmuthukrishnan/posts/4313371142010367?__cft__[0]=AZUADmf0QSPtsc13h_8A9NN-dfBc7-tP_gGklbxMes0YnonWoK8o7VtdOC8op8Gq2eXk8Eaf5qpqrcnUZRm9qHL4DSh1sJEndYas7uEsj3YKrdj4o2Fb7WCOOtrz_zPxO5A&__tn__=%2CO%2CP-R
பின்னூட்டங்கள்
ராதா பச்சையப்பன்: இந்த கட்டுரையை நேற்று படித்தேன். நிறைய புரியாத புதிர்களுக்கு கட்டுரை வழி விடைகள் கிடைத்தது மகிழ்ச்சியே கட்டுரையாளருக்கு நன்றி🙏🌺🙏🌺.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக