30 ஜூன் 2021

நல்லதை தந்தால் நல்லது வரும்

பதிவு: கரு. ராஜா - 30.06.2021

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக் கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே...


ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம். முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!

ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதைப் பயன்படுத்தி மற்ற முருங்கைக் காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக் காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக் காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச் சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக் காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடை போட, அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!


அன்று முழுவதும் மளிகைக் காரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம். இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டாரே! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக் காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக் கூடாது என்று கடுங் கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! "கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி. அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார், பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.

அய்யா... என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை. எடைக் கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக் காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக் காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. "தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது! இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும்
நல்லதை தந்தால் நல்லது வரும்
தீமையை தந்தால் தீமை வரும்!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம். ஆனால் நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம். நல்லதை மட்டுமே விதைப்போம்!! மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."



29 ஜூன் 2021

ஆசிரியர் பணி தொழிலா தொண்டா? - குமரன் வேலு

29.06.2021

ஓர்  ஆய்வு விஞ்ஞானியாக அல்லது அறிவியல் அல்லது கணிதம் தொடர்புடைய ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்வோம் என்று எண்ணித்தான் எனது  அறிவியல் பட்டப் படிப்பை முடித்தேன். 1986 - 1990 களில் நாட்டிலே கடுமையான பொருளாதார மந்த நிலை. வேலை கிடைப்பது அரிதாக இருந்தது.

என்னுடன் படித்த நண்பர்கள் பலரும் இதே நிலைமையில் இருந்தனர். அறிவியல் பட்டப்படிப்பு ( BSc)  நான்கு ஆண்டுகள். கலைத்துறை (BA) படிப்பு மூன்று ஆண்டுகள். ஆனால் கலைத்துறை பட்டதாரிகளுக்கு அப்பொழுது வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருந்தது.

பல தனியார் நிறுவனங்களில் வேலை தேடி அலுத்துப் போன நிலையில் பெட்ரோல் நிலையத்தின் சீன முதலாளி ஒருவர் தன்னுடைய மகனுக்கு அவரது வீட்டில் டியுசன் வகுப்பு நடத்த அழைத்தார். மாதம் 400 மலேசிய வெள்ளி. வாரம் இருமுறை மட்டுமே வகுப்பு.

எப்படி தவிர்த்தாலும் ஆசிரியர் தொழில் விட மாட்டுதே என்று பொருமிக் கொண்டு பணிசெய்து வந்தேன். சில தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் பணியாற்ற அழைப்பும் வந்தது. அப்பொழுது நான் 24-25 வயது இளைஞன்.

கோலாலம்பூரில் ஒரு தனியார் கல்வி மையத்தில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான்காம் ஐந்தாம் படிவத்திற்கு வேதியல் (chemistry) பாடமும் கணிதப் பாடமும் (mathematics) சொல்லிக் கொடுத்தேன்.

நான் அருமையாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களில் ஒருவர் என்று என்னுடைய மாணவர்கள் சிலர் சொல்வதுண்டு. எனக்கென்று ஒரு இரசிகப் பட்டாளம் அந்தத் தனியார் பள்ளியில் இருந்தது. நல்ல ஆசிரியர் என்று நல்ல பெயர் கிடைத்தது.

அப்போது நானும் இளைஞன் என்பதாலும் மாணவர்கள் 16-18 வயத்துக்குள் உள்ள இளையர் என்பதாலும் அவர்களிடம் எதார்த்தமாகவும் நகைச்சுவை உணர்வோடும் அவர்களின் குறும்புகளையும் கிண்டல் மொழிகளையும் கடந்து போய் விடுவேன்.
அவர்களிடம் கத்தியின் மேல் நடப்பது போல் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் நெருங்கினால் அது நம்மையே பதம் பார்த்துவிடும். ஆனாலும் உண்மையான அக்கறையையும் உள்ளன்பையும் அவர்களால் எளிதாக வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

நமக்கான மதிப்பு என்பது நமது நேர்மையிலும் காட்டும் அக்கறையிலும் இருக்கிறது என்பதை நான் அங்கே கண்டேன்.

உண்மையான அக்கறையோடு நாம் படித்துக் கொடுத்தால் திட்டினாலும் கடிந்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாதவர்கள் இளையர்கள்.

அந்த வகுப்பில் படித்த 17-18 வயது இளம் வயது பையன்களும் பெண்பிள்ளைகளும் காதல் வயப்படுவதும்; பிரிவதும் சேர்வதும்; பெண் ஆசிரியர்களோடு நம்மை முடிச்சுப் போட்டுப் பேசுவதும்; சில வேளைகளில் ஒரு சில மாணவிகள் ஆசிரியர்கள் மீது மையல் கொள்வதும் நடக்கும். அதனால் இளையர்களிடம் ஓர் இடைவெளியை எப்போதும் ஏற்படுத்தி வைக்க வேண்டும்.  

ஒரு மூன்று ஆண்டுகள் அந்தக் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் பணியாற்றிய பிறகு கொஞ்சம் கூடுதல் சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்ட வேறு ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கணிதம் (engineering mathematics) படித்துக் கொடுக்கக் கிளம்பினேன்.  

என்னுடையப் பணிவிலகல் கடிதத்தைக் கொடுக்க அத்தனியார் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அதற்குள் பள்ளி முழுக்க செய்தி தெரிந்து விட்டது நான் வேலை மாறுகிறேன் என்று.

கண்ணீர் வழிய என்னுடைய மாணவர்கள் என்னை வழியனுப்பியக் காட்சி இன்றும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது. தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் ஒரு மாணவி.  அவர்தான் நான் அதிகம் கடிந்து கொண்ட மாணவிகளில் ஒருவர்.
பலமுறை கணிதத்தில் தோற்றிருந்தும் இறுதியில் அவரை நான் வெற்றிப் பெற வைத்தச் சிறந்த ஆசிரியன் என்று எனக்கு நற்சான்றிதழ் வழங்கிய 16 வயது பெண்குழந்தை. மாணவப் பருவத்தை நானும் கடந்துதான் வந்தேன் என்பதால் எனக்கு அவர்களின் தூய உள்ளத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்து நான் செல்லப் போகும் கல்லூரியோ இருபது வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிலும் தொழில்நுட்பக் கல்லூரி. வேறு புதிய பட்டறிவுகளை நோக்கிப் பயணப் பட்டேன்.

- குமரன் வேலு

பிரான்சு பயணக்குறிப்பு - 3: டாக்டர் சுபாஷினி

29.06.2021

பிரான்சு நாட்டின் பொதுப் போக்குவரத்து மிகச் சிறப்பாக அமைந்து இருக்கின்றது. விமானப் போக்குவரத்தாக இருந்தாலும் சரி.. டிராம், பேருந்துகள், மெட்ரோ ரயில், துரித ரயில், சாலைப் போக்குவரத்து அமைப்பு, சைக்கிள்கள் செல்வதற்கும் மக்கள் நடைபாதையில் செய்வதற்குமான அமைப்பு என நாடு முழுமையும்  மக்கள் பொது போக்குவரத்துக்கான அமைப்பு என்பது மிக மிகச் சிறப்பான வகையில் பிரான்சு முழுவதும் அமைந்து இருக்கின்றது. ஒரு குக்கிராமமாக இருந்தாலும் கூட அங்கு பேருந்துகள் வருகின்றன.


பாரிஸ் நோர்த்தரடாம் தேவாலயத் தீவு பகுதியில்

வரலாற்று நோக்கில் பிரான்சு நாட்டை கவுல் என அழைக்கும் வழக்கம் இருக்கின்றது. இது ரோமானியப் பேரரசோடு தொடர்பு கொண்டது. பண்டைய ரோமானியப் பேரரசு இன்றைய பிரான்சின் தெற்குப் பகுதியை பொ.ஆ. மு 125-லிருந்து 121 காலக்கட்டத்தில் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தது.

அதன் பின்னர் ஜூலியஸ் சீசர் இன்றைய பிரான்சு முழுமையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இது நடந்தது பொ.ஆ.மு. 58 லிருந்து 51 வரை. இதனை கேலிக் போர் (Gallic War)  என்றும் அழைப்பார்கள். அன்று ரோமானியர்களால் பிரானசு கவுல் என்றே அழைக்கப்பட்டது.

பாரிஸ் லூவ்ர பூந்தோட்டத்தில் உள்ள் வெண்கலச் சிற்பம் ஒன்று

அன்றைய ரோமானியப் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த காலக் கட்டத்தில் பிரான்ஸ் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டது. பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் அக்காலக் கட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கான வாழ்விடப் பகுதிகள், குளியல் தொட்டிகள், பெரும் கட்டிடங்கள், திறந்தவெளி நாடக மேடைகள் (Amphitheater) எனப் பல்வேறு பொது கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. நகரங்களில் இத்தகைய செயல்பாடுகள் என்றால், கிராமப் புறங்களில் மாபெரும் மாடமளிகைகள் உருவாக்கப்பட்டன.

இப்படி இருக்கையில் பொ.ஆ 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மனியிலிருந்து வந்த பார்பேரியன் (காட்டுமிராண்டிகள்) என அழைக்கப்படும் இனக்குழுவினர் அன்று நாகரீகம் அடைந்திருந்த பிரான்சில் ஏராளமான சேதங்களை உருவாக்கத் தொடங்கினர்.

பொ.ஆ. 5-ஆம் நூற்றாண்டு வாக்கில் ஜெர்மானிய பார்பேரியன்கள் பிரான்சின் பல பகுதிகளில் குடிபெயரத் தொடங்கினர். இப்படி ஜெர்மனியிலிருந்து மட்டுமல்ல, இங்கிலாந்தில் இருந்தும், இத்தாலியில் இருந்தும், ஸ்பெயினில் இருந்தும் ஸ்கேண்டினேவிய நாடுகளிலிருந்தும் எனப் பலரும் குடியேறினர்.

இன்றும் கூட பிரஞ்சுக்காரர்களே மக்கள் தொகையில் அதிகம் என்றாலும் பல இனமக்கள் வாழ்கின்ற நாடாகவே பிரான்சு இருக்கின்றது.

பாரீஸ் - கிரேக்க கடவுளர் சிற்பங்கள் நிறைந்த நீரூற்று

ஜெர்மனியிலிருந்து பாரிஸ் வரை நெடுஞ்சாலையில் செல்வதற்கு ஏறக்குறைய 650 கிலோ மீட்டர் தூரம். இந்தப் பயணத்தின் போது நாம் பல கிராமங்களையும் மற்றும் சிறு நகரங்களையும், பெரு நகரங்களையும் கடந்து பயணிக்க வேண்டும்.

ஜெர்மனியில் சாலையில் பயணிக்க சுங்கவரி கட்டணம் அதாவது டோல் கட்டணம் வழக்கில் இல்லை. ஆனால் இதையே நாம் பிரான்சில் எதிர்பார்க்கலாமா? பிரான்சில்  நெடுஞ்சாலையில் பயணித்தால் கட்டாயமாக நாம் சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தித் தான் ஆக வேண்டும்.

எனது பயணத்தின் போது ஜெர்மனி எல்லையில் இருந்து பாரிஸ் வருவதற்குள் ஏறக்குறைய 36 யூரோ கட்டணம் செலுத்திய பின்னரே பாரிஸ் வர முடிந்தது. நெடுஞ்சாலையில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் தான்.

ஜெர்மனி நெடுஞ்சாலையில் சுங்கவரி கட்டணம் இல்லை என்பதால் வாகனங்கள் எப்போதும் நிறைந்திருக்கும். ஆனால் பிரான்சில் நெடுஞ்சாலையில் அவ்வளவாக வாகனங்களைக் காண முடியாது. நெடுஞ்சாலையைத் தவிர்த்துவிட்டு கிராமப்புறச் சாலைகள் பயணிப்போர் அதிகம். பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் அல்லவா..? 🙂

பிரான்சின் கட்டிடங்களும் பொதுப் போக்குவரத்துகளும் மட்டும் தான் சிறப்பா என்று கேட்டால்... இல்லை. அதற்கும் மேலாக கலைகளைக் கொண்டாடும் ஒரு நாடாக பிரான்சு திகழ்கிறது என்பதை நான் கூறத்தான் வேண்டும்.

இத்தாலியில் தொடக்கம் கண்ட மோனாலிசா பிரான்சில் தான் வாழ்கிறாள். மோனாலிசாவை உருவாக்கிய இத்தாலியில் பிறந்த டாவின்சியும் பிரான்சில் தான் கல்லறையில் உறங்குகின்றார்! தொடர்வேன்.

-சுபா

கங்கா நகரப் பேரரசு - 29.06.2021


கணேசன் சித்தியவான்: 20 ஆண்டுகளுக்கு முன் பெருவாஸ் Kg Kota வளைவில் makam Raja Cholan என்று பெயர் பலகை இருந்தது. இப்பொழுது makam Raja Beruas என்று உள்ளது. பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பாடலில் கங்கையின் வாசம் தென்றலில் வீசும்... ராஜ ராஜ சோழனின் வம்சம்... என்று தொடங்கும்

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நல்ல தகவல். கங்கா நகரத்தைப் பற்றி ஏற்கனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி இருக்கிறேன். இப்போது ஆசிரியர் கணேசன் கொடுத்த தகவலையும் உடனடியாக இணைத்து விட்டேன். நன்றிங்க.

கங்கா நகரம் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/s/3wfv

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான் தம்பி. அதே போல் இந்த மாவட்டத்தின் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தின் பிரதான சாலையின் பெயர் jalan Ganga negara என்று இருந்தது. இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

மகாலிங்கம் படவெட்டான்: அற்புதம் ஐயா.. நன்றி வாழ்த்துகள்... புருவாஸ் நகரமும் அதன் சுற்றுப்புறமும் கடந்த 60 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உண்டு... தெரிந்த விடயம் கொஞ்சம் தான்.. ஆனால், தங்களின் இந்த கட்டுரையைப் படித்து இன்னும் பல சரித்திர புரிதல் ஏற்பட்டுள்ளது... 🌹🙏🏽🌹

மோகன் காசிநாதன்: முற்றிலும் உண்மை. பல மறைக்க பட்டது. இதற்கு ஒரே வழி, மீண்டும் அங்கே ஆய்வு நடத்த வேண்டும். அதுவும் இந்தியர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளி வரும். இது நடக்காதா என பல நாட்கள் ஏங்கியது உண்டு. என்று தீருமோ இந்த தாகம். 🙏

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆய்வு நடத்தலாம். நல்ல  கருத்து. அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்றுக் கொள்வது. தங்களைப் போல கருத்து முன்வைப்பாளர்கள் நிதியுதவி செய்தால் நாங்கள் தயார். தாங்கள் நிதியுதவி செய்ய முடியுமா ஐயா? அங்கே கேட்கலாம் இங்கே கேட்கலாம் எனும் மீண்டும் கருத்துகள் வேண்டாம். உங்களால் இயன்றால் நிதியுதவி செய்யுங்கள்.

கோத்தா கெலாங்கி ஆய்வுகளில் நம் தமிழ் ஆய்வாளர்கள் பல்லாயிரம் செலவு செய்து விட்டார்கள். அதில் நானும் ஒருவன். உதவி செய்ய எந்த அமைப்பும் முன் வரவில்லை. மூடி மறைக்கும் மேலாதிக்கத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என உதவி செய்ய மறுக்கிறார்கள்.

எல்லோரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். முடியுமா? 2013-ஆம் ஆண்டில் களம் இறங்கி ஆய்வு செய்து, சேகரித்த தகவல்களைக் கொண்டு 'கங்கா நகரம்' கட்டுரையைத் தயாரித்தேன் என்பதைப் பணிவுடன் முன் வைக்கிறேன். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான். ஐயா தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆய்வுகளும் அதே பரிதாபம் தான் போல. உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்;

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு; நமது தமிழர்களின் தடயங்களை ஆய்வு செய்ய என்னதான் செய்தார்கள். மாநாடு கூடியது. சிறப்பாக நடத்தி முடித்தோம் என மங்கலம் பாடியதோடு சரி. தமிழ் நாட்டுத் தொல்லியல்துறை உள்நாட்டிலேயே ஓணான் பிடிக்க முடியவில்லை. நம்ப நாட்டிற்கு வந்து விடுவார்ளா என்ன.

தங்களைப் போன்ற தன்னார்வப் பணியால் தான் நாங்கள் கொஞ்ச நஞ்சம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறோம். தற்சமயம் தாங்கள் செய்து கொண்டிருப்பதே பெரும் பணி. பார்ப்போம். எதிர்காலம் எப்படியோ?

தாங்கள், சுக்கை பட்டாணி நடராஜா; டாக்டர் ஜெயபாரதி இன்னும் இலைமறை காயாக சிலர் எடுத்த முயற்சிகள் வீண் போகாமல் இருக்க வேண்டும் என்பதே. நமது எண்ணம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: அங்கே தமிழர்களின் தடயங்களை இராத்திரி நேரத்தில் மறைக்கிறார்கள். இங்கே விடியல் காலையில் மறைக்கிறார்கள். தவிர மலாயா தமிழர்கள் எனும் உணர்வில் எவ்வளவோ செலவாகி விட்டது. எங்கேயாவது முதலீடு செய்து இருக்கலாமே என்று சமயங்களில் நினைப்பதும் உண்டு. விடுங்கள். யாருக்காக செலவு செய்தோம். நம் எதிர்காலச் சந்ததியினரின் விழிப்பு உணர்வுக்காகச் செலவு செய்தோம். அந்த மனநிறைவு போதும்.

 

பிரதமருக்குப் போன் செய்யும் பெண்கள்



மலாக்கா முத்துகிருஷ்ணன்: பிரதமருக்கு போன் செய்யும் அளவிற்கு நம் பெண்கள் முன்னேறி விட்டார்கள். அதிக உரிமை கொடுத்தால் பாவம் ஆண்கள்... 😞

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இது ரொம்ப நல்லா இருக்கு!!! தொடர்ந்தால் பெண்கள் செய்யும் எல்லா வேலையையும் மறந்து விடுவார்கள்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவு என்று புந்தோங் பக்கிரிசாமி அனுப்பி வைத்தது...

ராதா பச்சையப்பன்: பெண்களுக்குச் சம உரிமை என்பது சும்மா தானா? பிரதமரிடம்  பேசியதில் நீங்கள் எல்லாம் பெண்கள் எங்களை நினைத்து பெருமைப்பட வேண்டுமே தவிர, பொறாமை படக் கூடாது. 😃🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  அதற்கு புருசன்காரனை இப்படியா வேலை வாங்குவது. பாவம் அந்த புருசன்காரன்.

தேவி சர: இல்லை அப்பா... பாவம் பெண்கள் இன்று பல வீடுகளில் ஆண்கள் பெண் சம்பாத்தியத்தில் தான் வாழ்கிறார்கள்.... அதுவும் படித்த பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் சொகுசு வாழ்க்கைதான்...

மலாக்கா முத்துகிருஷ்ணன்: இது எங்களைப் போன்றவர்களுக்கு அல்ல. இப்போது உள்ள இளைஞர்கள் சிலருக்குப் பொருந்தி வரும். இதுவரை என் மனைவியை வேலைக்கு அனுப்பியது கிடையாது.

முன்பு என் சம்பளத்தில் கடைசி பத்து வெள்ளிகள் (50 வெள்ளி) மட்டுமே என் சொந்தச் செலவு. மற்ற நூறு வெள்ளிகள் எல்லாம் குடும்பத்திற்கு... பல வருடங்கள்.

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இடுப்பு உடைந்துவிடும்.

ராதா பச்சையப்பன்:  கட்டினதில் இருந்து கடைசி வரையிலும் நாங்க செய்யும் போது யாருக்கும் எங்கள் மீது பரிதாபமே வரவில்லையே. அத்தி பூத்த மாதிரி ஒரு சில நாட்கள் செய்தால், அதற்குப் பெயர் கொடுமையா? இந்தக் கொடுமையை எங்க போய் சொல்வது. இந்த ‌கொரோனா வந்ததே இப்படி பட்ட ஆண்களால் தான். மனைவி தினம் படும் கஷ்டம் இப்பவாவது தெரிதால் சரி.🙏🌺.

ராதா பச்சையப்பன்:  >>>> கரு. ராஜா, சுபாங் ஜெயா: அண்ணா, நீங்களுமா?😳😳😱 நீங்க இப்படி சொல்வீங்க என்று நினைத்துப் பார்க்கவில்லை. அண்ணியின் மீது அலாதி பிரியம் கொண்டவர் நீங்கள். நம்ப முடியவில்லை 😳🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஒவ்வொரு வீட்டிலும் எந்தக் கணவன் என்ன வேலை செய்வான் என்று யாருக்கும் தெரியாது. அதே சமயத்தில் வீட்டு வேலைக்கு இப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்... வெளியே போய் மாடாய் உழைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

தனசேகரன் தேவநாதன்: கொடுமை... கொடுமை. என் மலேசியம் புலனம் பக்கம் போனால் அங்கே இரண்டு கொடுமை கொண்டை கட்டி ஆடுதோ இராதா அம்மா 😃😄😀🤣

மலாக்கா முத்துகிருஷ்ணன்: எனக்குத் தெரிந்த ஒருவர் மூன்று வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார். காலையில் ஜே.கே.ஆர். வேலை. பிற்பகலில் மீன் மார்க்கெட் வேலை. இரவில் ஜாகா வேலை. இப்படி மூன்று வேலை செய்தவர் சீக்கிரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டார். நல்ல உழைப்பாளி.

ராதா பச்சையப்பன்: 🙏இப்படி உழைத்தவர் ஒருவர், தன் பிள்ளைகள் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்களே, அந்த அப்பாவும் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார். நீங்க சொன்னவருக்கு ஏதாவது நோய் இருந்திருக்கும். 😃🙏.

ராதா பச்சையப்பன்:  >>>> தனசேகரன் தேவநாதன்: நீங்களுமா சகோதரரே! எனக்கு சப்போட் பண்ண இந்தப் புலனத்தில் ‌பெண்கள் யாருமே இல்லையா சகோதரிகளே? 😢😳😳.

தனசேகரன் தேவநாதன்: தாய் குலம் என்றுமே தெய்வத்திற் நிகர். வருத்தம் வேண்டாமே... 🌹🙏🌹🙏🌹🙏

தேவி சர:>>>> தனசேகரன் தேவநாதன்: அப்படி சொல்லுங்கள் ஐயா👍🏻👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நான் இருக்கேன் பயப்படாதேமா... ஆனாலும் இன்றைக்கு மட்டும்... என் ஆண் இனத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் ஆண்கள் கட்சி. 😃😃😃

தேவி சர:இந்தக் கேலிசித்திரம் வரைந்தவர் வீட்டில் இப்படித்தான் இருப்பார் போலும்... 🤷🏻‍♀️

தனசேகரன் தேவநாதன்: எடுத்து விட்டார் துப்பாக்கியை தேவி அம்மா...

தேவி சர: அவர் வரைந்த படத்திற்கு நம் புலனத்தில் இப்படி விமர்சனம் வரும் என்று அடியேன் எதிர்பார்க்கவில்லை...

மகாலிங்கம் படதேவன்: உணர்ந்து வரைந்துள்ளாரோ?

தேவி சர:அவர் உணர்ந்து வரைந்துள்ளார்.... ஆனால்.... விமர்சனம் இப்படி வருகிறதே... 🤔ம்...

முருகன் சுங்கை சிப்புட்: தாயின் கருவறையில் முதலில் தோன்றியவள் பெண் என்று நினைக்கிறேன்.பெண்களுக்கே என் ஓட்டு.

தேவி சர:நன்றி ஐயா🙏🏻. ஒர் ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் குடும்பத்தை நடத்தி விடுவாள்.

கலைவாணி ஜான்சன்: அருமை சகோதரி.... விட்டுக் கொடுக்கும் மனம் வர வேண்டும்... 👏🏻👏🏻

ராதா பச்சையப்பன்: உண்மையைதான் சொன்னேன். எங்களுக்கு மாத வருமானமே போதுமானது. என்னால் கொடுக்க முடியவில்லை என்றாலும் இல்லாதவர்களுக்கு  கொடுப்பதுதான் முறை. கடந்த காலங்களில் நானும், என்னவரும் ம.இ.கா. நிர்வாகத்தில் இருந்தோம். நான் தலைவி. எங்களுக்கு என்று எதுவும் கேட்பதில்லை. அவர்களும் எதுவும் கொடுத்தது இல்லை. எங்களுக்கு வருத்தமும் இல்லை. நாங்கள் சிறப்பாகவே இருக்கிறோம். நன்றி சகோதரி 🙏🙏🌺.

செல்லையா செல்லம்: .இப்படி வேலை செய்வது என்ன பிரச்சினை நம் இல்லத்து அரசிகளுக்கு  கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  கெமர் நாட்டுப் பெண்கள் தங்களின் கணவன்மார்களை வீட்டு வேலைகள் செய்ய அனுமதிப்பது இல்லை.

கரு. ராஜா: கல்யாணம் முடிந்து என் மனைவி என் வீட்டிற்கு வந்ததும், சொன்ன முதல்வார்த்தை, எங்கள் வம்சத்தில் நாங்கள் கணவனை சமையல் கூடத்திஏகு அனுமதிப்பது இல்லை என்று கூறினார். இன்னும் அது தொடர்கிறது. அவர்கள் வெளிநாடு சுற்றுலா போகும் போது மட்டுமே சமையல் பிரச்னை வரும்.

ராதா பச்சையப்பன்:  உண்மைதானே! அன்று  சொன்னதை, இன்றும் அண்ணி கடைபிடித்து  தானே வருகிறார். பிறகு என்ன?👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் அப்படி நடந்து கொண்டால் புண்ணியம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

ராதா பச்சையப்பன்: 🙏 என் திருமணம் 16- வயதில்... வீட்டு வேலை சமையல் எல்லாம் என் பிறந்த வீட்டில் நான்தான் செய்வது. அதைப் பார்த்த என் மாமி என்னை தன் மருமகளாக்கினார். தனியாகப் போகும் வரை எல்லாம் நான்தான் செய்தேன்.

குளத்திலிருந்து தண்ணீரைக் காண்டா போட்டு தூக்கி வருவது. விறகு பொறுக்குவது எல்லாம். என் நாத்திகள் உதவுவார்கள்.

என்னவரை என் மாமி ஒரு வேலை செய்ய விடுவது இல்லை. தலைமகன் செல்லமாக பார்ப்பார். தனியாக வந்தும் எல்லா வசதிகளும் இருந்தும், என்னவர் எந்த வேலையும் வீட்டில் செய்வது இல்லை.

அவருடைய அரசாங்க வேலையை மட்டுமே செய்வது உண்டு. குடிக்கத் தண்ணீர் வேண்டுமானாலும் நான்தான் எடுத்து அவர் கையில் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் வந்த பிறகும் அப்படியே.

டி, காப்பி கலக்கக் கூட தெரியாது. இவர் தன் பெண் பிள்ளைகளையும் எந்த வேலையும் செய்ய விடுவது இல்லை. ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்றாலும் நான்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.  

பிள்ளைகளும் அவரோடுதான் இருப்பார்கள். அந்தச் சமயத்தில் கோபம் வரும் பாருங்க... உங்க பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பும் போது, வரதட்சனையாக வீட்டு வேலைக்கு ஒரு‌ ஆளையும் அனுப்பி வைங்கனு கத்துவேன். 🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: கொடுத்த வைத்த கணவர்...  👍

கரு. ராஜா: கொடுத்து வைத்தக் கணவர் அவர்

ராதா பச்சையப்பன்: நீங்களும் நிறையவே கொடுத்து வைத்தவர் தான் அண்ணா. எல்லா வகையிலும் அண்ணி சிறப்பானவர் தானே! எல்லோருமே ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் தான். உண்மைதான். அடுத்தப் பிறவி என்று ஒன்று இருந்தால் அவரே மீண்டும் என்னவராக வர வேண்டும். 🙏🙏🌺.

கரு. ராஜா: அப்படியே நடக்கட்டும். நீங்கள் கேட்ட வரம் கொடுத்து விட்டேன். மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே பக்தா.