26 ஜூலை 2021

உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்பு (1) - முனைவர் க. சுபாஷிணி

25.07.2021

உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகைச் செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து செல்கின்றன. 

உண்டெரூல்டிங்கன் (ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு
அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021
சென்றிருந்த போது பதிந்த காட்சி.
-முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்.



அவை பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவும் பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப் டுவிட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன.

தமிழ்நாட்டுத் தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத் தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.


தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்ட காலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சிப் பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.  

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும்; சிறு நகரமாகட்டும்; கிராமம் ஆகட்டும்; எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு ஒன்றினைப் பற்றியது.

உண்டெரூல்டிங்கன் (Pfahlbaumuseum Unteruhldingen) கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகே உள்ளது. 

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள்
ஒருவர் ஃபெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு
'Pile Dwelling' என பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார்.



இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.
 
ஜெர்மனிக்கு தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி.

1853-1854 ஆகிய காலக் கட்டத்தில் இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டிக் கிழிந்து போயின. அதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பிச் சோதனை செய்தனர்.

அப்போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும்; அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்கு கிடைத்ததும்; ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் பெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' என பெயரிட்டு தன் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த கி.மு. 3000 கால அளவிலான வீடுகள்; இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன்.

தொடரும்...
-சுபா

 

கற்றல் கற்பித்தலில் என் பட்டறிவுகள் (17) - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே. குமார் - 25.07.2021

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை முடிவுற்று ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்துவிட்டது.

மலேசியக் கல்வியமைச்சிடம் இருந்து கூட்டரசு பிரதேச மாநிலத் திணைக்களம் வழியாக எனக்கு ஒரு மடல் வந்திருந்தது. அதில் கோலாலம்பூரில் உள்ள பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றிற்கு என்னை இட மாற்றம் செய்து இருப்பதாக எழுதப் பட்டிருந்தது.  


அந்தப் பள்ளிக்குச் சென்று 'உள்ளேன் ஐயா' என்று செய்யச் சொல்லி இருந்தது. தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனும் ஒரு சட்ட மிரட்டலோடு அந்த மடல் அமைந்து இருந்தது.

எனக்கு இது இரண்டாவது பள்ளி என்பதால் இவ்வகை மடல்கள் எனக்குப் புதிது. என்னுடைய முதல் பணி அமர்த்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கவில்லை.  சிலரைக் கேட்டு அறிந்த பொழுது வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போகும் போது மடல் இப்படித்தான் வரும் என்பதை அறிந்து கொண்டேன்.  

அது மட்டுமின்றி மடல் குறிப்பிடும் நாளில் தகுந்த காரணங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லாமல் காலம் தாழ்த்தினால் அரசு ஆணையை மீறியக் குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும் என்பதனையும் பிற்பாடு கல்வியமைச்சில் நான் ஒரு அதிகாரியாக இருந்த போது  உணர்ந்து கொண்டேன்.

ஒருவழியாகப் பள்ளித் திறந்த முதல்நாள் என்னுடைய யமாகா உந்துருளியில் (motorcycle) பள்ளிக்குச் சென்றேன். இது பெண்கள் இடைநிலைப்பள்ளி எனும் சுவரெழுத்துக்கள் என்னை வரவேற்றன.

பள்ளிக் காலையிலேயே தொடங்கி விட்டது. நான் பத்து நிமிடம் தாமதமாகச் சென்று சேர்ந்தேன். என் உந்துருளியைப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையின் ஓரமாக நிறுத்தினேன்.

'வா வா வாத்தியாரே வா' எனும் பாட்டை யாரோ பாடுவதுக் கேட்டு நிமிர்ந்தேன். சிற்றுண்டிச் சாலையின் இருக்கையில் நம்மின மாணவிகள் இருவர் அமர்ந்து இருந்தனர்.

நான் அவர்கள் பக்கம் நோக்கிய போது, ஒரு மாணவி குறும்பாகச் சிரிக்க மற்றொரு மாணவி ’படக்’கென்று வேறொரு பக்கம் திரும்பிக் கொண்டாள். இருவருக்கும் 15-16 அகவைக்குள் தான் இருக்கும்.

’அடக் கடவுளே முதல் நாளே வரவேற்பு இப்படி இருக்கிறதே’ என்று நொந்து கொண்டேன். இதை நான் உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை. பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்திய மாணவிகள் இப்படியும் இருப்பார்களா என்று எனக்கு வியப்பு ஏற்பட்டது.  

நான் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் முன்பின் தெரியாத ஆடவனைப் பார்த்து அதுவும் ஓர் ஆசிரியரைப் பார்த்து மாணவிகள் இப்படி எல்லாம் செய்தது இல்லை.

காலம் மாறிவிட்டு இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைமுறை மாற்றம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றியது.

அந்தப் பள்ளியில் என்னோடு சேர்த்து மூவர் மட்டுமே ஆண் ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் சீனர், ஒருவர் மலாய்க்காரர். மொத்தம் 120 ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் 117 பேர் பெண்கள். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள். பள்ளியின் முதல்வர், துணை முதல்வர்கள் எல்லோரும் பெண்கள்.

இந்த அதிர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பள்ளியின் தலைமையும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.


 

23 ஜூலை 2021

மலேசியத் தமிழனத்தின் குடிப்பழக்கம் - மகாலிங்கம், பினாங்கு

23.07.2021

நம் இனத்தின் குடிப் பழக்கம் தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ளது. ஏன் ஏன் ஏன்?

ஏறக்குறைய பிறந்த சில நாட்களில் இருந்து குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி... சுடுகாடு போகும் வரை... பழகிய இந்தக் குடியை மறக்க முடியாத... விட்டுத் தொலைக்க இயலாத... ஒரு சுயசிந்தனை இல்லாத... மானம் கெட்டத் தமிழ் இனமாக  மாறி...


மற்ற இனத்தவர்கள் காரி உமிழும் வகையில் இடம் பொருள் ஏவல் இல்லாமல்...

நடு ரோடு, பொது விளையாட்டுப் பூங்கா, கோயில் குளம், திருமணக் கொண்டாட்டம், பிறந்த நாள், இறந்த நாள், கருமாதி என்று எல்லாம்...

ஆண் பெண் என பால் தெரியாமல்... கண்டதே காட்சி கொண்டதே கோலமாக... தரி கெட்டு... நாளும் குடி குடி என்று குடித்து ஆட்டம் போடும் நம் இனத்தை யார் திருத்துவது?


தந்தையும் குடிக்கிறான்...
மகனும்  குடிக்கிறான்...
அம்மாவும் குடிக்கிறான்...
மகளும் குடிக்கிறாள்...
அதுவும் ஒரே மேசையில் அமர்ந்து...

குடியிலே வேறு வேறு பிரிவுகள்...
உயர் தர தண்ணி...
கீழ்த் தர தண்ணி...

ஆனால், போதை தரும் தண்ணியில் வேறு வேறுபாடு...
படித்தவருக்கு ஒரு வகை தண்ணி...
படிக்காத பாமரருக்கு ஒரு வகை தண்ணி...
பணக்காரனுக்கு உயர் தர தண்ணி...
ஏழை மக்களுக்கு  தரம் குறைவான தண்ணி...

ஆக மொத்தத்தில் நம்மவர்களில் 90 விழுக்காட்டினர் மது போதையில் தான் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... யாரை யார் திருத்துவது? தயவு செய்து நாம் நம்மைச் சுற்றியுள்ள நம் இனத்தை ஒரு வட்டமிட்டுப் பார்ப்போம்.


சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்பு அடைந்தவரின் உடல் நலத்தை சேதப் படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்கத் தூண்டுவதாகும்.

இரண்டாவதாக மதுவைக் குடிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் இயலாமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல வழிகளில் வெளிப்படும்.

சாராய மயக்கம் காரணமாகக் குடிப்பவர், அவரின் குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்களுக்குச் சமூகத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் சமுதாய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


சாராய மயக்கம் என்பதனைச் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு, மதுபானங்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதில் இருந்து மீள இயலாமை ஆகிய குறிப்பிட்ட அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

மதுபானங்களால் தூண்டப்படும் உடலியக்கவியல் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு போன்றவை குடிப்பவர் குடிக்காமல் இருக்க இயலாமைக்கு காரணிகளாக விளங்குகிறது.

சாராய மயக்கம் மன நலத்தையும் வெகுவாகப் பாதித்து மன நலச் சீர்கேடுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம். குடிப்பவர்களில் ஏறக்குறைய 18 விழுக்காடு மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அன்புடன்,
மகாலிங்கம் படவெட்டான்,
நாம் தமிழர்; பினாங்கு.


பின்னூட்டங்கள்

பாலன் முனியாண்டி: வாழ்கை என்பது வாழ்வதற்கே... வருவது வரட்டும் பயம் எதற்கு என்ற அறப சந்தோசத்தில் திலைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள்...

வெங்கடேசன்: உண்மை... தற்போது நம் சமுதாயத்தில் குடிப் பழக்கம மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. பிறந்த நாள், கருமாதி நாள், திருமண நாள் இப்படி எல்லா நாட்களிலும் குடியும் குடித்தனங்கள்...

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: வேதனையான விடயம்... யாரை யார் காப்பாற்றுவது ஐயா?

வெங்கடேசன்: நம் சமுதாயத்திடம் நல்ல விடயங்கள் சொல்ல முடிவதில்லை ஐயா. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

தனசேகரன் தேவநாதன்: சந்தோசத்தின் உச்சம் குடிப்பதுதான் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது நம் இளைய தலைமுறை... வேதனை

வெங்கடேசன்: இந்தப் பழக்கம் வைரஸை விட கொடூரமாக நம் சமுதாயத்தைக் குறிப்பாக... இளையோர் மத்தியில் மிக மோசமாக பரவியுள்ளது. வேதனையான விடயம் 😭😭

பால் சேர்வை: இந்தியர்கள் குடிb பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்

முருகன் சுங்கை சிப்புட்: திருடனாய் திருந்த வேண்டும்... நானும் பல போதைக்கு அடிமையானவன்தான். அமைந்த மனைவியும் ஒரு காரணம். சிந்தித்தேன் சிறப்பான முடிவை எடுத்தேன். 30 ஆண்டுகளாகி விட்டன. புகைபிடித்தல், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் அனைத்தையும் நிறுத்தி விட்டேன். நிறுத்தினால் மட்டுமே தன்மானம் கொஞ்சம் பிறக்கும்.

பொன் வடிவேலு ஜொகூர் பாரு: இந்தியர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்த, அவரவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடியில் மிதப்பவர்களைக் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க வேண்டும். அதுபோல சமுதாயமும் குடிகாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

குடிகாரர்களை சீர்திருத்த மையங்களுக்கு அனுப்ப வேண்டும். குடிப்பதை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என சொல்லிச் சொல்லி பல காலம் போய்விட்டது. இயக்கங்கள் நல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். -பொன் வடிவேல் ஜோகூர்பாரு 012-7299587

உதயக்குமார் பெர்லிஸ்: தமிழ் திரைப் படங்களில் புகைப் பிடித்தல் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு எனும் அறிவிப்பை விடுத்து அவ்வாறான காட்சிகள் இல்லாமல் இருத்தல் சிறப்பு.




22 ஜூலை 2021

இறப்பிலும் இணைந்த இதயங்கள்



மலேசியம் புலன அன்பர் திரு. பெருமாள் அவர்களின் அண்ணன்; அண்ணியர் இருவரும் I.C.U. வில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார இடைவெளியில் ஒருவரை ஒருவர் அறியாமலேயே இறைவனடி சேர்ந்தனர். 17-ஆம் தேதி கணவர் காலமானார். இன்று காலை 21.07.2021 மனைவி காலமானார்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமையானது என்பதை அறிந்து கொள்வோம். அது உறவுகளைப் பார்ப்பதும் இல்லை. உணர்வுகளைப் பார்ப்பதும் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் (உடன் பிறப்புகளாக இருந்தாலும்). வீட்டில் உள்ளவர்கள் வெளியே போய் ஊர் சுற்றுவதையும் அனுமதிக்காதீர்கள். 50 வயது தாண்டியவர்களுக்கு ஆபத்து மிக அதிகம். அண்மைய தகவல்.

அவர்களின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கின்றோம்.

*புலன அன்பர்கள்*
*நிர்வாகத்தினர்*
*மலேசியம்*
21.07.2021

பின்னூட்டங்கள்

பெருமாள் கோலாலம்பூர்: இல்வாழ்வில் இணைந்தவர்கள். இருவருமே மருத்துமனையில் சேர்க்கப் பட்டனர். ஒருவரை ஒருவர் அறியாமலே I C U வில் இணைந்து ஒரு வார இடைவெளியில் இருவருமே இறைவனடி எய்தனர்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமை வாய்ந்தது என்பதை அறிகிறேன். என் அண்ணன் அண்ணியாரின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறேன் ta

தனசேகரன் தேவநாதன்: ஓம் சட்கதி. எல்லாம்,வல்ல ஏக இறைவன் குடும்பத்தினருக்கு அமைதியையும் சாந்தியையும் அருள்வாயாக ஓம்நம சிவாய.


வெங்கடேசன்: ஓம் நம சிவாய ஓம்

கலைவாணி ஜான்சன்: ஆழ்ந்த இரங்கல்... திருமண பந்தத்தில் இணைந்த இதயங்கள், இறப்பிலும் இணைந்து ஒன்றாக இறுதி பயணத்தில்.... இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏


இராதா பச்சையப்பன்: 🙏. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

தேவி சர: ஓம் நமச்சிவாய

உதயகுமார் பெர்லிஸ்: ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் நமசிவாய


செல்லையா செல்லம்: ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ...

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. ஆழ்ந்த அனுதாபங்கள்


சிவகுரு மலாக்கா: ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் நமசிவாய 🙏🏼

கென்னடி ஆறுமுகம் கிரிக்: ஆழ்ந்த இரங்கல்

பெருமாள் கோலாலம்பூர்: தலைவர் அவர்களே... இரங்கல் தெரிவித்தோருக்கு துயரிலும் தலை வணங்குகிறேன். நமது அன்றாட தகவல் பகிர்வுகளை தொடர வேண்டுகிறேன். அன்புடன் ta.

பால் சேர்வை:
ஆழ்ந்த இரங்கல்....

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்

ஆதி சேகர் கோலக்கிள்ளான்: ஆழ்ந்த அனுதாபங்கள்... ஓம் நமசிவாய 🙏🏼


19 ஜூலை 2021

கோலாசிலாங்கூர் சரித்திரப் புகழ் 1 - இராதா பச்சையப்பன்

19.07.2021

கோலாசிலாங்கூர் சரித்திரப் புகழ் பெற்ற இடம். என்னோடு வாருங்கள். புலனத்தில் இருந்தவாறே கோலாசிலாங்கூரை சுற்றிப் பார்க்கலாமே! படத்தில் உள்ளது புக்கிட் மெலாவதிக்கு (மலை குன்று) போகும்  நுழை வாயில்.  


SELAMAT  DATANG  KE BUKIT MALAWATI எனும் வரவேற்புச் சின்னம்; தேசிய மொழியிலும், ஜாவி மொழியிலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும்.

இதுதான் கோலாசிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் செயல்படும் வாகனம். இங்கு டிபால்மா ஓட்டலும் உண்டு.

ஓட்டலில் தங்கி இருப்பவர்கள் மலையைச் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் ஓட்டலுக்கே வாகனம் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும்.

சுற்றிப் பார்த்த பிறகு திரும்ப ஓட்டலிலேயே கொண்டு வந்து விட்டுச் செல்லும். இதற்கு ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுப்பதும் உண்டு. (இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்)

பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: சரித்திரச் சான்றுகளைப் பதிவு செய்யுங்கள். உங்கள் ஊரை பற்றி தெரிந்து கொள்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இது ஓர் அன்பரின் சொந்த முயற்சி. படைப்பு. இப்படிப்பட்ட பதிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். அடுத்த புலனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பதிவுகளுக்கு என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது. சொந்த முயற்சியாளர்களைத் தட்டிக் கொடுப்போம். அதுவும் நம் புலன அன்பர்... தட்டிக் கொடுங்கள். உற்சாகம் வழங்குங்கள்.

வெங்கடேசன்: பயனான தகவல்கள் மிக்க நன்றி

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு புதிய கட்டுரையாளர் உருவாகிக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துகள். எனக்கு போட்டியாக வந்து விடுவாரோ... பயமாக இருக்கிறது... ஓடிடுவோம்... சும்மா ஜோக்... பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் சகோதரி. எனக்குப் பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ் மலர் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் திரு. சின்ன ராசு நம் புலனத்தில் ஓர் அன்பர். உங்களின் இந்தக் கட்டுரையை ஞாயிறு மலரில் பிரசுரிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்

வெங்கடேசன்: குருவை மிஞ்ச முடியுமா.ஐயா?குரு குருதான் மாணவர் மாணவர்தான்

தேவி சர: அருமை அம்மா. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நாளை தொடருக்காக காத்திருக்கிறேன்...

இராதா பச்சையப்பன்: மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் தெரியாத என்ன? மலையோடு என்றும் மடு மோத இயலாது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ. இவரின் மாணவர் அரிஸ்டாட்டில். இவர்களில்  யார் மலை யார் மடு. அந்த வகையில் திறமைசாலிகளை மலைக்கும் மடுவிற்கும் ஒப்பீடு செய்வது சரியன்று. எனினும் ஆசிரியரின் ஆசீர்வாதங்கள் எப்போதும் மாணவர்களுக்கு உண்டு. எழுந்து வா மகளே...

சின்ன ராசு:
சற்று முன்தான் கவனித்தேன். என்னை பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சகோதரரே. அவரின் படைப்பை அனுப்பி வைக்கவும். பிரசுரிப்போம். நன்றி. cnrasu.media@gmail.com