தமிழ் மலர்: 12.08.2021
மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அந்தப் பாவனையில் மொழி மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மொழிச் சீர்த்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை. எதை மாற்றம் செய்ய வேண்டுமோ; எதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமோ; அதைச் செய்வது சிறப்பு.
அந்த வகையில் மொழி மாற்றங்கள்; மொழிச் சீர்த்திருத்தங்கள் செய்பவர்களின் நல்ல நோக்கங்களைத் தவறாக எடைபோடுவது நம் நோக்கம் அல்ல. ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைச் சிதைவுறாமல் சீர்த்திருத்தம் செய்வது நலம் பயக்கும். அதுதான் முக்கியம். சீர்த்திருத்தம் எனும் பெயரில் திணிப்புகளைத் தவிர்ப்பதும் சாலச் சிறப்பு.
மொழிச் சீர்த்திருத்தம் செய்யப்படும் போது, பொது மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். நான் எடுத்த முடிவுதான் சரி என்று பிடிவாதம் செய்வது தவறு. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் என்று முரட்டுவாதம் செய்வது தவறு.
கிரந்த எழுத்துகள் வட எழுத்துகள் அல்ல. இதைத்தான் மலேசியக் கல்வி அமைச்சின் பாடத் திட்டக் குழுவினரும் முன்வைக்கின்றனர். பாடத் திட்டங்களை வகுக்கும் போதும் சரி; தொகுக்கும் போதும் சரி; கிரந்த எழுத்துகள் என்று சில அத்தியாயங்களை உருவாக்கிப் பாடமாகச் சொல்லித் தருகிறார்கள்.
1957-ஆம் ஆண்டு, மலாயா சுதந்திரம் அடைந்த போது ரசாக் அறிக்கை (Razak Report) எனும் கல்வி அறிக்கை உருவாக்கப்பட்டது. மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.
1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.
அடுத்து ரஹ்மான் தாலிப் (Rahman Talib Report 1960) அறிக்கை வந்தது. அதன் விளைவாக கல்விச் சட்டம் 1961 (Education Act 1961) உருவானது. அப்போது தான் தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை உருவாக்கினார்கள்.
அந்தக் கட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் கிரந்த எழுத்துகள் இணைத்துக் கொள்ளப் பட்டன. அப்போது இருந்தே கிரந்த எழுத்துகள் சட்டபூர்வமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தத் தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
எப்போது எழுதப்பட்ட பாட நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாய் இருந்தன. கிரந்த எழுத்துகள் இருக்கின்றனவா இல்லையா என்றுகூட அடையாளம் தெரியாமல் பிணைந்து போய் இருந்தன.
பின்னர் காலங்களில் வடமொழிச் சொற்கள் களையப் பட்டன. ஆனால் கிரந்த எழுத்துகளை மட்டும் விட்டு விட்டார்கள். ஒன்றும் செய்யவில்லை. அந்த எழுத்துகள் இன்றும் பாட நூல்களில் வந்து போகின்றன. அப்படியே பிள்ளைகளுடன் மக்களுடன் ஐக்கியமாகி விட்டன.
மேலும் ஒரு தகவல். 2011-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் லீனஸ் (LINUS) கல்வி முறை அமல் செய்யப்பட்டது. (LINUS, Literacy and Numeracy Screening). இந்த லீனஸ் திட்ட நடைமுறை தமிழ்ப் பள்ளிகளில் அமல்படுத்தும் போது கிரந்த எழுத்துகளும் இருந்தன. 2011 அக்டோபர் மாதம் வரையில் 1100 ஆசிரியர்களுக்கு லீனஸ் கல்வி முறை பயிற்சிக்கப் பட்டது. அந்தப் பயிற்சிகளில் கிரந்த எழுத்துகள் பயன்பாடும் ஓர் அங்கமாக இருந்தது.
ஆக காலம் காலமாகத் தமிழ்ப்பள்ளிகளில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் அண்மைய காலங்களில் கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்போம் என்று ஒரு குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாம் தடைக்கல்லாக அமையவில்லை. போராட்டம் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள். ஆனால் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கும் செவி சாயுங்கள்.
பின்னூட்டங்கள்:
தனசேகரன் தேவநாதன்: அதிகாலையிலேயே படித்து விட்டேன் ஐயா. கருத்து குருடர்களை ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பின் பெரிய பட்டாளமே உண்டு ஐயா. உண்மையை உறக்க சொல்ல தயக்கம் வேண்டாம். தமிழோடு உயர்வோம் வாழ்க உங்கள் பணி 👌💞👌💞👌💞
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தங்களின் அன்பான ஆதரவான கருத்துகளுக்கு நன்றிங்க. பொதுவாக காலையில் பத்திரிகையைப் பார்ப்பது இல்லை. கட்டுரை வந்து இருக்கும் எனும் நம்பிக்கையில் மற்ற மற்ற வேலைகளில் ஈடுபடுவேன்.
இன்றைக்கு முதல் வேலையாகப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தேன். மனநிறைவு. தாங்கள் சொல்வது போல உண்மையைத்தான் சொல்கிறோம். உண்மையைத்தான் வலியுறுத்துகிறோம். அது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தனிப்பட்ட ’அஜெண்டா’, தனிப்பட்ட பார்வையில் சிலர் பிடிவாதம் பிடிக்கலாம்.
தோழரே. நம் பாதையில் நம்மால் இயன்றவரை நல்லவற்றைச் செய்து கொண்டே இருப்போம். 🙏
இராதா பச்சையப்பன்: 🌷🙏 நானும் காலையிலேயே கட்டுரையைப் படித்தேன். சில பல விசயங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அது போல வருவது வரட்டும். வந்த பிறகு பேசுவோம். கட்டுரையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கட்டுரையாளருக்கு நன்றி 🙏🌷.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கடைசி வரிகளின் சொல்லாடலைக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
கரு. ராஜா, சுங்கை பூலோ: கட்டுரை அருமை ஐயா. உங்களிடம் வாலாட்ட முடியுமா? அலவாங்குப் போட்டு நோண்டி எடுத்து ஆதாரம் காட்டிவிட்டார் நம்ம வரலாற்று பேரரசு முத்துக்கிருஷ்ணன்.
எந்தெந்த காலங்களில் நம் முன்னோர்கள் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். இனி என்ன ஆதாரம் வேண்டும் இங்குள்ள தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும். இரண்டு நாள் கட்டுரைகளை படித்து ஓரளவு தெளிவு அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம்.
வெங்கடேசன்: பூனைக்கு மணியும் சுண்டெலிக்கு சிலுவாரா? என்ன ஒரு வார்த்தை ஜாலம் ! 😄😄
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: (11.08.2021 பதிவு) நன்றிங்க ராஜா. சாட்டையடி என்று சொல்கிறீர்கள். ஆனால் காலையில் என்ன நடந்தது என்று கேட்கவில்லையே.
இன்று காலை மணி 9 இருக்கும். ஒருவர் மிக அமைதியாக அழைத்தார். கொஞ்ச நேரம் நன்றாக அமைதியாகப் பேசினார். நல்ல மனிதர் என்று முடிவு செய்யும் போதுதான் சுய ரூபத்தைக் காட்டினார்.
‘நீ தமிழனுக்கு பொறந்து இருந்தால் பார்ப்பான் எழுத்துக்கு அடிவருட மாட்டாய். தமிழ் மலருக்கு போன் செய்து என்ன செய்கிறேன் பார். உன்னை எழுத விடாமல் செய்கிறேனா இல்லையா பார்’ என்று ஒருமையில் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டேன்.
அவர் மிரட்டிய தோரணையைப் பார்த்தால் மேல்மட்ட அரசியல் செல்வாக்கு ஆள்பலம் இருக்கலாம் போலும். விடுங்கள். இந்த மாதிரி எத்தனையோ மிரட்டல்களைச் சந்தித்து விட்டேன்.
இருந்தாலும் மனசுக்குள் ஆதங்கம். உண்மையை எழுதுவதால் எதிர்கள்தான் அதிகமாகிறார்கள் எனும் ஆதங்கம்.
அதிகாரம் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால்... நாளைய தினம் இரண்டாவது கட்டுரை வராமல் போகலாம். சொல்ல முடியாது. அதுவே ஒரு பனிப்போரின் ஆரம்பம்.. பார்ப்போமே!
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க ராஜா. தெளிவான பார்வையில் சிறப்பான பின்னூட்டங்கள். ஆழமான பதிவு. சற்றுக் கூடுதலான தனிப்பட்ட தகவல். கிரந்த எழுத்துகள் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் வாட்ஸ் அப்; புளோகர், பேஸ்புக்; இன்ஸ்டகிராம் ஊடகங்களில் வழக்கம் போல பதிவு செய்யலாம் என்று நினைத்தேன்.
தாங்களும் பதிவு செய்யுங்கள் என்று காலையில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் மனத்தில் சின்ன சஞ்சலம்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜேந்திர சோழனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போய் நார் நாராகக் கிழித்து எடுத்து விட்டார்கள். நான் ஒரு தனிமனிதனாக ஒரே சமயத்தில் பத்துப் பதினைந்து தாக்குதல்களைச் சமாளித்தேன்.
அதன் பின்னர் சரியான மன உளைச்சல். நல்லதுதானே எழுதினேன். நல்லதுக்குத் தானே எழுதினேன். அதற்கு இந்த மாதிரியா... பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி என்று வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டார்கள். நல்ல ஒரு பாடம்.
ஊடகத்தில் பதிவு செய்யாமல் பத்திரிகையோடு விட்டு இருந்தால் பிரச்சினை பெரிதாகிப் போய் இருக்காது.
அதே போல கிரந்த எழுத்துகள் பற்றிய அந்த இரண்டு கட்டுரைகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்தால், சிலர் அவற்றைப் படம் பிடித்து மற்ற புலனங்களில் பகிரலாம். அதைப் பற்றி விவாதங்கள் நடக்கலாம். நல்ல பெயர் சிலருக்கு... கடைசியில் கெட்ட பெயர் எனக்கு.
நல்லதுக்கு காலம் இல்லைங்க. ’எப்ப... எப்ப... பாயலாம்’ என்று சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். வம்பை விலை கொடுத்து வாங்குவது சரியன்று. பத்திரிகை வாங்கிப் படித்துக் கொள்ளட்டுமே. அமைதியாக இருப்பதே சிறப்பு. என்ன சொல்கிறீர்கள்.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவருக்கும் தெரியாதுங்க.
பொன் வடிவேலு, ஜொகூர்: சகோதரர் முத்து அவர்களே, உங்களுக்கு துணையிருப்பவர் ஸ்ரீவிநாயகர், அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி, சிவபெருமான், முருகப்பெருமான். தூசுகள் துவம்சமாகும் ௐ