27 டிசம்பர் 2020

வண்ணத்துப்பூச்சி விளைவு

18.12.2020

வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆங்கிலத்தில் Butterfly effect என்று சொல்வார்கள். இந்த உலகில் சிலரால் அறியப் பட்டாலும் பலரால் அறியப் படாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விதி தான் வண்ணத்துப்பூச்சி விளைவு.

ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் அதன் தொடக்க காலத்தின் ஒரு சின்ன நிகழ்ச்சியைச் சார்ந்து உள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவு சுருக்கம்.


Butterfly effect is the sensitive dependence on initial conditions in which a small change in one state of a deterministic nonlinear system can result in large differences in a later state.

பிரேசில் நாட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது. அதன் சிறகு படபடக்கிறது.

அதனால் அங்கே சலசலப்பு ஏற்படுகிறது. அந்தச் சலசலப்பினால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சின்ன புயல்காற்று உண்டாகிறது. நம்புவீர்களா. நம்ப முடியவில்லை தானே. ஆனால் தொடர்பு உண்டு என்று நிரூபிக்க முடியும்.

ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப் படுபவர் எட்வர்ட் லோரன்ஸ் (Edward Lorenz). இவர் 1963-ஆம் ஆண்டு கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் சரி என்று நிரூபித்துக் காட்டினார்.


அதனாலேயே அந்தத் தத்துவத்திற்கு வண்ணத்துப்பூச்சி விளைவு என்று பெயர் வந்தது. ஒரு சின்ன தொடக்க நிலை விளைவு தான் நீண்ட கால பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொன்னார். அதையே சங்கிலித் தொடர் விளைவுகள் என்றும் சொல்லலாம்.

அதே போல தான் டோமினோ விளைவு (Domino effect). பல சிறிய டோமினோ கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி வையுங்கள். அவற்றில் முதலாவது நிற்கும் கட்டையைத் தட்டுங்கள். அதன் பின்னர் எல்லாக் கட்டைகளும் அடுத்தடுத்து விழும். இதுவே டோமினோ விளைவு.

அதாவது பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால் அதற்கு மூலகாரணமாக முதலில் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

அந்த முதல் நிகழ்ச்சியின் தாக்கத்தினால் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதைத் தான் டோமினோ விளைவு என்று சொல்வார்கள். ஆனால் பலர் அதை மறந்து விட்டு கடைசியாக நடந்த நிகழ்ச்சியை மட்டுமே பெரிதாகப் பார்ப்பார்கள். இது மனித இயல்பு.

அதே அந்த டோமினோ விளைவு தான், மலேசியா 1எம்.டி.பி. நிறுவனத்தின் மோசடிகளிலும் நடந்து உள்ளது. 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு இப்போது 4200 கோடி ரிங்கிட் கடன். மலேசியாவை கடன்கார நாடாக மாற்றி வருவதும் இதே இந்த டோமினோ விளைவு தான்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2020

 


மலேசியம் புலனத்தின் நிலைப்பாடு

17.12.2020

மலேசியம் புலனம் 2014-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதன் பயணத்தில் பற்பல கட்டங்களில் பற்பல போராட்டங்கள். பற்பல தாக்கங்கள். அரசியல் மேலிடங்களில் இருந்து பற்பல நெருக்குதல்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு நாட்டின் பிரதமரையும் அவரின் அமைச்சர்கள் சிலரையும் எதிர்த்து நின்றோம். எதிர்த்துக் குரல் கொடுத்தோம். *மாற்றம் ஒன்றே மாறாதது* என்று சொல்லித் தொடராகப் பல பதிவுகளைப் பதிவு செய்தோம். 2018-ஆம் ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இந்தப் புலனம் ஒரு காரணமாகவும் இருந்தது. உண்மை.

அந்த வகையில் நாட்டில் பெரிய ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு இந்தப் புலனமும் முக்கியப் பங்கு வகித்து உள்ளது என்பதையும் இங்கே தாழ்மையுடன் பதிவு செய்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் புலனத்தில் 248 உறுப்பினர்கள். அதை 100-க்கு குறைத்தோம். இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

அண்மைய காலங்களில் மலேசியாவில் நம் தமிழனத்திற்கும் நம் தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சமய வழிபாட்டுத் தலங்களும் பற்பல நெருக்குதல்கள். பற்பல இடர்பாடுகள். அநீதியான செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் தெரிவித்துக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறோம்.

நம் இனத்திற்கு எப்படி நல்லது செய்யலாம்; எப்படி நம் உரிமைகளை முன் வைக்கலாம். அதற்காக இந்தத் தளத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோம். அவையே முதன்மை நோக்கமாக அமைய வேண்டும்.

காலை வணக்கம்; மாலை வணக்கம்; இரவு வணக்கங்களைப் போட்டு, இடத்தை நிரப்பி நாம் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. தவிர மற்ற மற்ற புலனங்களில் பதிவாகும் பயனற்ற பதிவுகளை இங்கே இறக்குமதி செய்வதையும் தவிர்ப்போம். நகைச்சுவைக்காகச் சில பதிவுகள் போதும்.

இங்கே பதிவாகும் பதிவுகளை நம் பிள்ளைகளும்; நம் பேரப் பிள்ளைகளும் பார்ப்பார்கள். படிப்பார்கள். மறந்துவிட வேண்டாமே. கோரமான காட்சிகள்; இரத்தம் சிந்தும் காட்சிகளைத் தவிர்த்து விடுங்கள். அவற்றைத் தனிப் புலனத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம் மலேசியத் தமிழர்களின் சமூகச் கலாசார உரிமைகள்; மொழி உணர்வுகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். முடிந்த வரையில் கடல் கடந்த அரசியலில் முக்கியமான செய்திகளை மட்டும் பகிர்வோம். தொடருங்கள். பயணியுங்கள்.

புலன நிர்வாகிகள்:

கரு. ராஜா;
(கோலாலம்பூர்)

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
(பினாங்கு)

முத்துக்கிருஷ்ணன்;
(மலாக்கா)

 

காமராஜர் வாழ்க்கையில் ஒரு நாள் - கரு. ராஜா

17.12.2020

காமராஜர் முதல்வராக இருந்த போது அவரின் அலுவலகத்திற்குத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி சட்டை. கையில் ஒரு மஞ்சள் பை.

அவரை அழைத்து அருகில் அமர வைத்த காமராஜர் 'என்ன ரெட்டியாரே... ஏதாவது முக்கிய சேதியா... இல்ல சும்மா பார்க்க வந்தீரா...' என்று கேட்டார். வந்தவருக்குத் தயக்கம்.

'பரவாயில்ல சொல்லுங்க ரெட்டியார்...' என்று, மீண்டும் கேட்டார் காமராஜர்.

'ஒண்ணுமில்ல... என் மகனுக்கு கல்யாணம்... அதான்...'

'இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கணும். நல்ல விசயம் தானே...' என்று தட்டிக் கொடுத்துப் பாராட்டி, 'சரி... நான் என்ன பண்ணணும்...' என்றார் காமராஜர்.

'இல்ல... கல்யாணத்துக்கு... நீங்க தான் தலைமை தாங்கணும்... ஊரெல்லாம் சொல்லிட்டேன்... பத்திரிகை கொடுக்க நேர்ல வந்தேன்...' என்று தயங்கினார்.

'நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை... அதனால் அப்படி சொல்லிட்டேன்... தப்பா நினைச்சுக்காதீங்க...' என்று இழுத்தார்.

கோபத்தில் முகம் இறுகி 'எந்த நம்பிக்கையில் நீங்க முடிவெடுத்தீங்க... யாரைக் கேட்டு மத்தவங்ககிட்ட சொன்னீங்க...' என்று கடுமை காட்டினார் காமராஜர்.

கலங்கிய கண்களுடன், 'தப்பா நினைச்சுக்காதீங்க... அன்றைக்கு உங்களுக்கு வேலுார்ல ஒரு கூட்டம் இருக்கு... பக்கத்துல தான் என் ஊர்... அதனால கல்யாணத்துக்குக் கூப்பிட்டா கட்டாயம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன்...' என்றார், ரெட்டியார்.

'உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம்... அதுவா என் வேலை... வேற வேலை இல்லையா... வர முடியாது... நீங்க போயிட்டு வாங்க...' என பட்டென்று கூறி அனுப்பி விட்டார் காமராஜர்.

முகத்தில் அடித்தது போல் ஆனது ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லவில்லை.

கல்யாணத்தை அவர் வீட்டில் எளிமையாக நடத்தினார். அவரது வசதிக்கு அப்படித்தான் முடியும். கடைசியில் காமராஜர் வர.மாட்டார் என்பதும் மக்களுக்குப் புரிந்தது.

'என்னமோ நானும் காமராஜரும் ஒண்ணா சிறையில் இருந்தோம்... கூட்டாளிங்க... என் வீட்டு கல்யாணத்துக்கு வருவார்ன்னு பெரிசா தம்பட்டம் அடிச்சுகிட்டாரு... பார்த்தீங்களா அலம்பல...' எனும் ஏளனப் பேச்சுக் கூடியது. வந்து போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்.

மனம் உடைந்த ரெட்டியாருக்கு உடல் கூனிப் போனது. வீட்டிற்குள் சுருண்டு படுத்து விட்டார். அந்த வீடே வெறிச்சோடிப் போனது. சற்று நேரத்திற்கு எல்லாம் காரில் வந்த ஒருவர் 'முதல்வர் காமராஜர் வரப் போகிறார்...' என்ற செய்தியைச் சொன்னார்.

நம்பிக்கையற்று உட்கார்ந்து இருந்தார் ரெட்டியார். சில நிமிடங்களில் அடுத்த காரில், இரண்டு பெரிய தூக்குச் சட்டிகளில் சாப்பாட்டோடு வந்து இறங்கினார் காமராஜர்.

ரெட்டியாரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கு எல்லாம் கூட்டம் சேர்ந்து விட்டது. முதல்வரைத் தழுவியபடி குலுங்கி அழுதார் ரெட்டியார்.

’தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்திய காமராஜர், 'சுதந்திரப் போராட்டம்... ஜெயில்ன்னு எல்லாத்தையும் இழந்துட்ட... உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே... பையனுக்கு கல்யாணம்ன்னு சொன்னப்பவே நான் வர்றதா சொல்லி இருந்தா... நீங்க இருக்குற கஷ்டத்துல கடன் வாங்குவீர்...’

'முதல்வர் வர்றார்ன்னு ஏதாவது பெரிசா செய்யணும்ன்னு போவீர்... அதான் அப்படிச் சொன்னேன்... மன்னிச்சிடுப்பா... உன் வீட்டு கல்யாணத்துக்கு வராமல் எங்க போவேன்...' என்று ஆரத் தழுவினார்.

கண்ணீர்... ஆனந்தக் கண்ணீரான நேரம் அது.

பிறகு வாசலில் பாய் விரித்து; எடுத்து வந்த சாப்பாட்டை அனைவருக்கும் போடச் சொல்லிக் குடும்பத்தாரோடு தானும் அமர்ந்து சாப்பிட்டார்.

சாப்பாட்டுச் சுமையைக் கூட அவருக்குக் கொடுத்து விடக் கூடாது என்று தன் பணத்தில் சாப்பாடு வாங்கி வந்தார் என்றால் ரெட்டியாரின் நிலை எப்படி இருக்கும் என்பதைக் கூறத் தேவை இல்லை.

நிலை மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப் போகும் மனிதர்களுக்கு மத்தியில், நட்பைப் போற்றியவர் கர்மவீரர் காமராசர். அவர் மறையவில்லை. இன்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.



 

ம.தி.க. முன்னாள் தலைவர் பி.எஸ். மணியம் மறைவு - ச.த. அண்ணாமலை

17.12.2020

மலேசியத் திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் மானமிகு. பி.எஸ். மணியம் அவர்கள் உடல் நலமின்றி பெட்டாலிங் ஜெயா யுனிவர்சிட்டி மருத்துவமனையில் மறைவுற்றார். அவர் மகள் ம.தி.க மகளிர் தேசியத் தலைவி வழக்கறிஞர் சு. குமுதா அவர்கள் அந்தச் செய்தியை உறுதிப் படுத்தினார்.

கழகத்தில் பணியாற்றியவர்களில் நீண்ட காலம் சேவையை வழங்கியவர் என்ற தனி ஒரு பெருமை, மறைந்த பி. எஸ். மணியம் அவர்களுக்கு உண்டு.

கழக முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.. ஆர். இராமசாமி அவர்களுடன் நீண்ட நாள் பல பொறுப்புகள் ஏற்றதோடு, இன்று நமக்கென்று சொந்த கட்டடம்; மலாயன் மென்சன் கட்டடம்; செமளின் கட்டடம் பெற்றதில் பி.எஸ். அவர்கள் அதிகம் பங்காற்றி உள்ளார்.

கட்டடக் குழுத் தலைவராக மறைந்த அ. மருதமுத்து அவர்களுடன் கட்டடக் குழுச் செயலாளராகப் பணியாற்றிய பெருமையும் உண்டு.

இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் பி. எஸ். மணியம் அவர்கள்; 2010-ஆம் ஆண்டில் கழகத்தின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கழகம் ஒரு புத்துணர்ச்சியுடன் செயல்படுவற்கு தன்னால் முடிந்த அளவில் கழகத்தைச் சீராக நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும் அவர் காலத்தில் தான் கழகத்தின் தேசியத் தலைவராக இருப்பவர் இரண்டு தவணைக் காலம் போதும்; மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மற்றவர்களுக்கு வழிவிட்டு, கழக இளைய தலைமுறைகள் செயல் படுவதை வெளியில் இருந்து ஊக்கப் படுத்திய நல்ல எடுத்துக் காட்டான ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.

கழக அன்பர்கள் மத்தியிலும், முன்னாள் தமிழ் அமைச்சர்களுடனும் நட்பு பாராட்டியவர். அவர் மறைவு கழகத்திற்கு மட்டும் அல்ல; அவர் குடுபத்திற்கும் பெரும் இழப்பாகும்.

அவர் தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ச.த. அண்ணாமலை,
ம.தி.க. தேசியத் தலைவர்.

17.12.2020



 

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமையானது

17.12.2020

மதுரை அருகே கீழடி எனும் பெரிய ஒரு நிலப்பரப்பு. அங்கே தொல்லியல் ஆய்வுகள் செய்தார்கள். அங்கே கிடைத்த பொருட்களை ஆராய்ந்து பார்த்ததில் தமிழகச் சங்க காலம் என்பது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்து உள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கீழடி கிராமம். 2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆகழ்வாய்வு நடத்தியது. அங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 20-ஆ5வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தான் தொடங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் தொடங்கி உள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்து உள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலக் கட்டத்தில்தான் சிந்து நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப் பட்டது.

ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தார்கள், எழுதத் தெரிந்து இருந்தார்கள் எனும் முடிவிற்கு வரலாம்.

தொகுப்பு: மலேசியம்

Raja Sg Buluh:
அற்புதமான தகவல். இதைப் படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது.