18.12.2020
வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆங்கிலத்தில் Butterfly effect என்று சொல்வார்கள். இந்த உலகில் சிலரால் அறியப் பட்டாலும் பலரால் அறியப் படாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விதி தான் வண்ணத்துப்பூச்சி விளைவு.
ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் அதன் தொடக்க காலத்தின் ஒரு சின்ன நிகழ்ச்சியைச் சார்ந்து உள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவு சுருக்கம்.
Butterfly effect is the sensitive dependence on initial conditions in which a small change in one state of a deterministic nonlinear system can result in large differences in a later state.
பிரேசில் நாட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது. அதன் சிறகு படபடக்கிறது.
அதனால் அங்கே சலசலப்பு ஏற்படுகிறது. அந்தச் சலசலப்பினால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சின்ன புயல்காற்று உண்டாகிறது. நம்புவீர்களா. நம்ப முடியவில்லை தானே. ஆனால் தொடர்பு உண்டு என்று நிரூபிக்க முடியும்.
ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப் படுபவர் எட்வர்ட் லோரன்ஸ் (Edward Lorenz). இவர் 1963-ஆம் ஆண்டு கணித முறைப்படியும் வானிலை மாற்றங்களின் படியும் சரி என்று நிரூபித்துக் காட்டினார்.
அதனாலேயே அந்தத் தத்துவத்திற்கு வண்ணத்துப்பூச்சி விளைவு என்று பெயர் வந்தது. ஒரு சின்ன தொடக்க நிலை விளைவு தான் நீண்ட கால பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொன்னார். அதையே சங்கிலித் தொடர் விளைவுகள் என்றும் சொல்லலாம்.
அதே போல தான் டோமினோ விளைவு (Domino effect). பல சிறிய டோமினோ கட்டைகளை ஒன்றன் பின்னாக வரிசையாக அடுக்கி வையுங்கள். அவற்றில் முதலாவது நிற்கும் கட்டையைத் தட்டுங்கள். அதன் பின்னர் எல்லாக் கட்டைகளும் அடுத்தடுத்து விழும். இதுவே டோமினோ விளைவு.
அதாவது பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால் அதற்கு மூலகாரணமாக முதலில் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.
அந்த முதல் நிகழ்ச்சியின் தாக்கத்தினால் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இதைத் தான் டோமினோ விளைவு என்று சொல்வார்கள். ஆனால் பலர் அதை மறந்து விட்டு கடைசியாக நடந்த நிகழ்ச்சியை மட்டுமே பெரிதாகப் பார்ப்பார்கள். இது மனித இயல்பு.
அதே அந்த டோமினோ விளைவு தான், மலேசியா 1எம்.டி.பி. நிறுவனத்தின் மோசடிகளிலும் நடந்து உள்ளது. 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு இப்போது 4200 கோடி ரிங்கிட் கடன். மலேசியாவை கடன்கார நாடாக மாற்றி வருவதும் இதே இந்த டோமினோ விளைவு தான்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.12.2020
😔
பதிலளிநீக்கு