17.12.2020
மலேசியம் புலனம் 2014-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதன் பயணத்தில் பற்பல கட்டங்களில் பற்பல போராட்டங்கள். பற்பல தாக்கங்கள். அரசியல் மேலிடங்களில் இருந்து பற்பல நெருக்குதல்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு நாட்டின் பிரதமரையும் அவரின் அமைச்சர்கள் சிலரையும் எதிர்த்து நின்றோம். எதிர்த்துக் குரல் கொடுத்தோம். *மாற்றம் ஒன்றே மாறாதது* என்று சொல்லித் தொடராகப் பல பதிவுகளைப் பதிவு செய்தோம். 2018-ஆம் ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இந்தப் புலனம் ஒரு காரணமாகவும் இருந்தது. உண்மை.
அந்த வகையில் நாட்டில் பெரிய ஒரு மாற்றம் ஏற்படுவதற்கு இந்தப் புலனமும் முக்கியப் பங்கு வகித்து உள்ளது என்பதையும் இங்கே தாழ்மையுடன் பதிவு செய்கிறோம். ஒரு கட்டத்தில் இந்தப் புலனத்தில் 248 உறுப்பினர்கள். அதை 100-க்கு குறைத்தோம். இப்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
அண்மைய காலங்களில் மலேசியாவில் நம் தமிழனத்திற்கும் நம் தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சமய வழிபாட்டுத் தலங்களும் பற்பல நெருக்குதல்கள். பற்பல இடர்பாடுகள். அநீதியான செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் தெரிவித்துக் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறோம்.
நம் இனத்திற்கு எப்படி நல்லது செய்யலாம்; எப்படி நம் உரிமைகளை முன் வைக்கலாம். அதற்காக இந்தத் தளத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோம். அவையே முதன்மை நோக்கமாக அமைய வேண்டும்.
காலை வணக்கம்; மாலை வணக்கம்; இரவு வணக்கங்களைப் போட்டு, இடத்தை நிரப்பி நாம் சாதிக்கப் போவது எதுவும் இல்லை. தவிர மற்ற மற்ற புலனங்களில் பதிவாகும் பயனற்ற பதிவுகளை இங்கே இறக்குமதி செய்வதையும் தவிர்ப்போம். நகைச்சுவைக்காகச் சில பதிவுகள் போதும்.
இங்கே பதிவாகும் பதிவுகளை நம் பிள்ளைகளும்; நம் பேரப் பிள்ளைகளும் பார்ப்பார்கள். படிப்பார்கள். மறந்துவிட வேண்டாமே. கோரமான காட்சிகள்; இரத்தம் சிந்தும் காட்சிகளைத் தவிர்த்து விடுங்கள். அவற்றைத் தனிப் புலனத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம் மலேசியத் தமிழர்களின் சமூகச் கலாசார உரிமைகள்; மொழி உணர்வுகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். முடிந்த வரையில் கடல் கடந்த அரசியலில் முக்கியமான செய்திகளை மட்டும் பகிர்வோம். தொடருங்கள். பயணியுங்கள்.
புலன நிர்வாகிகள்:
கரு. ராஜா;
(கோலாலம்பூர்)
தமிழ் மறவன் பாலன் முனியாண்டி;
(பினாங்கு)
முத்துக்கிருஷ்ணன்;
(மலாக்கா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக