17.12.2020
மதுரை அருகே கீழடி எனும் பெரிய ஒரு நிலப்பரப்பு. அங்கே தொல்லியல் ஆய்வுகள் செய்தார்கள். அங்கே கிடைத்த பொருட்களை ஆராய்ந்து பார்த்ததில் தமிழகச் சங்க காலம் என்பது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்து உள்ளது.
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கீழடி கிராமம். 2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆகழ்வாய்வு நடத்தியது. அங்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 20-ஆ5வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தான் தொடங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் தொடங்கி உள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்து உள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலக் கட்டத்தில்தான் சிந்து நாகரீகம் உருப்பெற்றது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப் பட்டது.
ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்று இருந்தார்கள், எழுதத் தெரிந்து இருந்தார்கள் எனும் முடிவிற்கு வரலாம்.
தொகுப்பு: மலேசியம்
Raja Sg Buluh: அற்புதமான தகவல். இதைப் படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக