01 ஜனவரி 2021

தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க - குமரன் வேலு

27.12.2020

தமிழ்ப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்யலாம்?  

நீலப் பெருங்கடல் வியூகம்


இந்திய மாணவர்கள் எனும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தமிழ்ப் பள்ளிகளுடன்  இன்று போட்டிக்கு நிற்பவை மலாய்ப் பள்ளிகளும் சீனப் பள்ளிகளும் தான்.

2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 67000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளிகளிலும்; 14,000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சீனப் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள். அதாவது ஏறக்குறைய 81000 மாணவர்கள்.

இவர்களைத் தமிழ்ப்பள்ளி பக்கம் இழுக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எந்த உத்தியும் எடுபட மாட்டாமல் போய் விட்டது.

இருமொழிப் பாடத் திட்டம் (DLP) உள்ள தமிழ்ப் பள்ளிகள் மட்டும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதில் வெற்றிக் கண்டு உள்ளன என்று தகவல் வருகிறது.

டி.எல்.பி பள்ளிகளும் டி.எல்.பி இல்லாத தமிழ்ப் பள்ளிகளும் மாணவர்களுக்காகப் போடும் போட்டியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பள்ளிக்கான நிரந்தர வாடிக்கையாளர்கள் என்று ஒரு தரப்பு இருக்கிறது. வெளியில் இருந்து வேடிக்கைப் பார்க்கும் தரப்பு. இந்த வேடிக்கைப் பார்க்கும் தரப்பு பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன.

இவர்களை இழுத்துக் கொண்டு வந்து தமிழ்ப் பள்ளிகள் பக்கம் சேர்க்கும் மாற்று வழிகளை ஆராயும் ஒரு நீலப் பெருங்கடல் வியூகச் சிந்தனையே இது.  

#நீலப் பெருங்கடல் வியூகம் வழங்கும் ஆறு வழிகளில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொருத்தமான ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

வழி 1: வியூகக் குழுக்கள் (Strategic Groups)

தமிழ்ப் பள்ளிகளால் வழங்க முடியாத மதிப்பை, கெளரவத்தை, எதிர்கால வாய்ப்புகளைத் தேசியப் பள்ளிகள் வழங்கிவிடும் என்று நம்பும் நம் இன மேட்டுக்குடி மக்கள் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

ஏழைகள், குண்டர் கும்பல் கலாச்சாரம் இன்னும் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த பள்ளிகளாகத் தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கும் பார்வை உள்ளவர்கள் தமிழ்ப் பள்ளிகளை மறுக்கின்றனர்.

அவர்கள் நாடுவது கெளரவம், தரம், மதிப்பு, மரியாதை போன்றவையாகும். அதற்குத்  துணையாக அவர்கள் விரும்புவது ஆங்கிலம்.

எனவே, தமிழ்ப் பள்ளிகளுக்கான எதிர்கால வாடிக்கையாளர்கள் இரு குழுக்களாக பிரிகின்றனர். ஒன்று - தரம் ஆங்கிலம் வழியாக வருகிறது என நம்பும் ஆங்கில விரும்பிகள்; மற்றொன்று - எந்த விதியையையும் விதிக்காத வாடிக்கையாளர்கள்.

ஸ்டார்பக்ஸ் (Starbucks) காப்பிக் கடையையும் மாமாக் கடையையும் (Mamak) ஓர்  ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். இரண்டிலுமே காப்பி விற்கப் படுகிறது. ஆனால் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவையும் எதிர்ப்பார்ப்பும் வெவ்வேறாக உள்ளன.

என் நண்பர் முனைவர் பட்டம் பெற்று உயர்ப் பதவியில் இருப்பவர். அவர் தன் மகளை காஜாங் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க ஆவல். ஆனால் டி.எல்.பி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று விதியையும் இணைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயார் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து இவ்வாறு சொன்னார்:

"என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் பதிய விருப்பம் இல்லை. ஆனால் அறிவியல் கணிதம் இரண்டையும் ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பதில் தமிழ்ப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. அதனால்தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நான் என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்தேன். அதனால் என் மகனுக்கு டி.எல்.பி வகுப்பில் இடம் வேண்டும்".

எனவே சிறப்புத் தமிழ்ப் பள்ளிகளை (Elite Schools) உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். இங்கே படிப்பதற்கு ஆங்கில மொழியில் முன்னறிவும், மலாய் மொழியில் முன்னறிவும் பெற்று இருக்க வேண்டும்.

இவை அரசாங்கம் நடத்தும் Sekolah Permata (for gifted children) போன்று இருக்கும். ஆனால் சில நெகிழ்வுத் தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆங்கிலத்தில் படிக்க இங்கே அனுமதி உண்டு.

கெட்டிக்கார மாணவர்களுக்கான பாடத் திட்டத்தைக் கொண்டு இருக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த தேர்வுகளை (IGCSE) எழுதும் வாய்ப்பை வழங்க பெற்றோர்களின் கடப்பாட்டைக் கோரலாம்.

பணக்காரர்கள், மெத்த படித்த பெற்றோர்கள், வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்க அனுப்பலாம். ஒரு நகரில் குறைந்தது ஒரு பள்ளி என இருக்கலாம். கூடுதலாக இங்கு பல்வேறு கல்வி வாய்ப்புகள்/ திட்டங்கள், பன்மொழிகள் கற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்தத் திட்டம் சமூகத்தின் மேட்டுக் குடிகளைத் தமிழ்க் கல்விப் பக்கம் கொஞ்சம் திருப்பும்.

இது ஒரு கருத்தாடல் மட்டுமே. உடன்பாடு இல்லாதவர்கள் தாராளமாகக் கருத்தில் மாறுபடலாம்.




 

மலாயா பல்கலைக்கழக ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரை - டாக்டர் சுபாஷினி

27.12.2020

பிலிப்புஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus) ஆவணங்கள் வழங்கும் கி.பி 17-ஆம் நூற்றாண்டு தூத்துக்குடி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள். (The 17th century Historical References to Thoothukudi by Fr.Philippus Baldaeus).

Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 9, n. 2, p. 11-23, dec. 2020. ISSN 2636-946X. 

சுருக்கம் (Abstract)

தமிழகத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொள்ள ஐரோப்பியர்களின் ஆவணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களின் ஆவணங்கள் எனும் போது பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களிலும் அதற்கு அடுத்த நிலையில் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு டச்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் அல்லது டேனிஷர்கள் போன்றவர்களின் ஆவணங்களை ஆய்வுக்குட் படுத்துவது மிகக் குறைவு.

இந்தக் கட்டுரை அந்தக் குறையைச் சுட்டிக் காட்டி  கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து அங்கு சில ஆண்டுகள் தங்கி இருந்து, பின்னர் தமிழகம் வந்து அங்கு டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராகப் பணிபுரிந்த பாதிரியார் பிலிப்புஸ் பால்டியுஸ் எழுதி வைத்த ஆவணங்களையும் அவர் உருவாக்கிய வரைபடங்களையும் அறிமுகப் படுத்துகின்றது.

பாதிரியார் பால்டியுஸ் அவர்களது ஆவணங்கள் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் நிலவிய வணிக நிலவரங்களையும்; டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளையும்; அருகாமைப் பகுதிகளான இராமேஸ்வரம் பற்றிய செய்திகளையும்; அந்தக் காலத்தில் நிலவிய போர்த்துக்கீசியர்களுடனான சவால்கள் நிறைந்த வணிக முயற்சிகளைப் பற்றியும் விவரிக்கின்றன.

பாதிரியார் பால்டியூஸ் அவர்கள் நிலவரைப்பட தயாரிப்புகளில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு உள்ளார். அதன் வழி இன்று தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட சில செய்திகளை இவரின் வரைபடங்களின் வழியாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த ஆய்வுக் கட்டுரை, தமிழக வரலாற்றின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்வோர் டச்சுக்காரர்கள் உருவாக்கிய  ஆவணங்களையும் வரைபடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது.

தூத்துக்குடி வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய கட்டுரை இந்தத் தளத்தில் உள்ளது.

https://tamilperaivu.um.edu.my/article/view/25914

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்

மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்விதழ் துறையின் அதிகாரப்பூர்வ ஆய்விதழ் ஆகும். இது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும் பல்துறை ஆய்விதழாகும். இவ்வாய்விதழ் தமிழில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும், வெளியீடு செய்வதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைக்கப்பட்ட களமாகும்.

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், உங்கள் ஆய்வை மதிக்கிறது. எனவே துரித நடவடிக்கைகளின் மூலம் உங்கள் ஆய்வை கூடிய மட்டில் விரைந்து  சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ்வாய்விதழ் இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பட்ட கட்டுரைப் பிரதிகளை இங்கு மறுவெளியீடு செய்வதை தடைசெய்கிறது. இந்த ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியீடு காண்கிறது.

இவ்வாய்விதழ் ஆண்டு தோரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகின்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த ஆய்விதழுக்கு அவரே தலைமைப் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

------

Jeyashree Kannan: அரும் பெரும் முயற்சி - ஆவணங்கள் பயன்படுத்துவதில் குறை - அனைத்தும் பயன்படுத்தப் பட்டால் நம் பெருமை வணிகம் முதல் வரலாறு வரை அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் - உன்னதமான முயற்சி - உத்வேகத்திற்குப் பாராட்டுக்கள்.


Dr.Subashini Kanagasundaram
Tamil Heritage Foundation.




சீன மார்க்சியக் கொள்கையாளர் - கென்னடி ஆறுமுகம் கிரீக்

26.12.2020

டிசம்பர் 26-ஆம் தேதி சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மா சே துங் பிறந்த தினம் (டிசம்பர் 26, 1893).

இவருக்கு 18 வயது இருக்கும் போது சீனா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்த நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன.

1920-இல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.

ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்டார். 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.

1935-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பொதுவுடைமைக் கட்சி மிகுந்த வளர்ச்சி பெற்றது. அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது.

1949-இல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். சீன குடியரசு நாடு நவீன மயமானது.

பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது. சீனாவில் பெரும் தொழில் புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டும் அல்ல.

தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப் படுகிறார். இவரின் கொள்கைகள் மாவோயிசம்  என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்.

உலக கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், எங்க்லஸ், லெனின் இவர்களுடன் மா சே துங் பெயரும் இடம் பெறுகிறது.

 

அன்புள்ள சனீசுவரனார்க்கு - சாமி செலாயாங்

26.12.2020

எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 27-ஆம் தேதி நீங்கள் வீடு மாற்றிக் கொண்டு செல்வதாகக் கேள்விப் பட்டோம். புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள் போல...

உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்து இருக்கிறார்கள். உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.

புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணி விடுவீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கி விடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.

இருக்கும் வீட்டைக் கூட பெயர்த்துப் போட்டு விடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். ஏதோ வந்தது வந்து விட்டீர்கள்.  வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.

அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம். அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது? பிள்ளைக் குட்டிகள் எல்லாம் பயப் படுகின்றன.  உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.

பிழைப்புக்கு ஒரு வேலை பார்த்து; பிடித்தம் போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து; விலைவாசியால் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று; பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி; பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து; வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும் குறையுமாய் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறோம்.

இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மி அடித்து விடாதீர்கள். வலி தாங்க முடியாது. காணாமல் போனவர்களைக் கூடக் கண்டுபிடித்துத் தராத அரசு போல் ஆளும் ஓர் அரசின் கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம்.

உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.

எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறி இறங்கியது போலத் தானே இருக்கிறோம்? வடிவேலைப் போல “ஔ” என்று அழுத படிதானே தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்து இருக்கிறோம்.   

இதற்கும் மேலுமா எங்களைப் போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள். போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து; ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக. வழக்கம் போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக.

இங்ஙனம்,

சனிப் பெயர்ச்சியால்
பாதிப்பு அடையும்
இராசிக்காரர்கள் சங்கம்


 

தமிழ் எப்படி எல்லாம் தடுமாறி உள்ளது - ரஞ்சன் கங்கார் பூலாய்

27.12.2020

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி



காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி

அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி

குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி



அமிழ்தை  அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி

ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி

தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி



முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி

உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி

படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி



அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி

படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

அழகு தமிழ்ச் சொற்கள் எப்படி எப்படி எல்லாம் திசை மாறி உள்ளன.

#தமிழ் மொழியைப் பேணுவோம்